பிசினஸ்மேன் உடலுக்கு அருகில் புதைக்கப்பட்ட 1.5 கோடி ரூபாய் பென்ஸ் கார்.. பதறிய அரசு செய்ததை பாருங்க
பீஜிங்: சீனாவில் உயிரிழந்த முதியவர் ஒருவரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகிலேயே, அவருக்கு பிடித்தமான 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான மெர்சிடிஸ் பென்ஸ் காரையும் புதைத்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாக மாறி இருக்கிறது.. இதற்கான காரணத்தை பலரும் சோஷியல் மீடியாவில் விவாதித்து கொண்டிருக்கிறார்கள்.. நமக்கு பக்கத்து நாடான சீனாவில் அப்படியென்ன விநோதம் நடந்துள்ளது?
சீனாவின் லியோனிங் மாகாணத்தின் வாகோவ் பகுதியில் 70 வயது மதிக்கத்தக்க பெரியவர் சமீபத்தில் இறந்துவிட்டார்.. இவர் மிகப்பெரிய பணக்காரராம்.. கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாதவராம்.

செல்வந்தர் தாத்தா
இந்த தாத்தாவுக்கு வாழ்நாள் முழுவதும் காஸ்ட்லி கார்கள் மீது தீராத ஆர்வம் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.. குறிப்பாக மெர்சிடிஸ் பென்ஸ் ரக கார்கள் என்றால் கொள்ளை பிரியமாம்.
அதனால் அவருடைய மறைவிற்கு பிறகு, அந்த முதியவரின் விருப்பத்தை நிறைவேற்ற நினைத்த குடும்பத்தினர் ஒரு வினோதமான முடிவை எடுத்தனர்.. அதன்படி, அந்த தாத்தாவின் உடலை புதைத்த கல்லறைக்கு மிக அருகிலேயே இன்னொரு பிரம்மாண்டமான பள்ளத்தை தோண்டினார்கள்.
அதில் அவருக்கு மிகவும் பிடித்தமான 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் காரை இறக்கி, சீன பாரம்பரிய சடங்குகளின்படி மண்ணைப் போட்டு மூடி புதைத்தனர்.. காரை ஒரு சமாதி போல மண்ணுக்குள் புதைக்கும் இந்த காட்சிகள் அடங்கிய வீடியோதான் இப்போது சமூக ஊடகங்களில் வெளியாகி தீ போல பரவி கொண்டிருக்கிறது.
பென்ஸ் கார் - சுற்றுச்சூழல் பாதிப்பு
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆடிப்போய் விட்டார்கள்.. உலகம் முழுவதும் பல நாடுகள் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், இவ்வளவு பெரிய தொகையை செலவழித்து வாங்கிய காரை மண்ணில் புதைப்பது முட்டாள்தனமான செயல் என்றும், இது மிகப்பெரிய வீண் செலவு என்றும் பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்
அதுமட்டுமல்ல, இப்படிஒரு இயந்திரத்தை மண்ணுக்குள் புதைப்பது சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய கேட்டை விளைவிக்கும் என்றும், பேட்டரி மற்றும் எண்ணெய்க் கழிவுகள் நிலத்தடி நீரை மாசுபடுத்தும் என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். சிலர் இதை பெற்றோரின் ஆசையை நிறைவேற்றும் ஒரு மரியாதையாக பார்த்தாலும், பெரும்பாலான மக்கள் இது ஒரு மிகையான ஆடம்பரம் என்றே கருத்து சொல்கிறார்கள்.
தலையிட்ட அரசு - சபாஷ்
இப்படி ஏகப்பட்ட விமர்சனங்கள் பொதுவெளியில் எழுந்த நிலையில், சீன அரசு இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டது.. அந்த குறிப்பிட்ட குடும்பத்தினரை அழைத்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள்.. விசாரணையின் முடிவில், இத்தகைய செயல் நிலப்பிரபுத்துவ காலத்து பிற்போக்குத்தனமான மூடநம்பிக்கை என்று அதிகாரிகள் சாடினார்கள்.
காரை புதைத்த சம்பவத்திற்காக அந்த குடும்பத்தினருக்கு சீன அரசு கடும் எச்சரிக்கை விடுத்ததுடன், அவர்களை பகிரங்கமாக பொது மன்னிப்பு கேட்கவும் உத்தரவிட்டது.. அதுமட்டுமின்றி, விதிமுறைகளை மீறி சுற்றுச்சூழலை மாசுபடுத்தியதற்காக அந்த குடும்பத்தினருக்கு பெரும் தொகையை அபராதமாக விதிக்கவும் அரசு முடிவு செய்துள்ளதாம்.
இருந்தாலும், ஒரு சொகுசு காரை அடக்கம் செய்த இந்த வினோத சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் விவாதங்களை கிளப்பியுள்ளது..
உண்மைதானே? இங்கே பலர் வறுமையில் கிடக்க, ஒரு இயந்திரத்திற்காக இவ்வளவு பெரிய தொகையை மண்ணில் புதைப்பது என்பது மிகை ஆடம்பரம்தான்.. அதிலும் நாட்டின் பொருளாதார சூழலில் இது போன்ற செயல்கள் தவிர்க்கப்பட வேண்டிய முட்டாள்தனமான வீண்விரயம்..!!!












Click it and Unblock the Notifications