அம்பத்தூரில் 16 லட்சம் கடனுக்கு 1.15 கோடி வட்டி.. பாய்ந்த கந்த வட்டி சட்டம்.. மக்கள் அறிய வேண்டியவை

  • சென்னை: அம்பத்தூர் அடுத்த திருமுல்லைவாயல் ஜாக் நகரில் டைல்ஸ் கடை நடத்தி வரும் காளிமுத்து என்பவரிடம், அம்பத்தூர் திருவேங்கடம் நகரைச் சேர்ந்த டைல்ஸ் வியாபாரி நடராஜன் என்பவர் 16 லட்சம் கடன் வாங்கி உள்ளார். அப்படி வாங்கிய கடனுக்கு ரூ.1.15 கோடி காளிமுத்து வசூல் செய்தாராம். இந்த புகாரின் பேரில் கந்துவட்டி தடை சட்டத்தின் கீழ் காளிமுத்துவை போலீசார் கைது செய்தனர்.

    Advertisement

    கந்து வட்டி வாங்குவது சட்டப்படி தவறு. கந்து வட்டிக்கு விடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். இது பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிகமாகி வருகிறது. சென்னையில் வியாபாரியிடம் ரூ.16 லட்சம் கடனுக்கு ரூ.1.15 கோடி வசூல் செய்தவர் சிக்கியுள்ளார்.

    Advertisement

    சென்னை அம்பத்தூர் திருவேங்கடம் நகரைச் சேர்ந்த 66 வயதாகும் நடராஜன் என்பவர், அங்கு டைல்ஸ் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு அம்பத்தூர் அடுத்த திருமுல்லைவாயல் மணிகண்டபுரம், சரவணா நகர், 14-வது தெருவை சேர்ந்த காளிமுத்து (46) என்பவருடன் கடந்த 20 ஆண்டுகளாக நட்புடன் பழகி வந்துள்ளார். காளிமுத்து திருமுல்லைவாயல் ஜாக் நகரில் டைல்ஸ் கடை நடத்தி வருகிறார். மேலும் காளிமுத்து வட்டிக்கும் பணம் கொடுத்து வருகிறாராம்.

    இந்த நிலையில், தொழில் தேவைக்காக பணம் தேவைப்பட்டதால் நடராஜன் கடந்த 2018-ம் ஆண்டு காளிமுத்துவிடம் ரூ.16 லட்சத்து 10 ஆயிரம் கடனாக கேட்டிருந்தாராம். இதற்காக காளிமுத்து, நடராஜனிடம் கையெழுத்திட்ட பெயர், தொகை மற்றும் தேதி நிரப்பப்படாத 6 காசோலைகளையும், 3 ஸ்டாம்ப் பேப்பர்களையும் பெற்றுக்கொண்டு ரூ.16 லட்சத்து 10 ஆயிரத்தை பல தவணைகளில் அதிக வட்டிக்கு கொடுத்தாராம்.

    Advertisement

    கடந்த 19.01.2019 முதல் 13.08.2025 வரை பல்வேறு தேதிகளில் நடராஜனை மிரட்டி ரூ.1 கோடியே 15 லட்சம் வரை பணத்தை பல தவணைகளில் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும், ரூ.90 லட்சம் பணம் தர வேண்டும் என வட்டிக்கு மேல் வட்டி போட்டு கேட்டு மிரட்டினாராம். மேலும் பணம் கொடுக்காவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது. மேலும், நடராஜன் கையெழுத்திட்ட நிரப்பப்படாத காசோலைகள் மற்றும் ஸ்டாம்ப் பேப்பர்களை வைத்துக்கொண்டு காளிமுத்து மிரட்டினாராம்.

    இதையடுத்து, ரூ.16 லட்சத்து 10 ஆயிரம் கடனுக்கு வட்டி போட்டு ரூ.1 கோடியே 15 லட்சத்து 2 ஆயிரத்து 800 வரை பணம் பறித்ததாக கூறி, காளிமுத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடராஜன் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். ஆவடி போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் அசோக்குமார் கந்துவட்டி தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காளிமுத்துவை கைது செய்தார்.

    English Summary

    Natarajan, a tiles dealer from Thiruvengadam Nagar in Ambattur, had borrowed ₹16 lakh from Kalimuthu, who runs a tiles shop in Jack Nagar, Thirumullaivoyal (near Ambattur). Kalimuthu reportedly collected ₹1.15 crore against this loan. Based on a complaint regarding this, the police arrested Kalimuthu under the Prohibition of Exorbitant Interest Act.