மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் மீது சரமாரி துப்பாக்கிச் சூடு! இரு வீரர்கள் வீர மரணம்! பலர் படுகாயம்
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் இரு அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலால் மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து வருவது அனைவருக்கும் தெரியும். இதனால் அங்கிருந்த மாநில அரசு கலைக்கப்பட்டு நேரடியாகக் குடியரசுத் தலைவர் ஆட்சியும் கூட அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், அங்கு இன்னுமே மோதல் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை.

இதற்கிடையே அங்கு இப்போது பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்குள்ள பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள நம்போல் சபால் லீகை பகுதியில் பாதுகாப்புப் படையினர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் இரண்டு அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர்.
இம்பாலில் இருந்து பிஷ்ணுபூர் நோக்கி 33 அசாம் ரைபிள்ஸ் படையினர் பயணித்த வாகனத்தின் மீது மாலை 5.50 மணியளவில் இந்த தாக்குதல் நடைபெற்றது. அதில் தான் இருவர் கொல்லப்பட்டனர். காயமடைந்த வீரர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலை முன்னாள் மணிப்பூர் முதலமைச்சர் என். பைரன் சிங் கடுமையாகக் கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர், "நம்போல் சபால் லீகை பகுதியில் நமது அசாம் ரைபிள்ஸ் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த தகவலைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். இரண்டு வீரர்கள் உயிரிழந்ததும், பலர் காயமடைந்ததும் நமக்கு ஏற்பட்ட ஒரு பெரிய இழப்பு.
உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் துணிச்சலும் தியாகமும் என்றென்றும் நம் இதயங்களில் நிலைத்திருக்கும். இந்தக் கொடூரச் செயலுக்குக் காரணமானவர்கள் மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தியது யார் என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல்கள் இல்லை. இருப்பினும், அங்கு இப்போது பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள நிலையில், குற்றவாளிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
மணிப்பூரில் கடந்த ஆண்டு முதல் பல மாவட்டங்களில் தொடர்ச்சியான வன்முறை மற்றும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இதனால் மணிப்பூரில் இதுபோன்ற தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது..












Click it and Unblock the Notifications