இந்தோனேசியாவில் 2 ரயில்கள் மோதி கோர விபத்து.. பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு.. அனைவருமே பெண்கள்!
ஜகார்த்தா: இந்தோனேசியாவின் பெகாசி திமூர் ரயில் நிலையத்தில், நடைமேடையில் நின்றிருந்த பயணிகள் ரயில் மீது மற்றொரு விரைவு ரயில் மோதிய விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவருமே பெண்கள். சுமார் 40 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுவதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பெகாசி திமூர் ரயில் நிலையத்தில், நேற்று இரவு இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்தனர். இன்று காலை, மீட்புக் குழுவினர் அங்கு உயிர் பிழைத்தவர்களை மீட்க தீவிரமாகப் போராடினர்.

இடிபாடுகளில் இன்னும் உயிருடன் சிக்கியுள்ள இருவரை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளதாக, இந்தோனேசிய அரசுக்குச் சொந்தமான கேஏஐ (KAI) ரயில் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் அதிகாலை நேரத்தில் உள்ளூர் தொலைக்காட்சிக்குத் தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழு என்றும், 81 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.
உயிர் பிழைத்தவர்களில் ஒருவர், நின்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் மீது ஒரு நீண்ட தூர ரயில் மோதியதில், உருக்குலைந்த பெட்டிகளுக்குள் மக்கள் சிக்கிக்கொண்ட தருணங்களை விவரித்தார். உடைந்த கை மற்றும் ஒரு தொடையில் ஏற்பட்ட ஆழமான வெட்டுக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 29 வயதான சௌசான் சரிஃபா, "நான் இறந்துவிடுவேன் என்று நினைத்தேன்" என்று கூறினார்.
"பயணிகள் ரயிலில் இருந்து இரண்டு அறிவிப்புகள் வந்தன. அனைவரும் இறங்கத் தயாராக இருந்தனர், பின்னர் திடீரென்று என்ஜின் சத்தம் மிகவும் உரக்கக் கேட்டது. வெளியேற நேரமில்லை, இறுதியில் அனைவரும் ரயிலுக்குள் ஒருவர் மீது ஒருவர் நசுங்கிக் கிடந்தனர். நான் மேலே இருந்தேன், அதனால் என்னை விரைவாக வெளியேற்ற முடிந்தது. எனக்குக் கீழே இருந்தவர் எப்படி இருக்கிறார் என்று தெரியவில்லை." என சௌசான் கூறியுள்ளார்.
"சேதமடைந்த ரயில் பாகங்களில் சிக்கியவர்களை மீட்பதற்காக, மீட்புக் குழுவினர் மீட்பு உபகரணங்களைப் பயன்படுத்தி அவர்களை வெளியேற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்" என்று ஜகார்த்தா தேடல் மற்றும் மீட்பு நிறுவனம் தெரிவித்தது. இராணுவம், தீயணைப்புப் படை, தேசிய தேடல் மற்றும் மீட்பு முகமை மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவை மீட்புப் பணிக்கு உதவி வருகின்றன.
இந்த கோர ரயில் விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 40 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 40 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளதாக இந்தோனேசிய அரசு ரயில்வே நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பாபி ரசிடின் கூறினார். இந்தோனேசியாவின் தேசிய போக்குவரத்துப் பாதுகாப்புக் குழு (KNKT) இந்த விபத்து குறித்த விசாரணையை தொடங்கியுள்ளது.
இந்தோனேசிய அரசின் தேடல் மற்றும் மீட்பு அமைப்பின் தலைவர் முகமது ஷாஃபி, மீட்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும், சிதைந்த பெட்டிகளில் சிக்கியிருந்த பயணிகளை மீட்பது ஒரு கடினமான பணியாக இருந்ததாகவும் கூறினார். பெண்கள் மட்டுமே பயணித்த ஒரு பெட்டி இந்த விபத்தில் பெரும் பாதிப்பைச் சந்தித்தது. அதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் பெண்கள் என்றும், அவர்களில் பெரும்பாலானோர் உலோகத்தால் நசுங்கி உயிரிழந்தனர் என்றும் ஷாஃபி கூறினார்.












Click it and Unblock the Notifications