• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

துணையெழுத்து

By Staff
|

தமிழின் நவீன இலக்கிய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர் எஸ்.ராமகிருஷ்ணன். எந்தக் குழுவிலும் தன்னை ஆட்படுத்திக்கொள்ளாமல், தனி மனித விமர்சனத்தை இலக்கியம் எனக் கொள்ளாமல் சிறப்பான படைப்புகளை வழங்கி வருபவர்.

Thunaiyeluthuஇவர் ஆனந்த விகடனில் எழுதிய துணையெழுத்து என்ற கட்டுரைத் தொடர் இப்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. தொடராகவெளிவந்தபோதே ஆயிரக்கணக்கான வாசகர்களைக் கட்டிப்போட்ட தொடர் இது என்று சொன்னால் அது மிகையில்லை.

தொடராகப் படித்த அனுபவம் இருப்பினும், புத்தகமாகப் படிக்கும்போது புதிதாகப் படிக்கும் சுவாரசியத்தை இவரது எழுத்து நடைதருகிறது.

இந் நூலில் தனது அனுபவங்களையே எழுத்தோவியங்களாகத் தீட்டியுள்ளார். இமயம் முழுவதும் குமரி வரை பல்வேறுகாலகட்டங்களில் தான் மேற்கொண்ட பயணங்கள், சந்தித்த மனிதர்கள், மனதை நெகிழச் செய்யும் அனுபவங்கள் ஆகியவற்றைத்தொகுப்பாக்கியுள்ளார்.

ஒவ்வொரு அத்தியாயத்தையும் படித்து முடிக்கும்போது, உலகைப் பற்றிய நமது பார்வை சற்று விசாலமாகிறது. மனதின் கசடுகள்நீங்கி, எல்லாருடனும் உறவு கொண்டாட வேண்டும் என்று வேட்கையைத் தூண்டுகிறது. எஸ்.ராமகிருஷ்ணன் தனது பேனாவில்மனிதத்தை ஊற்றி எழுதுகிறார் போலும்.

சிறந்த நூல்களைத் தேடி, படிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள் தவறாமல் வாங்க வேண்டிய நூல் இது. மருதுவின்ஒவியங்களுடன் விகடன் பிரசுரம் இதை நேர்த்தியாகப் பதிப்பித்திருக்கிறது.

புத்தகத்திலிருந்து ஒரு பகுதி. காணாமல் போவது எப்படி என்ற தலைப்பில், தான் காணமல் போய் வீடு திரும்பியதை ஆசிரியர் இப்படிஎழுதுகிறார்:

''வீட்டை அடைந்த போது அம்மா சமையல் செய்து கொண்டிருந்தாள். நான் அமைதியாக அடுப்படியில் நின்றபோது ஏறிட்டு என்னைப்பார்த்துவிட்டு, எதுவும் நடக்காதது போலச் சமையலைத் தொடர்ந்தாள். வீட்டில் எவரும் என்னை எதுவும் கேட்காதது மிகவும்வேதனையாக இருந்தது.

அம்மா சுடுசாதமும் ருசிமிக்க காய்கறிகளும் சாப்பிடுவதற்காக எடுத்து வைத்துவிட்டு உள்ளே போய் விட்டாள். நாலைந்துநாட்களுக்குப் பிறகு வீட்டு உணவைச் சாப்பிட்டேன். சாப்பிடச் சாப்பிட அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. பாதிக்குமேல் சாப்பிடவிருப்பமில்லை.

தண்ணீரைக் குடித்தபோது தொண்டை வலித்தது. அன்றிரவு அப்பா, என்னைத் தனியே அழைத்துக் கொண்டு போய், வீடே நான்குநாட்களாகத் தூக்கமில்லாமல் வேதனையில் இருந்தது என்று சொன்னார். அவமானமாக இருந்தது.

S.Ramakrishnanகாணாமல் போய்விடுவது தனிநபர் சம்பந்தப்பட்ட காரியம் இல்லை. அது ஒரு விபத்தை விடவும் வலிய துயரம். இப்போதும் நகரின்ஏதோ சாலையில் சிறுவர்கள் தனியே சுற்றி அலைவதைக் காணும்போது, தொண்டையில் மெலிதாக வலி உண்டாகிறது.

வீடு திரும்பாமல், ஏதோ காரணங்களால் வேறு ஊர்களில் வேறு தேசங்களில், வேறு பெயர்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்யாவரும் துயரவான்கள்.

அவர்களில் ஒருவரை நீங்கள் சந்திக்க நேர்ந்தாலும், அவர்களின் கண்களை உற்றுப் பாருங்கள். வீட்டை, ஊரை, குடும்பத்தைப் பிரிந்துவந்த நாள் இமையின் ஓரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும். அவர்களிடம் பேசிப் பாருங்கள்.. . அவர்கள் வார்த்தைகளைவிலக்கியவர்களாக இருக்கிறார்கள். அவர்களோடு பழகிப் பாருங்கள்... உங்கள் அன்பை அவர்கள் விலக்குவார்கள்.அவர்களால் வெறுப்பைக் கூட ஏற்றுக் கொள்ள முடியும். நேசிப்பைத் தாங்க முடியாது.

காரணம், சாவை விடவும் வலியது காணாமல் போய்விடுவது.''

புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது சக மனிதனின் மேல் இது வரை இல்லாத ஒரு பரிவு வருகிறது. இதைவிட ஒரு பெரிய வெற்றி ஒருஎழுத்தாளருக்கு இருக்க முடியுமா என்ன?

(துணையெழுத்து: எஸ்.ராமகிருஷ்ணன், பக்கங்கள்: 347, விலை: ரூ.85 அல்லது ரூ.110 (தடித்த அட்டை), பதிப்பகம்: ஆனந்த விகடன்,757, அண்ணா சாலை, சென்னை-2)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X