கண்ணிவெடிகள் நிறைந்த ஹார்முஸ்.. திடீரென இறங்கிய அமெரிக்க போர்க்கப்பல்கள்.. ஈரானுக்கு திடீர் பதற்றம்
தெஹ்ரான்: வளைகுடாவில் போர் தொடரும் நிலையில், அதை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க திடீரென ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கப் படைகள் இறங்கியுள்ளன. அங்கு பல்வேறு இடங்களிலும் ஈரான் கண்ணி வெடிகளைப் புதைத்துள்ளதாகச் சொல்லப்படும் நிலையில், அதை அகற்றும் பணிகளில் அமெரிக்கா இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில், ஈரான் வைத்துள்ள கடல் கண்ணிவெடிகளை அகற்றும் பணியை அமெரிக்கக் கடற்படை அதிரடியாகத் தொடங்கியுள்ளது. உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் கடந்து செல்லும் இந்த முக்கியமான கடல் பாதையை ஈரான் முடக்கி வைத்திருந்தது. இப்போது அந்தத் தடையை உடைக்க அமெரிக்கா களமிறங்கியுள்ளது.

சீண்டும் டிரம்ப்
இந்த விவகாரத்திலும் டிரம்ப் வழக்கம் போலச் சீனாவைச் சீண்டியுள்ளார். இது தொடர்பாக அவர், "சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுக்குத் தைரியம் இல்லாததால், அவர்களுக்கு ஒரு உதவியாக இதைச் செய்கிறோம்" எனத் தனது ஸ்டைலில் சீண்டியுள்ளார். போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், கடலில் நடக்கும் டிராமா குறித்து நாம் பார்க்கலாம்.
கண்ணிவெடிகள்
யுஎஸ்எஸ் பிராங்க் இ. பீட்டர்சன் (USS Frank E. Peterson) மற்றும் யுஎஸ்எஸ் மைக்கேல் மர்பி (USS Michael Murphy) எனக் கண்ணிவெடிகளை அகற்றும் இரு கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்திக்குள் நுழைந்துள்ளதை அமெரிக்க மத்திய கமாண்ட் (CENTCOM) உறுதி செய்துள்ளது.. ஈரான் மறைத்து வைத்துள்ள கண்ணிவெடிகளை அகற்றி, வணிகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்ல புதிய பாதையை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.. இத்தோடு வரும் நாட்களில் கடலுக்கு அடியில் இயங்கும் டிரோன்கள் மற்றும் கூடுதல் படைகளும் இந்த மிஷனில் இணையவுள்ளன. சர்வதேச வர்த்தகம் தடையின்றி நடக்க இந்தப் பாதுகாப்பான பாதையை விரைவில் உலகிற்கு அறிவிப்போம் என சென்ட்காம் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் எச்சரிக்கை
இந்த நடவடிக்கை குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், "ஈரான் இந்தப் போரில் பெரிய இழப்பைச் சந்தித்து வருகிறது. இப்போது அவர்களிடம் எதுவும் இல்லை. அவர்கள் வைத்துள்ள கண்ணிவெடி மிரட்டலைத் தவிர அவர்களிடம் வேறு ஒன்றும் இல்லை" எனச் சாடியுள்ளார். மேலும், சீனா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளைக் குறிப்பிட்டு, "அவர்களுக்கு இந்த வேலையைச் செய்யத் துணிச்சலோ அல்லது விருப்பமோ இல்லை, அதனால் அமெரிக்கா இதை ஒரு உதவியாகச் செய்கிறது" என வம்புக்கு இழுத்துள்ளார்.
அமெரிக்கக் கப்பல்கள் நுழைந்துள்ளதாக அந்நாடு சொல்வதை ஈரான் ராணுவ செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் சோல்ஃபகாரி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர், "அமெரிக்கக் கப்பல்கள் ஜலசந்திக்குள் நுழையவே இல்லை. இந்தப் பகுதியில் எந்தவொரு கப்பல் செல்வதையும் தீர்மானிக்கும் அதிகாரம் ஈரான் ராணுவத்திற்கு மட்டுமே உண்டு" என அவர் எச்சரித்துள்ளார்.
பேச்சுவார்த்தை
கடந்த பிப்ரவரி 28 முதல் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. தற்போது ஒரு தற்காலிகப் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானில் இரு நாட்டு உயர் அதிகாரிகளும் சனிக்கிழமை நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போர்நிறுத்த நிபந்தனைகளில் ஒன்றாக ஜலசந்தியை திறப்பது இருந்த போதிலும், அங்கு அமெரிக்கா தன்னிச்சையாக இறங்கியிருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications