"தாமரை சின்னத்தின் மீது டேப்.." ஆதாரமாக வீடியோவை வெளியிட்ட பாஜக! மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவு
கொல்கத்தா: மேற்கு வங்கத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கு பதிவில் மிக பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய'ஈவிஎம் பட்டனில் டேப் விவகாரத்தில், தேர்தல் ஆணையம் தற்போது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. புகார்கள் எழுப்பப்பட்ட ஃபால்டா (Falta) தொகுதியின் குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் இன்றைய தினம் 2ம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. கடந்த வாரம் அங்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்த நிலையில், அது அமைதியாகவே நடந்து முடிந்தது. எந்தவொரு பெரிய பிரச்சனையும் ஏற்படவில்லை. இருப்பினும், 2ம் கட்ட வாக்குப்பதிவு நாளான இன்று காலை முதலே மேற்கு வங்கத்தில் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகிறது.

ஸ்டிக்கர்
இதற்கிடையே மேற்கு வங்கத்தின் தென் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஃபால்டா பகுதியில் பல வாக்குச் சாவடிகளில் பாஜகவுக்கு வாக்களிக்க முடியாதபடி இயந்திரங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக பாஜக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா அதிரடிப் புகாரை முன்வைத்துள்ளார். ஃபால்டா பகுதியில் உள்ள ஹரிந்தங்கா உயர்நிலைப் பள்ளி உள்ளிட்ட பல இடங்களில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பாஜகவின் 'தாமரை' சின்னத்திற்கு நேராக இருக்கும் பட்டன் மீது டேப் (Tape) ஒட்டப்பட்டுள்ளதாக அமித் மாளவியா தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
புகார்
அதில் அவர், "வாக்காளர்கள் தங்கள் விருப்பப்படி வாக்களிப்பதைத் தடுக்கும் வகையில் இந்த அராஜகம் செய்யப்பட்டுள்ளது. இதுதான் 'டைமண்ட் ஹார்பர் மாடல்'. இதே முறையைப் பயன்படுத்தித் தான் அபிஷேக் பானர்ஜி தனது மக்களவைத் தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டார்" என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
This is what Mamata Banerjee was defending when she spoke up for Jehangir Khan, a criminal contesting on a TMC ticket from Falta in Diamond Harbour.
— Amit Malviya (@amitmalviya) April 29, 2026
In several polling booths, the option to vote for the BJP has been blocked using a tape, effectively preventing voters from… pic.twitter.com/sKw3mcdA86
மறுவாக்குப்பதிவு
இதையடுத்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் தற்போது நடந்துள்ள வாக்குப்பதிவு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மீண்டும் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் அகர்வால் பேசுகையில், "இது ஒரு மிகத் தீவிரமான குற்றச்சாட்டு. ஃபால்டா தொகுதியில் இன்னும் பல இடங்களில் இதே போன்ற புகார்கள் உறுதி செய்யப்பட்டால், ஒட்டுமொத்தத் தொகுதிக்கும் மறுவாக்குப்பதிவு நடத்த ஆணையம் தயங்காது" எனத் தெரிவித்துள்ளார்.
திரிணாமுல் பதிலடி
இந்தக் குற்றச்சாட்டுகளை அடியோடு மறுத்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரிஜு தத்தா, "பாஜக படுதோல்வி அடையப்போவதால் இப்போது இருந்தே அழத் தொடங்கிவிட்டது" எனக் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், "வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. அதில் ஏதேனும் குளறுபடி இருந்தால் அதற்குத் தேர்தல் ஆணையம்தான் பொறுப்பு. அமித் மாளவியா ட்வீட் போடுவதை விட்டுவிட்டு, தனது மேலதிகாரிகளிடம் சொல்லி தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கம் செய்யச் சொல்ல வேண்டியதுதானே? பாஜக சொல்வதைக் கேட்டுச் செயல்படாததால் இப்போது போலீஸ் கண்காணிப்பாளர் அஜய் பால் சர்மா மீதும் அவர்கள் பாய்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
மம்தா தாக்கு
ஏற்கனவே, திரிணாமுல் வேட்பாளர் ஜஹாங்கீர் கானின் வீட்டுக்குச் சென்று எச்சரிக்கை விடுத்த ஐபிஎஸ் அதிகாரி அஜய் பால் சர்மாவை தேர்தல் ஆணையத்தின் கைக்கூலி என மம்தா பானர்ஜி விமர்சித்திருந்தார். இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, "பாஜக வெளியே இருந்து கண்காணிப்பாளர்களைக் கொண்டு வந்து வாக்காளர்களைப் பயமுறுத்துகிறது. மத்தியப் படைகள் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றன" எனச் சாடியிருந்தார்.
இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை, வாக்குப்பதிவு இயந்திரங்களில் டேப் ஒட்டப்பட்டிருப்பது குறித்து எழுந்துள்ள புகார்களைத் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருகிறது. இது உண்மையாக இருக்கும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.














Click it and Unblock the Notifications