• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கற்பிதம் செய்யப்பட்ட காயத்திற்குகாலச்சுவடு வைத்தியம்:

By Staff
|

எப்பேர்ப்பட்ட தத்துவவாதியானாலும் இயக்கவாதியானாலும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக அவரை ஏற்றுக்கொள்ளவேண்டியதில்லை. சமூகத்தின் ஆகப்பெரும் சவால்களை எதிர்கொள்ள அவர் முன்வைக்கும் தீர்வுகள், அதற்காக நடத்திய இயக்கங்கள்,அதனடியான உடனடி மற்றும் நீண்டகால விளைவுகள், சமூகத்தின் சிந்தனையடுக்கில் ஏற்பட்ட ஒழுங்கு அல்லது ஒழுங்கின்மைகுறித்தெல்லாம் ஆய்வு செய்வதும் விமர்சிப்பதும் ஆரோக்யமான நடவடிக்கையே. ஆனால் ஒருவரை குற்றம்சாட்டுவது என்றுதீர்மானித்துக்கொண்டு அதனிமித்தம் குற்றச்சாட்டுக்களை வலிந்து புனைவது விமர்சன மரபுக்குள் அடங்காது என்பதும் வசை என்றேஅதை வகைப்படுத்த நேரிடும் என்பதையும் விமர்சகர்/ ஆய்வாளர் என்று தம்மை கூறிக்கொள்வோர் மீதான விமர்சனமாக நாம்முன்வைக்கமுடியும்.

செத்தாலும் வர்ணாசிரம தருமத்தை கைவிடமாட்டேன் என்றும் மாதவிலக்கான பெண்கள் வெளியில் நடமாடுவதால் உண்டாகும்தீட்டினால் ( என்விரான்மென்டல் பொலியூஷனாம்) எத்தனை ஐந்தாண்டுத் திட்டங்கள் தீட்டினாலும் இந்நாடு முன்னேறமுடியாது என்றும்பகிரங்கமாக பேசிவந்த/ பேசிவருகிற, 2500 ஆண்டு பழமையானது என்று பொய்யடித்துத் திரிகிற சங்கரமடங்களை கட்டுடைக்கத்துணியாதவர்கள், மெகா, மகா, படா ,சோட்டா, துக்கடா பெரியவாள்களின் அருளுரைகளிலும் தெய்வத்தின் குரல்களிலும்மண்டிக்கிடக்கிற சாதிப்பித்தையும் ஆணாதிக்கத்தையும் கண்டிக்க முன்வராதவர்கள் இப்போது பெரியாரின் எழுத்துக்களையும்பேச்சுக்களையும் தோண்டித்துருவி/ கட்டுடைத்து உள்பொதிந்துக் கிடக்கும் மர்மங்களை அவிழ்ப்பதாக கூறிக்கொண்டு பலவிதமானவசைகளை பரப்புகின்றனர்.

தமிழ்ச்சமூகத்தின் மீது பெரியார் சிந்தனைகள் கொண்டிருக்கும் ஆளுமைகளை சகித்துக்கொள்ள முடியாத பிராமணீய காழ்ப்புணர்வின்செல்வாக்கு, பெரியார் மறுவாசிப்பு என்ற திரைமறைவில் பதுங்கிக்கொண்டிருக்கிறது. சாதீயத்திற்கு எதிரான போராட்டத்தில்தன்வாழ்வையே செய்தியாய் வைத்துவிட்டுப் போயிருக்கும் பெரியாரின் பங்களிப்பை எப்படியேனும் நிராகரித்துவிட முடியுமானால்,சாதியைக் கடந்தவர்கள் யாருமேயில்லை என்றும் ஆகவே சாதி எல்லோருக்குள்ளும் இருக்கிறதென்றும் எனவே சாதி தேவையாயிருக்கிறதுஎன்றும் பிராமணீயத்தால் நிறுவிவிடமுடியும். அதற்காகத்தான் இப்படி பெரியாரை மல்லுக்கு இழுக்கிறார்கள். ஆனால் எல்லோருமே துக்ளக்சோ மாதிரி வெளிப்படையான வேஷம் காட்டுபவர்களில்லை. வன்மத்தையும் வஞ்சகத்தையும் நயமாகக் கலக்கும் வியாபாரியின்உத்தியும் அது வெளித்தெரியாதபடியான பதங்களை பிரயோகிக்கும் வித்யாகடாட்சமும் ஒருங்கே வாய்த்த காலச்சுவடுகளும் உண்டு(பெரியாரின் எழுத்துக்களையும் பேச்சுக்களையும் ஒருவேளை ஆனைமுத்து தொகுக்காமல் விட்டுவைத்திருப்பாரேயானால் , பெரியார்செம்பதிப்பு வெளியிட்டு கொண்டாடியிருப்பார்களோ என்னவோ).

காலச்சுவடுக்கு பெரியார்மீது இருக்கும் காழ்ப்புணர்வு பிதுரார்ஜிதமானது. அனிச்சையானதும்கூட. அதனளவில் அதற்கொரு நியாயமும்இருக்கிறது. எனவேதான் பெரியார் சிறப்பிதழ் வெளியிட்டு பலரையும் வசைபாடச் சொல்லி ரசித்திருக்கிறது. நாச்சார்மடம் கதை தங்களைஅவமதித்துவிட்டதாக குய்யோமுய்யோவென்று கூப்பாடு போட்டு கையெழுத்தியக்கம் நடத்தும் காலச்சுவடு, பெரியாரை இழிவுபடுத்திவெளியிடுவது குறித்து எந்த உறுத்தலும் இல்லாமலிருப்பதற்கான சாட்சியங்களாய் அதன் கட்டுரைகளே உள்ளன.

Kalachuvaduவனத்தையழித்து வீட்டைக் கட்டியவன் தொட்டிச்செடிகளை வளர்த்து குற்றவுணர்ச்சியிலிருந்து விடுபட எத்தனிப்பதைப்போலவோஅல்லது வீட்டுக்குள்ளேயும் செடி வளர்க்கிற இந்த பசுமைவிரும்பி ஒரு காட்டையே அழித்து வீடு கட்டியிருக்கமாட்டான் என்று நிறுவத்துடிப்பதைப்போலவோ தான் ஒடுக்கப்பட்ட ஜனத்திரளிலிருந்து மேலெழுந்து வருகிற அறிவுஜீவிகளிடம் காலச்சுவடு சினேகம்பாராட்டுவதும். தம்மை எதிர்க்கக்கூடியவர்களிலிருந்தும் ஒருபகுதியை பிரித்தெடுத்து எல்லாரும் நம்மப் பயக தான் என்றுசொல்லிக்கொள்கிற இந்த சாமர்த்தியம் பிராமணீயத்திற்கே உரியது என்று நாம் சொன்னால் பிறப்பை வைத்தே இப்படி சொல்லலாமாஎன்பார் சிலர். ஆனால் பிறப்பை வைத்தே பெரியாரை நிராகரிக்குமாறு பெண்களுக்கும் தலித்துகளுக்கும் அறைகூவல் விடுக்கும்கட்டுரைகளை வெளியிடும் போது இந்த அளவுகோலை வசதியாக மறந்துவிடுமாறு பரிந்துரைப்பார்கள். சனாதனத்தை எதிர்த்து இயங்கியநாத்திகவாதத்தையும் பெளத்தத்தையும் சீக்கியத்தையுமே இந்துமதத்தின் ஒருபகுதியென நிறுவத்துடிக்கும் பிராமணீயத்தின் சூதுக்குநிகரானதே தலித் இலக்கியத்தைக் கொண்டாடும் காலச்சுவடின் பசப்பலும். காலச்சுவடின் இந்த நுண்ணரசியலை அறிந்தும் அல்லதுஅறியாதார்போன்றும் அதன் திருதராஷ்டிர ஆலிங்கனத்தில் கண்சொக்கி மெய்மறக்கும் சிலர் பெரியாரை இழிவுபடுத்தி காலச்சுவடைகுளிரவைத்துக் கொண்டுள்ளனர். எவ்வளவு சேவகம் செய்து நெருங்கிப்போனாலும் கங்காருவின் வயிற்றுப்பை அதன் குட்டிக்கு மட்டுமேசொந்தமாகும். இவர்களெல்லாம் பக்கத்திலோ கக்கத்திலோ இருப்பதற்காக வேண்டுமானால் புளகாங்கிதம் கொள்ளலாம்.

இழிவுபடுத்தத்தக்க குணக்கேடுகள கொண்டவராக இருந்துகொண்டே அதை சாமர்த்தியமாய் மறைத்து சமூகத்தின் அந்தஸ்தை பெரியார்பெற்றிருப்பாரேயானால் அவரை இவர்கள் அம்பலப்படுத்துவதாக கூறிக்கொண்டு எழுதுவதற்கெல்லாம் எதிர் நின்று வாதாடநாமொருவரும் வக்கீலில்லை. ஆனால் பெரியார் தன்னைத்தானே பகிரங்கப்படுத்தி எழுதிவைத்தவற்றிலிருந்தும் எந்த மக்களுக்காகவாழ்நாள் முழுவதும் பாடுபட்டாரோ அவர்கள்மீது அக்கறையோடும் உரிமையோடும் தெரிவித்த கருத்துக்களிலிருந்து சிலசொற்களையும் உருவியெடுத்து அந்த உதிரிகளையே உருட்டியுருட்டி முழுசுமே இப்படித்தான் என்றும் இட்டுக்கட்டி அவரைத்திரிக்கும்போது தான் அது கண்டனத்துக்குரியதாகிறது.

சாதி மறுப்பாளர்களை நேசசக்தியாக்கிக் கொண்டு சாதியத்திற்கு எதிரானப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய நிலையைஉணர்ந்திருக்கிறது தலித் சமூகம். ஆனால் அப்படியொரு அணிசேர்க்கை நடந்து சாதியொழிப்பு இயக்கம் பலமடைந்துவிடக்கூடாதுஎன்பதில் மட்டற்ற விருப்பம் கொண்டுள்ளது பிராமணீயம். எனவே பிறத்தியார் காற்றுபட்டால் தலித்தியத்திற்கு தீட்டாகிவிடும் என்றுபுனிதவாதம் பேசி பெரியாரிய மார்க்சிய இயக்கங்கள தலித்விடுதலையின் எதிரிகளாக சித்தரிக்கும் தலித் அறிவுஜீவிகள் சிலரை செல்லம்கொடுத்து வளர்க்கிறது. தலித்களும் இடைநிலைச்சாதியினரும் எந்தத்தளத்திலும் அணி சேர்ந்துவிடக்கூடாது என்ற பிராமணீயத்தின்பெருவிருப்பத்தை நிறைவேற்றித்தரும் அறிவாளிப்படையை உண்மையில் அவர்கள் அடியாள்படையாகத்தான் பயன்படுத்துகின்றனர்என்பதே வேதனையான உண்மை.

இந்தப் பின்னணியோடு பார்த்தால் தான் காலச்சுவடு டிச-2004 இதழ் வெளியிட்டுள்ள தலித் எழுத்தாளர்களின் கூட்டறிக்கைக்குள்பதுங்கிக்கிடக்கும் காலச்சுவடின் கபடம் புரியும். நவீனத் தீண்டாமைக்கு எதிராக என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அவ்வறிக்கைஉண்மையை அடிப்படையாகக் கொண்டது அல்ல. தலித் இலக்கியத்தை மக்கள் இலக்கியத்தின் விரிவடைந்த ஒரு கூறாக மதிப்பிட்டு அதைவரவேற்கின்ற, படைப்பாளியின் படைப்புச்சுதந்திரத்தை எதன்பேராலும் தடுப்பதை ஒப்புக்கொள்ளாத, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்சங்கத்தின் சார்பில் நானும் பங்கேற்றவன் என்ற பொறுப்பில் ஈரோடு கருத்தரங்கத்திற்கு பாசிச முகம் கொடுக்கும் காலச்சுவடின் முயற்சியைஅம்பலப்படுத்த வேண்டியுள்ளது.

இப்போது கருத்தரங்கை கவனிப்போம்.

பெரியாரைக் கொச்சைப்படுத்தும் காலச்சுவடு, புதிய கோடாங்கி, உலகத்தமிழர் இதழ்களின் கட்டுரைகளுக்கு ( கவனிக்கவும்:இதழ்களுக்கல்ல, கட்டுரைகளுக்கு ) கண்டனம்-: பெரியாரின் இன்றைய தேவை என்ற தலைப்பிலான கருத்தரங்கம் 17.10.2004 அன்றுஈரோடு பெரியார் மன்றத்தில் நடந்தது. நிகழ்வின் துவக்கத்தில் ஏற்பாட்டாளர்களில் ஒருவரால் வாசிக்கப்பட்ட வேண்டுகோள்தீர்மானங்கள்:

1).பெரியாரை இழிவுபடுத்தும் வகையில் செய்திகள், கட்டுரைகள் வெளியிடும் இதழ்களில் எழுதாமல் அவற்றை புறக்கணிக்க வேண்டும்என்று படைப்பாளர்களை,- எழுத்தாளர்களை இக்கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.

( மீண்டும் கவனியுங்கள்: தீர்மானம், கேட்டுக்கொள்கிறது. உத்தரவிடவில்லை)

2). அவுட்லுக் இதழை இந்த்துவ எதிர்ப்பு இதழாகத்தான் இதுவரை நாங்கள் அறிய வருகிறோம். ஆனால் ஆனந்த் போன்றவர்கள்பெரியாரை இழிவுபடுத்தும் தளமாக அவுட்லுக் இதழைப் பயன்படுத்துவதை இக்கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது.

காலச்சுவடு ஆசிரியர் குழுவுக்கு மட்டுமே தெரிகிற மாந்திரீக மசியால் எழுதப்படவில்லை இத்தீர்மானங்கள். எனில் தலித் இதழ்களுக்குஎழுதக்கூடாது என்ற வாசகம் எங்கேயுள்ளது? கண்டனம் தெரிவித்ததைத்தான் இப்படி எழுதிவிட்டார்கள் என்று நாமாக ஒரு அர்த்தத்தைவருவித்துக் கொண்டாலும் பெரியாரை இழிவுபடுத்தும் என்ற முன்னிபந்தனையை ஏன் மறக்கவேண்டும்? காலச்சுவடின் பெயரைவிடுவித்துவிட்டதன் உள்சூது என்ன? பெரியாரின் எழுத்துக்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக உருவிக்கோர்க்கும் பழக்கதோஷத்தில்அனிச்சையாகவே இத்தீர்மானங்களையும் திரித்தும் மறைத்தும் எழுதிவிட்டார்களா என்ற கேள்விகள் எழுகின்றன.

தலித்விடுதலையில் அக்கறைகொண்டவர்களையே தலித் இதழ்களின் எதிரிகளாக கற்பிதம் செய்து தலித் எழுத்தாளர்களிடம் மோசடியாககையொப்பம் பெற்றுள்ளது காலச்சுவடு ஆசிரியர்குழு. பெரியாரை இழிவுபடுத்தியமைக்காக தனக்கெதிராகவும் தெரிவிக்கப்பட்டகண்டனமாக திரித்து எழுதி கருத்தரங்கை நடத்திய மார்க்சிய பெரியாரிய இயக்கங்களோடு தலித் படைப்பாளிகளை மோதவிடும்சூழ்ச்சியை அரங்கேற்றியுள்ளனர். நம்பி கையொப்பமிட்ட படைப்பாளிகளிடமும் வெளியிட்ட தீராநதி போன்ற பிற பத்திரிகைகளிடமும்இந்த நம்பிக்கை மோசடிக்காக காலச்சுவடு ஆசிரியர் குழு வருத்தம் தெரிவிப்பது நல்ல பண்பாக இருக்கமுடியும்.

பிறப்பால் பிற்படுத்தப்பட்டவர் என்ற ஒரே காரணத்திற்காக பெரியாரை ஏற்றுக்கொள்ள முடியாதென்று பிணங்கிக்கொண்டு போன சிலர்அக்ரஹாரத்தில் ஒண்டிக்கொண்டு சாதியத்தை ஒழித்துக்கட்டப் போவதாய் எகிறும்போது அவர்களது ஜோல்னாப்பையிலிருந்துஇப்படிப்பட்ட அறிக்கைகள் மழைக்காலத்து சோத்துப்பொட்டலம் போல் இனி வந்து விழுந்து கொண்டேயிருக்குமென நம்பத்தகுந்தவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொறுக்கியெடுத்து அவசரமாய் படித்துவிடுங்கள். இல்லையானால் படிப்பதிலும் தீண்டாமையைகடைபிடிப்பதாய் கையெழுத்தியக்கம் நடத்திவிடும் காலச்சுவடு. ஏனென்றால் அது இப்போது செய்திகளைத் தரும் பத்திரிகையல்ல.செய்திகளை தானே உற்பத்தி செய்யும் நிறுவனம். அதாவது நிறுவனமயமாக்கலை எதிர்க்கிற நிறுவனம்.

- ஆதவன் தீட்சண்யா(visaiaadhavan@yahoo.co.in)

இவரது முந்தைய படைப்பு:

1. கடவுளின் கண்கள்

2. வேறு மழை

3. அதிர வருவதோர் நோய்

4. புது ஆட்டம்

5. கடவுளும் கந்தசாமிப் பறையன் உள்ளிட்ட வகையறாக்களும்

6. முடிந்து போன சிகரெட்டுகளும் மிச்சமிருக்கும் விவாதங்களும்

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more