திமுக அல்லது தவெக.. எந்த கூட்டணியில் மகிழ்ச்சியாக இருக்கீங்க? செல்வப்பெருந்தகை கொடுத்த பதில்!
சென்னை: திமுக கூட்டணியை விட தவெக கூட்டணியில் இருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். ஆட்சியில் பங்கு பெறும் போது எல்லா கட்சிகளும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று கூறிய செல்வப்பெருந்தகை, ஸ்டாலினுடன் வேண்டுமென்றே இணைந்து பிரச்சாரம் செய்வதை ராகுல் காந்தி தவிர்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களில் வென்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது. இதனால் தேர்தல் முடிவுக்கு பின் காங்கிரஸ் கட்சி உடனடியாக தவெக பக்கம் சாய்ந்தது. தவெக தரப்பில் ஆட்சியில் பங்கு கொடுப்பதாக உறுதி கொடுக்கப்பட்டது. இதனால் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டணியை சீர்குலைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி, ஜோதிமணி உள்ளிட்ட பலரும் திமுகவை குற்றம்சாட்டி வந்தனர். தற்போது தவெக உடன் கூட்டணி அமைத்திருப்பதால், காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் பணிகளை கூட செய்யாமல் முதுகில் குத்தியதாக விமர்சிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசிகையில், ராகுல் காந்தி - ஸ்டாலின் உடன் இணைந்து பிரச்சாரம் செய்வதை தவிர்க்கவில்லை. காங்கிரஸ் கட்சி எந்தக் கூட்டணியில் இருந்தாலும் நாங்கள் மகிழ்ச்சியாக தான் இருப்போம். ஆனால் ஆட்சியில் பங்கு கிடைத்தால், எல்லோரும் மகிழ்ச்சியாக தானே இருப்போம்.
மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்து ஜனநாயக சக்திகளும் ஆளுநரின் செயல்பாடுகளை கண்டித்துள்ளோம். எங்களின் நோக்கம் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். ஜனநாயகத்தை சீரழிப்பதை அனுமதிக்க முடியாது. அதன் காரணமாகவே காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தியது. 118 எம்எல்ஏ-க்கள் என்ற பெரும்பான்மையை எட்டினாலே, அது நிலையான ஆட்சி தான்.
இனி வரும் காலங்களில் காங்கிரஸ் - தவெக கூட்டணி தொடரும் என்று தேசிய பொறுப்பாளர் அறிவித்துவிட்டார். பதவியேற்பு விழா முடிவான பின், ராகுல் காந்தி பங்கேற்பாரா என்பதை தேசிய தலைவர்களிடம் ஆலோசித்து கூறுவோம் என்று தெரிவித்துள்ளார். தவெக பதவியேற்பு விழா முடிவடைந்த பின் செல்வப்பெருந்தகை பதவி விலகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications