பிரசாந்த் கிஷோர் கடைசி நேரத்தில் கொடுத்த ட்விஸ்ட்.. பீகார் தேர்தலில் போட்டி இல்லையாம்! என்ன காரணம்
பாட்னா: பீகார் தேர்தலில் இந்த முறை முதல்முறையாக பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சூராஜ் கட்சி போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பதில் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், தான் எந்த தொகுதியிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் கட்சி பணிகளில் கவனம் செலுத்தப் போவதாகவும் பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.
பீகாரில் இன்னும் சில வாரங்களில் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு வழக்கமாக ஜேடியு கூட்டணிக்கும் ஆர்ஜேடி கூட்டணிக்கும் இடையே தான் போட்டி இருக்கும். ஆனால், இந்த முறை அங்கு முதல்முறையாக பிரசாந்த் கிஷோரின் ஜன் சூராஜ் கட்சியும் போட்டியிடுகிறது. இதனால் அங்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளதால் அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பிரசாந்த் கிஷோர் போட்டியில்லை
இந்த முறை பீகார் சட்டசபைத் தேர்தலில் ஜன் சூராஜ் கட்சி எல்லா இடங்களிலும் தனித்துப் போட்டியிடுகிறது. இதனால் பிரசாந்த் கிஷோர் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பதில் எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதேநேரம் அவர் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றும் சொல்லப்பட்டது. இப்படி இரு வேறு கருத்துகள் நிலவியதால் குழப்பம் ஏற்பட்டது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகப் பீகார் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார். கட்சி பணிகளில் கவனம் செலுத்தப் போவதாகவும், தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். நேற்று இரவு ஜன் சுராஜ் கட்சி ராகோபூர் தொகுதிக்கு சஞ்சல் சிங்கை வேட்பாளராக அறிவித்த போதே, பிரசாந்த் கிஷோர் போட்டியிட மாட்டார் என்பது ஏறக்குறைய உறுதியானது. இந்தச் சூழலில் தான் இன்று அவரே அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
என்ன நடந்தது?
முன்பு ஒருமுறை செய்தியாளர்களிடம் பேசும்போது, தான் போட்டியிட்டால் தனது சொந்த தொகுதியான கார்கஹர் போட்டியிடுவேன் அல்லது ஆர்ஜேடி கோட்டையான ராகோபூரில் போட்டியிடுவேன் என பிரசாந்த் கிஷோர் கூறியிருந்தார். முதற்கட்ட வேட்பாளர் பட்டியலியே கார்கஹர் தொகுதியில் ரித்தேஷ் ரஞ்சன் வேட்பாளராகப் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. நேற்றிரவு ராகோபூர் தொகுதிக்கும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதால் பிகே போட்டியிட மாட்டார் என்பது கிட்டத்தட்டத் தெளிவானது.
ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகனான தேஜஸ்வி யாதவ் இந்த ராகோபூர் தொகுதியில் இருந்தே எம்எல்ஏவாக இருக்கிறார். இது ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் கோட்டையாக திகழ்கிறது. அந்த தொகுதியில் பிரசாந்த் கிஷோர் போட்டியிட்டிருந்தால் தேஜஸ்விக்கு கடும் சவால் இருந்திருக்கும். இருப்பினும் பிரசாந்த் கிஷோர் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என முடிவெடுத்துள்ளார்.
என்ன காரணம்?
தேர்தலில் போட்டியிட்டால் அது அவரை ஒரு தொகுதிக்குள் முடக்கிவிடும். ஜன் சூராஜ் கட்சியில் இப்போது ஒரே தெரிந்த முகமாக பிரசாந்த் கிஷோர் மட்டுமே இருக்கிறார். எனவே, அவர் மாநிலம் முழுக்க பிரச்சாரம் செய்ய வேண்டும். அவர் ஒரே இடத்தில் முடங்கினால் பிரச்சாரத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாலேயே அவர் போட்டியிடவில்லை எனத் தெரிகிறது.
150 சீட் இலக்கு
இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "நான் கட்சிப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும், தேர்தலில் போட்டியிடக் கூடாது என ஜன் சூராஜ் கட்சி முடிவு செய்துள்ளது. நாங்கள் குறைந்தது 150 இடங்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம். அதற்குக் குறைவான இடங்களில் வென்றாலும் அது எங்களுக்கு ஒரு தோல்வி தான்" என்று அவர் தெரிவித்தார்.
243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் 6 மற்றும் 11 என இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் வரும் நவம்பர் 14ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications