ராஜீவ் காந்தியை துப்பாக்கியால் தாக்கும் உலகை உலுக்கிய படத்தை கிளிக் செய்த போட்டோகிராபர் மரணம்
கொழும்பு: இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மீது கொழும்பில் 1987-ம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலை படம் பிடித்து உலகை அதிரவைத்த போட்டோகிராபர் சேன விகனகம (வயது 80) மாரடைப்பால் இன்று காலமானார்.
1987-ம் ஆண்டு இந்திய பிரதமராக இருந்தார் ராஜீவ் காந்தி. இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் இடையேயான யுத்தத்தில் இந்தியா தலையிட்ட காலம் அது. தொடக்கத்தில் இந்தியாவின் தலையீடு பெரும் வரவேற்பைப் பெற்றது.

ராஜீவ் விடுதலை புலிகள்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை டெல்லிக்கு அழைத்து வந்து ஒரு மாத காலம் அசோகா ஹோட்டலில் சிறை வைத்தது மத்திய அரசு. இலங்கை அரசுடன் இந்திய அரசு ஏற்படுத்தப் போகும் ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் ஏற்றாக வேண்டும் என்பது இந்திய அரசின் நிர்பந்தம். இதனை மிக கடுமையாக பிரபாகரன் எதிர்த்த நிலையில் அவருக்கு நெருக்கடி அதிகரித்தது. பின்னர் வேறுவழியின்றி இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை பிரபாகரன் ஏற்றுக் கொண்டார். இந்திய- இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டுதான் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்தனர்.

கொழும்பில் ராஜீவ்
இந்தியா- இலங்கை ஒப்பந்தத்துக்காக ராஜீவ் காந்தி கொழும்பு வருகை தந்திருந்தார். கொழும்பு பயணத்தை நிறைவு செய்துவிட்டு இந்தியா திரும்புவதற்கு முன்னர் 1987-ம் ஆண்டு ஜூலை 30-ந் தேதி, அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவின் மாளிகையில் அந்நாட்டின் கடற்படையிஅரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. முதல் வரிசையில் நின்றிருந்த கடற்படை வீரர்களின் மரியாதையை பெற்றுக் கொண்டு ராஜீவ் காந்தி திரும்ப முயன்றார்.

ராஜீவ் மீது தாக்குதல்
அப்போது திடீரென இலங்கை கடற்படை வீரர் ஒருவர் தமது கையில் இருந்த துப்பாக்கியை திருப்பிப் பிடித்து ராஜீவ் காந்தி தலையில் ஓங்கி அடிக்க முயற்சித்தார். ஆனால் துப்பாக்கி கட்டையானது ராஜீவ்காந்தியின் தோள்பட்டையைத் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜீவ்காந்தி சற்று முன்னே சென்று பின்னால் திரும்பி பார்த்தார். அதற்குள் பாதுகாப்பு அதிகாரிகள், சிங்கள ராணுவ வீரரை மடக்கிப் பிடித்து கீழே தள்ளிவிட்டனர். அன்று ராஜீவ் காந்தியை தாக்கிய கடற்படை வீரர் பெயர் விஜித ரோஹண விஜேமுனி. இந்தியாவுடனான இலங்கையின் ஒப்பந்தத்துக்கு எதிராக இத்தாக்குதலை நடத்தினார் விஜேமுனி.

ராஜீவ் தாக்குதல்- போட்டோகிராபர் மரணம்
அன்று விஜேமுனியால் ராஜீவ்காந்தி தாக்கப்படுவதை படம் பிடித்தவர் சேன விகனகம. இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றியவர். Dailynews-ன் போட்டோகிராபராக இருந்தார். அப்போதுதான் ராஜீவ் காந்தி தாக்கப்படுவதை படம் எடுத்தார் விகனகம். அவரது படம் அப்போது உலக நாடுகளை பேரதிர்ச்சியில் உறைய வைத்தது. உலகை அதிரவைத்த போட்டோவை எடுத்த சேன விகனகம இன்று தமது 80-வது வயதில் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு மூத்த பத்திரிகையாளர்கள், போட்டோகிராபர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications