குற்றவாளியை விடக்கூடாது.. அதிகாலை 3 மணிக்கு வீட்டிலேயே வழக்கை விசாரித்த நீதிபதி! குவியும் பாராட்டு
பட்டியாலா: பலரிடம் இருந்து ஏமாற்றி பணம் பறித்த நபர் தொடர்பான வழக்கை அதிகாலை 3 மணிக்கு நீதிபதி விசாரித்துள்ளார். ஸ்வராஜ் சிங் என்ற அந்த நபர் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட நிலையில், காலை 3 மணிக்கு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீதான புகார்களை அந்த நேரத்தில் நீதிபதி விசாரித்திருக்கிறார். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
பொதுமக்களை ஏமாற்றி மோசடி செய்த நபர் கைது செய்யப்படும்போது அவருக்கு அதிகபட்சத் தண்டனை பெற்றுத் தரவே போலீசார் முயல்வார்கள். நீதிபதிகளும் கூட இதுபோன்ற சூழல்களில் தீவிரமாக விசாரித்து, சரியான தீர்ப்பை வழங்குவார்கள். அப்படிப் பணமோசடி வழக்கில் கைதான நபர் தொடர்பான வழக்கை நீதிபதி ஒருவர் அதிகாலை நேரத்தில் விசாரித்திருக்கிறார்.

பணமோசடி
அதாவது பட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தைச் சேர்ந்த கூடுதல் அமர்வு நீதிபதி ஷெஃபாலி பர்னாலா டாண்டனின் இல்லத்தில், வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் நீதிமன்றம் கூடியுள்ளது. பண மோசடி குற்றவாளியான ஸ்வராஜ் சிங் யாதவை அமலாக்க துறை கைது செய்திருந்த நிலையில், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கவே இந்த விசாரணை நடந்தது.
பின்னணி
ஓஷன் செவன் பில்டெக் பிரைவேட் லிமிடெட்டின் நிறுவனர் ஸ்வராஜ் யாதவ், குர்கானில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட வீடுகளைச் சட்டவிரோதமாக விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டார். இதன் மூலம் ₹222 கோடிக்கும் அதிகமான பணத்தை ஸ்வராஜ் மோசடி செய்ததாக அமலாக்கத் துறை தெரிவித்தது. அதாவது முதலில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த சிலரிடம் முன்பணம் வாங்கியுள்ளார். ஆனால், சில காரணங்களால் அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
மோசடி
அவர்களின் முன்பணத்தை கூட திருப்பித் தராமல், அவர்களுக்குத் தெரியாமல், ₹26.5 லட்சம் மதிப்புள்ள வீட்டை ₹40-50 லட்சம் என அதிக விலைக்குப் புதிய வாடிக்கையாளர்களுக்கு விற்று ஸ்வராஜ் மோசடி செய்துள்ளார். இதை வைத்து அவர் மகாராஷ்டிராவின் வேர் கிராமத்தில் 500 ஏக்கர் நிலம், புனே-அலிபாக் சாலையில் 100 ஏக்கர் நிலம், இமாச்சலப் பிரதேசத்தின் தீர்த்தன் பள்ளத்தாக்கில் உள்ள சாய் ரூபா ரிசார்ட்ஸ், அமெரிக்காவின் பாஸ்டன், இங்கிலாந்தில் எனப் பல இடங்களில் சொத்துகளை வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த ஸ்வராஜ் யாதவை கைது செய்யத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. வியாழக்கிழமை இரவு முழுவதும் நடந்த தேடுதல் வேட்டைக்குப் பிறகு, அன்று நள்ளிரவு ஸ்வராஜ் யாதவை அமலாக்கத் துறை கைது செய்தது. அதைத் தொடர்ந்து அவர் அதிகாலை நேரத்தில் நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அதிகாலை 3 மணிக்கு
அப்போது அமலாக்க துறை வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி ஒருவரைக் கைது செய்யத் தேடுதல் வேட்டையைத் தொடங்கினால்.. அடுத்த 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். இதன் காரணமாகவே இந்த நேரத்தில் ஆஜர்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். காலை 3:05 மணிக்கு வழக்கு விசாரணை தொடங்கின. இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்தபோது, காலை 6:30 ஆகிவிட்டது.
நீதிபதிகள் உத்தரவு
குற்றஞ்சாட்டப்பட்ட நபரை வரும் நவம்பர் 28ம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அன்று பிற்பகல் 2 மணிக்குக் குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்..
2006ஆம் ஆண்டு முதலே இந்த ஸ்வராஜ் யாதவ், நாடு முழுவதும் பணமோசடி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். மும்பை, ஜெய்ப்பூர், கோட்புட்லி மற்றும் குருகிராமில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களை ஸ்வராஜ் யாதவ் ஏமாற்றியதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியது. மேலும், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை எதிர்பார்த்து, அவர் தனது சொத்துக்களை அவசரமாக விற்றுள்ளார். குருகிராமில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு, மகாராஷ்டிராவின் போர்கானில் 40 ஏக்கர் நிலம் மற்றும் ஜெய்ப்பூரில் 15 ஏக்கர் நிலம் ஆகியவற்றை விற்றுவிட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்குப் போன பணம்
ஸ்வராஜ் யாதவின் மனைவி கடந்த 2025ல் அமெரிக்காவுக்குச் சென்ற நிலையில், அதைத் தொடர்ந்து ஒரு பெரிய தொகை அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டதாகவும் சுட்டக்காட்டினர். மேலும், அவரது குழந்தைகள் அமெரிக்காவின் கனெக்டிகட்டில் படிப்பதால், அவர் தப்பிச் செல்ல வாய்ப்புள்ளது என்று அமலாக்கத் துறை கூறியது. இந்த வாதங்களை எல்லாம் கேட்ட பிறகே அவரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி கொடுத்தார்.












Click it and Unblock the Notifications