• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குட்டாறு

By Staff
|

Oldmanகுட்டாறு என்பது வீரசேவகபுரத்தில் இரண்டு விஷயங்களைக் குறிக்கும். ஒன்று ஆறு என்ற பெயரில், வாய்க்கால் அளவில்இருக்கும் குட்டை ஆறு. இரண்டாவது அந்தப் பட்டப் பெரியலான மனிதர், இந்தக் கதை மனிதரைப் பற்றியது.

ஐம்பதைத் தொடும் வயதிருக்கும். நல்ல கறுப்பு, உயரம் அதிகமில்லை. ஆனாலும் லேசான கூன் விழுந்து இருக்கும். நடுமண்டையில் உள்ளங்கை அகல பாலைவனம், வார்த்தை ஞாபகமூட்டும், நடை எப்போதும் ஓட்டம் நடையுமாகத்தான் நடப்பார்,அந்த வயதிலும். நல்ல குரல், கெட்ட வார்த்தைகள் சரளமாக வந்து விழும். புருவம் முதற்கொண்டு ஒரு முடிவிடாமல் காலம்அடித்த வெள்ளை, பழுப்பேறிய வேட்டி, குளிருக்கும் வெயிலுக்கும் சட்டை போட மாட்டார்.

ஊரில் திடுதிப்பென்று மழை பெய்தால், "குட்டாறு சட்டை போட்டிருக்கானா பார் .. " - அவர் வயது பெருசுகள் கிண்டலடிப்பார்கள்.சமயங்களில் அப்படியும் நிகழ்ந்திருக்கும். கல்யாணம் அல்லது வேறு விசேஷங்களில் கலந்து கொள்ள குட்டாறு சட்டை அணிந்துசென்றதாகச் செய்திகள் வரும்.

இப்போது எனக்கு வயது இருப்பதாறு. இதே வீரசேவகபுரத்தில்தான் பிறந்து வளர்ந்திருக்கிறேன். இன்றைக்கும் எனக்குகுட்டாறுவின் நிஜப் பெயர் தெரியாது.

பல் விழுந்து மறுபடி முளைக்கும் சின்ன வயதில், அவருக்கு மட்டும் விழுந்த பல் முளைக்கவேயில்லை. நாட்டாறு மதகு போல்அங்கங்கே திறந்து கிடக்கும் பல் வரிசை. அவரின் இந்தப் பெயருக்குக் காரணமாயிற்று. இட்ட பெயர் மறந்து, பட்டப் பெயர்நிலைத்து விட்டது.

சின்ன வயதில், அவன் சொந்தப் பெயரைத் தெரிந்து கொள்ள எனக்கு ஆர்வம் இருந்தது உண்மை. ஆனால் அவரிடமிருந்துகொட்டும் கெட்ட வார்த்தைகள், அவரை நெருங்கிக் கேட்க விடாமல் பயமுறுத்தின. அப்பாவிடம் கேட்ட போது "அத தெரிஞ்சிஎன்ன பண்ணப் போறே நீ ..? " என்று சீறியதில், அப்புறம் அதைப் பற்றி நினைக்கவேயில்லை.

நடையைப் போன்றே, குட்டாறு குளிப்பது ஒரு தனி அழகு.

உடம்பில் சற்று வியர்வை வந்து விட்டால் போதும், "இரு, தோ குளிச்சிட்டு வந்துர்றேன் .. " யாரிடம் என்ன பேசிக்கொண்டிருந்தாலும் பட்டென்று வெட்டிக் கொண்டு கிளம்பி விடுவார். பின்னால் நாய் துரத்துவது போன்ற தன் விசேஷ வேகநடையில் ஓமக்குளம் நோக்கி நடப்பார். ஆண், பெண் படித்துறை பாகுபாடெல்லாம் பார்க்காமல், எங்கு கூட்டம்குறைவாயிருக்கிறதோ அங்கு இறங்கி விடுவார். அது பெரும்பாலும் பெண்கள் படித்துறையாகத்தான் இருக்கும்.

துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு, "கொஞ்சம் நவரும்மா, தோ குளிச்சிட்டு போயிர்றேன்... "

"ஆமா .. " ஏற்கனவே அங்கிருக்கும் பெண்கள் சலித்துக் கொள்வார்கள். "ஆம்பளை படித்துறை எதுக்கு இருக்கு ..? எப்பவந்தாலும் இங்கதான் நுழையிறது.. "

அவர் அதையெல்லாம் காதில் வாங்க மாட்டார். தபதபவென நீல் இறங்கி முங்குவார். பிறகு .. "பெருமாள்சாமி பொண்டாட்டி தானநீ ..? கொஞ்சம் சோப்பு குடேன் .. " வாங்கி ".. ப்பா, வாசம் சும்மா குப்புன்னு வருதே! என்னா சோப்பு இது? ஸ்ரீதேவி போடுறதா ..?" என்பார்.

"ம்.. இந்த வயசுலயும் வாசத்துக்கு மூக்கு வேர்க்குதா? எவ போடுற சோப்பா இருந்தா என்ன ..? குளிச்சமா போனோமானுஇல்லாம, ஆராய்ச்சி வேற .. "

"இந்தக் காலத்து பொம்பளங்களுக்குச் சட்டுனு கோவம் வந்துருது .. " சிரிப்போடு கரையேறி "ரொம்ப நேரம் தண்ணீல நிக்காத.மேனி முழுக்க மீன் கவிச்சி ஏறிக்கும். பெருமாள்சாமி மீன் வாடைக்கு வாந்தி எடுக்கிற கேஸ் .. "

குளத்தங்கரை முனை திரும்பும் வரை அந்தப் பெண்மணி திட்டிக் கொண்டிருப்பது காதில் விழும்.

குட்டாறு என்றால் சின்னப் பசங்களுக்கு ரொம்பக் கொண்டாட்டம். கடைத் தெருவில் நான்கைந்து பேரோடு பேசிக்கொண்டிருப்பார். யாரேனும் ஒரு பொடிப் பையன் ஓடிப் போய், "முரளி அம்மா உங்களைச் சீக்கிரம் வரச் சொன்னாங்க .. " என்றுசொல்லி விட்டால் போதும், ஏற்கனவே ஃபாஸ்ட் மோஷனில் நடக்கும் குட்டாறு, இப்போது ஏவுகணை வேகத்தில். குட்டாறுக்குஅவன் மனைவி மேல் ஏக பயம் உண்டு. அதை மரியாதை என்று கெளரவமாகச் சொல்லிக் கொள்வார்.

வீட்டுக்குப் போனதும் தான் ஏமாற்றப்பட்டது தெரிந்து கொதிப்பார். மறுபடி அந்தப் பொடியனை எங்கு பார்த்தாலும் அவன்குலத்தையே சந்தேகித்து வசவு விடுவார். சொன்னவன் கொஞ்சம் பெரிய இடத்துப் பிள்ளையாக இருந்தால், "உன் பொண்டாட்டியநண்டு கடிக்க .. " என்பதோடு நிறுத்திக் கொள்வார்.

என் அந்த வயது சுவாரஸ்யத் திலகமான குட்டாறை அவ்வப்போது போலீஸ் தேடி வரும். சமயங்களில் பிடித்துக் கொண்டும்போகும். எனக்குத் தெரிந்து குட்டாறு எந்தக் காலத்திலும் வேலைக்குப் போனதில்லை. ஆனால், நிச்சயம் மனிதர் திருடர்கிடையாது.

"தாத்தா காலத்து சொத்து இருக்கு. அதுவுமில்லாம பத்து கறவை மாடு இருக்குது. எம் பொண்டாட்டி தண்ணி கலக்கறதே தெரியாமகலந்து முப்பது வீட்டுக்கு பால் விக்கிறா. நான் ஏண்டா வேலைக்குப் போகனும்?" என்பது குட்டாறு ஆரம்பக் காலங்களில் பேசியவீர வசனமாம்.

சும்மாவே வெட்டியாய்த் திரிந்த குட்டாறு பொழுது போ(க்)க கோர்ட் பக்கம் போய் வேடிக்கை பார்க்க, உட்கார வந்தது வினை.

திருட்டு, அடிதடி, வெட்டுக் குத்து என்று உள்ளே வரும் நபர்களுக்கு ஜாமீன் கையெழுத்துப் போட்டால் பணம் கிடைக்கிறது என்றுதெரிந்து கொண்டவர், முதல் வேலையாக மகன் முரளியிடம் கையெழுத்துப் போடக் கற்றுக் காண்டார்.

சமயங்களில் ஜாமீன் கொடுத்த பார்ட்டி கம்பி நீட்டி விட்டால் இவரை போலீஸ் உள்ளே தள்ளிக் கொண்டு போய் விடும். இவர்மனைவி, இவரை ஜாமீனில் எடுக்க ஆள் தேடி அலைவார்.

இன்று வரை இந்த "உள்ளே வெளியே" விளையாட்டு நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது.

கவலைகள் ஏதுமின்றி, எதிர்காலம் குறித்த பயமின்றி வாழ்க்கையை அதன் போக்கில் வாழும் கொடுத்து வைத்த ஒரு சிலரில்குட்டாறும் ஒருவராகப்பட்டார். இவன் நிஜப் பெயர் என்ன...? என்கிற அந்த ரகசிய உறுத்தலின் உந்துதலின் பேரில்தான் இவரைஇத்தனை காலம் கூர்ந்து கவனித்தேன் என்று நினைக்கிறேன்.

குட்டாறின் நிஜப் பெயர் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு வெகு சமீபத்தில்தான் கிடைத்தது. உடம்பு சரியில்லை என்று கிளினிக்குக்குவந்திருந்தார். சோதித்து, மருந்துச் சீட்டில் பெயர் எழுத வேண்டி கேட்டேன்,

"உங்க நிஜப் பேரே இதுதானா ..? " பயம், தயக்கம் என்று ஆயிரம் தருணங்களில் தள்ளிப் போட்ட அந்தக் கேள்வியைக்கடைசியில் கேட்டே விட்டேன்.

குட்டாறின் கண்கள் ஜொலிப்பாய் ஒளிர்ந்தன. "எத்தினியோ வருஷத்துக்கப்புறம் நீ ஒருத்தன் கேக்குற .. " கால நடுக்கம் நிறைந்தகுரலில் சிலாகித்தார். "ஒவ்வொருத்தன் மாதிரி, வேலைக்கு ஒருத்தன் கிட்ட கை கட்டி நிக்காம சுதந்திரமா வாழ்ந்தனா, தனக்குஅப்படி வாய்க்கலியேன்னு இவனுங்களுக்கு உறுத்தியிருக்கும் போலருக்கு. ஒரு பய கூட என் சொந்தப் பேர்ல என்னைக்கூப்பிடலப்பா .. " அடக்க மாட்டாத ஆங்காரத்தோடு பேசினார்.

"சொல்லிச் சொல்லிப் பார்த்தேன். எவனும் கேக்கலே, சரி, உனக்கு இதுலதான் சந்தோஷம்னா அப்படியே கூப்டுக்கோனுவிட்டுட்டேன் .. " இருமினார். "அதுவாவது பரவாயில்லை, இப்போ என் மகனை குட்டாறு மவனேனுதான் கூப்புடுறானுங்கஅதுதான் வருத்தமா இருக்கு .. "

எனக்கும் வருத்தமாகத்தான் இருந்தது. என்ன சொல்வதென்று தெரியாமல் மெளனமாக இருந்தேன்.

அந்த மெளனத்தை எப்படி அர்த்தப்படுத்திக் கொண்டாரோ தெரியாது. "எழுது, குட்டாறுன்னே எழுது .. " என்றார்.

"இல்லை, வேணாம் தாத்தா .." என்றேன். குறுக்கில் தலையசைத்து, "நெஜமாவே உங்க நெஜப் பேரைத் தெரிஞ்சிக்கனும் நான் ..."

சுருக்க வரிகளோடிய முகத்தில் ஒரு புன்னகைக் கீற்று. கண்ணாடியைக் கழற்றி, ஈரம் கசிந்த கண்களைத் துடைத்தபடி, "அழகுசுந்தரம்" என்றார்.

"அ..ழ..கு..சு..ந்..த..ர..ம் .. " எழுதினேன்.இத்தனை காலம் அதற்காகவே ஏங்கியவர் போல வெகு கவனமாகக் காது கொடுத்துக்கேட்டுக் கொண்டார்.

கடைசி பேஷன்ட்டாக அவர் வெளியேறிய இரண்டாவது நிமிடத்தில்தான், அவரின் மூக்கு கண்ணாடி என் டேபிளிலேயேஇருப்பதைக் கவனித்தேன்.

அடடா.. மறந்து விட்டார் போலிருக்கிறது .. அவசரமாக வெளியே வந்து பார்த்தேன். கடைத் தெரு தாண்டி போய்க்கொண்டிருந்தார்.

"தாத்தா, அழகுசுந்தரம் தாத்தா .." கூப்பிட்டேன்.

அவரைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்த யார் யாரோ திரும்பிப் பார்த்தார்கள். அவர் மட்டும் தான் பாட்டுக்குப் போய்க்கொண்டிருந்தார்.

(எழுத்தாளர் இந்திய ராஜா - நாகப்பட்டனம் மாவட்டம் வாழ்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர். இந்திய ராஜாவுக்கு சென்னையில்தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் புரோகிராமர் பணி. முப்பது வயதைத் தாண்டாத இவர் இதுவரை 200க்கும் மேற்பட்டகவிதைகளையும், 75க்கும் மேல் சிறுகதைகளையும் தனது படைப்புப் பட்டறையில் இருந்து வெளிக் கொணர்ந்துள்ளார்.

நிஜப் பெயர் மறக்கடிக்கப்பட்டு வலுக் கட்டாயமாகப் பட்டப் பெயரால் அழைக்கப்படும் எண்ணற்ற மனிதர்களின் மனஉணர்வுகளும், வேதனைகளும் என்னவாக இருக்கும் என்ற கேள்வியில் விளைந்தது இக்கதை.)

நன்றி: கதாயுதங்கள்

தொகுப்பாசிரியர்: - பேராசிரியர் இராஜ முத்திருளாண்டி(akam_aruvukam@sancharnet.in)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X