தகுதி இல்லாத நபர்.. "தோல்விக்கு நீங்க தான் காரணம்.." எடப்பாடியிடம் நேரடியாகவே சீறிய சிவி சண்முகம்
சென்னை: தமிழக அரசியலில் விஜய்யின் தவெகவிற்கு 'நம்பர் கேம்' பஞ்சாயத்து ஒருவழியாக இப்போது தான் ஓய்ந்துள்ள நிலையில், இப்போது ஒட்டுமொத்த கவனமும் ராயப்பேட்டை நோக்கியும், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் இல்லம் நோக்கியும் திரும்பியுள்ளது. இன்று நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நேரடியாகவே சிவி சண்முகம் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 6 நாட்களாகவே விஜய்யின் தவெகவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா என்பதே பெரிய கேள்வியாக இருந்தது.. விஜய் கோட்டைக்குச் செல்வாரா? இல்லையா? என்ற விவாதம் ஒருபுறம் ஓடிக் கொண்டு இருந்தது. இந்த குழப்பத்திற்கு இன்று தான் முடிவு கிடைத்தது. விசிக மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் தவெகவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் தவெகவுக்கு கிடைத்துவிடும்.

அதிமுகவில் வெடிக்கும் குழப்பம்
இந்த பஞ்சாயத்து முடிந்த நிலையில், மறுபுறம் அதிமுகவில் புதிய அரசியல் குழப்பம் வெடித்துள்ளது. அதிமுகவிற்குள் ஏற்பட்டுள்ள இந்தப் பிளவு அந்தப் பழைய கூவத்தூர் நினைவுகளை மீண்டும் கிளறியுள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் கடந்த இரு நாட்களாகப் புதுச்சேரியில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கக் காய்கள் நகர்த்தப்படுவதாகச் சொல்லப்பட்டது.
சிவி சண்முகம்
இருப்பினும், அது தோல்வியில் முடிந்த நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் தமிழகம் திரும்பினர். இதற்கிடையே இன்று பிற்பகல் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் இல்லத்தில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 36 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்றுள்ளனர். எடப்பாடி பழனிசாமிக்கு மாற்றாக, எஸ்.பி. வேலுமணி தலைமையில் அதிமுகவை வழிநடத்தலாம் என இந்தக் கூட்டத்தில் மிகத் தீவிரமாக விவாதிக்கப்பட்டுள்ளது. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், எடப்பாடியின் கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பெரும்பாலான எம்.எல்.ஏ-க்களே அவருக்கு எதிராகக் களமிறங்கியுள்ளனர்.
நேரடியாக வெடித்த வாக்குவாதம்
முன்னதாக இன்று காலை நடந்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் என்ன நடந்தது என்பது குறித்து தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது அந்த மீட்டிங்கில் எடப்பாடி பழனிசாமிக்கும் சி.வி.சண்முகத்திற்கும் இடையே மிகக் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாம். "கூட்டணியை ஒழுங்காக அமைக்கத் தெரியவில்லை. கூட்டணி அமைக்கவே தகுதியற்றவர்" என எடப்பாடியைப் பார்த்து சி.வி.சண்முகம் நேரடியாகச் சாடியுள்ளார்.
மேலும், "தேர்தல் செலவுகளுக்கு ஒரு ரூபாய் கூடத் தரவில்லை. மாஜி அமைச்சர்கள்தான் பல இடங்களில் கைக்காசைப் போட்டுச் செலவு செய்தனர். நீங்கள் தலைமை ஏற்றதிலிருந்து அதிமுக தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது" எனச் சண்முகம் வெடிக்க, கூட்டம் போர்க்களமாக மாறியுள்ளது. அதைத் தொடர்ந்தே மாலையில் தனியாக ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது.
யாரெல்லாம் பங்கேற்பு
எடப்பாடிக்கு எதிராகத் திரண்டுள்ள இந்த அணியில் சி.வி.சண்முகத்துடன் இணைந்து எஸ்.பி. வேலுமணி, சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் போன்ற 'பவர்ஃபுல்' மாஜிக்கள் உள்ளனர். மேலும், பாலகிருஷ்ண ரெட்டி, மரகதம் குமரவேல், லீமா ரோஸ், இசக்கி சுப்பையா, நடராஜன், கே.பி. அன்பழகன், ஜெயக்குமார், திலீப், பாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், சுகுமார் உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். தற்போது எடப்பாடி பழனிசாமியுடன் மிகச் சில எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
எனவே, இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது மீண்டும் அதிமுக இரண்டாக உடையும் சூழல் உருவாகி இருக்கிறது. 2017ல் சசிகலாவுக்கு எதிராக எடப்பாடி களம் கண்டார்.. இன்று எடப்பாடிக்கு எதிராக அவரது வலது கரங்களாக இருந்தவர்களே களம் கண்டுள்ளனர். தேர்தல் தோல்வி, நிதி தராதது, கூட்டணி என மூன்று காரணங்களை முன்வைத்து எடப்பாடிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications