"ஓவர் உடற்பயிற்சி.." அப்படியே சரிந்த இளைஞர்.. ஒரே நொடியில் தாய் எடுத்த முடிவால் செத்து பிழைத்தார்!
நாக்பூர்: இந்த காலத்தில் இளைஞர்கள் ஜிம்மிற்கு சென்று உடலை ஆரோக்கியமாக வைக்க உடற்பயிற்சி செய்வது ஒரு டிரெண்டாகவே இருக்கிறது. இருப்பினும், ஓவராக உடற்பயிற்சி செய்தால் அதுவே நமது உடலுக்கு ஆபத்தாக முடியவும் வாய்ப்பு இருக்கிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. அப்போது சரியான நேரத்தில் இளைஞரின் தாய் எடுத்த நடவடிக்கையால் அந்த நபரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
ஜம்மிற்கு செல்வது நல்லதுதான் என்றாலும் முறையான பயிற்சி எதுவும் இல்லாமல் ஓவராக உடற்பயிற்சி செய்தால் அது நமது உயிரையே கூட பறிக்கக்கூடும்.. அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. அதாவது 23 வயதான ஓம் போயர் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்.. "பலமுறை தோற்றிருக்கிறேன், ஆனால் கைவிடுவது ஒரு விருப்பமே அல்ல. நான் வெல்லும் வரை முயற்சிப்பேன்" என போஸ்ட் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

மயக்கம்
அதில் அவர் நாக்பூர் ஜிம்மில் 'டெட் லிஃப்ட்' செய்ய முயற்சிக்கும் வீடியோவை ஏப்ரல் 10ம் தேதி பகிர்ந்திருந்தார். ஆனால், இந்தப் பதிவை வெளியிட்ட சில மணிநேரங்களிலேயே அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்தது. அதாவது வீட்டிற்குத் திரும்பிய உடனேயே அவர் திடீரென மயங்கி விழுந்தார். ஓம் போயரின் தாய் ஆர்த்தி போயர் ஒரு செவிலியர். தனது மகன் மயங்கி விழுந்ததை பார்த்து பதறி போனார். இருப்பினும், நர்ஸ் என்பதால் அது சாதாரண மயக்கம் இல்லை.. அது ஒரு பக்கவாதத் தாக்குதல் என்பதையும், மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்பதையும் அவர் உடனடியாக உணர்ந்தார்.
மருத்துவ உலகில் கோல்டன் ஹவர் என பொதுவாக ஒன்றை சொல்வார்கள். அதாவது எந்தவொரு பாதிப்பு ஏற்படும்போதும், அந்த முதல் 3-4 மணிநேரம் மிக முக்கியமானது. அந்த நேரத்திற்குள் சிகிச்சை அளித்தால் மட்டுமே பாதிப்புகளைச் சரிசெய்ய முடியும். அதை அறிந்த அவரது தாய்.. துளியும் தாமதிக்காமல் மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
ஆபரேஷன்
மருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனையில், ஓம் போயரின் மூளையில் ரத்தக்கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 'மெக்கானிக்கல் த்ரோம்பெக்டோமி' என்ற அறுவை சிகிச்சை முறை மூலம் அந்த ரத்தக்கட்டி அகற்றப்பட்டு, மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் சீராக்கப்பட்டது. தாய் சரியான நேரத்தில் எடுத்த இந்த நடவடிக்கையால், ஓம் போயரின் உடல்நிலையில் விரைவான முன்னேற்றம் ஏற்பட்டது. 10 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் ஏப்ரல் 21 அன்று நலமுடன் வீடு திரும்பினார்.
ஒரு எச்சரிக்கை
ஜிம்மிற்கு செல்வதும் உடற்பயிற்சி செய்வதும் உடலுக்கு ரொம்பவே நல்லது. அதில் மாற்று கருத்தே இல்லை. இருப்பினும், உடல் தகுதியைத் தாண்டி அல்லது நிபுணர்களின் மேற்பார்வையின்றிச் செய்யப்படும் கடுமையான உடற்பயிற்சிகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சி.
அதீத உடற்பயிற்சியால் ஹெமராஜிக் ஸ்ட்ரோக், அதாவது மூளையில் உள்ள ரத்த நாளங்கள் வெடித்து, ரத்தம் கசிவதால் உடலின் சில பாகங்கள் செயலிழந்து பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. சரியான நேரத்தில் மருத்துவ உதவியைப் பெற்றால், மருந்துகள் அல்லது அறுவை சிகிச்சை மூலம் ரத்தக்கட்டியை அகற்றி, பக்கவாத பாதிப்பிலிருந்து மீள முடியும். இல்லையென்றால் சரி செய்யவே முடியாத பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து உள்ளது.
இளைஞர்கள் மோகம்
ஜிம்முக்குச் செல்வதும், உடல் எடையைக் குறைப்பதும் இன்றைய இளைஞர்களிடம் ஒரு மோகமாகவே உள்ளது. ஆனால், அதை ஜாக்கிரதையாக செய்ய வேண்டும்.. சமூக வலைதள 'ரீல்ஸ்' போட தனது உடல் வலிமைக்கு மீறிய எடையைத் தூக்குவது உயிரையே பறிக்கக்கூடும். உடற்பயிற்சி என்பது ஆரோக்கியத்திற்காக இருக்க வேண்டுமே தவிர, அதுவே ஒரு ஆபத்தாக மாறிவிடக்கூடாது.












Click it and Unblock the Notifications