• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இருளும் ஒளியும்: புத்தக விமர்சனம்

By Staff
|

வாழ்க்கை எல்லோருக்கும், எப்போதும் நிறைவைத் தந்துவிடுவதில்லை. பணம் ஒன்றே நிறைவு தரும் என்று ஒரு சாரர் அதன்பின்னே ஒட, பட்டம்,பதவியைத் தேடி இன்னொரு சாரர் ஓடுகிறார்கள். இவர்களுக்கிடையே அன்றாடம் கடுமையாக உழைத்து மாலையில் சம்பளம் வாங்கி அந்த பணம்மறுநாள் விடியும் முன்பு செலவழிந்துவிடும் ஏழ்மை நிலையோடு வாழப் பழகி விட்ட பாமர சனங்கள்.

Irulum Oliyum by S.Tamilselvanஎதைப் பற்றியும் கவலைப்படாத பேராசைக்காரர்கள், தன் நிலை குறித்த பிரக்ஞையின்றியே வாழும் அப்பாவிகள் இவர்கள் இருவருக்கிடையே, தான்வாழும் சமூகத்தில் சிந்தனையளவிலும், செயல் அளவிலும் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த உழைப்பவர்களாலேயே இந்த உலகம் இன்னும் உயிர்ப்புடன்இயங்கி வருகிறது.

அத்தகைய சமூக அக்கறையுள்ள மனிதர்களில் ஒருவராகவே இருளும் ஒளியும் நூல் ஆசிரியர் ச. தமிழ்ச்செல்வன் தெரிகிறார். அறிவொளி இயக்கம் தமிழகத்தில்பிரகாசித்து ஒளி வீசிய காலத்தில் அந்த இயக்கத்தோடு தன்னை முழுமையாகப் பிணைத்துக் கொண்டதையும், அப்போது கிடைத்த அனுபவங்களையும் சிறப்பாகபதிவு செய்துள்ளார்.

அரசு உதவியுடன் நடைபெறும் ஒரு இயக்கத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் தொய்வு ஏற்படுவதும், நாளடைவில் அதை எல்லோரும்மறந்துவிடுவதும்தான் இயல்பு. ஆனால் அறிவொளி இயக்கத்தில் அத்தகைய தொய்வு ஏற்படாமல் இருக்க அதில் ஈடுபட்டவர்கள் எடுத்துக் கொண்டமுயற்சிகள் பிரமிக்க வைக்கின்றன.

சொற்ப அளவில் அரசாங்கம் தரும் சம்பளத்தொகையைக் கருத்தில் கொள்ளாமல் இவர்களது சிந்தனை, உடல் உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றைதோற்றுவித்தது எது? நான் வாழ இடம் தந்த இந்த நாட்டுக்கு நான் செய்யும் உதவி, பாட்டாளி மக்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமை என்றஉணர்வுதானே? அதுதானே ஒவ்வொரு அறிவொளி தொண்டரிடம் நிரம்பியிருந்திருக்கிறது!

அந்த வகையில் மக்களுக்கு உழைக்கக் கிடைத்த இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் ச.தமிழ்ச்செல்வனின்அறிவொளிப் பணிகளில் ஓங்கி நின்றிருந்திருக்கிறது. உழைத்ததோடு நில்லாமல் தனது அறிவொளி அனுபவங்களை அழகிய புத்தகமாகவும் கொண்டுவந்திருக்கிறார்.

அறிவொளி இயக்கத்தில் இயங்கியவர்களின் மனநிலை, அவர்களின் வாழ்க்கைத் தரம், அதில் பெண்களின் பங்கு, அவர்களை கிராம மக்கள் எதிர் கொண்டவிதம், காலப்போக்கில் தங்களுக்கானவர்களாக அவர்களை கிராமத்தினர் அங்கீகரித்துக் கொண்டது ஆகியவற்றை மனதில் ஈரம்படர விவரித்துச்செல்கிறார் ஆசிரியர் ச.தமிழ்ச்செல்வன்.

அறிவொளி இயக்கத்தின் முதல் நாளில், இத்தனை வருசம் எங்க போயிருந்தீங்க என்ற மக்களின் கேள்விக்கு உருக்குலைந்து போனதாக சொல்லும்தமிழ்ச்செல்வன், அந்த கேள்வி ஏற்படுத்திய குற்றவுணர்ச்சியை படிப்பவர்கள் மனதிலும் ஏற்றிவிடுகிறார். புத்தகத்தை படித்து முடிக்கும்போது அந்தகுற்றவுணர்ச்சி பன்மடங்காகி, சமுதாயத்திற்கு நீ என்ன செய்தாய் என்ற பிரம்மாண்டமானதொரு கேள்வியாக நம்முன் உருவெடுக்கிறது.

ராத்தூக்கம் பாராது அற்புதமான சமுதாயப் பணி ஆற்றிய அறிவொளித் தொண்டர்கள் அனைவரையும் பார்த்து ஒவ்வொருவர் கையையும் பிடித்து கண்ணில்ஒற்றிக்கொள்ளத் தோன்றுகிறது. அதற்கு முன்னதாக அறிவொளிக் காலத்தை தன்னால் இயன்ற அளவிற்கு நல்லதொரு புத்தகமாகப் பதிவு செய்துள்ளச.தமிழ்ச்செல்வனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வோம். பாரதி புத்தகாலயம் இதை அழகாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது.

இதுபோன்ற சரித்திரப் பதிவை தனது தீம்தரிகிட இதழில் தொடராக வெளிவர முழு ஒத்துழைப்பு அளித்த ஞாநிக்கு பாராட்டுக்கள்.

தனது பிள்ளைகளுக்கு சொத்து சேர்ப்பதற்காகவே பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள் இந்தப் புத்தகத்தை ஒரு முறை படிப்பது நல்லது.

மாதச் சம்பளம் வாங்கும் மத்திய தர வர்க்கத்தினர் இந்தப் புத்தகத்தைப் படித்தால், தங்களது ஆதரவையும் பிரதிபலன் பாராத தொண்டையும் எதிர்பார்த்துபாமர சனங்கள் காத்திருப்பது தெரியவரும்.

ஒரு நல்ல புத்தகம் படித்து முடிக்கும்போதுதான் ஆரம்பிக்கிறது என்று யாரோ ஒரு அறிஞர் சொன்னதாக ஞாபகம். அந்த வகையிலான புத்தகம்தான்ச.தமிழ்ச்செல்வனின் இருளும் ஒளியும்.

புத்தகத்தின் இறுதி அத்தியாயத்தின் கடைசி சில பத்திகள்:

அறிவொளி இயக்க நினைவலைகள் கடல்போல் விரிந்து கொண்டே செல்கின்றன. முடிக்க முடியாது. எங்கெங்கோ ஊர்களில் ஏதேதோ எதிர்பாராத்தருணங்களில் எப்போதும் ஒரு அறிவொளித் தொண்டர் (பெரும்பாலும் ஒரு பெண் தொண்டர்) என்னைக் கடந்து போய்க் கொண்டேயிருக்கிறார். நின்றுசினேகமாக சிரிக்கிறார். கிட்ட வந்து பேசுகிறார். திரும்பவும் நாம எல்லோரும் சேர்ந்து வேலை செய்யத் தானே போகிறோம், அப்ப நிதானமாப்பேசிக்கிடலாம் என்பது போலத் தலையசைத்து மெல்லப் பிரிகிறார்கள்.

ஆண்களும் பெண்களுமாய் ஆயிரம் ஆயிரமாய் எங்களோடு பேசிப் பழகிப் பணியாற்றிய அந்த நாட்களின் ஈரமும் சிரிப்புகளும் சத்தங்களும் கூடவே வந்துகொண்டிருக்கின்றன. திளைக்கத் திளைக்க நீந்திப் பின் கரையேறி சற்றே மூச்சு வாங்கிக் கொண்டு மீண்டும் குதிப்பதற்காகக் காத்திருக்கும் தருணம் போன்றஉணர்வுதான் எப்போதும் எனக்கு இருக்கிறது.

இத்தனாந்தேதியோடு அறிவொளி இயக்கம் முடிஞ்சு போச்சு. போயிட்டு வாரோம் என்று நாங்கள் மக்களிடம் விடைபெற்றுப் பிரியவில்லை. போனவாரம் கூட தென்காசிக்குப் போய்விட்டு பஸ்ஸில் திரும்பும்போது கொய்யாப்பழம் விற்ற பெண்மணி என்னிடம் ரெண்டு பழத்தை நீட்டியபோது நான் வேண்டாம்என்று மறுத்தேன். காசெல்லாம் வேண்டாம் சார். சும்மா சாப்பிடுங்க. நீங்க அறிவொளி சார்தானே? எங்க ஊருக்கு சசிகலா மேடம் கூட வந்துகதையெல்லாம் சொன்னீங்கள்ள? நானும் அறிவொளிதான்.

வெற்றிலைக்காவி படிந்த வெள்ளையான சிரிப்புடன் நீண்ட அந்த கொய்யாப்பழங்களுடன் அவரது கைகளையும் சேர்த்து ஒரு கணம் என் இரண்டு கரங்களாலும்இறுக்கிப் பிடித்துக் கொண்டேன். எப்படி இருக்கீங்க? பஸ் உடனே கிளம்பிவிட்டதால் ஒன்றும் பேசிக்கிட முடியவில்லை.பிறகு பாப்பம் என்பதுபோல அந்தப்பெண்மணியும் தலையசைத்தார்.

பேசாமல் நின்று போன பாக்கிகள் கிராமம் கிராமமாய் ஏராளமாய்த் தொக்கி நிற்கிறது. மக்கள் எங்களுக்கு விடை கொடுக்கவுமில்லை. நாம்விடைபெறவும் இல்லை.

நம் மக்களிடமிருந்து நாம் எப்படி விடை பெற முடியும்?

(இருளும் ஒளியும்: ச. தமிழ்ச்செல்வன், பாரதி புத்தகாலயம், 2 குயவர் வீதி, கிழக்கு ஜோன்ஸ் சாலை, சைதாப்பேட்டை, சென்னை-600 015, மின்னஞ்சல்:info@thamizhbooks.com,தொலைபேசி: 044-2433 2424, பக்கம் 148, விலை ரூ.50)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X