தென்காசியில் எடுபடாத விசில் சத்தம்.. மொத்தமாக ஆஃப் செய்த திமுக, அதிமுக! தவெக தோல்விக்கான காரணம்
சென்னை: திமுக, அதிமுக கோட்டை என அறியப்பட்ட பல்வேறு இடங்களிலும் விஜய்யின் தவெக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் தென்காசி மாவட்டத்தில் தவெக வேட்பாளர்கள் 5 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் ஒரு தொகுதியிலும் கூட வெற்றியை வசப்படுத்தப்படவில்லை. மாநிலம் முழுவதும் விசில் ஒலித்தும் தவெகவுக்கு தென்காசி மாவட்டம் கைகொடுக்காததற்கான காரணங்களை இங்கு காணலாம்.
தமிழக சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நிலைக்கு வந்துள்ளனர். போட்டியிட்ட 233 தொகுதிகளில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக சென்னையில் 16 தொகுதிகளில் 14 இல் வெற்றி பெற்றனர்.

கை கொடுக்காத தென்காசி
திமுக, அதிமுக கோட்டை என அறியப்பட்ட பல்வேறு இடங்களிலும் விஜய்யின் தவெக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் தென்காசி மாவட்டத்தில் தவெக வேட்பாளர்கள் 5 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் ஒரு தொகுதியிலும் கூட வெற்றியை வசப்படுத்தப்படவில்லை. மாநிலம் முழுவதும் விசில் ஒலித்தும் தவெகவுக்கு தென்காசி மாவட்டம் கைகொடுக்கவில்லை. தென்காசி மாவட்டத்தில் 5 தொகுதிகளிலும் தவெக தோல்வியை சந்தித்துள்ளது. மொத்தம் உள்ள 5 தொகுதிகளில் அதிமுக ஒரு இடத்திலும், திமுக 3 இடங்களில் மதிமுக ஒன்று என வெற்றி பெற்றன.
விஜய் நேரடியாக பிரசாரம் செய்யாதது
ஆலங்குளம் தொகுதியை பொறுத்தவரை ஏற்கனவே எம்.எல்.ஏ.வாக இருந்த மனோஜ் பாண் டியன் மீண்டும் திமுக சார்பாக போட்டியிட்டார். அதிமுக சார்பில் முன்னாள் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.பிரபாகரன் களம் இறங்கினார். இந்த தொகுதியிலும் தவெக சார்பில் போட்டியிட்ட விபின் சக்கரவர்த்தி மூன்றாவது இடத்தை பிடித்தார். கிட்டத்தட்ட 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
தென்காசி மாவட்டத்தில் விஜய் நேரடியாக பிரசாரத்துக்கு வரவில்லை. தென்காசி பகுதியில் அவர் ரோடு ஷோ வந்து தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பிரசாரத்துக்கு வராமல் போனதும், தவெகவுக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியது. எனினும் நடிகர் ராமராஜன் இந்த தொகுதியில் விபின் சக்கரவர்த்திக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்திருந்தார்.
தவெக தோல்விக்கு காரணம் என்ன?
தென்காசி தொகுதியில் அதிமுக - திமுக வேட்பாளர்கள் இடையேதான் போட்டி நிலவியது. தவெக. வேட்பாளர் ராஜபிரகாஷ் 3-ம் இடம் பெற்றார். திமுகவின் கலை கதிரவன் இந்த தொகுதியில் வெற்றி பெற்றார். மு.க.ஸ்டாலின் சங்கரன்கோவில் பிரசாரத்தில், "கலை கதிரவன் எனக்கு மிகவும் வேண்டியவர் அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார். அதனால் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிரமாக பணியாற்றி அவரை வெற்றி பெற செய்தனர்.
செல்வமோகன்தாஸ் பாண்டியனும் ஏற்கனவே தென்காசி தொகுதியில் 5 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். தற்போது தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். இந்த இருபெரும் சக்திகளுக்கு இடையே தவெக கோலோச்ச முடியவில்லை என்று தெரிகிறது.
சங்கரன்கோவில் அதிமுக கோட்டை
சங்கரன்கோவில் தொகுதியை பொறுத்தவரை பெரும்பாலும் அதிமுக கோட்டையாகவே திகழ்ந்து வருகிறது. இதுவரை நடைபெற்ற 17 தேர்தல்களில் 9 முறை அ.தி.மு.க வெற்றி பெற்று இருக்கிறது. இந்த முறையும் திமுகவிடம் இருந்து சங்கரன்கோவில் தொகுதியை அதிமுக கைப்பற்றியுள்ளது. இங்கு தவெக வேட்பாளருக்கு 2-வது இடம் கிடைத்தது.
சங்கரன்கோவில் தொகுதியில் ஆரம்பகட்ட சுற்றுகளில் தவெக. வேட்பாளர் ராமராஜன் முன்னிலை வகித்தார். ஆனால் அடுத்தடுத்த சுற்றுகளில் அதிமுக வேட்பாளர் திலீபன் ஜெய்சங்கர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
கடையநல்லூர், வாசுதேவநல்லூர்
வாசுதேவநல்லூர் தொகுதியில் திமுக வேட்பாளரான ராஜா ஏற்கனவே சங்கரன்கோவில் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.. மேலும் அவர் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்து வருகிறார். வாசுதேவநல்லூர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் ஆனந்தன் அய்யாசாமி பலம் வாய்ந்தவராக திகழ்ந்தார். இதனால் தவெக வேட்பாளர் அமுதாராணி 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
கடையநல்லூர் தொகுதியிலும் அதிமுக மாவட்ட செயலாளர் ஏற்கனவே எம்.எல்.ஏ.வாக இருந்தவருமான கிருஷ்ணமுரளி மற்றும் திமுக கூட்டணியில் போட்டியிட்ட ம.தி.மு.க வேட் பாளர் ராஜேந்திரன் இடையே தான் கடும் போட்டி நிலவியது. இதனால் கடையநல்லூர் தொகுதி தவெக வேட்பாளர் அப்துல் ஜலீல் 3-ம் இடம் பிடித்தார். தென்காசி மாவட்டத்திற்கு விஜய் பிரச்சாரமோ, ரோடு ஷோவோ வராததும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.















Click it and Unblock the Notifications