நம்பிக்கை வாக்கெடுப்பு.. பிரேமலதா கறார்.. விஜய்க்கு புதிய சிக்கலா?
சென்னை: தமிழக அரசியல் களம் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, தேர்தலுக்கு பிறகு என்று இரண்டாக மாறலாம். தவெக தனிப்பெரும்பான்மை கட்சியாக வெற்றி பெற்றனர். ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை அவர்களுக்கு கிடைக்கவில்லை. காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விசிக, ஐயூஎம்எல் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்துள்ளது. நாளை நம்பிக்கை வாக்குகெடுப்பு நடைபெறவுள்ளது. பெரும்பான்மையை நிரூபித்தால் மட்டுமே விஜய்யால் முதலமைச்சராக தொடர முடியும். இந்நிலையில், பிரேமலதா விஜயகாந்த் ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளார்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நேற்று மூன்று கையெழுத்துகளை போட்டுள்ளேன். அவருக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நேற்று தான் பதவியேற்றுள்ளார். அவருக்கு நிச்சயமாக நேரம் கொடுக்க வேண்டும். விஜய்யும் மக்களிடம் நேரம் கேட்டுள்ளார். அண்ணன் ஸ்டாலினும் அதைத்தான் சொல்லியிருக்கிறார். முதல்முறையாக விஜய் பதவியேற்றுள்ளார்.

என்ன செய்ய போகிறார் பிரேமலதா
அவருக்கு உரிய நேரம் நாங்கள் கொடுப்போம். அதன்பிறகு மக்கள் பிரச்சனைகளை சட்டமன்றத்தில் நாங்கள் பேசுவோம். கஜானா காலியாகிவிட்டது என்று முதலமைச்சராக பதவியேற்ற விஜய் சொல்லியுள்ளார். அவர் ஏன் அப்படி சொன்னார் என்று நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். அவருக்கான நேரத்தை கொடுத்துவிட்டு, தமிழகம் மற்றும் தமிழக மக்களுக்கான குரல் நிச்சயம் சட்டமன்றத்தில் பதிய வைப்போம். தமிழக மக்களுக்கு நல்லது நடைபெறும்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் நான் சார்ந்துள்ள மதச்சார்பற்ற வெற்றி கூட்டணியின் சார்பில் என் வாக்கை பதிவு செய்வேன். நான் மதச்சார்பற்ற வெற்றி கூட்டணியின் வேட்பாளராக தான் விருதாச்சலம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளேன். எனவே நான் வெற்றி பெற்ற என் கூட்டணிக்கு ஆதரவாக தான் என்னுடைய நிலைப்பாட்டை எடுப்பேன். இதுதான் தேமுதிக நிலைப்பாடு. நாளைக்கு என்ன நடக்கும் என்பது இன்றைக்கே யாரும் கணிக்க முடியாது.
விஜய் முதலமைச்சராக நேற்று பதவியேற்றுள்ளார். நாங்கள் எல்லாம் இன்று பதவியேற்றுள்ளோம். அதனடிப்படையில் விஜய்க்கு வாழ்த்து சொல்லியுள்ளோம். என்ன நகர்வுகள், மாற்றங்கள் வரப்போகின்றன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும் கேப்டன் மற்றும் தேமுதிக சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications