13 ஆண்டுகளில் ரிப்பீட்டான அரசியல் பாதை.. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால்.. தமிழ்நாட்டில் விஜய்!
சென்னை: தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சி அடைந்துள்ள வெற்றியும், 2014ஆம் அண்டு டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அடைந்துள்ள வெற்றியும் கிட்டத்தட்ட ஒத்துப் போகிறது. இதுதொடர்பாக விரிவாக இந்த செய்தியில் பார்க்கலாம்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளிலும், திமுக 73 தொகுதிகளிலும், அதிமுக 53 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை கோர் விஜய் ஆலோசிப்பதாக சொல்லப்படுகிறது.

இன்னொரு பக்கம் ஜான் ஆரோக்கியசாமி மூலமாக காங்கிரஸ், பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளின் ஆதரவை கோருவார் என்று சொல்லப்படுகிறது. கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளில் தவெக அடைந்துள்ள வெற்றி, அப்படியே 2014ஆம் ஆண்டு டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அடைந்துள்ள வெற்றியை ஒத்து இருக்கிறது.
2011ஆம் ஆண்டு ஊழலை ஒழிக்க வேண்டும் என்று அன்னா ஹசாரேவுடன் இணைந்து போராடிய அரவிந்த் கெஜ்ரிவால், 2012ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியை தொடங்கினார். ஆம் ஆத்மி என்றால் சாமானிய மக்கள் என்று பொருள். அது டெல்லியில் சாமானிய மக்களிடையே பிரபலமானது. அந்தக் கட்சிக்கு துடைப்பம் சின்னம் ஒதுக்கப்பட்டது. இதனால் ஊழலை துடைப்பம் கொண்டு ஒழிப்போம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் முழங்கினார்.
சரியாக 2013ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் 28 பேர் வெற்றி பெற்றனர். எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 13 ஆண்டுகளாக டெல்லியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், துடைப்பத்தால் துடைத்து எடுக்கப்பட்டது. இருந்தாலும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆம் ஆத்மி அரியணை ஏறியது.
ஆனால் அந்த ஆட்சி 2 மாதங்கள் கூட நீடிக்கவில்லை. ஆட்சியை கலைத்த அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் தேர்தலை சந்தித்து 67 இடங்களில் வெற்றி பெற்றார். அதேபோல் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தான் தவெக என்ற அரசியல் கட்சியை விஜய் தொடங்கினார். மொத்தமாக 2 மாநாடு, 28 பிரச்சாரக் கூட்டங்களை மட்டுமே விஜய் நடத்தினார். ஆம் ஆத்மியின் கட்சிப் பாடல் பிரபலமானதை போல், தவெக பிரச்சார பாடலும் பிரபலமானது.
உங்கள் விஜய் பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது. விஜய் என்கிற பிராண்ட் தமிழ்நாட்டை முழுமையாக ஆட்கொண்டது என்றே சொல்லலாம். இளைஞர்கள் பலரும் தாமாக முன் வந்து கட்சியில் இணைந்தனர். காங்கிரஸ் கட்சியை வீழ்த்தியதை போலவே, 60 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஆட்சி செய்த இருபெரும் திராவிட கட்சிகளை விஜய் வீழ்த்தி இருக்கிறார்.
இன்னொரு பக்கம் அரவிந்த் கெஜ்ரிவால் போல் விஜய்க்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. வேறொரு கட்சியின் ஆதரவு தேவைப்படுகிறது. இதனால் வரும் நாட்களில் விஜய்யின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலை போலவே விஜய்யின் பாதையும் அமைந்திருப்பது திட்டமிட்ட ஒன்றா அல்லது விதியின் விளையாட்டா என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது. ஏனென்றால் அன்னா ஹசாரேவின் போராட்டத்தில் விஜய்யும் டெல்லி சென்று கலந்து கொண்டிருந்தார்.












Click it and Unblock the Notifications