For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மனு நீதி - ஒரு மறுபார்வை

By Staff
Google Oneindia Tamil News
A Sceen of Ancient India
மனு ஸ்மிருதி (Manu smriti) உலகின் பழமையான சட்டத் தொகுப்புகளில் (Law codes) ஒன்றாகும். இந்தியாவின் பழங்காலத்தில்தொகுக்கப்பட்டுத் தோன்றியுள்ள மனு ஸ்மிருதியின் (இனி, மனு நீதி) காலம் பற்றி வேறுபட்ட கருத்துக்கள் எழுந்துள்ளன.

மனு நீதியின் காலத்தை கி.மு.2300ல் வைத்துச் சொல்லும் கருத்து ஒருபுறம் (R.S.Vaidyanatha Iyer, 1976) மற்றொரு பக்கத்தில் அதுஅவ்வளவு தொன்மையானதாக இருக்க முடியாது, கி.மு.200 ஆக இருக்கலாம் (Max Muller) என்ற கருத்தும் இரு துருவங்களாக நிலவின.

இதனிடையே மனு நீதியின் காலம் குறித்து வேறு பல கருத்துக்களும் விளைந்தன. மனுவின் காலம் கி.மு. 1280 (Sir W.Jones), கி.மு. 1000(குஞிடடூஞுஞ்ச்டூ), கி.மு. 900 (Elphinstone), கி.மு. 6 (Monier Williams), கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முந்தி இருக்க முடியாது(M.M.P.V.Kane) என்றும் விவாதங்கள் விரிந்து தொடர்ந்தன.

இத்தகைய கணிப்புகளில் காணப்படும் கால வேறுபாடு மிகவும் பரந்திருப்பதால் எல்லோருக்கும் பொதுவாக கி.மு. 500 என்று வைத்துக்கொள்ளலாம் என்று பரிந்துரைகள் கூட வழங்கப்பட்டன (Dr.Jolly&Burnell). இந் நிலையில், 1902ல் பிரெஞ்சு அகழ்வாராய்ச்சியாளர்கள்கண்டெடுத்த- பாபிலோனை ஆண்டு வந்த (கி.மு.2128) ஹமுராபி மன்னனின் (King Hammurabi) சட்டமான- ஹராபி சட்டத் தொகுப்பு(Code of Hammurabi) மனு நீதியின் காலம் பற்றிய விவாதங்களின் திசைகளைத் திருப்பி விடுவதாயிற்று.

வரலாற்று, அகழ்வாராய்ச்சிச் சான்றுகளின்படியும், ஹமுராபிச் சட்டத்திற்கும் மனு நீதிக்கும் பொதுக் கூறுகளில் காணப்படும் ஒற்றுமைகளின்அடிப்படையிலும், இரண்டு சட்டத் தொகுப்புகளும் சம காலத்தவையாக இருக்க முடிேயும் என்ற கருத்துக்கள் வலுப் பெற்றுள்ளன(R.S.Vaidyanatha Iyer).

மனு நீதி என்பது புதிதாக இயற்றப்பட்ட நூல் அல்ல. இந்து அரசர்களுக்கு சட்டங்கள் இயற்ற அதிகாரம் எதுவும் கிடையாது. அவர்கள் தர்மசாஸ்த்திரத்தினை அப்படியே அமுல்படுத்த வேண்டும், அவ்வளவுதான் (Dr. K.B.Krishna). ஆகவே மனு நீதி என்பது ஏற்கனவே- மானவதர்ம சூத்திரங்கள் (Manav Dharma Sutras) என நிலவி வந்த இந்து தர்மசூத்திரங்களின் தொகுப்புதான்!

Menuscriptஇந்த தர்ம சூத்திரங்கள் பல காலங்களில், பலரால் (கெளதமா, பெளத்தயானா, அபஸ்தமா, ஹிரன்யகேசி, வசிஷ்டர், விஷ்ணு, ஹதா, சங்கா-லிகிதா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்), பல வடிவங்களில் (செய்யுள், உரைநடை, உரையிடையிட்ட பாட்டு என)எழுதப்பட்டவையாகும்.

வழங்கி வரும் பல செய்திகளின்படி, ஜமதக்னி என்ற பிர்கு முனிவர் முதலில் இந்தத் தர்ம சூத்திரங்களை ஒரு பெரிய தொகுப்பாக - சுமார்4000 சூத்திரப் பாடல்கள் கொண்டதாகத் தொகுத்தார்.

அதற்குப் பின்னர் அவரது மகனும், அரசியல் வாரிசுமான - தர்ம சூத்திரங்களின் முழுப் பொருள்களையும் கற்றுத் துறைபோகிய - பரசுராமர்,"உலக நன்மை கருதி" (மனு ஸ்மிருதி 12ம் அத்தியாய இறுதியில், தொகுப்பின் நோக்கம் அப்படித்தான் குறிப்பிடப்பட்டுள்ளது) சுருக்கி,2694 சூத்திரப் பாடல்கள் கொண்டதாகத் தொகுத்து வழங்கியதெனவும், கலியுகத்திற்கேற்ற சட்டம் மனு தர்மமே எனப் பிர்கு முனிவர்கூறியுள்ளதாகவும் அறிகிறோம்.

வியாசரின் மகாபாரதம், சாந்திபர்வத்தில், மனு நீதியின் பல எதிரொலிப்புகளைக் காண முடிகிறது (R.S.Vaidyanatha Iyer, க.109-113).மத்திய ஆசிய நாடுகளின் பல சட்டத் தொகுப்புகளில் மனுவின் சாயல் உள்ளது. இத்தகைய மனு நீதியின் தொகுப்பாளர் யார் என்பதில்உறுதியான முடிவுகள் எட்டப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

சட்டத் தொகுப்புகளில் மனு நீதியின் இடம்:

மனு நீதியின் காலம் பற்றிய விவாதங்கள் நீண்டு கொண்டே இருந்த போதிலும், அதன் பழமை மறுப்பதற்கில்லை. நிலவி வந்த தர்மசூத்திரங்களைத் திரட்டிச் சட்டத் தொகுப்பாக கொணர்ந்த முன்னோடியான முயற்சியின் விளைவு (Pioneering effort) மனு நீதியாகும்.

அக் காலத்தில் வழக்கில் இருந்த 20 அல்லது 36 ஸ்மிருதிகளுள் மனு நீதியே சிறப்புப் பெற்றுள்ளது. (Prof. T.P.Gopalakrishna, HinduLaw) மனு நீதி தொகுக்கப்பட்ட காலத்தில் சமுதாயம் நாகரீக வளர்ச்சிகளை அதிகம் எட்டியிருக்க முடியாது. மனிதக் குழுக்களின்தலைவர்கள் வலுப்பெற்று, அரசர்களாகி அவர்களுக்குத் தெய்வீக உரிமைகள் (Divine Rights) மிகுந்திருப்பதாக கருதப்பட்ட (மனு, அத். 7,5-8) வேதகால (ஆரியப்) பண்பாட்டுப் பின்னணி அது.

அதனையொட்டிய இத்தொகுப்பில் பல வகையான குறைபாடுகள் இருக்க அதிமுக வாய்ப்புகள் உண்டு. தற்காலச் சட்டக் கருத்துக்களுக்கும்,சட்ட அடிப்படைகளுக்கும் முற்றிலும் உடன்படாத - வர்ண தர்மம் போன்ற - பல கொள்கைள் மனு நீதியில் பரவிக் கிடப்பதும் உண்மை.

Hinduism(இந்திய அரசியல் சட்டம் கூட ஒரு வகையில் சாதி அமைப்பினை (Caste System) ஆதப்பதாகத்தானே உள்ளது (K.Veeramani -P.R.Kuppusamy, 1989). ஆயினும் சட்ட நீதிகளுக்கான முதற்கொள்கை (First Principles of Law and Justice) தேவைப்பட்டால்,யாருமே மனுவை (Privy Council) அணுகலாம் என்ற சிறப்பு நிலையை இத்தொகுப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

மனு நீதியின் செல்வாக்கு இந்தியாவில் மட்டுமல்ல, கம்போடியா, பர்மா, யவன (ரோம்) நாடுகளுக்கும் பரவியிருந்ததாகச் சான்றுகள்காட்டப்படுகின்றன. சிலோனை (இலங்கை) ஆண்டு வந்த டச்சு அரசாங்கம் 1707ல் தொகுத்த தேசவளம் (Thesawaleme) என்றதொகுப்பில், சொத்துக்களுக்கான பாகப் பிரிவினை மனுவின் அடிப்படையில் நிகழ வேண்டும் என குறிக்கப்பட்டுள்ளதாம். (ஸ்வாமிஇராமானந்த பாரதி, 1973).

இன்றைய நிலையில் வழக்கிலுள்ள இந்துச் சட்டம் (Hindu law) என்பதற்கான மூலங்களில் (Sources) ஸ்மிருதி, பாஷ்யம், ஆச்சாரம்ஆகிய மூன்றும் முதன்மையானவை. மனு நீதி அத்தகைய முக்கிய மூலாதாரத்தில் ஒன்று என்பதால், அதன் வரவேற்கத் தக்க கோட்பாடுகளின்வழியே, அத்தொகுப்பை மறுபார்வைக்கு உட்படுத்துவதே இக்கட்டுரை.

மூர்க்க நீதி கொண்டதாக கருதப்படும் மனு நீதியில், கருத்தைக் கவரும் வாசகங்கள், வீரமிகு வார்த்தைகள், பலமான காரணங்கள்,விநோதமான பாரம்பரியங்கள் எல்லாமே உண்டு என்று (Max Muller) அறிஞர்களால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

ஒரு சட்டத் தொகுப்பினை அதன் முழுக் குணத்தையும் (Whole character) கொண்டு மதிப்பிடுவதுதான் சரியாக இருக்குமென்றாலும் -மனு நீதிக்கான வக்காலத்தாக அல்ல - மக்களின் பொது நலனைக் குறித்த, மனித உரிமைக் கோட்பாடுகளுக்கான, கருத்துப் பழமையைவெளிச்சத்திற்குக் கொண்டு வரவே இம் முயற்சி.

மனுவின் தொகுப்பு:

காலப் பழமை, அப்போதைய சமுதாயச் சூழல், அவற்றால் விளைந்த தேவைகள் காரணமாக விளைந்தது மனு நீதி. தற்போதையபார்வையில் அது முழு, முறையானதொரு தொகுப்பு (Complete, Organised Code) என்று சொல்ல முடியாதவாறு, தொகுப்பாளரின்விருப்பத்திற்கேற்ப (ஐடூடூணிஞ்டிஞிச்டூ ணிணூஞீஞுணூ) தொகுக்கப்பட்டிருப்பது போல தெரிகிறது (R.S.Vaidyanatha Iyer). மனு நீதி அனைவருக்கும்பொதுவான சம நீதியை வலியுறுத்தவோ, வழங்கவோ முயன்றிருப்பதாகக் கூறவே முடியாது.

"ஒவ்வொரு சாதிக்கும் - ஏன் ஒவ்வொரு குடும்பப் பாரம்பரியத்திற்கும் உரிய நீதியை அறிந்து மன்னன் நீதி வழங்க வேண்டும்"(ஈணூ.ஆதணூணஞுடூடூ, ச்ணத, ணீ 260) என்று சொல்லியிருப்பதிலிருந்தே மனுவில் சம நீதிக்குச் சம்பந்தமே இல்லை என்பது உறுதியாகி விடும்.

ஆனாலும், வேற்றுச் சாதியில் மனைவியர்களைக் கொண்டு அவர்கள் வழியில் குழந்தைகள் பிறந்திருந்தாலும், அத்தகைய குழந்தைகளுக்குதகப்பன் சொத்தில் பங்கு உண்டு (அத். 9. 148-155) என்பது சாதி வேற்றுமையை அதிகமாக கருத்தில் கொள்ளாதது போலத் தெரிகிறது.(சூத்திரக்காலம் - கி.மு. 1300 முதல் கிறிஸ்து பிறப்பு வரை - மனு நீதியில் பலமாற்றங்களை புகுத்தியது; சாதி மீறிய திருமணங்களைத் தடைசெய்தது; அதனால் சொத்துச் சட்டங்களும் மாற்றம் பெற்றன).

நீதியளிக்கும்போது அரசன் எமனைப் போலத் தண்டனை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. (அத். 7. 18). அரசன் கடுந்தண்டனை அளிக்க வேண்டும் என்ற கருத்தில் இப்படிக் கூறப்பட்டிருந்தாலும், "ஞெமன் கோலன்ன சீர்மைத்தாகி" (மதுரைக் காஞ்சி) யார்,எவர் என்ற வேறுபாடின்றி, சாதி பாராமல் பாரபட்சமில்லாத நீதி வழங்கப்படவும் அப் பரிந்துரை பயன்பட்டிருக்கலாம்.

மனிதர்களைப் பற்றிய கணிப்பில் மனு நீதி காட்டுவது வெறுக்கத்தக்கதொரு எதிர்மறைப் போக்கே ஆகும். குற்றம் சாட்டப்பட்டிருந்தால்கூடக் குற்றம் மெய்ப்பிக்கப்படும் வரை எவரையும் தீதற்றவர் என்றே கருத வேண்டும் என்பது இப்போது வலியுறுத்தப்பட்டு வரும் மனிதஉரிமைக் கொள்கை.

ஆனால் "குற்றம் செய்யாத மனிதனைப் பார்ப்பதே அரிது, தண்டனைதான் மக்களை ஒழுங்காக இருக்கச் செய்வது. தண்டனைக்கானபயம்தான் மனிதனைக் குற்றம் செய்வதிலிருந்து விலகியிருக்கச் செய்கிறது. அதனால்தான் மற்றவர்கள் தத்தம் உரிமைகளை இடையூறுகள்இன்றி அனுபவிப்பது சாத்தியமாகிறது" என்பது மனுவின் கொள்கை. (அத். 7. 18, 22)

இதனை நோக்கும்போது, தனி மனித மாண்புக்கு மனு நீதியில் எந்தவிதமான மதிப்பும் அளிக்கப்படவில்லை என்பது உறுதியாகிறது.அதற்குப் பதில் ராஜதர்மத்திற்கே மனு நீதியில் முதன்மை அளிக்கப்பட்டுள்ளது. மனு நீதி கூறும் அரச தர்மத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டியதில்லை. அத் தர்மத்தின் கூறுகளாகப் பொது மக்கள் நலன் ஆங்காங்கே வலியுறுத்தப்பட்டுள்ளதை வரவேற்கலாம்.

(மக்கள் நலக் கூறுகள், வரிக் கொள்கை, பெண்கள் குறித்து மனு நீதி சொல்வதை நாளை பார்ப்போம்)

- பேராசிரியர் இராஜ முத்திருளாண்டி([email protected])

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X