"நான் ஒன்னும் மன்னர் பரம்பரை கிடையாது".. முதல்வரானதும் கலங்கியபடி பேசி திமுகவை தாக்கிய விஜய்
சென்னை: ''நான் சாதாரண உதவி இயக்குநரின் மகன். வாழ்க்கையில் வறுமை என்றால் என்னவென்று தெரியும். பசி என்றால் என்னவென்று தெரியும். நான் ஒன்னும் மன்னர் பரம்பரையில் இருந்து வரவில்லை'' என்று மேடையில் கலங்கியபடி பேசிய முதல்வர் விஜய் திமுகவை மறைமுகமாக சாடினார்.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் விஜய் இன்று முதல்வராக பதவியேற்றார். அதன்பிறகு அவர் பேசினார். இந்த வேளையில் திமுக, அதிமுக தலைவர்களை பெயர் கூறாமல் கடுமையாக விமர்சனம் செய்தார். இதுபற்றி விஜய் கூறியதாவது:

''சினிமாவில் எப்படியாவது கஷ்டப்பட்டு வெற்றியடை வேண்டும் என்று இருந்த சாதாரண உதவி இயக்குநருக்கு பிறந்த பிள்ளையாக எனக்கும், வாழ்க்கையில் வறுமை வறுமை என்றால் என்ன? என்பது தெரியும். பசி என்றால் என்னவென்று நன்றாக தெரியும். நான் ஒன்னும் பெரிய மன்னர் பரம்பரையில் இருந்து வரவில்லை.
நான் உங்களை மாதிரி தான். உங்களில் ஒருவர் மாதிரி தான். உங்களின் குடும்பத்தில் ஒருவர் மாதிரி தான். உங்கள் பிள்ளை மாதிரி தான். உங்களின் அண்ணன் மாதிரி தான். உங்களின் தம்பி மாதிரி தான். நான் அப்படித்தான் உணர்கிறேன். என்னையும் நீங்கள் அப்படி நினைத்ததாலே சினிமாவில் எனக்கு மிகப்பெரிய இடத்தை கொடுத்தீர்கள்.
இப்போது அதையெல்லாம் விட்டுவிட்டு உங்களுக்கு நன்றி கடன் செலுத்துவதற்காக அரசியலுக்கு வந்த உங்கள் விஜய்யை.. இந்த விஜய்யை.. நீ வா விஜய்.. நாங்கள் எல்லாம் பார்த்து கொள்கிறோம்.. நீ வா நாங்கள் இருக்கிறோம் விஜி விஜய் தம்பி.. நீ வா நாங்கள் இருக்கிறோம் விஜி தம்பி நாங்கள் இருக்கிறோம். அண்ணா வா நாங்கள் இருக்கிறோம் என்று சொல்லி அன்பாக பேசினீர்கள்.
அன்பாய், உறவாய் என்னை ஏற்றுக்கொண்டீர்கள். இந்த டிராவல்லில் எனக்கு எவ்வளவோ கஷ்டங்கள், அவமானங்கள் இருந்தாலும் என்னுடன நின்று என்னோட வலிகளையும், வேதனைகளையும் நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள். அதனால் தான் இன்று ''சி ஜோசப் விஜய் எனும் நான்'' என்று கூறி பதவியேற்றுள்ளேன்'' என்று கூறி கண்கலங்கினார்.
இதில் மன்னர் பரம்பரையில் இருந்து வரவில்லை என்று கூறியதன் மூலமாக விஜய் மறைமுகமாக திமுகவை தாக்கி பேசியுள்ளார். ஏனென்றால் திமுகவை மன்னராட்சி என்று கூறியிருந்தார்.
திமுக தலைவர் முதல்வராக கருணாநிதிக்கு பிறகு அவரது மகன் ஸ்டாலின் அந்த பொறுப்புகளில் இருந்தார். இதனால் மன்னராட்சி என்று பிரசாரங்களில் விமர்சனம் செய்திருந்தார். அதனை இப்போதும் பெயர் குறிப்பிடாமல் விஜய் பேசி அட்டாக் செய்துள்ளார். இதன்மூலம் பதவியேற்ற மேடையிலேயே திமுகவை விஜய் சீண்ட தொடங்கி உள்ளார்.












Click it and Unblock the Notifications