• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

நடுகல் வழிபாடு

By Staff
|

இறந்துபட்ட முன்னோர்களை வழிபடும் வழக்கம் மிகத் தொன்மையானது. உலகம் முழுவதும் இவ்வழக்கம் நடைமுறையில் இருந்துள்ளதுஎன்பதனை ஆய்வாளர்கள் பலரும் பல்வேறு கால கட்டங்களில் விளக்கியுள்ளனர்.

இறந்துபட்ட முன்னோர்களின் வழிபாடே பிற்காலத்தில் கடவுளர் உருவங்களின் தோற்றத்திற்கு அடிப்படையாயின என்று பலஆராய்ச்சியாளர்களின் கருத்துக்கள் இன்று வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

பார்பஸ், டஃப்மெக்டனால்டு, டுசைல்லு ஃபிரேசர், ஹெர்பர்ட் ஸ்பென்சர், வில்லியம் சிம்ப்சன், கிராண்ட் ஆலன் முதலிய ஆய்வாளர்களின்கண்டுபிடிப்புகள் உலகம் முழுவதும் வழக்கிலிருந்த முன்னோர் வழிபாட்டைப் பற்றிய செய்திகளைத் தோண்டித் துருவி நமக்குஅளித்துள்ளன.

இங்கிலாந்து நாட்டவரான கிராண்ட் ஆலன் என்பவர் THE EVOLUTION OF GOD (கடவுளின் பரிணாமம்) என்ற தனது நூலில்,

"சமாதியின் மேல் நட்டு வைக்கப்பட்ட மரத்தாலான முளைகள்தான், சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட மரச் சிலைகள் தோன்றுவதற்குரியதிருப்பு மையத்தை உருவாக்கி இருக்கக் கூடும். செமிடிக் இனத்தவரால் பெரிதும் புனிதமாகப் போற்றப்படுகிற கூர் உருளைகளும்,மரத்தூண்களும் தோன்றுவதற்குக் கூட, இந்த மர முளைகள்தான் காரணமாகும்.

இதைப் போலவே சமாதியின் மேல் உருட்டி விடப்பட்ட சொரசொரப்பான பாறைகளும், நட்டு வைக்கப்பட்ட நடுகற்களும் தான்உலகெங்கிலுள்ள பண்பட்ட சமூகங்களில் காணப்படுகிற, பொதுவான வழிபாட்டு உருவமாகத் திகழும் கற்சிலைகளும், பளிங்குச்சிலைகளும் தோன்றுதற்குரிய திருப்பு மையத்தையும் உருவாக்கின. "

Nadukalமுதன் முதலில் இத்தகைய கற்கள் வெறும் கற்பாறைகளாகவும், வெட்டி உருவாக்கப்படாத கல் துண்டுகளாகவுமே கிடந்தன. இறந்தவர்கள்திரும்பி வந்து உயிரோடு இருப்பவர்களைத் துன்புறுத்தாமல் தடுக்கும் பொருட்டுதான் இந்த கற்பாறைகளைச் சவக்குழிகளின் மேல் உருட்டிவிட்டனர். நாளாக நாளாக இந்த கற்களைச் சதுர வடிவமான கற்பலகைகளாக ஒழுங்குபடுத்தினர். கடைசியாக இவைகளின் மேல் மனிதத்தலையும், தோளும் பொருந்திய கரடுமுரடான பிரதிபிம்பங்கள் செதுக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டன

என்று நடுகல் வழக்கம் உருவ வழிபாடாக மாறி வந்த வழியைக் கூறுகிறார். சங்க காலத்தில் தமிழகத்தில் நடுகல் வழிபாடு பற்றிஅவ்வப்போது சில ஆய்வுரைகள் வெளியிடப்பட்டாலும் முழுமையான வரலாறாக அவை விரித்துரைக்கப்படவில்லை என்றேதோன்றுகிறது.

தொல்காப்பியர் காலத்திற்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றிய இந்நடுகல் வழிபாடு, தமிழகத்தில் பண்பாட்டுத் தொடர்ச்சியையும்,வீரச் செயல்களையும் அச்செயல்பாடுகளாக இறந்துபட்ட மறவர்களின் புகழையும் வெளிப்படுத்தும் சாதனமாக விளங்குகின்றன.

தொல்காப்பியர் கூறும் புறத்திணையியலுக்கு ஒரு வரலாற்று அடித்தளம் உண்டென்று இன்று வரை வெளிப்படுத்தப்பட்டுள்ள நடுகற்கள்உறுதி செய்கின்றன. செங்கல்பட்டு, சேலம், தர்மபுரி, தென்னாற்காடு, கோவை முதலிய மாவட்டங்களிலும், இன்னும் பிற மாவட்டங்களிலும்கண்டெடுக்கப்பட்ட நடுகற்கள் கால கட்டங்கள்தோறும் மாறி வரும் கலைப் பாணிகளுக்கு ஏற்ப, உருவ அமைதியிலும், எழுத்தமைதியிலும்மாற்றங்களோடு காணப்படுகின்றன.

தனித் தமிழ் எழுத்திலும், கிரந்தம் தமிழ் எழுத்தும் கலந்தும், வட்டெழுத்தும் தமிழ் எழுத்தும் கலந்தும், தனி வட்ட எழுத்திலும்பொறிக்கப்பட்ட நடுகற்கள் பல தமிழ்நாடெங்கும், தொல்பொருள் ஆய்வுத் துறையினராலும், தனிப்பட்ட ஆராய்ச்சியாளர்களாலும்கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வீரர்களுக்கு எடுக்கப்பட்ட நடுகற்களில் அவ்வீரர்களுக்குரிய பெயரும், புகழுக்குரிய வீரச் செயலும்பொறிக்கப்பட்டு நடப்பட்டன.

மறவர் பெயரும் பீடும் எழுதி (அகநானூறு 67)

பட்டோர் பெயரும் ஆற்றலு மெழுதி

நட்ட கல் (திருவாரூர் மும்மணிக் கோவை)

முதலிய இலக்கிய வரிகள் நடுகல்லில் பொறிக்கப்பட்டிருக்கும் தலையாய தகவல்கள் எவை என்பதை நமக்கு அறிவிக்கின்றன.இதனாலேயே சங்ககால நடுகற் கல்வெட்டுக்கள் பற்றிக் கல்வெட்டறிஞர் தி.வை.சதாசிவ பண்டாரத்தார் அவர்கள், கல்வெட்டுக்களால்அறியப் பெறும் உண்மைகள் என்ற தமது நூலில் (பக். 1) கடைச் சங்க காலத்தில் பகைவரோடு அஞ்சாது போர் புரிந்து புகழுடன் இறந்தவீரர்களின் நடுகற்களின் மேல் வரையப் பெற்ற அவர்களுடைய பெயரும் பீடுமே நம் நாட்டில் முதலில் தோன்றிய தமிழ்ச் சாசனங்கள் என்றுஅய்யமின்றிக் கூறலாம் என்று குறிப்பிடுகிறார்.

பட்டோர் பெயரும், ஆற்றலும் எழுதி நட்ட கல் என்று நடுகல்லுக்கான இலக்கண வரம்பு கூறப்பட்டாலும், தமிழகத்தில் கிடைத்துள்ளநடுகற்கள் சிலவற்றில் எழுத்துப் பொறிப்பு ஏதுமின்றி இறந்துபட்ட வீரனின் உருவையும், அவன் செய்த வீரச் செயலையும் சிற்பமாகவடித்துள்ளனர் என்பதையும் கூற வேண்டியுள்ளது.

தமிழகத்தில் வாழும் பல்வேறு குடிகளிடத்திலும், இக்காலத்திலும், இறந்தோருக்குச் செய்யும் இறுதிக் கடனில், கல்லெடுப்பு அல்லது கல்நிறுத்தம் என்ற சடங்கு, நடுகல் வழிபாட்டின் மிச்ச சொச்சமே என்பது மறுக்கவியாலா உண்மையாகும்.

தமிழகத்தில் நடுகல் வழிபாடு பற்றி ஆய்வு செய்யப் புகுந்த பேராசியர் வெ.கேசவராஜ், நரை மீட்டோர் கல், வடக்கிருந்தோர் கல், பத்தினிப்படிமக்கல், கடலுள் மாய்ந்தோர் கல், ஊர்காத்தான் கல், பெண் மீட்டான் கல், அறம் காத்த நடுதல் கல், கழி பேராண்மைக் கல், சாவாரப்பலிக்கல், அடியார் சமாதி, அரசர் பள்ளிப் படை, புலிக் குத்திக் கல், பன்றிக் குத்திக் கல், குதிரைக் குத்திக் கல், எருது பொருதார் கல், மாடுபொறித்த கல், யானைப் போர் நடுகல், நாய்க்கு நிடுகல் என அவற்றை வகைப்படுத்தியுள்ளார்.

நன்றி: பழங்காசு

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more