விஜய் அமைச்சரவையில் கல்வித்துறை அமைச்சர் யார் தெரியுமா? யார் இந்த மைலாப்பூர் வெங்கட்ரமணன்? பின்னணி
சென்னை: முதல்வர் விஜயின் அமைச்சரவைப் பட்டியலில் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் பெயர் வெங்கட்ரமணன். இவருக்கு மிக முக்கியமான பள்ளிக் கல்வித்துறை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டமன்றத் தேர்தலில் 120 இடங்களைப் பிடித்து பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், இன்று காலை 10 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் விஜய் முதல்வராகப் பதவியேற்கிறார்.
இந்த தருணத்தில், விஜய்யுடன் சேர்த்து 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த உத்தேசப் பட்டியலில் கல்வித்துறை பேசுபொருளாகியுள்ளது. வெளியாகியுள்ள பட்டியலின்படி, முதல்வர் விஜய் வசம் பொது நிர்வாகம், காவல் மற்றும் உள்துறை இருக்கும். மற்ற முக்கியப் பொறுப்புகளில் அனுபவமும் இளமையும் கலந்த கலவை காணப்படுகிறது:
கல்வித்துறை அமைச்சராக வெங்கட்ரமணன்: யார் இவர்?
இந்த அமைச்சரவைப் பட்டியலில் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் பெயர் வெங்கட்ரமணன். இவருக்கு மிக முக்கியமான பள்ளிக் கல்வித்துறை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

பின்னணி மற்றும் தகுதி:
பிராமண சமூகத்தைச் சேர்ந்த வெங்கட்ரமணன், நீண்ட காலமாக விஜய்யின் அரசியல் நகர்வுகளில் அவருக்குப் பின்னால் இருந்து செயல்பட்டவர் என அறியப்படுகிறார். பி. வெங்கடரமணன் (பிறப்பு 1978) தமிழக வெற்றிக் கழகத்தின் பொருளாளராகவும், தமிழ்நாடு சைதாப்பேட்டை வழக்கறிஞர்கள் சங்கத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறார். இவர் இந்த முறை சென்னை மாவட்டத்தின் மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை உறுப்பினர் ஆவார். மேலும், இவர் 2000-ம் ஆண்டு முதல் விஜய்யின் மேலாளராகவும் இருந்து வருகிறார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
சென்னையைச் சேர்ந்த இவர், பத்மநாபன் என்பவரின் மகனாவார். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிகவியல் (M.Com) பட்டமும், பெங்களூரு பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பும் (LLB), பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிக மேலாண்மை (MBA) பட்டமும் பெற்றுள்ளார். இவரது மனைவி சாய் விஜய் அறக்கட்டளையின் அறங்காவலராக உள்ளார்.
அரசியல் வாழ்க்கை
2024-ம் ஆண்டு நடிகர் விஜயால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் பொருளாளராக வெங்கடராமணன் பொறுப்பு வகித்து வருகிறார்.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினரானார். இத்தேர்தலில் 70,070 வாக்குகளைப் பெற்ற அவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தற்போதைய உறுப்பினர் த. வேலுவை 28,972 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
அன்பில் மகேஷ் கையில் இருந்த துறை இவருக்கு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் புதியகல்விக்கொள்கை, பிஎம் ஸ்ரீ திட்டங்களை கொண்டு வர மத்திய அரசு முயன்று வரும் நிலையில், பள்ளிக்கல்வித்துறைக்கு பிராமணர் நியமனம் செய்யப்பட்டு உள்ளது கவனம் பெற்றுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் 'பிஎம் ஸ்ரீ' (PM SHRI) பள்ளிகள் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) உடனடியாகக் கையெழுத்திடுமாறு வலியுறுத்தி மத்திய அரசு தமிழகத் தலைமைச் செயலாளருக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. கல்வித்துறையில் நீண்டகாலமாக நிலவி வரும் இந்த மும்மொழி கொள்கை விவகாரம், தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களுக்கு இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்னணி: என்ன இந்த பிஎம் ஸ்ரீ திட்டம்?
மத்திய அரசின் 'தேசிய கல்விக் கொள்கை 2020'-ன் (NEP) ஒரு பகுதியாக, நாடு முழுவதும் சுமார் 14,500 பள்ளிகளை மாதிரிப் பள்ளிகளாக மேம்படுத்துவதே பிஎம் ஸ்ரீ (Pradhan Mantri Schools for Rising India) திட்டத்தின் நோக்கமாகும். இதற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் பள்ளிகளுக்கு நவீன உள்கட்டமைப்பு மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது.
இருப்பினும், இந்தத் திட்டத்தின் கீழ் வரும் பள்ளிகளில் மும்மொழி கொள்கை (Three-Language Policy) கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்பது மத்திய அரசின் நிபந்தனை. அதாவது, தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன் கூடுதலாக ஒரு இந்திய மொழியை (பெரும்பாலும் ஹிந்தி) மாணவர்கள் கற்க வேண்டும்.
தமிழகத்தின் நீண்டகால நிலைப்பாடான இருமொழி கொள்கைக்கு (தமிழ் மற்றும் ஆங்கிலம்) இது எதிராக இருப்பதாகக் கூறி, கடந்த திமுக அரசு இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து வந்தது. "நிதி உதவிக்காகக் கல்வித் தன்னாட்சியை விட்டுக்கொடுக்க முடியாது" என முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு திட்டவட்டமாகத் தெரிவித்தது.
இதன் விளைவாக, மத்திய அரசு வழங்க வேண்டிய 'சமக்ர சிக்சா' (Samagra Shiksha) திட்டத்திற்கான நிதியை நிறுத்தி வைத்தது. இதனால் தமிழகத்தில் ஆசிரியர்கள் ஊதியம் மற்றும் பள்ளிப் பராமரிப்புப் பணிகளில் கடும் சிக்கல் நீடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. வெங்கட்ரமணன் இதில் என்ன நிலைப்பாடு எடுப்பார் என்று கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications