• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சங்கப் பெண் கவிகளின் அகம்

By Staff
|

தமிழின் தொன்மைக்கும், பெருமைக்கும் சான்றாய் நிற்பன சங்கப் பாடல்கள் ஆகும். ஆடவர், பெண்டிர் என்ற பேதமின்றி இருபாலாரும் பாடியுள்ளனர். அரசன் முதல் குறமகள் வரை பலரும், பல்வேறு தொழில் செய்தோரும் பாடியுள்ளனர்.

வேதகாலத்துப் பெண்பாற் புலவர்களைப் போன்றே சங்க காலத்துப் பெண்பாற் புலவர்களும் கல்வியில் சிறந்திருந்தனர்.எனவேதான் ஒளவையார் பெரும் புகழ் பெற்ற புலவராக இருக்க முடிந்திருக்கிறது.

ஆண்பாற் புலவர்களை நோக்குகையில் பெண்பாற் புலவர்கள் எண்ணிக்கையில் குறைவானவர்களாகவே இருக்கின்றனர். சங்ககாலத்துப் பெண்பாற் புலவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தளவில் அறிஞர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன.பெரும் பேரா. உ.வே.சா அவர்கள், சங்கப் பெண்பாற் புலவர்கள் கிட்டத்தட்ட ஐம்பது பேர் என்றும், மற்ற புலவர்களின்சொற்களுக்கு எவ்வளவு சிறப்பு உண்டோ, அவ்வளவு சிறப்பு இவர்களுடைய செய்யுட்களுக்கும் உண்டு எனக்குறிப்பிட்டுள்ளார்.

பேரா. ஒளவை. நடராஜன் அவர்களோ, இவர்களின் எண்ணிக்கை 41 என்று குறிப்பிட்டுள்ளார். பேரா. ந.சஞ்சீவி அவர்கள் தமது,சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணையில் 36 பெண் பாற் புலவர்களைக் குறிப்பிட்டுள்ளார். ஒளவையாரைத் தவிர ஏனையோர்அகப் பாடல்களையே அதிகம் எழுதியுள்ளனர்.

சங்க காலத்தில், பெண்களால் எழுதப்பட்ட இப்பாடல்களிலிருந்து அவர்களின் காதல், வீரம், தனிமைத் துயர், கைம்மைநோண்புக் கொடுமை, பிற புலவர்களைப் புகழும் பெருந்தன்மை, வரலாற்றறிவில் சிறந்திருந்தமை, அவர்களின் சுயமரியாதை,காதலை வெளியிடுவதில் அவர்களுக்கிருந்த தயக்கம், பரத்தமை, வெறுப்பு போன்ற பல்வேறு தகவல்களை அறிய முடிகிறது.

தாய்வழிச் சமூகத்தின் எச்சங்களையும், தந்தை வழிச் சமூகத்தின் பல்வேறு கட்டுப்பாடுகளையும் இப்பாக்களின் வழி அறியமுடிகிறது. ஆண் - பெண் பிரிவினையில் ஆண் எப்போதும் உயர்ந்தவனாகவே காட்டப்படுவதைக் காண முடிகிறது.பொருளீட்டுவது ஆண்களுக்கு மட்டுமே உரிய ஒன்றாகக் காட்டப்பட்டுள்ளது.

தொல்காப்பியர் காலத்திலேயே பெருமையும், உரனும் ஆடவர்க்கும்; அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு பெண்களுக்கும்உரியதாகச் சொல்லப்பட்டுள்ளது. மடலேறுதல் என்னும் காதலை பகிரங்கப்படுத்தும் உரிமை ஆண்களுக்கு மட்டுமேஉரியதாக இருப்பதைக் காண முடியும்.

பாடாண்திணையில், பாடப்படும் ஆண்மகனின் கொடை, வீரம் முதலியவற்றை ஆண்களுக்காக மட்டுமே பாட முடியும்.கைக்கிளை என்பது ஆடவர்க்கு மட்டுமே உண்டு.

தன்னுறு வேட்கை கிழவன் முன் கிளத்தல்

எண்ணுங்கால் கிழத்திக்கு இல்லை

என்பது தொல்காப்பியத்தில் வரும் களவியல் சூத்திரமாகும்.

கைக்கிளை என்னும் குறியீடு இரு பாலார்க்கும் கொள்ளத்தக்க பொது நிலையில்தான் அமைந்துள்ளது தெளிவு என்ற போதிலும்,ஆண்பாற் படுத்திக் கூறுவதே, இளைஞனின் காதலை எடுத்துக் கூறுவதே இலக்கண மரபாகும் என்பார் நாவலர் சோமசுந்தரபாரதியார்.

மேற்கண்ட களவியல் சூத்திரத்தில் பெருமிதற்குரிய நான்கனுள், முதலாவதாக வைக்கப்பட்டுள்ள கல்வியும் ஆண் மக்களுக்குரியஒன்றாகக் கூறப்பட்டுள்ளதைக் காணலாம். இருப்பினும் ஒரு சில பெண்கள் கல்வி கற்றதோடு கவியாகும் ஆற்றல்மிக்கவர்களாகவும் விளங்கினர். தந்தை வழிச் சமூகத்தின் கட்டுப்பாடுகள் இறுக்கமடையாத சூழலில் பெண்கள் கல்வி கற்கும்சூழல் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

உலகப் பெண்பாற் புலவர்களையெல்லாம் ஆய்வு செய்த பெருமைக்குரியவரான பெ.சு.மணி அவர்கள், கல்வி கற்பதில் ஆடவர்,பெண்டிர், இரு பாலாருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட்டது. கல்வி கற்கும் முறையில் வேறுபாடு நிகழ்ந்தது. போர்க்கலை,ஆட்சியியல், பொருளீட்டுதல் முதலான துறைகளில் ஆடவர்களுக்கும், இல்லறம் பேணும் கல்வியோடு, நுண்கலைகளும் பயின்றுபெரும் புலவர்களாகவும் விளங்க பெண் கல்வியும் அமைந்திருந்தன என்று கூறும் கருத்து ஓரளவிற்குப் பொருத்தமாக உள்ளதுஎனலாம். இப்படி இல்லறம் பேணும் கல்வி கற்ற பெண்டிர் பிற்காலத்தில் தமது சொந்த முயற்சியால் கவி பாடும் அளவிற்கு தம்மைவளர்த்துக் கொண்டிருக்கக் கூடும் என்று தோன்றுகிறது.

தமிழின் மகுடமென விளங்கிய பேரா. வ.சுப. மாணிக்கனார், தமது தமிழ்க் காதல் என்னும் நூலில், சங்க காலத்தில் ஆண் - பெண்சமத்துவம் நிலவியது எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவரது கருத்து, பண்டைத் தமிழ்ச் சமுதாய அளவில் நோக்கின் பெண், கற்கும் உரிமையும், கவிபாடும் உரிமையும், காதல்உரிமையும், காதற்களவு செய்யும் உரிமையும், காதலனை இடித்துரைக்கும் உரிமையும், இல்லற தொழிலுரிமையும்,பெருமையும், புகழும் எல்லாம் ஆடவர்க்கு நிகராகப் பெற்றிருந்தனர் என்பது நெற்றித் திலகம்.

சமுதாயத்தின் நாகரீகத்தை அதன் மொழிச் சொற்களில் கண்டு கொள்ளலாம். மொழி, நாகரீகத்தை வஞ்சிக்காது.தலைவன்-தலைவி, காதலன்-காதலி, கிழவன்-கிழத்தி என்னும் பால் நகர்ச் சொற்கள், தமிழ்ச் சமுதாய மொழியில் உள்ளன.பிறப்பே குடிமை, ஆண்மை ஆண்டு என இரு பாலார்க்கும் ஒப்பினது வகைகளைத் தொல்காப்பியர் ஏற்றத் தாழ்வின்றிச் சுட்டுவர்என்பதாகும்.

வ.சுப.மாணிக்கனார் குறிப்பிட்டது போல, காதலனைத் தேர்வு செய்யும் உரிமை அவளுக்கு இருந்திருக்கிறது. அதேநேரத்தில்,அவளது வெளி வீடாக மட்டுமே இருக்கிறது. கற்பு பேணப்படுகிறது. தலைவன் பரத்தையிடம் சென்று, பல காலம் கழித்துவந்தபோதிலும் அவனை முகமலர்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

பொன்முடியார் தமது பாடலில் பாடியதுபோல், ஈன்று புறந்தருதல் பெண்ணுக்குரிய கடமையாக இருக்கிறது. புலவர்பெருங்கடுங்கோ பாடியதுபோல் வினை ஆடவர்க்கு உரியதாகவும், மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிராகவும்இருக்கிறார்கள். இதுவே சமூக நியதியாகவும் இருக்கிறது.

குறுந்தொகை 14வது பாடலில் (அமிழ்து பொதி ..) நல்லோர் கணவன் இவன் எனப் பல்லோர் கூற மகிழும் அதே நேரத்தில்,சிறிது நாணமும் ஏற்படுகிறது தலைவனுக்கு. சங்க காலத்தில் உடன்கட்டை ஏறும் வழக்கம் இருப்பதற்குப் பூதப்பாண்டியன்மனைவி பெருங்கோப் பெண்டின் பாடல் சான்றாக இருக்கிறது. உடன்கட்டை ஏறாத பெண்கள் கைம்மை நோண்பு என்றபெயரில் கொடும் துயரை அனுபவித்திருக்கிறார்கள்.

இக்காலத்தைப் போலவே சுற்றத்தை விடுத்து, பிரிந்து கணவனுடன் வாழ்கிறார்கள் (கற்பு வலியுறுத்தப்பட்டமையைக் காணமுடிகிறது.) மேலோட்டமாகப் பார்க்கும்போதே பெண்ணுக்கெதிரான பல கூறுகளைப் பட்டியலிட முடிகிறது. இன்னும் ஆழமானமறு வாசிப்பில் நிறையச் செய்திகளைக் காண முடியும் என்று தோன்றுகிறது. எனவே சங்க காலச் சூழல் என்பது, தாய்வழிச்சமூகத்தின் மிச்ச சொச்சங்களையும், தந்தை வழிச் சமூகம் வேரூன்ற ஆரம்பித்த கால கட்டத்தையும் கொண்டிருப்பதாகக் கூறலாம்.

சங்கப் பெண்களின் அகம்

சங்க காலப் பெண்பாற் புலவர்களில், ஒளவையார் முதன்மையானவராவார். வெள்ளி வீதியாரும், நன்முல்லையாரும் அடுத்தநிலையில் வைத்து எண்ணத்தக்கவர்களாவர். கழார்க் கீரன் எயிற்றியார், கச்சிப்பேட்டு நன்னாகையார், நச்செள்ளையார், ஒக்கூர்மாசாத்தியார், வெண்ணிக்குயத்தியார், மாற்றோக்கத்து நப்பசைலயார், வெறிபாடிய காமக்கண்ணியார், நக்கண்ணையார்,பொன்முடியார், நல்வெள்ளையார், தாயங்கண்ணியார், குறமகள் இளவெயினியார், பாரிமகளிர், ஆதிமந்தி, காவற்பெண்டு,பெருங்கோப்பெண்டு போன்றோர் குறிப்பிடத்தக்கவர் ஆவர்.

அகத்திணையியல் முதல் சூத்திரத்திற்கு உரையெழுத வந்த நச்சினார்க்கினியர், ஒத்த அன்பான் ஒருவனும், ஒருத்தியும் கூடுகின்றகாலத்துப் பிறந்த பேரின்பம், அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாகஇவ்வாறிருந்ததெனக் கூறப்படாததாய், யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்பமுறுவதோர் பொருளாதலின் அதனை அகம்என்றார்.

எனவே அகத்தே நிகழ்கின்ற இன்பத்திற்கு அகமென்பது ஓர் ஆகுபெயராம் என்று விளக்கமாக கூறியுள்ளார். எனவே அகத்திணைஎன்ற சொல்லில் உள்ள அகம் என்ற சொல் வீடு, இல், மனை அல்லது குடும்பத்தையே குறிக்கிறது. அக்குடும்பத்தில் வசிக்கும்தலைவன்-தலைவியின் வாழ்க்கையைக் குறிக்கிறது எனக் கொள்ளலாம்.

சங்க காலப் பெண்பாற் புலவர்கள் காதலை மிகவும் சிறப்புடன் எவ்விதமான பூச்சுக்களும் இல்லாமல் பாடி இருக்கின்றனர்.தலைவி, தலைவன், தோழி எனக் கூற்று யாருடையதாக இருப்பினும் வெளிப்படையாகவே நிகழ்கிறது.

காதலில் தவிக்கும் தலைவியின் மன நிலையை ஒளவையின் பாடலொன்று அற்புதமாகப் படம் பிடித்துள்ளது. தலைவி காதல்நோயால் தகித்துக் கொண்டிருக்க, தென்றல் வீசி அந்நோயை அதிகமாக்குகிறது. ஊரோ அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கிறது. தன் துயரத்தை உணராமல் உறங்கிக் கொண்டிருக்கும் இவ்வூரை,

முட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்

ஓரேன் யானும்ஓர் பெற்றி மேலிட்டு

ஆஅ ஓல்எனக் கூவு வேன்கொல்

அலமரல் அசைவலி அலைப்பஎன்

உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே (குறு: 28. ஒளவை)

என்ன செய்து எழுப்புவேன்? என்று கலங்கி நிற்கிறாள்.

தலைவன் ஒருவனை காலை, பகல், மாலை, யாமம், விடியல் என எல்லாப் பொழுதும் காதல்/காமம் வருத்திக் கொண்டிருக்கிறது.நினைவெல்லாம் பொழுதெல்லாம் அவளை நினைத்துக் கொண்டிருக்கும் அவன் தனது காதலே உண்மைக் காதல் என்கிறான்.

காலையும் பகலும் கையறு மாலையும்

ஊர்துஞ்சு யாமமும் விடியலும் என்றுஇப்

பொழுதிடை தெரியின் பொய்யே காமம் என்கிறது அள்ளூர் நன்முல்லையாரின் (குறு. 32) பாடல். தன் மன விருப்பத்தையேநன்முல்லையார் நாணம் காரணமாக தலைவன் மேல் ஏற்றிக் கூறினார் என்று கொள்ளலாம்.

தலைவன் இல்லாத சமயத்தில் பெண்கள் அழகுபடுத்திக் கொள்ளும் வழக்கம் அக்காலத்தில் இல்லை. இதனை கச்சிப்பேட்டுநன்னாகையாரின் பாடலின் மூலம் அறிய முடிகிறது.

ஈங்கே வருவர் இனையேல் அவர்என

அழா அற்கோ இனியே நோய்நொந் துறவி!

மின்னின் தூவி இருங்குயில் பொன்னின்

உரைதிகழ் கட்டளை கடுப்ப மாச்சினை

நறுந்தாது கொழுதும் பொழுதும்

வறுங்குரற் கூந்தல் தைவரு வேனே! (குறு: 162)

என்பது பாடல். பொருளீட்டச் சென்ற தலைவன் விரைவில் திரும்பி வருவார் என ஆறுதல் கூறும் தோழிக்கு தலைவி, நான்எவ்வாறு அழாமல் இருக்க முடியும்? தலைவன் இல்லாத காரணத்தினால் இந்த இளவேனில் காலத்திலும் மலர் இல்லாமல் வறிதாகஇருக்கும் கூந்தலைத் தடவுகிறேனே என வருந்திக் கூறுகிறாள்.

ஒத்த தலைவனும் தலைவியும் களவொழுக்கத்திற்குப் பிறகு மணம் செய்துகொள்வதன் மூலம் கற்பொழுக்கத்திற்கு வருகின்றனர்.என்றாலும் காதலை சொல்வதில் தயக்கமும் இருந்திருக்கிறது. இதனை வெள்ளிவீதியாரின் குறுந்தொகை பாடலொன்று உறுதிசெய்கிறது.

இடிக்கும் கேளிர் நும் குறை ஆக

நிறுக்கல், ஆற்றினோ நன்று மன்தில்லை

ஞாயிறு காயும் வெவ்அறை மருங்கில்

கைஇல் ஊமன் கண்ணில் காக்கும்

வெண்ணெய் உணங்கல் போலப்

பரந்தன்று, இந்நோய்; நோயன்று கொளற்கரிதே.

பாறையின் மீது வைக்கப்பட்டிருக்கும் வெண்ணெய் சூரியனின் கதிர்களால் உருக ஆரம்பிக்கிறது. இதனைப் பார்த்துக்கொண்டிருப்பவன் கை இல்லாதவன் அத்துடன் ஊமையும் கூட; கைகள் இருந்திருந்தால் வேறிடத்தில் வைத்திருக்கலாம். வாய்இருந்தாலாவது யாரையாவது அழைத்துப் பாதுகாக்கலாம். அதுபோல இக்காதல் நோயை அடக்கிப் பாதுகாக்கவும்இயலவில்லை. பிறரிடம் வெளியிடுவதற்குரிய மனத் திண்மையும் இல்லை. கையில்லாத ஊமையின் நிலையில் தலைவிபடும்துயரில் காதலை வெளிப்படுத்த இயலாத ஆதங்கம் தொனிப்பதையும் காண முடியும்.

வெள்ளி வீதியின் மற்றொரு பாடலில் (குறு: 149) தலைவியின் நாணம், காமத்தை எதிர்த்துத் தாங்கும் அளவிற்குத் தாங்கிப் பிறகுநிற்காமல் போய் விடுகிறது. வெள்ளம் கரையை உடைத்துக் கொண்டு ஓடுவது போல் இங்கு காமம் நாணத்தை வென்று விடுகிறது.

பொருளீட்டச் சென்ற தலைவனின் நிலையை எண்ணி வருந்தும் பாடல்கள் சங்க இலக்கியத்தில் ஏராளமாக உள்ளன. ஆயினும்பெண்பாற் புலவர்களின் பாடல்களில் அந்த வருத்தம் உணர்வுப்பூர்வமாக இருப்பதைக் காண முடிகிறது. பிரிந்து சென்றதலைவனை நினைத்து கவலையுடன் வருந்தும் தலைவியின் நிலை எப்படி இருக்கிறது என்றால் ஓர் ஊரில் அமைக்கப்பட்டுள்ளகொல்லனின் உலைக்களத்து துருத்தியானது, ஏழு ஊர்களின் பொது வேலைகளை ஏற்று வருந்துவது போல் அளவற்றதாக உள்ளதுஎன்கிறார் கச்சிப்பேட்டு நன்னாகையார்.

வெள்ளிவீதியின் நற்றினை 348வது பாடல் இப்படிப் போகிறது ..

நிலவே, நீல் நிற ...

...யானே? புனையிழை நெகிழ்ந்த புலம்புகொள் அவலமொடு

கனையிருள் கங்குலும் கண்படை இலெனே;

அதனால், என்னொடு பொரும் கொல்இவ் உலகம்?

உலகமொடு பொரும்கொல், என் அலமரு நெஞ்சே?

இரவெல்லாம் தூக்கமின்றித் தனிமைத் துய்வில் வருந்தியுள்ளேன். (ஊர் உலகமோ மகிழ்ச்சியாக இருக்கிறது) அதனால் இந்தஉலகம் தன்னோடு மகிழவில்லையென்று நினைத்து என்னோடு வந்து போரிடுமா? அல்லது என்னுடைய துயரங்கொண்டநெஞ்சமானது, தன்னோடு வருந்தவில்லையென்று சென்று உலகத்தோடு போய்ப் போரிடுமா? எதுவுமே தோன்றவில்லையேஎனக்கு (எதுவுமே தோன்றாதவளை தனிமை துயரம் மட்டும் வருத்திக் கொண்டே இருக்கிறது).

வெள்ளிவீதி, நன்முல்லை ஆகியோரின் பிரிவுத் துயரம் கல் நெஞ்சையும் கரைத்து விடும் ஆற்றல் பெற்றவை.

தலைவனின் மனம் விழாக் களத்தில் ஆடும் பெண்ணின் மீது போய் விடுமோ என அஞ்சும் அவனது காதலி, வெள்ளை ஆம்பலின்அழகான நெறிப்பையுடைய தழையை, மெல்லியதாக அகன்ற அல்குல் அழகுபெறுமாறு உடுத்துக் கொண்டு, அவன் முன்னால்சென்று தானே அவனை கைப்பற்றிக் கொள்ளப் போவதாக அந்தப் புதியவளின் ஏவல் பெண்டுகள் காதில் விழுமாறு கூறுகிறாள்.

இப்படித் தன் அழகைக் காட்டி அவன் அவளை மணந்து கொண்ட பின், மற்ற பெண்களின் தோள் நலம் வாடி விடுமே!.அவைதாம் இரங்கத்தக்க என்று பொய்யாக வருந்துகிறாள் காதலி. வாளை வாளின் பிறழ .. என்னும் ஒளவையின் இந்தப்பாடலில் வரும் காதலி தன் உடல் அழகின் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறாள் என்பது வியப்பூட்டுகிறது.

இக்காலத்தைப் போலவே சங்க காலத்திலும் சுற்றத்தாரிடம் இருந்து பிரிந்து தலைவனோடு சென்று இல்லறம் நடத்தும் சிறப்பைநக்கண்கைணயாரின் பாடல் (நற்றினை 19) மூலம் அறியலாம்.

திருமணம் நடக்கும் வரை, தலைவியின் நாணம் நீங்காதபடி கற்புத் தலைவியை அவள் விரும்பும் ஆடவர்க்கு மணம் செய்துவைப்பது தாயின் கடமையாக உள்ளது. எனவே சிறுகோட்டுப் பெருங்குளம் காவலன் போல, அருங்கடி அன்னையு துயில்மறந்தனளே! (அகம் 256-12-14) எனத் திருமணம் வரை பெண்கள் கற்புடன் இருக்க, தாய் உறக்கமின்றி காவலிருந்ததைப்பாடுகிறார் நக்கண்ணையார்.

கணவனை இழந்த பெண்கள் உடன்கட்டை ஏறுவது அல்லது கைமம்மை நோன்பு இருப்பது அக்கால வழக்கமாக இருந்தது.கைம்மை நோன்பின் கொடுமையை பூதப்பாண்டியனின் மனைவி பெருங்கோப்பெண்டு எடுத்துரைப்பதோடு, கைம்மைநோன்பிருப்பதை விடவும் ஈமப் படுக்கையில் படுத்து உயிர் விடுவது, தாமரைக்குளத்து நீரைப் போல் இன்பமானது என்றுபாடுகிறார்.

தாயங்கண்ணியார் என்ற மற்றொரு புலவரின் பாடலில் இருந்து (புறம். 250) கணவரை இழந்தப் பெண்கள் தலைமயிரைக்குறைத்து, வளையல்களைக் களைந்து, அல்லியரிசி உணவு உண்ட நிலையை அறிய முடிகிறது. மாறோக்கத்து நப்பசலையாரின்புறம் 280வது பாடல் கணவன் சாவை, ஒவ்வொரு நிமிடமும் எதிர்நோக்கும் துயரமான மன நிலையைச் சித்திரமாக வடித்துத்தந்துள்ளது. இந்தப் பாடலும் கைம்மை நோன்பின் கொடுமையை வெளிப்படையாகச் சொல்கிறது.

சங்க காலப் பெண்பாற் புலவர்களின் பாடல்களிலிருந்து அக்காலத்துப் பெண்களின் காதல் -வீரம், பெரும்பாலும்பொருளாதாரத்தைத் தேடும் உரிமையின்மை, பெண்ணுக்கான இடம் பெரும்பாலும் வீடாக இருத்தல், பரத்தையிடம் சென்றுவரும் கணவனை கமலர்ச்சியோடு ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம், காதலவன் வேறொரு பெண்ணோடு போய் விடாமல்இருக்க காதலி செய்யும் முயற்சிகள், கைம்மைத் துயரம், உடன்கட்டை ஏறுதல் என பல்வேறு சமூக நிகழ்வுகளையும் அறிந்துகொள்ள முடிகிறது.

நன்றி: அணங்கு

தொகுப்பாசிரியர்கள்: க்ருஷாங்கினி, மாலதி மைத்ரி

- பத்மாவதி விவேகானந்தன்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X