• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வைரமுத்துவின் கவிதைப்பண்பு

By Staff
|

Vairamuthuகவிதைக்கலை என்பது நுண்கலைகளுள் கவின்கலை. கவிதைக்கலையைக் கல்லாக்கலை என்றும் கூறுவர். இசை, ஓவியம், சிற்பம்போன்ற பிற கலைகள் அனைத்துயிர்ளையும் தம்மில் சேர்த்து இன்புறுகின்றன. ஆனால் கவிதைக்கலையானது மனிதர்ளுக்கு மட்டுமேசொந்தமானது. மனிதனால் மட்டுமே அனுபவிப்பதற்குரியது. கவிதையின் இயல்பு பற்றி நன்னூல் ஆசிரியர்,

"பல்வகைத் தாதுவின் உயர்க்குடல் போற்பல

சொல்லார் பொருட்கிடனாக உணர்வினின்

வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்"

என்று குறிப்பிட்டுள்ளார். ஆங்கிலக் கவிஞரான வோர்ட்ஸ் ஓர்த் "ஆற்றல் மிக்க உணர்ச்சிகள் தாமாகப் பொங்கி வழிவதேகவிதை" (Spantaneous overflow of powerful feelings) என்றார்.

"கவிஞர் தம் உள்ளத்தில் தோன்றிய அரிய உண்மைகளை இன்ப வடிவமாகத் தெளிந்த மொழியில் வெளியிடுவதுகவிதை" என்பது கவிமணியின் கருத்தினால் புலப்படும். ஒரு கவிஞன் எழுதிய கவிதையை எண்ணும் போதும்,அதை நூல்களில் காணும்போதும் இரண்டு முக்கிய அம்சங்கள் புலப்படுகின்றன. ஒன்று அதன் வடிவம் மற்றதுஅதன் பொருள் வடிவம் என்பது செற்களால் அமைவது. கருத்தைத் தாங்கி நிற்பது. வடிவம் புறத்திலிருந்துகவிதையில் வந்து பொருந்தும் பண்பன்று. உணர்ச்சி அல்லது அனுபவம் கவிஞன் உள்ளத்தில் கவிதைஉருக்கொள்ளும்போது வடிவை நிச்சயிக்கின்றன. கவிதையின் பொருள், வடிவம் ஆகிய இரண்டிலும் பொருளேசிறப்புடையது. பொருளுக்கு ஏற்ற வடிவம் அமைவதே கவிதையின் சிறப்புக்கு காரணமாகும். அப்படியல்லாதுவடிவத்திற்கு முதன்மையிடம் அளிக்கபட்டால் பொருட்சிறப்புக் குன்றில் கவிதை பொலிவை இழக்கும்.கவிதையின் அத்தகைய சிறப்புக்கு உயிர்நிலையாகவுள்ள சில பண்புகளைக் காணலாம்.

கவிதையின் பண்புகள்

1. முதலாக, கற்பவர் உள்ளத்தை ஈர்க்கும் "மந்திரசக்தி" யைப் பெற்றிருப்பது கவிதையின் முக்கிய பண்பாகும்.கவிஞன் சொற்களைத் திறமையாக கையாளுவதன் மூலம் நம் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு கவிதையில்ஈடுபடுத்தி அக்கவிதையிலிருந்து வெளியிடும் உணர்ச்சிகளையும் அனுபவங்களையும் நம் மனத்தில் தீவிரமானஅழுத்தத்துடன் பதித்து விடுகிறான். ஓர் அனுபவத்தை நீண்ட வசனத்தில் கூறும்போது இந்த அழுத்தம்ஏற்படுவதில்லை.

உதாரணமாக .............

இதென்னடா இது ?

அந்தப் பாறை முகடுகளில்

தண்ணீரைத் துவைத்துக்

காயப்போட்டது யார்?

................

................

இந்த அருவியில் குளித்தால்

வாழ்க்கை வணக்கத்துக்குரியது

இந்த அருவியல் இறந்தால்

மரணம் கூட மரியாதைக்குரியது!

இக்கவிதை வரிகளைக் காணும்போது ஒரு அருவியினைப்பார்த்து மகிழ்ந்த மனிதனின் மனவுணர்வுகளைக்கூறுவதை அறியமுடிகிறது. பாறைகளின் முகடுகளில் தண்ணீர் வழிந்தோடும் காட்சியைக் காணும்போது தான்அனுபவித்த உணர்வினை, இன்பத்தைக் கவிதையின் மூலமாகக் கூறும் கவிஞரின் அனுபவத்தை உணரமுடிகிறது.மனதில் பதிந்த காட்சியை சாதாரண மனிதன் கூறுவதைவிட, அதை ஒரு கவிஞன் கவிதையின்வழிவெளிப்படுத்தும் போது கருத்தோடு காட்சியையும் உணரச் செய்யமுடியும். கவிதையைப் படிக்கும்போதுகவிஞனின் அனுபவக் கருத்தினைக் கொண்டே அதை தாமும் அனுபவிக்கத் தூண்டும் ஆர்வத்தினைக் கவிஞர்வைரமுத்துவின் கவிதைவரிகளில் காணமுடிகிறது. தனது அனுபவத்தை கற்பனையால் சித்தரித்து, அதன் மூலம்வாசகனின் உள்ளத்தைக் கவர்ந்து அருவியின் அற்புதமான தோற்றத்தை அதன் அழகின் உணாழுச்சியை,அழுத்தமாகப் பதிய வைக்கிறார். கவிதையில் வர்ணித்த நிகழ்ச்சிகள் ஒருபோதும் வாசகன் உள்ளத்தைவிட்டுஅகலாதவையாக இருக்கிறது. நினைக்கும் போதும் அந்தகவிதையை வாசிக்கும் போதெல்லாம் மீண்டும்அவ்வனுபவத்தை அடையச்செய்கிறது.

இக்கவிதையில் கவிஞர் இயற்கையழகைத் தான் கண்டு, உணர்ந்ததைக் கூறுகின்றார். அருவியின் அழகினைகவிதை வரிகளிலேயே அறிமுகம் செய்து தனது கற்பனையால் வர்ணிக்கிறார். இக்கவிதையில் அனுபவமேமுதன்மையாகத் தென்படுகிறது. ஒழுக்கமுறைகளோடு பேருண்மைகளோ, வாழ்க்கையோடு தொடர்புடைய பிறசெய்திகளோ எதுவும் அதில் கூறப்படவில்லை. அதன் மூலம் கலப்பற்ற ஒரு இன்ப அனுபவத்தைச் சிறிது நேரம்அனுபவிக்கமுடிகிறது. இதனைத் தூய கவிதை என அழைப்பர்.

சொற்கள் ஆற்றல் பெறுவதும், இன்பம் செய்வதும் ஒரு பொருளை உணர்த்தும்போதுதான் சொற்களின் பயன்பொருளை வெளிப்படுத்துவதே. ஆகவே பொருளில்லாது கவிதையை வெறும் ஓசையளவில் நோக்குவதுசிறப்பான உணர்வினைத் தராது. சாதாரணச் சொற்களும் கவிதையில் வரும்போது அவை நிற்கும் இடத்திற்கு ஏற்பஅழகையும் ஆற்றலையும் பெறுகின்றன. இத்தகைய பண்பினை வைரமுத்துவின் கவிதையில் காணமுடிகிறது.

2. இரண்டவதாக கவிதை சிறந்த இலட்சியங்களை நம் மனக் கண்முன் சித்தரிக்கின்ற பண்பினைக் கூறலாம். எந்தப்பொருளை எடுத்துக் கூறினாலும் அதன் மாசு மறுவைப் போக்கிப் புனிதத் தன்மையை ஏற்றி மக்கள் எல்லோரும்கடைப்பிடித்தொழுவதற்குரிய ஒரு குறிக்கோளாக வகுத்துக் காட்டுவதே அப்பண்பு. அனுபவங்களையும்கவிஞர்கள் அவ்வாறே இலட்சிய வடிவாகத் தீட்டி விடுகிறார்கள். இதன் அடிப்படையில் வைரமுத்து,

ஒருவனுக்கொருத்தி

உனக்கு வார்த்தை!

புறாவுக்கு வாழ்க்கை!

எந்தப் புறாவும்

தன் ஜோடியின்றி

பிறஜோடி தொடுவதில்லை

ஐந்தறிவு கொண்ட விலங்கினத்திற்கும், ஆறறிவஜள்ள மனிதனுக்கும் ணடையே ருே புதுமையான வேறுபாடுகளைஆனால்ழு சில புதிய செய்திகளைக்கொண்டமைக்கபட்டுள்ளது இக்கவிதை! சீ! மிருகமே! என்று மனிதன் தன்இனத்தாரையே திட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார். மனிதனைவிட விலங்கிடத்துள்ள சில அரிய சிறந்தகுணங்களைக் கூறிவரும் வழியில், புனிதமான ஒரு செயலைப் பாழ்படுத்தி வரும் மனித சமூகத்தினைச் சாடும்வரிகளையும் காண முடிகிறது. சட்டென்று புரியும் முறையிலும் அதே சமயம் சங்கோஜப்படவைக்காதபுனிதத்தோடும் இக்கருத்து வெளிப்பட்டிருக்கிறது. இக்கருத்தினை "இலட்சியம்" என்று கூறமுடியாது. எனினும்வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்படவேண்டிய முக்கியமான செயல் என்பதால் எதையும் லட்சியமெனும் பட்டியலில்இடம் பெறச் செய்வதில் தவறில்லை. "ஒருவனுக்கு ஒருத்தி" என்பதை ஒவ்வொரு மனிதனும் தனது இலட்சியமாகக்கொள்ள வேண்டும் என்பதே இக்கவிதை வரிகள் வலியுறுத்தும் செய்தியாகும்.

3. மூன்றாவது பண்பு கவிதை உணர்ச்சிகளையும் அனுபங்களையும் வெளியிடும் முறையில் அமைந்திருக்கிறது.கவிதையின் பெருமை அது எதைச் சொல்கிறது என்பதிலன்று எப்படிச் சொல்கிறது என்பதிலேயே உள்ளது.இப்பண்பினை அடிப்படையகக் கொண்டு அமைந்த வைரமுத்துவின் கவிதை வரிகளைக் விளக்குவதன் மூலம்இக்கவிதைப் பண்பு வைரமுத்துவினால் பயன்படுத்தப்பட்டுள்ளதை அறியமுடியும்.

சாபங்கள் பெற்ற குயில் - இன்று

சந்திக்க வருகிறது.

ஞாபக வெளிகளிலே - இந்த

நரைநதி நகர்கிறது

அந்த இளந்தென்னை மரத்தின்

அடியில் இழந்தென்னை(த்)

தந்து தவித்திருந்தேன் -இன்று

தனியே நினைத்தழுதேன்

இருதயம் கண்களிலே - இன்று

ஏறித் துடிக்குதடி

இருவிழி நீர் உதிக்கும் - அதற்கு

ரத்த அடர்த்தியடி

... ... ... ... ... ....

கவலை என் கண்களிலே - வந்து

கண்ணீர் தெளிக்குதடா

அவளை நெஞ்சினுள்ளே - புதைத்து

அறுபது வருஷமடா

மேற்காணும் கஜிதைவர்கள் காதலை வெளிப்படுத்தும் கருத்துக்களைக் கொண்டவை

இளைய மனதின் காதலை மையப்படுத்திய கருத்துக்களையே வெளிப்படுத்தி வரும் கவிதைகளைக் கொண்டுஇயங்கி வரும் கவிதைச் சூழலில், பல காலங்கள் கழிந்த பின்னர் கிராமத்துக்குத் திரும்பி வந்த கிழவன், ஓடைக்கரைவழியே தன் பழைய காதலியின் புதைகுழியைத் தேடிப் போகிறான். அத்தேடலின் வழியே அவன் மனம் தவிக்கும்தவிப்புகளை, ஏக்கங்களை கூறும் முறையினாலேயே மனதில் இக்கவிதை நிற்கிறது. தான் இழந்த, இறந்தகாதலியைத் தேடித் துன்புறும் மனதினை விளக்கும்படியான வரிகள் காதலின் மனவலியைக் குறிப்பிடுகிறது.காலங்கள் அழிந்தாலும், கழிந்தாலும் காதலின் சுவடுகளை அழிக்க முடியாது எனும் உண்மையை உள்ளடக்கிஇக்கவிதை காதல் உணர்ச்சிகளையும், அனுவங்களையும் வெளியிடும் முறையில் அமைந்துள்ளது. இக்கவிதையில்கவிதைப் பண்புகளில் மூன்றாவதாகக் குறிப்பிடும் பண்பினைக் கொண்டுள்ளதை அறிய முடிகிறது.

4. நான்காவது பண்பகாகக் குறிப்பிடப்படுவது கற்பனையாகும். அது கவிதைக்கு உயிர்நிலை போன்றது. கற்பனைத்திறனில்லாதவர் கவிதை இயற்றலும், கவிஞராதலும் இயலாது. சாதாரணமான கருத்துக்களையும் உணர்ச்சிமிக்கஅனுபவங்களாக உருமாற்றுவது இக்கற்பனையாகும். எல்லா மனிதர்களிடமும் இக்கற்பனைப் பண்பு ஓரளவிற்குஅமைந்துள்ளது. உதாரணமாக ஒரு பெரிய கூட்டத்தைப் பார்த்தால் "அங்கே ஊசி நுழையக் கூட இடமில்லை"என்று குறிப்பிடுகிறோம். விருந்தில் உண்ட உணவைக் குறிப்பிடுவதற்கு "தேவாமிர்தம் போல் இருந்தது" என்றுபலமுறை அமுதத்தை உண்டவர்கள் போலவும் பேசிவிடுகிறோம். இவையே நமது உள்ளம் இயற்கையிலேயேகற்பனை ஆற்றல் வாய்ந்ததென்பதை உணர்த்துகின்றன.

யாரங்கே?

ராத்திரி வரப்போகும்

ராச குமாரிக்கு

மேற்கு அம்மியிலே

மஞ்சள் அரைப்பது யார்?

....................

நீலத் திரையில்

யாரோ

வரையக் கொண்டுவந்த

வர்ணக் கிண்ணம்

சூரியனில் தடுக்கிச்

சிந்திவிட்டது.

ஆனால்......

சிந்தியதெல்லாம்

சித்திரமானது

இரவைப் பற்றி கவிதைகளில் பலவிதமான கற்பனைகளைக் கவிஞர்கள் பாடியுள்ளதைக் இலக்கியங்களில்காணமுடிகிறது. ஆனால் வைரமுத்துவின் ஒவ்வொரு இலக்கிய உத்திகளிலும் அணுகுமுறைகளிலும் புதியபரிணாமத்தைக் காணமுடியும். சொல்லும்பொருள், கருத்து பழையதாக இருந்தாலும் அதைச் சொல்லும்முறையிலும், சொல்லும் விதத்திலும் புதுமையைப் புகுத்துவதும் இவரது தனித்திறமைகளாகக் கொள்ளலாம்.

இரவு வருவதற்கு முன்னறிவிப்பாக வானில் தோன்றும் நிறமாற்றங்களை, மேற்கில் சூரியன் செல்ல எத்தனிக்கும்நேரத்தில் தோன்றும் வர்ண மாறுபாடுகளை தனது கற்பனைகலந்து நம் கண்முன் நிறுத்துகிறது. "அந்தி" என்றஇக்கவிதைவரிகள் இரவினை வரவேற்கும் விழாவென்றும், இரவிற்கு வானின் அலங்காரம் என்றும் கூறுகிறார்.

வானத்தின் வர்ணமாநாடு

அந்தி

பூமியின் பொன்முலாம்

அந்தி

உழைத்தவன் கரமா

இந்த அந்தி?

முத்தமிட்ட கன்னமா

இந்த அந்தி?

................

வானம் துப்பிய

தாம்பூலமா

இந்த அந்தி?

பழுத்த பகலா

இந்த அந்தி?

சூரியனின்

ரத்ததானமா

இந்த அந்தி?

.............

கதிரவன் மரணம் கூட

கண்ணுக்கு அழகுதான்

செத்தாலும் மேன்மக்கள்

மேன்மக்களளே

ஒவ்வோர் அந்தியும்

ஒரு சாயங்ாலக் கவிதை

என்றும் இரவினைத் தன் கற்பனை கலந்து வர்ணித்துள்ளார். கற்பனையாயினும் நில எதார்த்தர்ங்களோடு பொய்மைகலவாத புதுமையோடு கவிதை அமைந்துள்ளது.

கற்பனை என்பது உலகியலோடு ஒத்து வரும்போதுதான் மிகுதியான இன்பத்தை நமக்கு அளிக்கிறது. உலகநடப்போடு ஒத்துவராத அதிசயக் கற்பனையோடமையும் கவிதைகள் அல்லது அதிசயக் கற்பனைகள் அத்தனைசிறப்புடையவையல்ல என்பது அறிஞர்களின் கருத்தாகும். இக்கருத்து வரம்புகளை மீறாது மனதில் பதியும்,மயக்கும் கற்பனையைப் புகுத்தி கவிதை சிறப்புற அமைந்துள்ளது.

5. கவிதையின் பொருட்சிறப்பே ஐந்தாவது பண்பாகக் கூறப்படுகிறது. அது கற்பனையாலும் பிறவாறும் பொருளைவெளியிடுகிற முறை ஒரு காரணமாக இருந்தாலும், அப்பொருளின் தனித்துவச் சிறப்பும் மிகமுக்கியமானதாகும்.சுவை நிரம்பிய நிகழ்ச்சிகளையும், அரிய கருத்துக்களையும் வெளியிடும்போது கவிதையின் சிறப்பு ஓங்குகிறது.கம்பர் தம் கவிப்புலமையை வெளிப்படுத்துவதற்கு இராமனது வரலாற்றைத் தேர்ந்து எடுத்துக் கொண்டதும்பொருளின் சிறப்புப்பற்றியேயாகும்.

நீண்டு கிடக்கும் வீதிகளும் - வான்

நிமிர்ந்து முட்டும் கோபுரமும்

ஆண்ட பரம்பரைச் சின்னங்களும் - தமிழ்

அழுந்தப் பதிந்த சுவடுகளும்

காணக் கிடைக்கும் பழமதுரை - தன்

கட்டுக் கோப்பால் இளமதுரை

இவ்வரிகளில் மதுரை பற்றிய வரலாற்றுச் செய்திகளும், அதன் வர்ணனைகளும் பொருந்தி வருமாறும்கவிதைநயம் ததும்ப கவிதை அமைந்துள்ளதை அறியமுடிகிறது. தமிழ் சமூகம் தோன்றி வளர்ந்த இடத்தினை,தமிழ் இலக்கிய வரலாற்றில் மறக்கமுடியாத இடமான மதுரையை விளக்குவதே இக்கவிதையின்பொருட்சிறப்பாகும்.

6. ஆறாவது பண்பாக "கவிதைத் தெளிவு " கூறப்படுகிறது. கவிஞன் தான் வெளியிட விரும்பும் கருத்து, உணர்ச்சி,அனுபவங்களைத் தன் உள்ளத்தில் தோன்றியவாறே அவற்றின் இயல்புகள் யாவும் தெளிவாகப் புலப்படும்படிகவிதையில் அமைப்பதே இப்பண்பு. கவிஞன் வறுமை, செல்வம் முதலிய வாழ்வின் எல்லா நிலைகளையும்அவ்வாறே வெளிப்படுத்துகின்றான்.

" கோணிச் சாக்கோட

குடித்தனம் நான் நடத்தையில

லோகநாதன் மகராசன்

லோன் வாங்கித் தரேன்னார்

.....................

கோட்ட கட்ட லோன் வாங்கிக்

குடிசைகட்டி நிக்கிறனே!

ஆனை வாங்க லோன் வாங்கி

ஆடு வாங்கி மேய்க்கிறேனே!

ஆட்டுக்குப் பட்டகடன்

அடைபடவே ஆடிருக்கு!

லஞ்சத்தில் பட்டகடன்

நான் கட்டத் தோதிருக்கா?

என்று ஒரு கிராமத்து மனிதனின் வறுமையை, வறுமையின் மிகுதியை வர்ணிக்கிறார். இதில் வறுமையின் நிலை,மிகத் தெளிவாகப் புலப்படுகிறது. இதைப் போன்ற காதல், வீரம், செல்வம் என அனைத்துணர்வுகளையும் தெளிவுறவிளக்கும் கவிதைகள் தமிழ்க்கவிதை இலக்கியத்திலும், வைரமுத்துவின் படைப்புகளிலும் உள்ளன. கவிதைவரியில் உள்ள தெளிவைக் கொண்டு வைரமுத்துவின் கவிதைகளில் "கவிதைத்தெளிவு" என்ற பண்பு சிறப்புற்றுவிளங்குவதை அறியமுடிகிறது.

7. கவிதையின் இன்பம் விளைவிக்கும் பண்பு ஏழாவதாகும். இது கவிதையின் தலையாய பண்பாகும். கவிதைநுண்கலைகளுள் ஒன்றாக அடங்குவதும், இன்பம் செய்யும் பண்பும் பற்றியேயாகும். கவிதையின் இன்புறுத்தும்ஆற்றல் ஏதேனும் ஒரு பண்பில் மட்டும் அமைவதில்லை. அறுவகைச் சுவைகளும் அதனதன் அளவிற்கலந்துசமைக்கப்படும் உணவு நாவிற்கு இன்பத்தை அளிப்பதுபோன்று முன் விவரித்த பலவகைப் பண்புகளும் அமைந்துவரும் கவிதை கற்பவர்களுக்கு இன்பத்தை அளிக்கிறது. நகை, அழுகை முதலிய ஒன்பது வகைச் சுவைகளும்கவிதையின்பம் தோன்றுவதற்குக் காரணமாகின்றன. தனியொரு கவிதையில் பெரும்பாலும் ஓர் உணர்ச்சி அல்லதுஓர் அனுபவமே கூறப்படும். அவை அனைத்தும் பலவாகத் தொடர்ந்து ஒரு காவியமாகப் படைக்கப்படும்போது,அப்படைப்பு இடையறாத இன்ப ஊற்றைச் சுரக்கிறது.

8. எட்டாவதாக கவிஞனின் தனிப்பட்ட பண்பு அவன் கவிதைகளில் புலப்படுதல். கவிஞன் தன் உள்ளத்தையும்உணர்ச்சியையுமே தன் கவிதைகளில் வெளிப்படுத்துவதாகும்.

பல் முளைக்கையில்

ஈறு வலிக்கும்

மாற்றம் முளைக்கையில்

வாழ்க்கை வலிக்கும்

வலியெடுத்தால் வழிபிறக்கும்

வழிபிறந்தும் வலியிருக்கும் !

...............

சிரி

நம்பிக்கை ஊன்றி நட!

ஆனால் மனிதா!

அவசரப்படாதே

மண்ணின் பொறுமைதான்

மலை!

கரியின் பொருமைதான்

வைரம்!

தாயின் பொறுமைதான்

நீ !

என்று நம்பிக்கையை வலியுறுத்தும் கவிதையின் மூலம் கவிஞர் வைரமுத்துவின் உள்ளத்தின் இயல்பினைஅறியமுடிகிறது. கவிஞன் தான் சித்தரிக்கும் பாத்திரங்களில் புகுந்து தனது கருத்துக்களையும், அனுபவங்களையும்அவற்றின் மூலம் வெளிப்படுத்துகிறான். கம்பன் படைத்த அகலிகை, வால்மீகியின் படைப்பிலிருந்து வேறுபட்டுத்தோன்றுவதற்குக் காரணம் இதுவேயாகும். அதுபோன்றே மனிதனின் நம்பிக்கை எனும் கருத்தைக் கூறுவதில்வைரமுத்துவின் கவிதையிலும் தனித்துவத்தைக் காணமுடிகிறது.

முடிவு

கவிதையின் பண்புகள் பலவாகும். கவிஞனின் புலமைக்கும் கற்பனைக்கும் கற்பனைத் திறத்திற்கும் ஏற்ப அவைபலவாக வெளித்தோன்றிக் கற்பவர்க்கு இன்பத்தையும், மகிழ்வினையும் விளைவிக்கின்றன. ஒரு பாடலிலேயே பலபண்புகள் அமைந்திருப்பதுமுண்டு. அவற்றைத் தனித்தனியாகச் சொற்களில் விளக்குதல் என்பது அரிது. நுண்உணர்வால் உணர்ந்து அவற்றை அனுபவிக்க வேண்டும். கவிதை தன் பண்புகளுக்குள் மறைந்திருக்கிறது. பண்புகள்கவிதை எங்கும் பரந்துள்ளன.

மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்துள் மறைந்தது மாமத யானை

என்ற கருத்து கவிதையின் பண்புகளைக் குறிப்பிடும் கருத்துக்களுக்கும் பொருந்துவதாகும்.

- மகித்ரா(chitrarathinasamy@yahoo.com)

இவரது முந்தைய படைப்பு:

1. கையில் துப்பாக்கியுடன் கலைமகள்

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: feedback@thatstamil.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X