Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆமா... இந்த பள்ளித் தேர்வுகள் உண்மையில் நடத்தப்பட வேண்டியது யாருக்கு? அ. குமரேசன்

Subscribe to Oneindia Tamil

"ஆகா, இந்த எக்ஸாம் முடிஞ்சதும் காப்பரிட்சை லீவு!" -இது தற்போது திறக்கப்பட்டுள்ள பள்ளிகளின் இடைநிலை வகுப்புகளையும், திறக்கப்படாவிட்டாலும் ஆன்லைன் வகுப்பு அராஜகங்களில் மாட்டியுள்ள தனியார் பள்ளிகளின் தொடக்கநிலை வகுப்புகளையும் சேர்ந்த மாணவர்களுடைய மனக்குரல்.

"அய்யய்யோ, இப்பவே நல்ல மார்க் எடுத்தாதான் ஃபைனலுக்கு ஸ்மூத்தா போக முடியும்கிறது இதுகளுக்குப் புரிய மாட்டேங்குதே... நமக்குல்ல டென்ஷனா இருக்கு!" -இது வழக்கமான ஹோம் ஒர்க் அத்துமீறல்களோடு தற்போது சேர்ந்துகொண்டுள்ள தேர்வுக்காகவும் குழந்தைகளை இழுத்துவைத்து உட்கார்கிற பெற்றோர்களின் புலம்பல்.

"நாங்க எங்க சைடுல பிராப்பரா கிளாஸ் நடத்தி டெர்ம் லெஸ்ஸன்ஸ் முடிச்சிட்டோம். இனிமே நீங்கதான் வீட்டுல பிள்ளைகளை எக்ஸாமுக்குப் பிரிப்பேர் பண்ணனும்." -இது பெற்றோர்களிடமிருந்து கட்டணங்களை வசூலித்துவிட்ட நிர்வாகங்களின் அலம்பல்.

கேட்கப்படாத கேள்வி

குழந்தைகளின் ஓய்வுநேரங்களை ஒழித்துக்கட்டி பாடநூல் அட்டைகளுக்கிடையே புதைத்துவிட்டுப் பெற்றோர்கள்தான் வீடுகளில் தேர்வுக்குத் தயார்ப்படுத்த வேண்டுமென்றால் பள்ளிகளும் வகுப்புகளும் எதற்கு? குழந்தைகளுக்காக எக்ஸாம் பிரிப்பேர் செய்யப்பட வேண்டுமா அல்லது எக்ஸாமுக்காகக் குழந்தைகள் பிரிப்பேர் செய்யப்பட வேண்டுமா? இக்கேள்விகளை யாரும் கேட்பதில்லை. இது குழந்தையின் வளர்ச்சிக்கு நல்லதுதான் என்ற நம்புவதால் மட்டுமல்ல, எப்படி இதைத் தடுத்து நிறுத்த முடியும் என்ற தயக்கத்தின் காரணமாகவும் இக்கேள்விகளைப் பெற்றோர்கள் கேட்பதில்லை. கல்வி, தேர்வு பற்றிய மாற்றுக் கொள்கைகள் உள்ள பல ஆசிரியர்களும் கூட, இக்கேள்விகளின் நியாயத்தை உணர்ந்தாலும், நிர்வாகங்கள் சொல்வதைத்தான் செய்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதால் அவர்களும் கேட்பதில்லை.

An Article on School Exams and Students

சமுதாயத் தேவையான கல்வி ஒரு சேவையாக அல்லாமல் ஒரு வணிகச் சரக்காக மாற்றப்பட்ட பிறகு, மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என எவரும் எந்தக் கேள்வியும் கேட்க முடியாதவர்களாக மௌனமாக்கப்பட்டுவிட்டார்கள். மிஞ்சிமிஞ்சிப் போனால் "எக்ஸாம் எப்ப ஆரம்பிக்குது, அதுக்கு என்னென்ன விசயங்களைச் செய்யணும்" என்பதான கேள்விகளை வேண்டுமானால் கேட்டுக்கொள்ளலாம். பெற்றோர்கள் கொஞ்சம் கூடுதல் கவலையோடு, "எக்ஸாமுக்கு தனியா ஃபீஸ் கட்டணுமா," என்ற கேள்வியைக் கேட்கலாம்.

கல்வி உரிமைக் களத்தில் வாதாடுகிறவர்களும் போராடுகிறவர்களும்தான் அவ்வப்போது முக்கியமான கேள்விகளை எழுப்பியபடி, மக்களுக்கு நினைவூட்டியபடி இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். பள்ளிச் சேர்க்கை, 12ம் வகுப்பின் முன்னணித் தேர்ச்சியைக்கூடப் பொருட்படுத்தாத உயர்கல்வி நுழைவுத்தேர்வு, ஏற்றத்தாழ்வான பள்ளி முறைகள், தாய்மொழி வழிக் கல்வியின் அறிவியல் தன்மை, கல்வியில் சமூகநீதி உள்ளிட்ட விவாதங்கள் முன்னுக்கு வருகிறபோதெல்லாம் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

கேள்விதான் கல்வி

வெளியே இருப்பதை மூளைக்குள் புகுத்துவது அல்ல, மாறாக மூளைக்கு உள்ளே இருப்பதை வெளியே கொண்டுவருவதே கல்வி என்றொரு தத்துவம் உண்டு. மூளைக்குள் இருப்பதை வெளியே விடுவிப்பது என்றால் ஏன், எப்படி என்றெல்லாம் கேள்வி கேட்பதேயாகும். குழந்தைகளுக்கு இயல்பாகவே இந்த ஆற்றல் இருக்கிறது. தொணதொணவென்று எதேதோ கேள்விகள் கேட்டுக்கொண்டிருப்பதும், துறுதுறுவென்று எதையெதையோ நோண்டிக்கொண்டிருப்பதும் குழந்தைகளின் இயற்கையான கேள்வித்திறன் வெளிப்பாடுகளே. இத்திறனை ஊக்குவித்து வழிப்படுத்திச் செழுமையாக்குவதுதான் கல்வி.

கேள்வி உரிமை உறுதிப்படுத்தப்பட்டு வளர்கிறவர்கள் சிறந்த அறிவியலாளர்களாக, கூர்ந்த சிந்தனையாளர்களாக, நல்ல தலைவர்களாக, அற்புதக் கலைஞர்களாகப் படைப்பாக்க ஆற்றலோடு வடிவமெடுக்கிறார்கள். மேலேயிருந்து கீழே விழுகிற பழம் ஏன் கீழேயிருந்து மேலே போவதில்லை என்ற கேள்வியை நியூட்டன் கேட்டதால் அல்லவா இயற்கையின் புவியீர்ப்பு உண்மை உலகத்திற்குத் தெரியவந்தது. அது தெரியவந்ததால் அல்லவா அதை மீறிக்கொண்டு விண்ணேறும் ராக்கெட்டுகளைச் செய்ய முடிந்தது? ராக்கெட்டுகள் கொண்டுபோய் நிறுவிய செயற்கைக்கோள்களால் அல்லவா உலகின் இன்றைய உடனடித் தொடர்புகள் சாத்தியமாகின? எல்லோரின் பிறப்பும் ஒரே மாதிரியாக நிகழ, வாழ்க்கையில் எப்படி வந்தன இவ்வளவு வேற்றுமைகள் என்று கேட்டவர்களால் அல்லவா சமூக மாற்றங்கள் சத்தியமாகின?

ஆனால், கேள்வி கேட்க விடுவதற்கு மாறாக, தயார் நிலையில் இருக்கிற பதில்களை மனப்பாடம் செய்து வாய்மொழியாகவோ எழுத்தாகவோ ஒப்பிப்பதே கல்வி என்று மாற்றப்பட்டுவிட்டது. எவ்வளவுக்கு எவ்வளவு மனப்பாட ஒப்புவிப்புத் திறமை இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு "நன்றாகப் படிக்கிற பிள்ளை" என்று கொண்டாடப்படுகிறது. மனப்பாட ஒப்பித்தல் திறனைக் கண்டுபிடிக்கிற தேர்வு முறைகள் கொண்டுவரப்பட்டுவிட்டன. கேள்வி கேட்டும் விவாதித்தும் கற்க முடியாமல் பயோ-ஜெராக்ஸ் மெஷின்களாக வளர்கிறவர்கள் அந்தத்துறை சார்ந்த வல்லுநர்களாக வரலாமேயன்றி, படைப்பாக்க ஆற்றலாளர்களாகப் பரிணப்பதில்லை.

இந்தியாவை எடுத்துக்கொண்டால், இங்கே படித்துப் பட்டம் பெற்று, மேற்குலக நாடுகளுக்குச் சென்று நல்ல சம்பளத்தில் வேலை செய்கிற திறமையாளர்கள் நிறையப்பேர் உருவாகிறார்கள் ஆனால் அத்தகைய வேலைகளை உருவாக்குகிற தொழில்நுட்பங்களின் கண்டுபிடிப்பாளர்களாக அடையாளம் பெறுகிறவர்கள் மிகக்குறைவு. அதற்கு அடிப்படையான காரணங்களில் ஒன்று இந்த மனப்பாட ஒப்பிவிப்பு முறைதான். கேள்வியே இல்லாமல் தாய்மொழி வழிக் கல்வி சுருக்கப்படுவது, வேறு மொழிகள் திணிக்கப்படுவது போன்ற அரசியல் காரணங்களும் இணைகின்றன.

கருவியா? ஆயுதமா?

கல்வி பற்றிய அடிப்படைப் புரிதல் அறுபட்டிருக்கிறது. தேர்வு பற்றிய அடிப்படைப் புரிதல் குதறப்பட்டிருக்கிறது. குழந்தைகள் எந்த அளவுக்குக் கற்றிருக்கிறார்கள் எனக் கண்டறிவதற்கும், கற்றுக்கொள்ளாததைப் புரிய வைக்கப் புதிய அணுகுமுறைகளை வகுப்பதற்குமான கருவியாக இருந்தால் அது கல்விக்களத்தில் ஆரோக்கியமான தேர்வு. குழந்தைகள் இந்த அளவுக்குத்தான் படித்திருக்கிறார்களா என்று கண்டுபிடிப்பதற்கும், அவர்களைத் தரவரிசைப்படுத்துவதற்குமான ஆயுதமாக இருந்தால் அது கல்வியின் பெயரால் ஆரோக்கியக்கேடான ஏற்பாடு.

விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த ஆரோக்கியக் கேடான தேர்வுமுறையோடுதான் இணைத்துக்கொண்டாக வேண்டியுள்ளது. அப்படியொரு கட்டாயச் சூழல் பல ஆண்டுகளாகக் கெட்டிப்படுத்தப்பட்டுவிட்டது. கொள்கையளவில் இதை எதிர்க்கிறவர்களும் இதற்கு மாற்றாக வேறு தேர்வுமுறை உள்ள கல்விக்கூடங்களுக்குக் குழந்தைகளை அனுப்பிவிட முடியாது. காரணம் அப்படிப்பட்ட கல்விக்கூடங்கள் இல்லை, ஒன்றிரண்டு இருந்தாலும் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் இல்லை. அவர்கள் தங்கள் வீடுகளில் தங்களுக்கான திண்ணைப்பள்ளிகளை நடத்திக்கொண்டிருக்க முடியாதே.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளிலாவது, ஓரளவுக்காவது பாடப்புத்தகத்திற்கு வெளியே சென்று வருகிற சமச்சீர் கல்வி என்ற சூழல் இருக்கிறது. இனிமேல் அது என்ன ஆகுமோ? தொடக்கப்பள்ளிக் குழந்தைகளுக்குக் கூட பொதுத்தேர்வுகளைப் புகுத்துகிற தேசிய கல்விக்கொள்கை இத்தகைய வாய்ப்புளை அடைத்துவிடும் என்று கல்வி உரிமைச் செயல்பாட்டாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

மாநில அதிகாரப் பட்டியலில் இருந்த கல்வி, பொதுப் பட்டியலுக்கு எப்போது கடத்தப்பட்டதோ அப்போதிருந்தே தேர்வுக்கான ஆரோக்கிய வழிமுறைகளை விவாதித்து உருவாக்குகிற தளங்கள் சுருக்கப்பட்டுவிட்டன. இந்திராகாந்தி தலைமையிலான அன்றைய காங்கிரஸ் அரசு அறிவித்த அவசரநிலை ஆட்சியின்போது இது நடந்தது. அவசரநிலை ஆட்சி விலக்கப்பட்ட பின் கல்வியதிகாரத்தை மீட்பதற்கான இயக்கம் நாடுதழுவிய அளவில் வலுவாக மேற்கொள்ளப்பட்டு, மாநிலப் பட்டியலுக்கு மறுபடியும் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும். அப்படி நடக்காமலே போய்விட்டது. நரேந்திர மோடி தலைமையிலான இன்றைய பாஜக அரசோ, அவசர நிலை ஆட்சி என அறிவிக்காமலே, பொதுப்பட்டியலிலிருந்தும் கல்வியைக் கடத்தி ஒன்றிய அதிகாரத்தின் கீழ் கொண்டுவருவதற்கான முன்னோட்டம் போலத் தேசிய கொள்கையைச் செயல்படுத்துவதில் அவசரம் காட்டுகிறது. இந்நிலையில் தேர்வு முறை சீர்திருத்தம் என்ற விவாதப்பொருளுக்கு ஒரு தளம் கிடைப்பதே அரிதாகிவிட்டது.

இவ்வாறு கெட்டிப்படுத்தப்பட்டுவிட்ட நிலையிலும் ஆங்காங்கே கேள்வித்திறனோடு புறப்படத்தான் செய்கிறார்கள். இறுக்கமான தரையை மீறிக்கொண்டு முளைவிடுகிற பயிர்கள் போன்றவர்கள் அந்தக் கேள்வித்திறனாளிகள். அவர்கள் வளர்வதற்கு முற்போக்கான பார்வையுள்ள ஆசிரியர்கள் தன்முனைப்போடு நீரூற்றுகிறார்கள். இப்படித் தனிப்பட்ட சிலரது முயற்சியாக இல்லாமல், கல்விமுறையின் ஒரு பகுதியாகவே இத்தகைய அணுகுமுறையை நாடு ஏன் அங்கீகரிக்கக்கூடாது?

தேர்வு என நடத்தவே கூடாது என்று கல்வியாளர்கள் கூறவில்லை. அந்தத் தேர்வு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்றே வாதிடுகிறார்கள். தற்போதைய தேர்முறை ஆதரவாளர்கள் மாணவர்களைத் தரம் பிரிக்காவிட்டால் அவர்களுடைய போட்டித்திறன் வளராது, படிப்பில் அக்கறை இருக்காது என்ற கவலையை வெளிப்படுத்துகிறார்கள். மூன்றாம் வகுப்புப் பிள்ளைகளுக்கு ஆனா, ஆவன்னா எழுதத் தெரியவில்லை, ஐந்தாம் வகுப்புப் பிள்ளைகளுக்கு கூட்டல்-கழித்தல் கணக்கு தெரியவில்லை என்ற ஆய்வறிக்கைகள் வருகிறபோது அந்தக் கவலை நியாயமே என்று புரிகிறது.

பள்ளிக் கல்விக்காக இயங்கிவரும் 'பிரதாம்' என்ற அமைப்பு அவ்வப்போது அனைத்து மாநிலங்களிலும் ஆய்வு நடத்தி, "கல்வி நிலை குறித்த ஓராண்டு அறிக்கை" (ஏஎஸ்இஆர்) வெளியிட்டு வருகிறது. 2017ம் ஆண்டுக்கான அறிக்கையில், 14 முதல் 18 வயது வரையிலான பள்ளி மாணவர்களில் 53 சதவீதம் பேருக்கு எண்களை வகுக்கத் தெரியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு நான்கு எளிய கேள்விகள் கொடுக்கப்பட்டன, 28 சதவீதத்தினரால் மூன்று கேள்விகளுக்கு விடையளிக்க இயலவில்லை. 42 சதவீத மாணவர்கள், இந்திய வரைபடத்தில் தங்களது மாநிலம் எங்கே இருக்கிறது என்று காட்ட முடியாதவர்களாக இருந்தார்கள்.

இதற்குக் காரணம், 2009ம் ஆண்டின் கல்வி உரிமைச் சட்டம்தான் என்று, நெடும் போராட்டத்திற்குப் பிறகு குழந்தைகளின் உரிமையாகக் கிடைத்த அந்தச் சட்டத்தின் மீது பழிபோடுகிறவர்களும் உண்டு. 8ம் வகுப்பு வரையில் தேர்வில்லாமல், உரிய மதிப்பெண் பெறவில்லை என்று ஒரே வகுப்பில் நிறுத்திவைக்காமல் ("ஃபெயில்" ஆக்காமல்) அடுத்தடுத்த வகுப்புகளுக்குத் தேர்ச்சி பெறும் உரிமையையும் அளிக்கும் அந்தச் சட்டத்தால்தான் மாணவர்களுக்குப் படிப்பதில் முனைப்பில்லாமல் போய்விட்டது என்கிறார்கள். ஆனால், குழந்தைகளின் புரிதல் நிலை பற்றிய இத்தகைய விவரங்களைத் தெரிவிக்கிற அந்த அமைப்பும் சரி, எல்லா மாநிலங்களிலும் இயங்குகிற பொதுப்பள்ளிப் பாதுகாப்பு இயக்கங்களும் சரி, இது மாணவர்களின் குற்றம் அல்ல என்று தெளிவாகச் சொல்கிறார்கள். பாடப்புத்தகங்களைத் தாண்டி யோசிக்கவும் பேசவும் வைக்கிற வகுப்பறைச் சூழல் உருவாக்கப்பட்டுச் செயல்படுத்தப்படுவது, மாணவர்களோடு மனம்விட்டு உரையாடுவது, முழுமையாகப் புரியும் வரையில் பொறுமையிழக்காமல் நட்போடு பழகுவது போன்ற அணுகுமுறைகளே சரியான வழி என்றும் கூறுகிறார்கள்.

இதற்கு முன்னுதாரணம் இருக்கிறதா? மிகச்சிறந்த முன்னுதாரணமே இருக்கிறது - உலக அளவில் பள்ளிக்கல்வித் தரத்தில் உச்சத்தில் இருக்கும் ஃபின்லாந்து. 40 ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்ட பொருளாதார மீட்சிக்கான திட்டத்தின் ஒரு முக்கியமான பகுதியாகப் பள்ளிக் கல்விச் சட்டம் உருவாக்கப்பட்டுச் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி எந்த வகுப்பிற்குமே கட்டாயமான தேர்வு கிடையாது! மற்ற மாணவர்களோடு ஒப்பிடுவது, போட்டிக்கு விடுவது என்ற மூர்க்கத்தனமான ஏற்பாடுகள் கிடையாது. இறுதியாண்டில் மட்டும் தேர்வு. அதிலும் தரநிலை (ரேங்க்) தரப்படுவதில்லை.

பள்ளிகளை நடத்துகிறவர்கள் கல்வித்துறை அதிகாரிகள்தான் - அவர்கள் நிர்வாகவியல் பட்டம் மட்டும் பெற்றவர்களல்ல, பல்கலைக்கழகப் பயிற்சி பெற்ற கல்வியாளர்கள். அரசியல்வாதிகளோ, வணிகர்களோ, ராணுவ அதிகாரிகளோ பள்ளிகளை நடத்த அனுமதியில்லை. ஒவ்வொரு குழந்தையின் கற்றல் திறன் எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறது என ஒவ்வொரு ஆசிரியரும் கவனிக்கிறார். பின்தங்கியுள்ள குழந்தைகளுக்கு என சிறப்புத் திட்டங்கள் - எவ்வகையிலும் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடாமல் - மேற்கொள்ளப்படுகின்றன.

முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய இரண்டு தகவல்கள் - அங்கே அனைத்துமே அரசு நிதியில் இயங்குகிற பள்ளிகள்தான், ஒரே மாதிரியான பாடமுறைதான். ஏழைகளுக்கு மலிவானது, பணக்காரர்களுக்கு விலையுயர்ந்தது என்ற பாகுபாடு இல்லை. உலக நாடுகளில், பள்ளி மாணவர்களிடையே சிறப்பாகப் பயில்வோருக்கும் சுமாராகப் பயில்வோருக்குமான வேறுபாட்டு மட்டம் மிகவும் சுருங்கியிருப்பது இருப்பது ஃபின்லாந்துதான் என்று பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஓஇசிடீ) தனது அறிக்கையில் கூறியுள்ளது. அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும் கல்வியில் சமத்துவம் என்ற கொள்கை தங்கள் நாட்டில் விட்டுக்கொடுக்கப்படுவதில்லை என்று ஃபின்லாந்து பள்ளி ஆசிரியர்கள் சங்கம் பெருமையோடு கூறுகிறது. இதைக் கண்கூடாகப் பார்க்கிற மற்ற நாடுகளின் கல்வியாளர்கள், தங்கள் சமுதாயங்களிலும் இத்தகைய மாற்றம் வராதா என்ற ஏக்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

நெடிய வரலாறு...

ஆக, தேவைப்படுவது அடிப்படையான கொள்கை மாற்றம்தான். விவாதங்களில் இதை முன்வைக்கிறபோது, நாட்டின் பாரம்பரியத்தில் முற்போக்கான கல்வி முறைதான் இருந்தது, வெள்ளையர் அடிமைப்படுத்தி வைத்திருந்த காலக்கட்டத்தில், மெக்காலே கொண்டுவந்த கல்விமுறையால்தான் எல்லாம் கெட்டுப்போய்விட்டது என்றொரு வாதம் முன்வைக்கப்படுகிறது. ஆனால், அதற்கு முன் இங்கே இருந்த கல்விமுறை - அது முற்போக்கானதோ, பிற்போக்கானதோ - அனைவருக்குமானதாக இருந்ததில்லை என்ற வரலாற்றை மறைக்க முடியுமா? இந்தியாவின் பெருமைக்குரிய இதிகாசமான மகாபாரதத்திலிருந்து ஏகலைவன் கதையை நீக்க முடியுமா? ஜோதிபா புலே, சாவித்திரிபாய் இணையர் நடத்திய பள்ளியின் அத்தியாயமும் இடம்பெற்றுள்ள, அனைவருக்குமான கல்வி உரிமைக்கான நெடிய போராட்ட வரலாறுகளை மறுக்கமுடியுமா? நவீன அரசாங்க விசுவாசிகளை உருவாக்குகிற நோக்கத்துடனும் மெக்காலே கொண்டுவந்த அதே கல்விமுறையால், நாடு முழுவதுமே கல்விக்கூடங்களின் நுழைவாயில்கள் ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட சமூகங்களின் பிள்ளைகளுக்காகவும் திறக்கப்பட்டதைத் ஒதுக்கிவிட முடியுமா? அதன் பின்னரும் தொடர்ந்த போராட்டங்களின் வெற்றியாக வந்த சமூகநீதி ஏற்பாடுகளால் அந்தக் கதவுகள் மேலும் அகலமாகத் திறக்கப்பட்டதை ஏற்காமல் இருக்க முடியுமா? அதன் பலனாகப் பல்வேறு சமூகங்களிலிருந்தும் புறப்பட்டவர்கள் உள்நாட்டிலும் உலக அரங்கிலும் வெற்றிக்கொடி நாட்டி இந்திய முன்னேற்றத்தை உந்தித் தள்ளியதைக் காணாமல் இருக்க முடியுமா? இன்று தகுதித் தேர்வெனும் சங்கிலியால் அதே கதவுகளை இழுத்து மூட முயற்சிகள் செய்யப்படுகின்றன என்ற குரல்களைக் கேளாமல் இருக்கலாமா?

மருத்துவக் கல்விக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வாகிய 'நீட்' பற்றி ஆராயத் தமிழக அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே. ராஜன் குழு, அது பயிற்சி மையங்களை மக்களிடையே பரப்புகிறதே தவிர கற்றலை அல்ல என்று கூறி ஒரு அறிக்கையை அளிக்கிறது. அதில் ஏற்கவியலாத கருத்துகளும் உண்மையற்ற தகவல்களும் இருப்பதாகக் கருதுகிறவர்கள் அவற்றைத் திட்டவட்டமாக எடுத்துவைத்து வாதிடுவதற்கு மாறாக, அந்த அறிக்கையே வெறும் அனுமானத்திலிருந்து தயாரிக்கப்பட்டதுதான் என்று தள்ளுகிறார்கள். இதுவே கூட அந்தக் கதவுகளை இழுத்து மூட முயலும் சங்கிலிக்கு வலுச்சேர்க்கிற வேலையே அல்லவா?

கல்வி உரிமை, தேர்வுச் சுமை ஆகியவை நம்வீட்டுப் பிரச்சினை என்று மக்கள் உணர்வதே ஒரு கல்விதான். மாற்றங்களுக்காகப் புறப்படும் தேரின் வடம் பிடிக்க மக்கள் தாங்களும் துணிவது ஒரு தேர்வுதான். பள்ளிக்கூடமானாலும், பல்கலைக்கழமானாலும் தேர்வுகள் உண்மையில் மாணவர்களின் தகுதியைத் தீர்மானிப்பதற்கல்ல, கல்வி நிறுவனங்களின் பணியை மதிப்பிடுவதற்குத்தான் என்ற புதிய கல்விக்கொள்கை எப்போது பரிணமிக்கும்?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+