சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள் என பாஜக அரசுக்கு சிவசேனா அறிவுரை வழங்கியுள்ளது. ஏற்கெனவே தி டெலிகிராப் எனும் இதழ் முதல்வர் ஸ்டாலினை பாராட்டியுள்ள நிலையில் தற்போது சிவசேனாவின் சாம்னாவிலும் இவர் பாராட்டுப் பெற்றுள்ளார்.
இதுகுறித்து சிவசேனாவின் சாம்னாவின் தலையங்கத்தில் குறிப்பிடுகையில் தற்போதைய மத்திய அரசு விற்க முயலும் ஒவ்வொரு பொதுத் துறை நிறுவனங்களையும் உருவாக்கிய அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவை மத்தியில் ஆளும் மோடி அரசு பாராட்ட வேண்டும். நன்றி தெரிவிக்க வேண்டும்.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ், ஜன சங்கம் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொள்ளவே இல்லை. ஆனால் நேரு இந்த இயக்கத்தை முன்னின்று நடத்தி இந்தியா சுதந்திரம் அடைய பல ஆண்டுகள் தன் வாழ்வை சிறையில் கழித்தார்.
நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சகம் வெளியிட்ட படத்தில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் படம் தவிர்க்கப்பட்டிருப்பது நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் பழிவாங்கும் செயல். சுதந்திர போராட்டத்தில் எந்த பங்களிப்பும் இல்லாதவர்கள் சுதந்திர போராட்டத்தின் நாயகர்களில் ஒருவரான நேருவை ஒதுக்கி வைத்துள்ளனர்.
இது ஆரோக்கியமான செயல் அல்ல. இந்த அளவு ஜவஹர்லால் நேருவௌ வெறுப்பதற்கு அவர் என்ன செய்தார்? அந்த படத்தில் காந்தி, சுபாஷ் சந்திர போஸ், டாக்டர் அம்பேத்கர், சர்தார் வல்லபாய் பட்டேல், பகத் சிங், ராஜேந்திர பிரசாத், பண்டிட் மதன் மோகன் மால்வியா, வீர் சவார்கர் ஆகியோரின் புகைப்படங்கள் இருந்தன. நேருவின் படத்தை தவிர்த்தது போல் மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின் படத்தையும் தவிர்த்துவிட்டனர்.
Advertisementஇந்த இரு நபர்களை தவிர்த்துவிட்டு சுதந்திர தின போராட்ட வரலாறு முடிந்து விடாது என்பதை மத்திய அரசு மறந்துவிடக் கூடாது. இந்த செயல் மத்திய அரசின் அற்பத்தனத்தை காட்டுகிறது. காங்கிரஸ் கட்சியுடனும் நேருவுடனும் உங்களுக்கு (பாஜக) எத்தனையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அவர்களை வரலாற்றில் இருந்து நீக்க வேண்டும் என முயற்சிப்பது ஒவ்வொரு சுதந்திர போராட்ட தியாகிகளையும் அவமதிக்கும் செயலாகும்.
நேருவால் உருவாக்கப்பட்ட பொதுத் துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பைப் பெருக்கின. அந்த விலை மதிப்பில்லா சொத்துகளை உருவாக்கிய நேருவுக்கு மத்திய அரசு நன்றி தெரிவிக்க வேண்டும். தற்போதைய பாஜக அரசு பழிவாங்கும் அரசியலை பின்பற்றுகிறது. இந்திய சுதந்திரத்திலிருந்து நேருவின் பங்களிப்பை இருட்டடிப்பு செய்ய முயற்சிக்கிறது. மத்திய அரசு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
பள்ளி மாணவர்களுக்கான 6.5 மில்லியன் இலவச புத்தக பையில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படங்கள் இருந்தன. இதை அழித்துவிட்டு தனது படத்தை போட்டால் அதற்கு 15 கோடி ரூபாய் செலவாகும் என்பதால் எடப்பாடி பழனிச்சாமி படமே இருக்கட்டும் என்றும் அந்த பணத்தை வேறு ஒரு நலத்திட்டத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். அரசியல் பழி வாங்குவதற்காக மக்களின் வரிப் பணத்தை வீணடிக்கக் கூடாது என ஸ்டாலின் நினைக்கிறார்.
கடந்த 2001 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியின் போது ஸ்டாலினின் தந்தை கருணாநிதியிடம் நள்ளிரவில் கடுமையாக நடந்து கொண்டு அவர் கைது செய்யப்பட்ட போதிலும் ஸ்டாலின் தற்போது பெருந்தன்மையுடன் நடந்து கொண்டுள்ளார் என அந்த தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.