• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பா.ஜ.க.வைக் கைப்பற்றத் தமிழ்நாட்டுப் பார்ப்பனர் முயற்சி!

By Staff
|

சங்கப்பரிவார அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., விசுவ இந்து பரிசத், பஜ்ரங்தள் போன்றவை ஒரே குரலில் பேசுபவை, ஒற்றுமையாக இயங்குபவைஎன இதுவரை கருதப்பட்டன. ஆனால் அது பழங்கதையாகிவிட்டது.

கடந்த மார்ச் 13-15 நாட்களில் கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உயர்மட்டக் குழுவான அகில பாரதிய பிரதிநிதி சபா கூட்டம்நடை பெற்றது. பா.ஜ.க. தலைவர் அத்வானியும் அதில் கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில் மிக முக்கியமான முடிவு எடுக்கப்பட்டது.""தேர்தல்களில் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதைக் குறித்து ஆர்.எஸ். எஸ். தலைமைஎத்தகைய அறிக்கையும் இனி அளிக்காது. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் உள்ள மாநில, மாவட்ட நிருவாகிகள் தேர்தல்களில் பங்கெடுக்க மாட்டார்கள்.

அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்த சுயம் சேவகர்கள் யாருக்கு ஆதரவு தருவது என்பது குறித்து முடிவு எடுப்பார்கள் என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டதுகண்டு அத்வானியும் மற்றும் சில பா.ஜ.க. தலைவர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தங்களுக்கு ஆர்.எஸ்.எஸ். விடுத்துள்ள எச்சரிக்கையாக இதைக்கருதினர்.

கடந்த காலத்திலும் பலமுறை இத்தகைய நிலையை ஆர்.எஸ்.எஸ். எடுத்துள்ளது. 1971ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக இந்தியப்படையை அனுப்பி பாகிஸ்தானை இரு பிரிவாக உடைத்த இந்திராவிற்கு ஆர்.எஸ்.எஸ். பேராதரவு அளித்தது.

1975ஆம் ஆண்டு இந்திராவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான இயக்கத்தை ஜெயப்பிரகாச நாராயண் தொடங்கிய போது அவருக்கு ஆர்.எஸ்.எஸ்.ஆதரவளித்தது.1977ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன் ஜனதாக் கட்சியில் ஜனசங்கம் ஐக்கியமாக சம்மதம் தந்தது.

ஆர்.எஸ்.எஸ்., தேர்தலிலும் ஜனதாவை ஆதரித்தது.1984ஆம் ஆண்டு இந்திரா படுகொலை செய்யப்பட்ட போது சீக்கியர்களுக்கு எதிராக இந்துஉணர்வுகளைத் தூண்டிய ஆர்.எஸ்.எஸ். இராஜீவிற்கு ஆதரவளித்தது.

அத்தேர்தலில் வாஜ்பாய் உட்பட பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்கள் தோற்கடிக்கப் பட்டனர். இரண்டே இடங்களில் மட்டும் பா.ஜ.க. வெற்றிபெற்றது.1989ஆம் ஆண்டு வி.பி.சிங் பிரதமராக வருவதற்கு ஆர்.எஸ்.எஸ். ஆதரவளித்தது. 1991-92ஆம் ஆண்டில் பி.வி.நரசிம்மராவ் பிரதமராகஇருந்தபோது அவருக்கு ஆதரவளித்தது.

Vajpayee with Narendra Modiஇப்படித் தேர்தலுக்குத் தேர்தல் தனது நிலையை ஆர்.எஸ்.எஸ். மாற்றிக் கொண்டே வந்துள்ளது. பல தடவை ஆர்.எஸ்.எஸ். தலைமையினால் பழிவாங்கப்பட்டாலும் அதை எதிர்க்கும் துணிவு பா.ஜ.க. தலைமைக்கு ஒருபோதும் வந்ததில்லை.

ஆனால் இதுவரை இல்லாதவகையில் பா.ஜ.க.வின் உயர்மட்டத் தலைவர்களான வாஜ்பாய், அத்வானி ஆகியோர் பதவி விலக வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்.தலைவர் சுதர்சன் பகிரங்கமாக அறிவித்த போது அதை எதிர்க்க யாருக்கும் துணிவில்லை.

6 ஆண்டு காலம் காங்கிரஸ் அல்லாத பிரதமராக ஆட்சி நடத்திய வாஜ்பாய் வெகுண்டெழுந்து சுதர்சனுக்குப் பதில் கூற முன் வரவில்லை. அவ்வாறே நவீனசர்தார் பட்டேல் என தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக்கொள்ளும் அத்வானியும் பதில் கூறாமல் பதுங்கி விட்டார்.

ஆர்.எஸ்.எஸ். நுகத் தடியில் பிணைக்கப் பட்ட மாடுகளாக இருக்கும் அவர்கள் நுகத் தடியைத் தூக்கி எறியத் துணியவில்லை. பிரதமராகவும்,துணைப்பிரதமராகவும் உயர் அதிகாரமும், செல்வாக்கும் படைத்த வர்களாக இருந்தபோதே ஆர்.எஸ்.எஸ். உடன் மோத அவர்கள் துணியவில்லை.

குசராத் மாநிலத்தில் மிக மோசமான கலவரங்களுக்குக் காரணமாக முதலமைச்சர் மோடியைப் பதவியிலிருந்து விலக்கும் துணிவு வாஜ்பாய்க்கு இல்லை.காரணம் மோடிக்கு அரணாக ஆர்.எஸ்.எஸ். நின்றது. ஆர்.எஸ்.எஸ். ஆசி அத்வானிக்கு முழுமையாக உள்ளது போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டிருந்தது.

மீண்டும் மீண்டும் பா.ஜ.க.விற்கு அவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், எதிர்க்கட்சித் தலைவராகவும் அவரே நீடிப்பதும் இந்த எண்ணத்தை மேலும்வலுப்படுத்தின. ஆனால் சுதர்சனின் அறிவிப்பு இந்த மாயத் தோற்றத்தைத் தகர்த்துவிட்டது.

அத்வானி மீது சங்கப்பரிவாரம் கோபம் கொள்வதற்குப் பல காரணங்கள் உண்டு. துணைப்பிரதமர் பதவியில் அத்வானி இருந்த போது இராமர் கோயில்கட்டும் விஷயத்தில் எதுவும் செய்யவில்லை.

நீதிமன்றத்தடை, கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு, முஸ்லீம்கள் எதிர்ப்பு ஆகியவற்றை அத்வானி காரணமாகக் காட்டினாலும் அதை சங்கப்பரிவாரம்ஏற்கவில்லை. அயோத்திக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்குமாறு சுதர்சன் கூறிய யோசனையைக் கூட அத்வானிநிறைவேற்றத் தவறி விட்டார் எனக் குற்றம் சாட்டப்படுகிறது.

கட்சியை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டின் கீழ்கொண்டுவர அத்வானி முயலுகிறார். கோவிந்தாச்சாரியா, உமா பாரதி போன்றவர்கள்வெளியேறும்படி செய்தார். ஆனால் ஆர்.எஸ்.எஸ். தலைமை இதனை விரும்பவில்லை.

பா.ஜ.க.வில் உள்ள பலவேறு மட்டங்களில் உள்ள சுயம் சேவகர்கள் தனது கட்டளையை விட ஆர்.எஸ்.எஸ். கட்டளையையே மதிப்பார்கள் என்பதால் சிறிதுசிறிதாக அவர்களை அகற்றும் முயற்சியில் அத்வானி ஈடுபட்டுள்ளார்.

வாஜ்பாய்க்காவது இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள உயர் சாதியினரின் ஆதரவு உள்ளது. ஆனால் அத்வானிக்கு எந்த மாநிலத்திலும், எந்தப் பிரிவுமக்களின் ஆதரவும் கிடையாது.

Advaniபாகிஸ்தானில் உள்ள சிந்து மாநிலத்தில் இருந்து அகதியாக வந்தவர் அவர். அவரைப் போல அகதிகளாக ஓடி வந்த சிந்தி மக்களின் ஆதரவைத் தவிர வேறுஆதரவு அவருக்கு இல்லை.

6 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் இந்தியாவிற்குள் ஊடுருவிய வங்க முஸ்லீம்களை வெளியேற்ற எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுகுறித்தும், உள்நாட்டு இந்துப் பெருமுதலாளிகள் இருக்கும் போது அன்னிய பெருமுதலாளிகளுக்கு பா.ஜ.க. ஆட்சி கதவைத் திறந்துவிட்டது குறித்தும்சங்கப்பரிவாரம் கோபமடைந்துள்ளது.

பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸ். சும் ஒன்றுக்கு மற்றொன்று உதவியாக, ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை என்ற நிலையில் இருந்த காலம்போய்விட்டது. பா.ஜ.க.வில் பதவிப் போட்டிகளும், குழுச் சண்டைகளும் பெருகி வருவதைப் போல ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலும் பிளவுகள் உருவாகியுள்ளன.

அதன் எதிரொலி பா.ஜ.க.வில் கேட்கத் தொடங்கி விட்டது.ஆர்.எஸ்.எஸ். செயலாளராக சேஷாத்ரி, சுதேசி ஜாக்ரன் மஞ்ச் தலைவரான எஸ்.குருமூர்த்தி,பா.ஜ.க பொதுச் செயலாளராக இருந்த கோவிந்தாச்சாரியா ஆகியோர் கூட்டு சேர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் என்பதும், காஞ்சி ஜெயேந்திரருக்கு மிக நெருக்கமானவர்கள் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.இவர்களுக்கு ஆதரவாக உமாபாரதி போன்றவர்கள் திரண்டுள்ளனர்.

பா.ஜ.க. தலைவர் பதவியில் கோவிந்தாச்சாரியாவை உட்கார வைக்க வேண்டும் என்பது இவர்கள் திட்டம். ஏற்கெனவே அத்வானி மீது கோபமாகஇருக்கும் சுதர்சனைப் பயன்படுத்தி காயை நகர்த்தத் தொடங்கி உள்ளனர்.

""வாஜ்பாய் வெறும் முகமூடி என முன்பு கோவிந்தாச்சாரியா பகிரங்கமாகக் கூறினார். ஆனால் இப்போது அந்த முகமூடியின் பயன் தீர்ந்துவிட்டது.இந்துத்வாவை மறைத்து மக்களை ஏமாற்றி ஆட்சியைக் கைப்பற்ற அந்த முகமூடி தேவைப்பட்டது.

இனி அதனால் பயனில்லை. தீவிர இந்துத்வா பேசி மக்களைக் கவர வேண்டிய சூழ்நிலை பிறந்து விட்டதாக ஆர்.எஸ்.எஸ். நம்புகிறது. மோதல்கொள்கையைக் கையாளுவதன் மூலம் மட்டும் இனி ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என அது கருதுகிறது.

முஸ்லீம் லீக், கிறித்துவர்களுக்கு எதிரான இந்து வெறியை முன்னிறுத்துவதன் மூலமே பெரும்பான்மையான இந்துக்களின் ஆதரவைப் பெற முடியும் என சங்கப்பரிவாரம் நம்புகிறது. அந்த நம்பிக்கையுடன் முதலடியை எடுத்து வைத்துள்ளது.

தனது நிர்பந்தத்திற்கு பணிந்து அத்வானி பதவி விலகி ஆர்.எஸ்.எஸ். குறிப்பிடும் ஒருவரை தலைவராக்கச் சம்மதிக்கா விட்டால் புதிய - தீவிர இந்துத்வாகட்சி ஒன்றை கோவிந்தாச்சாரியா தலைமையில் அமைக்க ஆர்.எஸ்.எஸ். இரகசியத் திட்டம் தீட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.

Vengaiya Naidu with Narendra Modiஆட்டிப்படைத்த சூத்ரதாரி

1998 ஆம் ஆண்டு பிரதமராக வாஜ்பாய் பதவியேற்பதற்கு முன்னாலேயே அவரை ஆர்.எஸ்.எஸ். தலைமை ஆட்டிப் படைக்கத் தொடங்கிவிட்டது.

அமைச்சரவைப் பட்டியலை பிரதமரான வாஜ்பாய் தயாரித்துக் கொண்டிருந்த போது ஆர்.எஸ்.எஸ். துணைச் செயலாளராக இருந்த கே.எஸ்.சுதர்சன், நள்ளிரவில்வாஜ்பாய் வீட்டில் புகுந்து நிதியமைச்சராக ஜஸ்வந்த்சிங்கை நியமிக்கக்கூடாது என நிர்பந்தித்தார்.

அதைப் போல மனித வளத்துறை அமைச்சராக முரளி மனோகர் ஜோஷியை நியமிக்க வற்புறுத்தினார். இவ்வாறே பல முக்கிய துறைகள் ஆர்.எஸ்.எஸ்.கூறியபடி ஒதுக்கப் பட்டன. எல்லாவற்றுக்கும் வாஜ்பாய் பணிந்தார்.

வாஜ்பாய் அரசின் செயற்பாட்டைக் கண்காணிக்க ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைமை அலுவலகம் டில்லிக்கு மாற்றப்பட்டது. முக்கிய ஆர்.எஸ்.எஸ்.தலைவர்கள் இங்கு தங்கி அரசுக்கு ஆணைகள் பிறப்பித்தார்கள்.

பா.ஜ.க. ஆட்சி அமைந்திருந்த மாநிலங்களிலும் அமைச்சரவைக்கு மேலான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அமைச்சர்களுக்கு மட்டுமல்லதலைமைச்செயலாளர், காவல்துறைத் தலைவர் போன்ற உயர் அதிகாரிகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். ஆணைகளை நேரடியாகப் பிறப்பித்தது.

அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்ட அமைப்பாக ஆர்.எஸ்.எஸ். இயங்கி மத்திய-மாநில அரசுகளை ஆட்டிப் படைத்தது. அது ஆட்டுவித்தபடி யெல்லாம்வாஜ்பாய், அத்வானி ஆகியோர் ஆடத் தயங்கவில்லை.ஆனாலும் பதவி போன பின்பு அவர்களைத் தூக்கியெறிய ஆர்.எஸ்.எஸ். தயங்கவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X