கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டம் தொடங்குகிறது! 9,335 கோடியில் 13 நிலையங்கள்! சென்னை மக்களுக்கு நற்செய்தி
சென்னை: சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டம் மீண்டும் களமிறங்குகிறது. சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் இணைப்பு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுந்து வருகிறது. பேசப்பட்டுக் கிடந்த இந்தத் திட்டம் இப்போது ஆரம்ப கட்ட பணிகளுடன் மீண்டும் தொடங்கியிருக்கிறது. இது தொடர்பான குட் நியூஸ் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இது சென்னைவாசிகளுக்கு மகிழ்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.
சென்னையில் விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ வேண்டும் என்று மக்கள் நீண்ட காலமாகவே கேட்டு வருகிறார்கள்..

ஆனால் கேட்கும்போதெல்லாம் அரசு "விரைவில் திட்டம் வரும்" என சொல்லிக்கொண்டே இருந்தது. வேலை மட்டும் நடக்கவில்லை. இப்போதுதான், இந்த விவகாரம் கொஞ்சம் சூடுபிடித்துள்ளது
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறந்தது முதல் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. ஆனால் அவர்களுக்கு சரியான போக்குவரத்து வசதி இல்லை. மின்சார ரயிலில் வண்டலூர் வரை வந்து, அங்கிருந்து ஆட்டோவிலோ பேருந்திலோ கிளாம்பாக்கம் போக வேண்டும்.
இல்லாவிட்டால் நேரடியாக மாநகரப் பேருந்தில் போகலாம், ஆனால் ஜிஎஸ்டி சாலையில் நெரிசலில் சிக்கி ஒரு மணி நேர பயணம் இரண்டு மூன்று மணி நேரம் ஆகிவிடும். தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை பகுதிகளில் புதுப்புது குடியிருப்புகளும் தொழில் நிறுவனங்களும் வேகமாக வருவதால் இந்தப் பிரச்னை இன்னும் மோசமாகிக் கொண்டே போகிறது.
விமான நிலையம் டூ கிளாம்பாக்கம்
இந்தப் பிரச்னையை தீர்க்கவே விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ நீட்டிக்கும் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 15.46 கிலோ மீட்டர் நீளத்தில் அமையும் இந்த வழித்தடத்தில் மொத்தம் 13 நிலையங்கள் இருக்கும்.
விமான நிலையத்தில் தொடங்கி பல்லாவரம், கோதண்டம் நகர், குரோம்பேட்டை, மகாலட்சுமி காலனி, தாம்பரம், இரும்புலியூர், பீர்க்கன்கரணை, பெருங்களத்தூர், வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வழியாக கிளாம்பாக்கம் வரை செல்லும். இந்தப் பாதை மேம்பால சாலையோடு இணைந்து செல்வதால் நிலம் கையகப்படுத்துவதில் வழக்கமாக வரும் சட்டச் சிக்கல்கள் இந்த முறை கொஞ்சம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த திட்ட செலவு சுமார் 9,335 கோடி ரூபாய்.
மெட்ரோ பணிகள் ஆரம்பம்
இப்போது நில அளவீடு மற்றும் வரைபட பணிகள் முடிந்திருக்கின்றன. விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணிகளை தொடங்க மெட்ரோ நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்துள்ளது. நெடுஞ்சாலைத் துறை, விமான நிலைய நிர்வாகம், குடிநீர் வாரியம் என பல துறைகளுடனும் கலந்தாய்வுகள் நடந்து வருகின்றன.
இந்த மெட்ரோ வந்தால் விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் வரை நேரடியாக பயணிக்கலாம். ஜிஎஸ்டி சாலையில் தினமும் வீணாகும் மணிக்கணக்கான நேரம் மிச்சமாகும். சென்னையின் தெற்கு புறநகர் பகுதிகளும் இன்னும் வேகமாக வளரும். திட்டம் சொன்னபடியே நடந்தால் நல்லது. இல்லாவிட்டால் இதுவும் காகிதத்தில் கிடக்கும் இன்னொரு திட்டமாக மட்டுமே இருக்கும். ஏனென்றால் மக்கள் இப்போது செய்கையை மட்டுமே நம்புகிறார்கள், வார்த்தைகளை அல்ல.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!












Click it and Unblock the Notifications