For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வால்மீகி ராமாயாணம்- வேதக் கதையின் தழுவலா?

By Staff
Google Oneindia Tamil News

Ramayanaaவால்மீகியினால் இயற்றபட்ட ராமாயணந்தான் சமஸ்கிருத பாஷையின் முதல் இலக்கியமாகும். ஆகவே அது ஆதி காவியம் என்ற புகழையடைந்தது. ராமாயாணத்தை அடிப்படையாகக் கொண்டு பிற்காலக் கவிகள் எழுதிய நூற்கள் கணக்கற்றவை, வசனங்களாகவும், பாட்டுக்களாகவும், நாடகங்களாகவும், வேதாந்த நூற்களாகவும் நம் நாட்டில் ராமாயணம் அழியா இடம் பெற்று விட்டது.

அவ்வக் காலத்துக் கவிகள் சிற்சில மாற்றங்களுடன் அவரவர்களுடைய பண்பாட்டிற்குத் தக்கவாறு அதை கையாண்டிருக்கிறார்கள். இவைகளுக்கு வெளியாகி உள்ள உரைகளும் எண்ணற்றவை.

பத்ம புராணத்திலும், ராமாயணக் கதை வர்ணிக்கப்பட்டிருக்கிறது. மஹாகவி காளிதாஸனும் தனது ரகு வம்சம் என்ற காவ்யத்திலும் ராமாயணத்தை ரஸமாக சித்தரித்திருக்கிறார். மிகப் பழமையான மஹா பாரதத்திலும் ராமாயண சுலோகங்கள் ஆங்காங்கு மேற்கோள்களாகப் பிரகாசிக்கின்றன.

ஆகவே, மஹா பாரதக் கதை நாட்டில் பரவு முன்பே ராமாயணம் மக்கள் மனதைக் கவர்ந்ததாயும், பிரசித்திமானதாயும் இருந்திருக்க வேண்டும் என்பது மிகையாகாது.

புத்த பெருமானின் மஹிமையைக் கூறும் பாலி பாஷை நூலான "ஜாதகமாலா" என்ற கிரந்தத்தில் தசரதருடைய ஜாதகம், ஸ்ரீராமனுடைய சரிதம் காணப்படுகிறது. பால காண்டத்திலும் கிஷ்கிந்தா காண்டத்திலும் "யவன" எனும் சொற்கள் காணப்படுவதால் யவணர்கள் நம் நாட்டிற்கு வந்த பிறகே ராமாயணம் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்பது ஒரு சாரார் கருத்து.

ஆனால், நவீன ஆராய்ச்சியாளர்கள் சிலர், யவன சொற்களுடன் கூடிய சில சுலோகங்கள் பிற்காலத்தில் புகுத்தப்பட்டவை என்றே உறுதியாக நம்புகிறார்கள். இலக்கண கர்த்தாவான பாணினியின் வியாகரணத்திற்குப் பொருந்தாத பல சொற்கள், ராமாயணத்தில் காணப்படுவதால் பாணினிக்கும் பழமையானது ராமாயணம் என்பது தெளிவு.

கி.மு. 350 பாணினியின் காலம் என்பது விமர்சகர்களின் கருத்து.

தவிர, கி.மு. 380ல் காலாசோகன் என்ற மன்னனைப் பற்றியும், பாடலீபுரத்திரத்தைத் தலைநகராகக் கொண்ட அவரது ராஜதானியையும் ராமாயணம் குறிப்பிடவில்லை. ராமர் சித்தாஸ்ரமத்திற்குப் போகும்போது கெளசாம்பி, கான்ய குப்ஜம், காபிலம் என்ற ராஜதானிகளை வர்ணிக்கும் கவி, அக்காலத்தில் பாடலீபுத்திரம் என்ற ராஜதானி பிரசித்தமாக இருந்திருக்குமானால், அதை வர்ணிக்காமல் விட்டு விட நியாயமேயில்லை.

ஆகவே, ராமாயாண காலத்திற்குப் பிறகே இந் நகரம் பிரசித்திமடைந்திருக்க வேண்டும். எனவே கி.மு. 380க்கும் முன்பே ராமாயணக் கதை நாட்டில் பரவியிருந்ததென்பது வெளிப்படை.

ராமாயணம் இயற்றிய காலத்தில் ... விசாலா என்ற சிறு ராஜதானி. இவையிரண்டும் "வைசாலீ" என்ற ஒரே ராஜதானியாக இருந்ததென்பதையும் சில நூல்கள் குறிக்கின்றன. தேச நிலைமையும் பாரத கால நிலைமையை விட பழமையானதாகவே ராமாயண கால நிலைமை இருந்ததாகவும் ஊகிக்க இடண்டு.

மற்றொரு விஷயம் கவனிக்கத்தக்கது; தசரதரும், ராமரும் அயோத்தியைத் தலைநகராகக் கொண்ட ராஜதானியை ஆண்டு வந்தார்கள் என்பது பிரசித்தம். ஆனால் உத்திரகாண்டத்தில், ராமரது குமாரன் லவன், "சிராவஸ்தி" என்ற ராஜதானியை ஆண்டு வந்ததாக அறிகிறோம். ஆகவே, லவனுடைய காலத்திலேயே அயோத்தி, சிராவஸ்தி என்ற பெயரில் விளங்கிற்றென்பது கண்கூடு.

Ramayanaaபெளத்த அரசனான "பிரஸேனஜித்"தும் சிராவஸ்தி ராஜதானியை ஆண்டதாக பெளத்த நூல்கள் கூறுகின்றன. ஆதனால், லவனுடைய காலம் முதல் பிரஸேனஜித் காலம் வரை அயோத்தியா நகரம், சிராவஸ்தி என்றே அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.

இவ்விதம் கூறும் ராமாயணம் பிராசீனமானதென்றும், நவீன ராமாயணம் வேறு ஒன்று உளதென்றும், அதில் அயோத்திக்கு "ஸாகேதம்" (ராமனுக்கு ஸாகேத் ராம் என்றும் ஒரு பெயர் உண்டு) என்ற பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறதென்றும் கூறுவாறுளர்.

இரண்டு ராமாயணங்கள் இருந்தன என்பதற்கு மற்றொரு யுக்தியும் இங்கு கூறுதல் பொருத்தம். வால்மீகி ராமாயணம் நூற்றுக்கணக்கான "சருக்கங்கள்" என்ற உட்பிரிவைக் கொண்ட ஏழு காண்டங்கள் அடங்கியதாக நாம் யாவரும் அறிவோம்.

சருக்கங்கள் என்ற உட்பிரிவை பவபூதி, "அத்யாயம்" என்று குறிப்பிட்டிருக்கின்றார். எனவே பழமையான ராமாயணம், அத்யாயம் என்ற உட்பிரிவுகளையுடையதாகவே பவபூதி காலம் வரை அவசியம் இருந்திருக்க வேண்டும். பிற்பாடு, சருக்கங்கள் என்ற உட்பிரிவையுடைய ராமாயணம் பிற்காலம் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டுமென்பது இவர்களது கருத்து.

இவையாவற்றையும் கருத்தில் கொண்டு ஆராய்ந்தால் கி.மு. 5ம் நூற்றாண்டுக்கு முன்பே ராமாயணம் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வர வேண்டியதாகிறது.

கதை:

பழைய கால கதைகளை விரிவாக உரைப்பவை புராணங்களென்றும், இதிஹாசங்களென்றும் இரு வகைப்படும். புராணங்கள் உலக முழுமையும் பற்றிக் கூறுவதாகவும், அவ்வளவாக ரஸமற்றவைகளாகவும் காட்சியளிக்கின்றன. ஆனால் இதிஹாசங்கள் குறிப்பிட்ட ஒரு தலைவனையே பற்றியதாயும், புராணங்களை விட ரஸமானதாயும் உள்ளன.

நம் நாட்டில் இவ்வித இதிஹாச ரத்தினங்கள் ராமாயணம், பாரதமாகும். கிரீஸ் தேசத்தில் ஹோமர் என்ற ஒரு கவி, உலீஸஸ் என்ற ஒரு தலைவனது சதத்தை மிகவும் புகழத்தக்க முறையில் எழுதியிருப்பதாகவும், ராமாயணத்திற்கும் அக்கதையே ஆதாரமாக வால்மீகு கொண்டுள்ளர் என்றும் ஒரு சிலர் கூறுவர்.

மற்றும் சிலர், நமது ராமாயணக் கதைதான் கிரீஸ் தேசத்து ஹோமன் நூலுக்கு ஆதாரமென்றும் பதில் கூறுவர். எதற்கு எது ஆதாரம் என்பது முடிவற்ற ஒரு விவாத விஷயமாகும்.

ராமாயணத்தை இரு முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அயோத்தியில் அரச குடும்பத்தில் நிகழ்ந்த சரித்திர நிகழ்ச்சி ஒரு பிரிவு; ஒரு இளவரசி தனது மகனுக்கு அரசுமை வேண்டி அரசனைத் தனது சாஹஸத்தால் வயப்படுத்தி தனது கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்கிறாள்.

பிறகு பரதன் வந்து சேருகிறான் என்ற அளவோடு கதை நின்றிருக்குமானால் அவசியம் இது ஒரு சரித்திர நூலாகவே எண்ணப்பட்டிருக்கும்.

இரண்டாவது பகுதி அற்புதங்கள் நிறைந்ததாயும், மனித சக்தியை மீறிய தெய்வாம்சங்கள் நிறைந்ததாயும் இருக்கின்றது. ஆகவே தற்பகுதிக்கு இது முற்றிலும் மாறுபட்டதன்மையுடையதாகிறது.

Ramayanaaஒரு சில ஆராய்ச்சியாளர் ருக் வேதத்தில் உள்ள ஒரு கதையே ராமாயணத்திற்கு ஆதாரமென்பர். இதுவே சற்று பொருத்தள்ளதாகக் காண்கிறது. ஒரு சில மாறுதல்களுடன், வேதம் யாவும் கற்ற வால்மீகி, வேதக் கதையையே ஒரு ரஸமான காவியமாகச் செய்தார் என்பதற்கு அக்கதைக்கும், ராமாயணத்திற்கும் உள்ள ஒற்றுமையே சான்று.

அதாவது - சமஸ்கிருதத்தில் சீதை கலப்பையின்னை அல்லது ... சீதை மிகுந்த அழகுள்ளவளென்றும், அவளே பயிர் நிலத்திற்கு ஆதி தேவதையென்றும் வர்ணிக்கின்றன. வேதத்தில் விளை நிலத்திற்கு அவசியமான மழையின் தேவதையான பர்ஜன்யன் அல்லது இந்திரன் இவர்களது மனைவியாக சீதை வர்ணிக்கப்படுகிறாள்.

ராமாயணத்திலும், ஜனகர் யாக பூமியை உழுதபொழுது பூமியினின்றும் சீதை வெளிவந்ததாகவும், கடைசியாக பூமியிலேயே மறைந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே இம்முறைப்படி ராமரும், இந்திரனும் வேறுபட்டவரன்று.

ராமாயணத்தில் விரிவாக வர்ணிக்கப்படுகின்ற ராவண யுத்தம், இந்திரனுக்கும், விருத்திராசுரனுக்கும் நடந்த யுத்தமே ஆகும். இந்த யுத்தம் வேதங்களில் பலவிடங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கின்றது. ராவணனுடைய குமாரன் இந்திரஜித்தும் (இந்திரனை ஜெயித்தவன்) இங்கு கவனத்துக்குரியவனாகின்றான்). இந்திரஜித் என்ற பெயர் வேதத்தில் விருத்திராசுரனையே குறிக்கிறது.

ராமாயணத்தில் சீதை ராவணனால் அபகரிக்கப்பட்டது போலவே, விருத்திராசுரன் இந்திரனது பசுக்களை அபகரித்ததாக வேதம் கூறுகிறது. மற்றும் சீதையை சிறை மீட்க வாயு புத்திரனான அனுமாதன் பேருதவி செய்ததாக ராமாயணம் கூறுகிறது. வேதத்தில் பசுக்களை சிறை மீட்க வாயு தேவதை மிகுந்த உபகாரம் செய்ததாக கூறப்படுகின்றது.

வேதத்தில் சிறையெடுக்கப்பட்ட பசுக்குளுக்கு அனுகூலமாக ஸரமா என்ற ஒரு நாய் இருந்ததாக சொல்லப்பட்டிருக்கின்றது. ராமாயணத்தில் ஸரமாயென்ற பெயருடைய ஒரு அரக்கி சீதையிடம் மிகுந்த ஆதரவுடன் இருந்து வந்ததாக வால்மீகி கூறுகிறார்.

இவ்வித ஒற்றுமைகளைக் கருத்தில் கொண்டு, வேதத்தில் கூறியுள்ள ஒரு கதையே வால்மீகி மகஷி யாவரும் எளிதில் அறியும்படி தெளிவான நமுைடயில் நவரஸங்களும் பொருந்திய ஆதி காவ்யமாக வெளியிட்டார் என்று நம்புகிறார்கள்.

வால்மீகி ராமாயணம் மிகுந்த சுவையுள்ளது. சமஸ்கிருதம் படிக்காதவர்களுக்கும் புரியக் கூடிய எளிய நடையுடன் கூடியது. எவ்வளவு தடவை படித்தாலும், எத்தனை தரம் கேட்டாலும் திகட்டாது.

(ராமாயணக் கதை ஒரு தழுவல் கற்பனையே என்ற கருத்தமைந்த இக்கட்டுரை, 1948, மே 15ம் தேதி வெளியானது. எழுதிய சிரோன்மணி எ. வெங்கிடாசல சாஸ்திரி, புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களின் முதல் அரச குருவான கோபாலகிருஷ்ண சாஸ்திரியின் மரபில் 7வது தலைமுறையில் உதித்தவர்)

நன்றி: பழங்காசு

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X