லடாக் வன்முறையில் திருப்பம்? உச்ச நீதிமன்றத்தில் திடீரென தொடரப்பட்ட வழக்கு! பின்னணி
டெல்லி: லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்கக் கோரி நடத்திய போராட்டத்தில் கடந்த வாரம் வன்முறை வெடித்தது. இந்தப் போராட்டம் தொடர்பாகச் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் என்பவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே இந்தக் கைதுக்கு எதிராக சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். அவரை உடனடியாக விடுதலை செய்யக் கோரிக்கை விடுத்துள்ளார்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட போது, அது இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகச் செயல்படும் நிலையில், லடாக் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகச் செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி அங்குப் போராட்டங்கள் நடந்து வந்தது.

லடாக் வன்முறை
அந்தப் போராட்டங்களில் கடந்த வாரம் திடீரென வன்முறை வெடித்தது. இதில் சிலர் உயிரிழந்த நிலையில், பலரும் காயமடைந்தனர். மேலும், அங்கிருந்த பாஜக அலுவலகமும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மத்திய அரசு இந்த விவகாரத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தன. அதன் ஒரு பகுதியாகவே சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டார்.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
இதற்கிடையே சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். அவரை உடனடியாக விடுதலை செய்யக் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த செப்டம்பர் 26ம் தேதி தனது கணவர் கைது செய்யப்பட்டதிலிருந்து அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று ஆங்மோ தெரிவித்துள்ளார். இந்தக் கைது சட்டவிரோதமானது என்றும் தேசியப் பாதுகாப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதால் தனது கணவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று சொல்லி ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்துள்ளார்.
வாங்சுக் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது குறித்து கேள்வி எழுப்பிய ஆங்மோ, வாங்சுக் கைது உத்தரவின் நகல் இன்னும் கிடைக்கவில்லை என்றும் இது அப்பட்டமான விதிமீறல் என்றும் அவர் குறிப்பிட்டார். இதை எல்லாம் கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் சரியான உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
தேசிய பாதுகாப்புத் திட்டம்
லடாக் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை மோதல்களுக்குப் பிறகு செப்டம்பர் 24ம் தேதி வாங்சுக் கைது செய்யப்பட்டார். செப்டம்பர் 26ம் தேதி அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது. லடாக் மாநில அந்தஸ்து மற்றும் இந்திய அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் சேர்க்கக் கோரி நடந்த போராட்டங்களின்போது ஏற்பட்ட மோதல்களில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
குடியரசு தலைவர்
வாங்சுக் போராட்டக்காரர்களைத் தூண்டியதாகவும், பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரியுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் போலீசார் குற்றம் சாட்டினர். இருப்பினும் இதை வாங்சுக் தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், அவரது மனைவி ஆங்மோ இது தொடர்பாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு மூன்று பக்கக் கடிதம் ஒன்றையும் அனுப்பினார். லடாக் மக்களின் உரிமைக்காகத் தனது கணவர் போராடியதாகவும் இருப்பினும், அதற்காகவே அவர் 'வேட்டையாடப்படுவதாக' ஆங்மோ குற்றம் சாட்டினார்.
வாங்சுக் கைது செய்யப்படுவதற்கு முன்பே, அவரது தொண்டு நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறும் உரிமையை மத்திய அரசு ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications