டிடிவி தினகரன் எடுத்த "ஃபோர்ஜரி" ஆயுதம்.. விஜய்க்கு சிக்கல்? ஆடிப்போன தவெக.. ஆளுநர் முடிவு இதுதானா
சென்னை: டிடிவி தினகரன் ஆளுநரை சந்தித்த இந்த நிகழ்வு, தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய பூகம்பத்தை கிளப்பியுள்ளது.. தவெக ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதில் தனது கட்சியின் ஆதரவு இருப்பதாகக் கூறப்படுவது முற்றிலும் பொய் என்று தினகரன் போர்க்கொடி தூக்கியிருப்பது விஜய்க்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.. குறிப்பாக, "ஃபோர்ஜரி" புகாரை முன்வைத்து அவர் எடுத்துள்ள சட்ட ரீதியான அஸ்திரம், ஆளுநர் முடிவெடுப்பதில் பெரும் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது.. அப்படியானால் அடுத்து என்ன நடக்கும்?
தமிழக அரசியல் களம் இதுவரை இப்படியொரு உச்சகட்ட பரபரப்பை பார்த்ததில்லை. நாளுக்கு நாள் இந்த பரபரப்பு இன்னமும் அதிகரித்தவாறே உள்ளது..

நாளை காலையில் தமிழகத்தின் புதிய முதல்வராக விஜய் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றைய இரவு நடக்கும் அரசியல் காட்சிகள், மொத்தத்தையும் தலைகீழாக மாறியுள்ளன..
டிடிவி தினகரன் - ஆளுநர் சந்திப்பு
கிண்டியில் உள்ள லோக் பவனில் ஆளுநர் அர்லேகரை திடீரென சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தனது கட்சியின் ஒரே ஒரு எம்.எல்.ஏ.வான மன்னார்குடி காமராஜின் ஆதரவு கடிதத்தை எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வழங்கியுள்ளார்..
முன்னதாக, தவெக தரப்பில் இருந்து காமராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தனது எம்.எல்.ஏ.வை தற்காத்துக் கொள்ளவும், தவெகவின் கணக்குகளை சிதைக்கவும் தினகரன் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.. குறிப்பாக, அதிமுக கூட்டணி 53 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், தினகரனின் இந்த திடீர் நகர்வு அதிமுக முகாமிற்கு புதிய தெம்பை கொடுத்துள்ளது..
இந்த சந்திப்பின்போது டிடிவி தினகரன் முன்வைத்துள்ள மிக முக்கியமான குற்றச்சாட்டு தமிழக அரசியலில் சூறாவளியை கிளப்பியுள்ளது.. தவெக தலைவர் விஜய் ஆளுநரிடம் வழங்கிய ஆதரவு கடிதத்தில், தனது கட்சியின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக தினகரன் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்..
ஃபோர்ஜரி அஸ்திரம்
தான் தவெகவுக்கு ஆதரவு அளிக்காத நிலையில், தனது ஆதரவு இருப்பதாக பொய் கடிதம் மற்றும் ஆவணங்களை தயாரித்து விஜய் வழங்கியுள்ளதாகவும், இது ஒரு மோசடி செயல் என்றும் அவர் ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார்.. இதன் காரணமாக விஜய் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்..
குதிரை பேரத்தை தவிர்க்க அதிமுக வேட்பாளர்கள் புதுச்சேரி ரிசார்ட்டுகளில் தங்கவைக்கப்பட்டு, இன்று மாலை தான் சென்னை திரும்பினார்கள்.. இந்த இக்கட்டான சூழலில், தவெகவுக்கு எதிராக தினகரன் எடுத்துள்ள இந்த "ஃபோர்ஜரி" அஸ்திரம், ஆட்சி அமைக்கும் முயற்சியில் பெரிய முட்டுக்கட்டையாக மாறியுள்ளது.. அத்துடன், இந்த விவகாரம் ஆளுநர் மாளிகையில் பெரும் இழுபறியையும் ஏற்படுத்தியுள்ளது..
விசிக ஆதரவு இல்லையா
ஒருபுறம் விசிகவின் ஆதரவு கடிதம் இன்னும் கிடைக்காததால் தவெக திணறி வரும் நிலையில், ஐயுஎம்எல் கட்சியும் தனது ஆதரவை அதிரடியாக மறுத்து விட்டது.. மறுபக்கம் திமுக தலைவர் ஸ்டாலினை திருமாவளவன் நேரில் சந்தித்து ஆலோசித்து வருவது தவெகவுக்கு கூடுதல் பிரஷரை எகிற வைத்து வருகிறது..
தமிழகத்தில் ஒரே நேரத்தில் ஏன் இத்தனை சலசலப்புகள் நடக்கின்றன? என்பது மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது.. இந்த ஒட்டுமொத்த அரசியல் களேபரங்களுக்கு பின்னால் ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகளின் மிகப்பெரிய ராஜதந்திர நகர்வுகள் இருப்பதாகவும் சிலர் கிசுகிசுக்கிறார்கள்..
சுருக்கமாக சொன்னால், தவெக ஆட்சி அமைப்பதை தடுக்க அனைத்து முனைகளிலும் வியூகங்கள் வகுக்கப்படுவதால், நாளை தமிழகத்தின் முதல்வர் யார் என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.. ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை இந்த பரபரப்பு அடங்காது என்றே தெரிகிறது..
க்ளைமாக்ஸ் திருப்பங்கள்
இங்கு இன்னொரு விஷயத்தையும் இங்கு நாம் நினைகூரவேண்டி உள்ளது.. ஏனென்றால், தமிழக அரசியலில் இது போன்ற "க்ளைமாக்ஸ்" திருப்பங்கள் ஒன்றும் புதிதல்ல..
இப்படித்தான் 1988-ல் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜானகி ராமச்சந்திரன் மற்றும் ஜெயலலிதா அணிகளுக்கிடையே நடந்த அதிகாரப் போட்டி, பிறகு ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இடையே நடந்த தர்மயுத்தம் மற்றும் கூவத்தூர் நிகழ்வுகள் என்று பல வரலாற்றுப் பின்னணிகள் இதற்கு உண்டு.. அந்த வரிசையில் இப்போது டிடிவி தினகரன் கையில் எடுத்துள்ள "ஃபோர்ஜரி" புகார் என்பது சாதாரண புகார் அல்ல.. அது ஒரு சட்ட ரீதியான முட்டுக்கட்டை ஆகும்..
மெஜாரிட்டி நிரூபிக்கும் கடிதங்கள்
ஆளுநரை பொறுத்தவரை, பெரும்பான்மையை நிரூபிக்கும் கடிதங்களில் உண்மைத்தன்மை குறித்து சந்தேகம் எழுந்தால், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ-க்களை நேரில் அழைத்து விசாரணை நடத்தவோ அல்லது சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடவோ முழு அதிகாரம் உள்ளது..
அந்தவகையில், தினகரனின் இந்த அதிரடி புகார், விஜய்யின் பதவியேற்பு விழாவைத் தற்காலிகமாகத் தள்ளிப்போட வைக்க ஆளுநருக்கு ஒரு வலுவான முகாந்திரத்தை தந்துள்ளதாகவே கருதப்படுகிறது..
அதேபோல, எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராவதற்கான சாத்தியம் என்பது, தவெக மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளிடையே நிலவும் இந்த இழுபறியை பொறுத்தே அமையும்.
ஆளுநர் முடிவு என்ன?
ஒருவேளை தவெகவால் தேவையான மெஜாரிட்டியை ஆளுநரிடம் நிரூபிக்க முடியாமல் போனால், அடுத்த பெரிய கூட்டணியான அதிமுகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வாய்ப்பு உள்ளது.. ஆனால், 53 இடங்களை மட்டுமே வைத்துள்ள அதிமுக, மற்ற சிறிய கட்சிகள் மற்றும் அதிருப்தி எம்எல்ஏ-க்களின் ஆதரவைத் திரட்டினால் மட்டுமே இது சாத்தியமாகும்.
ஆக மொத்தம், விஜய்யின் வேகத்திற்குத் தடை போட தினகரன் மற்றும் எடப்பாடி பழனிசாமி கூட்டணி போட்டிருப்பது ஒரு "செக் மேட்" அரசியல் என்றே சொல்லலாம். இந்த பரபரப்பான சூழலில், சட்டம் மற்றும் அரசியல் சாசன விதிகளின்படி ஆளுநர் எடுக்கும் முடிவே இறுதியானது, அதுவே தமிழகத்தின் அடுத்த 5 ஆண்டு கால அரசியலைத் தீர்மானிக்கும்.. பொழுது விடிவதற்குள் இன்னும் என்னென்ன திருப்பங்கள் நடக்க போகிறதோ? பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications