“தமிழகத்தில் NDA ஆட்சி உறுதி.. இல்லனா இவ்ளோ தூரம் வந்திருக்க மாட்டேன்”.. ரிசல்ட் பற்றி பியூஷ் கோயல்
மதுரை: "வாக்கு எண்ணிக்கை NDA கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பதை வெளிப்படுத்தும். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்திருந்தால், நான் டெல்லியிலிருந்து இவ்வளவு தொலைவு வந்திருக்க மாட்டேன்" என தமிழ்நாடு சட்டசபை தேர்தலின் கருத்துக்கணிப்புகள் குறித்த கேள்விக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பதில் அளித்துள்ளார்.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை திங்கட்கிழமை (மே 4) எண்ணப்படுகின்றன. தமிழ்நாட்டில் வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலானவற்றில் திமுக கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளன.

வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுவதை முன்னிட்டு, பாஜக வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், மதுரை விமான நிலையம் பின்புறம் உள்ள தனியார் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை வகித்தார். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கட்சியினருக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில், தென் மாவட்டங்களில் உள்ள 17 தொகுதிகளில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள், வாக்கு எண்ணிக்கை தலைமை முகவர்கள், அனைத்து வாக்கு எண்ணிக்கை முகவர்கள் என 17 சட்டசபைத் தொகுதிகளைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பின்னர், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதியான வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக உழைக்கக்கூடிய, தமிழ் மக்களின் பெருமை மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாக்கக்கூடிய, பெண்களின் நலன் மற்றும் கண்ணியத்தை உறுதி செய்யக்கூடிய ஒரு அரசு அமையும். இந்த வெற்றியில் எனக்குப் பெரிய நம்பிக்கை உள்ளது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பாளர்கள், அவர்கள் தங்களது வேலையைச் செய்கின்றனர். நாங்கள் எங்கள் வேலையைச் செய்கிறோம். ஒட்டுமொத்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக் குடும்பமும் மிகச்சிறந்த பிரச்சாரத்தை மேற்கொண்டது. நாங்கள் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி அமைப்போம். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்திருந்தால், நான் டெல்லியிலிருந்து இவ்வளவு தொலைவு வந்திருக்க மாட்டேன்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications