எங்களை ஓரங்கட்ட நினைத்தாலும்.. வன்னிஅரசு பரபரப்பு பதிவு.. விசிக ரூட் கிளியர்?
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் தினசரி பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. தவெகவுக்கு மெஜாரிட்டி இல்லை என்பதால் அவர்களை ஆட்சியமைக்க அழைக்க முடியாது என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்நாத் அர்லேக்கர் உறுதியாக உள்ளார். தவெகவுக்கு காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. ஐயூஎம்எல், அமமுக தவெகவுக்கு ஆதரவில்லை என கூறிவிட்டனர். விசிக வின் நிலைப்பாட்டை இன்று அறிவிக்கவுள்ளதாக திருமாவளவன் கூறியுள்ளார். இந்நிலையில் எம்மை-ஓரங்கட்ட நினைத்தாலும் நாங்களே மையத்தை தீர்மானிப்போம் என்று விசிக வன்னிஅரசு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் தவெக தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். ஆட்சியமைப்பதற்கு தேவையான 118 தொகுதிகள் அவர்களிடம் இல்லை. காங்கிரஸ் முதல் ஆளாக தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. சிபிஎம், சிபிஐ, விசிக, ஐயூஎம்எல் கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரியது. சிபிஎம், சிபிஐ கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. விசிகவின் நிலைப்பாடு இன்று அறிவிக்கப்படவுள்ளது.

பவர் சென்டராகும் விசிக
திமுக ஆதரவுடன் அதிமுகவும் ஆட்சியமைப்பதற்கான முயற்சியில் இறங்கினர். தவெகவை ஆட்சியமைக்க அழைக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவதன் பின்னணியில் பாஜக உள்ளதாக அரசியல் கட்சிகள் சந்தேகம் எழுப்புகிறார்கள். பாஜகவின் முயற்சியை முறியடிப்பதற்காகவே தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்கள் தெரிவித்துள்ளனர். விசிகவின் முடிவு பொறுத்துதான் தவெக ஆட்சியமைக்குமா இல்லையா என்பது தெரியவரும்.
இந்நிலையில் விசிக துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு. இது திருமா காலம். மேன்மேலும் உயர்வோம்"
என்று நேற்று கூறியிருந்தார். இந்நிலையில் வன்னி அரசு இன்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "எம்மை-ஓரங்கட்ட நினைத்தாலும், ஒதுக்க நினைத்தாலும் நாங்களே மைய்யம் என்பதை தீர்மானிப்போம்" என்று கூறியுள்ளார்.
தவெகவினர் நம்பிக்கை
தமிழக அரசியலின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டே வன்னி அரசு இப்படி சொல்லியிருப்பதாக தெரிகிறது. தன்னுடைய பதிவில் அவர் எந்த கட்சிக்கு ஆதரவாக பேசுகிறார், யாரை விமர்சிக்கிறார் என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால் தமிழக அரசியலில் தாங்கள் தவிர்க்க முடியாத சக்தி என்பதையும், அவர்கள் எடுக்கும் முடிவு தான் தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்த்துகிறது.
ஆக வன்னி அரசு நேற்று போட்ட பதிவையும், இன்று வெளியிட்டுள்ள பதிவையும் காணும்போது தவெக ஆதரவு நிலைப்பாட்டை விசிக எடுக்கும் என்று தவெக நிர்வாகிகள் நம்புகிறார்கள். தேர்தல் நேரத்தில் திருமாவளவன் போட்டியிடுவதாக கூறி பிறகு வாபஸ் வாங்கியதற்கு திமுக காரணம் என்று புகார்கள் எழுந்தன. அதனால் வன்னி அரசு திமுகவை மறைமுகமாக தாக்கியே இந்த பதிவை வெளியிட்டுள்ளதாக தவெகவினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.












Click it and Unblock the Notifications