இன்சூரன்ஸ் படுகொலை? ரூ.21 கோடி மதிப்புள்ள எருமை திடீர் மரணம்.. பரபர குற்றச்சாட்டுகள்! என்ன நடந்தது
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெறும் புஷ்கர் விலங்கு கண்காட்சியில் மிக மோசமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்குக் கண்காட்சிக்குக் கொண்டு வரப்பட்ட ரூ.21 கோடி மதிப்புள்ள இந்தியாவின் மதிப்புமிக்க விலங்காகக் கருதப்பட்ட எருமை திடீரென உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நமது நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் விலங்குகள் கண்காட்சி நடைபெறும். கால்நடை வர்த்தகத்திற்கு விலங்கு கண்காட்சி முக்கியமாக கை கைகொடுக்கும். அப்படி ராஜஸ்தான் புஷ்கரில் நடக்கும் விலங்கு கண்காட்சி ரொம்பவே புகழ்பெற்றது.

விலங்கு கண்காட்சி
அங்கு ஒவ்வொரு ஆண்டும் புஷ்கர் விலங்கு கண்காட்சி நடைபெறும். அந்தக் கண்காட்சியில் நாடு முழுக்க இருந்து கொண்டு வரப்படும் விலங்குகள் காட்சிப்படுத்தப்படும். இதற்கிடையே அந்தக் கண்காட்சியில் கலந்து கொண்ட சுமார் 21 கோடி ரூபாய் மதிப்புள்ள எருமை திடீரென உயிரிழந்தது. இது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
எருமையின் உடல்நிலை திடீரென மோசமடைந்த நிலையில், இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. புஷ்கர் கண்காட்சிக்கு ஒவ்வொரு நாளும் அந்த எருமையைப் பார்க்கவே பல நூறு பொதுமக்கள் திரள்வார்கள். இதனால் அந்த விலைமதிப்பற்ற எருமையை புஷ்கருக்குக் கொண்டு வரச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
காப்பாற்ற முடியவில்லை
அப்போதுதான் அதன் உடல்நிலை மோசமாக இருப்பதாகத் தகவல் வெளியானது. இது குறித்த தகவல் கிடைத்தவுடன் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.. அந்த எருமையைக் காப்பாற்றத் தீவிரச் சிகிச்சை அளித்தனர். இருப்பினும், எருமையின் அதிக உடல் எடை மற்றும் மோசமடைந்திருந்த உடல்நிலை காரணமாக அதைக் காப்பாற்ற முடியவில்லை.
இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இறந்த எருமையைச் சுற்றி அதன் பராமரிப்பாளரும் பொதுமக்கள் பலரும் இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இது தொடர்பாக நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். குறிப்பாக அந்த எருமையின் உரிமையாளர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
இது தொடர்பாக நடிகை சினேகா உல்லால், "அதிக ஹார்மோன்கள், அதிக ஆண்டிபயாடிக்குகள் மற்றும் வளர்ச்சி ஹார்மோன்களை செலுத்துகிறார்கள். முழுக்க முழுக்க இயற்கைக்கு எதிராகச் செயல்பட்டுவிட்டு, பிறகு அதுதான் இயற்கையானது என்று சொல்கிறார்கள். அருவருப்பான மனிதர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
வியாபாரத்தின் பெயரால் விலங்குகளைக் கொடுமைப்படுத்துவதாக இன்னொரு நெட்டிசன் பதிவிட்டுள்ளார். மற்றொரு நபர், இது திடீர் மரணம் அல்ல என்றும் இன்சூரன்ஸ் பெற இதுபோல கொன்றிருக்கலாம் என கான்ஸ்பிரசி தியரியை பதிவிட்டிருக்கிறார். உங்கள் மதிப்பு 21 கோடியாக இருந்தாலும் உங்களைப் பாதுகாக்க எதுவுமே செய்ய முடியாமல் இருப்பது துயரம் தான் என இன்னொரு நபர் பதிவிட்டுள்ளார்.
புஷ்கர் மேளா
புஷ்கர் மேளா என்றும் அழைக்கப்படும் புஷ்கர் விலங்கு கண்காட்சி, ராஜஸ்தானின் உள்ள புஷ்கர் என்ற இடத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு நிகழ்வாகும். இது உலகின் மிக பெரிய ஒட்டக மற்றும் கால்நடை கண்காட்சிகளில் ஒன்றாகும். பொதுவாக அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் ஒரு வாரம் முழுவதும் இக்கண்காட்சி நடைபெறும். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இந்தக் கண்காட்சிக்கு வருவார்கள்.
கால்நடை வர்த்தகத்திற்கான ஒரு முக்கிய மையமாக இந்தக் கண்காட்சி இருக்கிறது. ஒட்டகங்கள், குதிரைகள் மற்றும் கால்நடைகள் இதில் இடம்பெறுகின்றன. ராஜஸ்தானின் வளமான கலாச்சாரம், ஒட்டகப் பந்தயங்கள், நாட்டுப்புற நிகழ்ச்சிகள் மற்றும் கைவினைப் பொருட்கள், உள்ளூர் உணவுகள் ஆகியவையும் இதில் இடம்பெறும்.












Click it and Unblock the Notifications