இதுதான் தமிழ்நாடு.. தஞ்சாவூர் தேர் திருவிழாவில் பக்தர்களுக்கு மோர் வழங்கி தாகம் தணித்த இஸ்லாமியர்கள்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தஞ்சாவூர் தேர் திருவிழா இன்று நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தேரோட்டத் திருவிழாவைக் காண வந்த பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் மோர் வழங்கி தாகம் தீர்த்தனர். மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக நடந்த இந்நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் பெரிய கோவில் உலகப் புகழ் பெற்றது. தஞ்சை பெரியகோவில் தமிழர்களின் கட்டிடக்கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறது. ராஜராஜசோழனால் கட்டப்பட்ட பெரிய கோவில் ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. பெரிய கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பெரியகோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறும். அதில் 18 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும் சித்திரை பெருவிழா பிரசித்தி பெற்றது.

Thanjavur Festival Turns Symbol of Unity as Muslims Serve Buttermilk to Devotees

அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, காலை, மாலை வேளைகளில் சுவாமி- அம்பாள் புறப்பாடு ராஜவீதிகளில் நடைபெற்றது. மாலையில் கலைநிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.

தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு பஞ்சமூர்த்திகள் முத்துமணி அலங்காரத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டு, மேலவீதியில் உள்ள தேர்நிலை மண்டபத்துக்கு வந்தடைந்தனர். பின்னர், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய தியாகராஜர், கமலாம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து காலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது.

திருத்தேர் 4 ராஜவீதிகளில் அசைந்தாடி சென்ற காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. மொத்தம் 14 இடங்களில் நிறுத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, அர்ச்சனை நடைபெற்றது. பக்தர்கள் தேங்காய், பழம் கொடுத்து அர்ச்சனை செய்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இந்நிலையில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தேரோட்டத் திருவிழாவைக் காண வந்த பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் மோர் வழங்கி தாகம் தீர்த்தனர். மத நல்லிணக்கம் தமிழகத்தின் அடையாளம். அவரவர் அவரவருக்கு விருப்பமான மதங்களை பின்பற்றினாலும், மாற்று மதத்தவரோடும் ஒற்றுமையைக் கடைபிடிப்பதே நமது பண்பாடு.

அதைப் பறைசாற்றும் வகையில் இஸ்லாமிய ஜமாத்தார்கள் ஒன்றிணைந்து தஞ்சாவூர் தேர் திருவிழாவில் பக்தர்களுக்கு மோர் வழங்கினர். அவர்களுடன் இணைந்து கிறிஸ்தவர்களும் நீர் மோர் வழங்கினர். திருவிழாவிற்கு வந்த சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் நீர் மோர் அருந்தி தாகம் தணித்துக் கொண்டனர். மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக நடந்த இந்நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+