• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பூஜ்ஜியத்திலிருந்து துவங்கும் ஆட்டம்

By Staff
|

எது இலக்கியம் என்பது குறித்த சர்ச்சை நீண்ட காலமாக நிலவி வரும் ஒன்றாகும். இலக்கியம் என்பது சில மேல்தட்டுவாசிகளுக்கு சும்மாஇருக்கும் நேரத்தில் சொறிந்து கொள்ள உதவும் சமாச்சாரமாகிவிட்டது. ஆதிக்க சாதியில் பிறந்துவிட்டு, ஆதிக்க மனோபாவத்துடன்இவர்கள் எழுதும் படைப்புகளைத் தவிர்த்து வேறெதுவும் இலக்கியம் இல்லை என்று கூச்சல் இடுகிறார்கள்.

இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடியாகவோ, ஒடுக்கப்பட்டவர்களுக்கான உரிமைக் குரலாகவோ, நெற்றிக்கண் திறப்பினும் குற்றம்குற்றமே என்று முழங்கும் துணிச்சலாகவோ இவர்களுக்கு இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அதை இலக்கியம் என்றோ, அதைஎழுதுபவர்களை இலக்கியவாதிகளாகவோ ஒத்துக் கொள்ள மாட்டார்கள். நெற்றிக்கண்ணனைப் போற்றி எழுதப்படுபவை மட்டுமேஇவர்களுக்கு இலக்கியமாகும்.

ஆனால் இவர்களது அங்கீகாரத்தை எதிர்பார்த்து எழுதாமல், மக்களுக்காக எழுதும் எழுத்தாளர்கள் எப்போதும் இருந்து கொண்டேஇருக்கிறார்கள். காரல் மார்க்ஸ், தந்தை பெரியார் கொள்கைகளை வரித்துக் கொண்டு, பாரதியின் பாட்டுப் பரம்பரையில்,ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கும் கவிஞர்கள் தமிழ் மண்ணில் தோன்றிக்கொண்டே இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட கவிஞர்களில் ஒருவராக தனது இரண்டாவது தொகுப்பிலும் தன்னை நிறுவியுள்ளார் ஆதவன்தீட்சண்யா. இவரது ஒவ்வொரு கவிதையும் ஆதிக்க சாதியினருக்கு சாவுமணியாகவே ஒலிக்கிறது. சமூகத்தின் சகலஅவலங்களுக்கு எதிராகவும் சங்கு முழங்குகிறார் ஆதவன் தீட்சண்யா.

கவிஞர்களைப் பார்த்து, உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்

சொல்லடுக்கிச் சொல்லடுக்கி

நீர் சொரிந்த பாடலெல்லாம்

போதும்... மாற்றார்

பல்லுடைத்து நமக்குற்ற

பழிதுடைக்க நாலுகவி

படைப்பீர்.

என்று பாடினார். இதோ அத்தகைய கவியாக ஆதவன் தீட்சண்யா உருவெடுத்துள்ளார்.

என் கவிதை மக்களுக்காக என்ற பிடிவாதம் இந்தக் கவிஞரிடம் இருக்கிறது. ஒவ்வொரு கவிதையிலும் சமூக அக்கறை பிரதானமாகஇருக்கிறது. சமூக அவலங்களை கூறுவதோடு தனது பணி முடிந்துவிட்டது என்று ஆதவன் கருதவில்லை. அவை ஒவ்வொன்றையும்விசாரணைக் கூண்டில் ஏற்றி எழுத்துச் சவுக்கால் விளாசித் தள்ளுகிறார்.

பூஜ்யத்திலிருந்து துவங்கும் ஆட்டம் என்ற இந்தக் கவிதைத் தொகுப்பிற்கு முன்னுரை, மதிப்புரை, என்னுரை என்று எதுவும் இல்லை.ஊசிப்பட்டாசுகளுக்குத்தான் அவை தேவை. இடிமுழக்கத்துக்கும் தேவையா என்ன?

இலக்கியம் பண்ணுகிறேன் என்று பம்மாத்து பண்ணிக் கொண்டிருப்பவர்கள் எதுவெல்லாம் ஒரு நல்ல கவிதைக்கு வேண்டும் என்றுகூறுகிறார்களோ, அதுவெல்லாம் ஆதவன் தீட்சண்யாவின் கவிதைகளில் காணக்கிடைக்கிறது. தேர்ந்த வார்த்தைப் பிரயோகம், சிறந்தகவிதைக் கட்டமைப்பு, எந்த வரியையும் நீக்க முடியாத கருத்துச் செறிவு, அங்கத உணர்ச்சி என்று எதுவும் குறையவில்லை.

Adhavan Deetchanyaஅனைத்திற்கும் மேலாக ஒவ்வொரு கவிதையும், படித்தபின்பு மனதில் ஒரு பாரத்தை ஏற்றுகிறது. எடுத்துக்கொண்ட பொருள் குறித்த சமூகக்கோபத்தை மனதில் எரிமலையாகப் பொங்கச் செய்கிறது. பெண்சிசுக் கொலை, வர்க்க பேதம், அதிகார வர்க்கத்தின் அடக்குமுறை, மதக்கலவரம், பெண் அடிமைத்தனம், நீதிபேதம், சாதி ரீதியிலான ஒடுக்குமுறை, கடவுள் பெயரிலான பித்தலாட்டம் என எதுவும் இவர் பேனாமுனைக்குத் தப்பவில்லை.

மயிலே மயிலே இறகு போடு என்று கெஞ்சிக் கேட்பதில், பாரதியைப் போலவே இவருக்கும் நம்பிக்கை இல்லை. கேட்டுப் பெறுவதல்லஉரிமை, அது எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது என்பது இவரது கவிதை வரிகளின் மையமாக இழையோடுகிறது.

இறுதியாக இது போன்ற கவிதைகள் எல்லாம் இலக்கியம் அல்ல என்பவர்களுக்கான பதிலை கவிஞரே சொல்கிறார். இந்த விவாதப்புடுங்கிகளிடமிருந்து கவிதை தனித்திருக்கிறது எமது சேரிகளைப்போல.

ஆமாம். கீதைக்கு பொழிப்புரை எழுதிக் கொண்டிருப்பவர்களால் கருணாநிதி, ஆதவன் தீட்சண்யா போன்றவர்களின் படைப்புகளைஏற்றிக்கொள்ள முடியாது. ஏனென்றால் பல்லாக்கு தூக்குபவர்களுக்காக குரல் கொடுப்பவர்களை பல்லாக்கில் பயணம் செய்பவர்களால்பொறுத்துக் கொள்ள முடியாதுதான்.

ஆனால், இலக்கியத்தை கட்டிக் காப்பதற்காக பிறந்தவர்களே, உங்களது விஷ்ணுபுராணங்களை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்.எங்களுக்கு ஆதவன் தீட்சண்யாக்கள் போதும்.

ஆதவன் தீட்சண்யாவின் ஒரு நெருப்புக் கவிதை:

ஆமென்

என்னை கருவுற்றிருந்த மசக்கையில்

என் அம்மா தெள்ளித் தின்றதைத்தவிர

பரந்த இந்நாட்டில் எங்களின் மண் எது?

தடித்த உம் காவிய இதிகாசங்களில்

எந்தப் பக்கத்தில் எங்கள் வாழ்க்கை?

எங்களுக்கான வெப்பத்தையும் ஒளியையும் தராமலே

சூரிய சந்திரச் சுழற்சிகள் இன்னும் எதுவரை?

எங்களுக்கான பங்கை ஒதுக்கிச் சொல்லியல்ல

எடுத்துக் கொள்வது எப்படியென

நாங்களே எரியும் வெளிச்சத்தில் கற்றுக்கொண்டிருக்கிறோம்

அதுவரை அனுபவியுங்கள் ஆசீர்வதிக்கிறோம்.

(பூஜ்ஜியத்திலிருந்து துவங்கும் ஆட்டம்: ஆதவன் தீட்சண்யா, சந்தியா பதிப்பகம், 52, முதல் தளம், நான்காவது தெரு, அஞ்சுகம் நகர்,அசோக் நகர், சென்னை- 600 003, தொலைபேசி எண்: 044-24899968, பக்கங்கள்: 79, விலை ரூ.30)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X