• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கண்மாய் அழிகிறது

By Staff
|

அந்த மானாவாரிக் கண்மாய் அழிந்து போவதற்காகக் காத்திருக்கிறது.

ஊருக்கு வடக்கே புளியந்தோப்பை ஒட்டினாற் போல நீண்ட மலைப் பாம்பாய்ப் படுத்திருக்கிறது கண்மாய்க் கரை.

மழைக்காலத்தில் தன்னுள் நீரை நிறைத்துக் கொண்டு கெத் கெத்தென்று சிறு கடலைப் போல் காட்சி தரும் அந்த கண்மாய்க்குள் ஆங்காங்கே பசியஇளந்தளிருடன் கருவேலமரங்கள் உருண்டை உருண்டையான மஞ்சள் பூக்களுடன் சிலிர்த்து நிற்கும். காற்றின் அடைவில் அவ்வப்போது கண்மாய்க்குப்பூச்சொரிதல் நடக்கும்.

இது கோடைக் காலம், தேக்கி வைத்திருந்த நீரை விவசாயத்துக்கு வழங்கி விட்டுக் கரம்பலின் விரிசல்களோடு கண்மாய் துமை தட்டி விட்டது.நவநாகரீகப் பெண்கள் அணியும் நீண்ட காதணிகளாக நெற்றுக்களைத் தொங்க விட்டுக் கொண்டிருந்தன பரட்டைத் தலைக் கருவேல மரங்கள்.

பரந்த பகுதியிலுள்ள நீரெல்லாம் வற்றி வறண்டு, வட கோடியிலுள்ள கொஞ்சம் ஆழமான பகுதியில் மட்டும் மிச்சமுள்ள நீர் சுண்டிக் கிடக்கிறது.

தெளிந்த நீரில் கும்மாளமிட்ட கெளிறு, கெண்டை, குறவை,விலாங்கு, அயிரை மீன் வகையறாக்கள் இப்போது கலங்கிப் போன நீரில் மிரட்சியுடன் நீந்திக்கொண்டிருந்தன.

தனித் தனியாக யாரும் மீன் பிடிக்க முடியாது. யாருக்கும் குத்தகைக்கு விடுகிற வழக்கமும் இல்லை.

ஒரு குறிப்பிட்ட நாளில் ஊர் மக்கள் ஒன்றாகக் கூடி கண்மாய்க்குள் மீன் பிடிக்க அனுமதிக்கப்படுவார்கள். அதுவே கண்மாய் அழிகிற நாள்.

அந்த நாள் கிராமத்துக்கு குதூகலமான நாள்.

யாரும் வேலை வெட்டிக்குப் போக மாட்டார்கள். எரவாரத்தில் சொருகி வைத்திருக்கும் சிறிய குண்டு வலைகளுடன் ஆண்களும், பெண்களும்சிறுவர்களும் கண்மாய்க் கரையில் கூடி விடுவார்கள். வசதி படைத்தவர்களிடம் இழுப்பு வலை இருக்கும்.

கண்மாயின் பெரும்பகுதியான மீன்கள், அந்த இழுப்பு வலைக்காரர்களுக்கே போய் சேர்ந்து விடும். வலையே இல்லாதவர்கள் சகதியாக கலங்கிப் போனநீரில், மூச்சு முட்டி மிதக்கும் மீன்களை கைகளினாலோ, அல்லது மீன் ஒழுக்குக் கூறிய கொட்டான் மூலமாகவோ ஏந்திப் பிடிப்பார்கள்.

அயிரை மீன்கள் நீர்ப் பரப்பின் மேல் குத்திட்டு நிற்கும், பூப்பறிப்பது போல அவைகளை எடுத்துக் கொள்வது மிகச் சுலபம்.

அன்று, நெல்லுச் சோறு பொங்கி பக்கத்து கிராமங்களில் உள்ள உறவினர்களையும் வரவழைத்து குடும்பத்தோடு ஒன்றாய் இருந்து சாப்பிடுவது ஒரு விசேஷநாள் போல இருக்கும். மீதமுள்ள மீனை காயப் போட்டு வைத்துக் கொள்வார்கள்.

மேலத் தெரு சனங்கள் நீர்ப்பரப்பின் மேல்புறத்திலும் மற்ற சனங்கள் கீழ்ப்புறத்திலும் அணிவகுத்து நிற்பார்கள். அம்பலக்காரன் சாடி விடுவார்கள்.கொஞ்ச நேரத்தில் நீர் கலங்கி சகதிக் குழம்பாகி விடும்.

கீழத் தெருவில் ஒதுக்குப்புறமாக வாழும் அசனங்கள் கண்மாய்க்குள் இறங்க அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் முட்டாசுக் கொட்டானையோ,அலுமினியப் பாத்திரத்தையோ ஏந்திக் கொண்டு கரையில் நிற்க வேண்டியதுதான்.

மீன் பிடித்தவர்கள் வலையில் நிரம்பிப் போன சகதியை கரையில் கொட்டி அதில் புதைந்திருக்கும் மீன்களை கிண்டிக் கிண்டி எடுக்கும்போது சாமி! சாமி! என்றுபாத்திரங்களை நீட்டும் அசனங்களுக்கு ஒன்றோ, இரண்டோ எடுத்துப் போடுவார்கள்.

அன்று இரவு ஊர் பொது மடத்தில் ஊர்க் கூட்டம் கூடியுள்ளது. பல பிரச்சினைகளோடு, கண்மாய் அழிவதற்கான தேதி குறிப்பதும் முக்கியமான விஷயம்.

சட்டை போடாத பெரிய சரீரத்தோடு கைகளை பின்புறமாக ஊன்றி உடலை சாய்த்து கூட்டத்தின் நடு நாயகமாக உட்கார்ந்திருந்தார் அம்பலம்.பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச்சத்தில் அவரது காது கடுக்கண் மின்னியது. அவரது வலது கைப்புறம் மேலத்தெரு சோலைச்சாமி உட்கார்ந்திருந்தார்.

கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை ஊர் கூட்டி அறிவிக்கும் சுப்பன் பகடை மட்டும் தான் வழக்கமாக கூட்டத்தை விட்டு சற்று ஒதுங்கி குத்துக்கல்லில்சாய்ந்து கொண்டு உட்கார்ந்திருப்பான். ஆனால், இன்று அசனப் பெரியவர்களும் அவன் கூடவே இருந்தனர். கூட்டத்தாரின் கண்களில் இந்தக் காட்சி உறுத்திக்கொண்டிருந்தது.

கூட்டத்தில் பல பிரச்சினைகள் அலசி ஆராயப்பட்ட பிறகு கண்மாய், அழிவது பற்றிப் பேச்சு வந்தது.

தொண்டையை செறுமிக் கொண்டு "வர ஞாயித்துக் கிழமையே கம்மாயை அழிய வுட்றலாமா? " என்று கூட்டத்தைப் பார்த்துக் கேட்டார் அம்பலம்.

கூட்டத்தாரிடமிருந்து பதில் வருவதற்குள் துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு அவர்களை நெருங்கி வந்தான் சுப்பன்பகடை.

"என்னா சுப்பா? இன்னும் ஊர் கூட்டத்துல முடிவு எடுக்கலயே, அதுக்குப் பெறவுள்ள நீ ஊர் சாட்டனும், அங்கிட்டுப் போய் உக்காரு, பெறவுகூப்பிடுறேன்" என்று அம்பலம் சொல்லியதை பொருட்பபடுத்தாமல் அவன் பேசத் தொடங்கினான்.

"கம்மாய் அழியறதுக்கு தேதி குறிக்கிறதோடு, இந்தக் கூட்டத்துல இன்னொன்னையும் முடிவு செஞ்சா நல்லது சாமி!" உடல் பணிவாக வளைந்திருந்தாலும்குரலில் அழுத்தம் தொனித்தது.

"சுப்பா நீ என்ன சொல்லுத? "

"இந்த வருசம் கம்மாய் அழியறப்ப எங்க சனங்களும் கம்மாய்க்குள்ள எறங்கி மீனு புடிக்கணும்னு நெனக்கவா சாமி இந்தக் கூட்டத்துல அதுக்கு சம்மதம்கொடுக்கணும்."

கூட்டத்தில் சற்று நேரம் நிசப்தம், பிறகு கசமுசாவென்று சலசலப்பு.

கையசைப்பில் கூட்டத்தை அமைதிப்படுத்தி விட்டு அதட்டும் குரலில் அம்பலம் சொன்னார், "ஏலே சுப்பா, எவ்வளவு நெஞ்சுத் துணிவிருந்தா இப்படி நீபேசுவ? உங்க சனங்கள்லாம், முதுகுத் தோலு முதுகிலேயே இருக்கனும்னு நெனக்காவளா இல்லையா? "

"முதுகுத் தோலு மட்டுமில்ல சாமி, உசுரே போனாக் கூட எடுத்த முடிவிலருந்து நாங்க மாறப் போறதுல்ல. மாடுகளைக் குளிப்பாட்ற கம்மாயில நாமஎறங்கப்படாதான்னு எங்க சனங்க கேக்கவா."

"கேப்பாவடா, கேப்பாவ, ஒவ்வொருத்தரோட நாக்கயும் புடுச்சு அறுத்தா கேப்பாவ" மேலத்தெரு சோலைச்சாமி எகிறி விழுந்தார்.

அதைத் தொடர்ந்து கெட்ட வார்த்தை நாலஞ்சு பேர் வைத்தார்கள்.

"ஆளாளுக்கு எதுவும் பேசாதீங்க. நாந்தேன் பேசிக்கிட்டிருக்கேன்ல?" என்று மற்றவர்களை அடக்கி விட்டு அம்பலம் தொடர்ந்தார்.

"ஏலே சுப்பா, ஒங்க சனங்களுக்கு மீன் தான வேணும்? நெறிய மீன் கொடுக்க நான் ஏற்பாடு செய்யுறேன். இந்த எண்ணத்த மட்டும் விட்டுடு."

"மீன் வேணுங்கறதுக்காக மட்டுமில்ல சாமி, காலம் காலமா இந்த ஊர்ல வாழற எங்களுக்கும் கம்மாய்க்குள்ள எறங்க உரிமை இருக்கிறத நிரூபிக்கஇப்படி முடிவு செஞ்சுருக்கோம். சாதியைக் காரணம் காட்டி எங்கள ஒதுக்குறத நாங்க விரும்பல.

நாட்ல எவ்வளவோ மாற்றம் ஏற்பட்டுப் போச்சு. இன்னும் நாங்க இப்படியே ஏன் இருக்கணும்? நல்ல தண்ணிக் கெணத்துல தண்ணி எடுக்க முடியல,கெணத்துக்கு வெளியே வச்சு உட்கார்ந்துக் கிட்டு தண்ணி எடுக்க வர்றவங்க கிட்ட ஒவ்வொரு வாளியா பிச்சை கேக்க வேண்டியிருக்கு.

சில பேரு ஊத்தாமலேயே போயிருதாவ. டீக் கடைக்குள்ள நுழைய முடியல. வெளியே நின்னு நெளிஞ்சி தம்ப்ளர்ல டீ வாங்கிக் குடிக்க வேண்டியிருக்கு. இன்னும்எத்தனையோ வகையில எங்கள அவமானப்படுத்துறீக. இதையெல்லாம் மாத்துறதுக்கு முதல் படியாத்தான் நாங்க கம்மாய்க்குள்ள எறங்கப்போறோம்" - சுப்பன் பகடையின் குரலில் உணர்ச்சிகள் பாய்ச்சலிட்டன.

அவன் ஆழமான பிரச்சினை ஒன்றை கிளறுகிறான் என்பதை உணர்ந்து கொண்ட அம்பலம் இதை வேறு கோதாவில் தான் சந்திக்க வேண்டும் என்றுமனதிற்குள் திட்டமிட்டவராய் முடிவு எதும் எடுக்காமலேயே கூட்டத்தைக் கலைத்தார்.

மறுநாள் மைம்மல் பொழுதில் தனது பரம்பரைச் சொத்தாக மிஞ்சியிருந்த மந்தப் பிஞ்சையில் சுப்பன் பகடை காலடி வைத்தபோது அம்பலக்காரன் திட்டம்நிறைவேறியிருந்தது. கதிர்கள் அறுக்கப்பட்டுக் கோப்பைத் தாள்கள் மட்டும் மொட்டையாக நின்றன. பகீரென்ற அதிர்ச்சி நெஞ்சைத் தாக்க "அடப்பாவிகளா! என் வயித்துல அடிச்சிட்டீங்களே!" என்ற குறலுடன் அழுதான் சுப்பன் பகடை.

அறுக்கப்பட்ட கேப்பைக் கதிர்கள் ஊர்ச்சனங்கள் நடமாடும் பொது இடங்களில் கட்டுக் கட்டாகத் தொங்க விடப்பட்டிருந்தன. அதைப் பார்த்ததும் ஒருகுறுக்கம், அரை குறுக்கமென்று நிலம் வைத்திருந்த மற்ற அசனங்களுக்குப் பீதி ஏற்பட்டது.

அன்று இரவு அசனக் குடிசைகள் ஹோவென்று தீயில் எரிந்தன. படப்புகள் சாம்பலாயின.

அசனங்கள் ஒன்று கூடினார்கள். பதில் நடவடிக்கையில் ஈடுபடுவதென்று முடிவெடுத்தார்கள்.

அசனக் குடிசைகளுக்கு தீவைப்பதில் முன்னோடியாக இருந்தவர் என்று சந்தேகிக்கப்பட்ட மேல் சாதிக்காரரான சோலைச்சாமியின் வலது கைவெட்டப்பட்டது.

அடுத்த இரண்டு தினங்களில் மேல் சாதிக்காரர்கள் தங்கள் கைவரிசைகளை காட்டினார்கள். சுப்பன் பகடையின் வலது கரமாக திகழ்ந்த கருப்பன் பகடையின்தலை உருண்டது.

மறு நாள் இரவு அம்பலக்காரன் மாட்டுத் தொழுவம் எரிந்தது, மாடுகள் கருகின.

இப்படியாக வன்முறை லாவணி நடந்து கொண்டிருந்தது.

எந்த நேரத்தில் என்ன நிகழுமோ என்ற திகில் .. பீதி அந்த கிராமத்து அசனங்களுக்கு ஆதரவாகப் பக்கத்துக் கிராம அசனங்களும் வந்து கூடிவிட்டனர்.

பத்து மைல் தொலைவிலிருந்து போலீஸ் வந்து கிராமத்தில் முகாமிட்டது. நாலைந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

நிலைமை கட்டுக்கடங்கி இருந்தாலும் பகை உணர்ச்சி உள்ளுக்குள் நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்தது.

அன்று மதியம் அந்த ஊர் ஊராட்சி ஒன்றிய நடுநலைப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் யாரும் வீட்டுக்குச் சாப்பிடப் போகவில்லை. பதற்றத்துடன்பிள்ளைகளைத் தேடிக் கொண்டு பள்ளிக் கூடம் வந்து பார்த்தவர்களுக்கு ஒரே ஆச்சரியம்.

பள்ளிக் கூடத்திலிருந்த காந்தியடிகளின் புகைப்படத்துக்குக் கீழே எல்லா மாணவர்களும் அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். பெற்றோர்கள்அழைத்தபோது யாரும் அசையவில்லை. கொஞ்ச நேரத்தில் அம்பலக்காரர் வந்து சேர்ந்தார்.

எல்லாச் சாதி மாணவர்களும் பேதமில்லாமல் நெருக்கமாக உட்கார்ந்திருந்தனர். அம்பலத்தின் மகன் சோமுவும், சுப்பன் பகடையின் மகன் முனியனும்தோள் மேல் கை போட்டுக் கொண்டு ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.

எல்லோரையும் ஒரு நோட்டம் விட்ட அம்பலம் தலைமை ஆசிரியரைப் பார்த்து "என்னய்யா வெவரம்?" என்று கேட்டார்.

காந்தியடிகளின் படத்தை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்துக் கொண்ட தலைமை ஆசிரியர் நிதானமாக பேசத் தொடங்கினார்.

"நம்ம கிராமத்துல ஏற்பட்டிருக்கிற ஜாதிக் கலவரம், குழப்பம் நீங்குற வரைக்கும் யாரும் சாப்பிடப் போறதில்லைனு உங்க பிள்ளைகள் முடிவுசெஞ்சிருக்கிறாங்க. அதாவது உண்ணாவிரதம் இருக்கோம்."

அம்பலம் பலமாகச் சிரித்தார். "உண்ணாவிரதம் இருக்கிற மொகரக் கட்டகளைப் பாரு. ஏலே பசங்களா எல்லோரும் எந்திரிங்கலே, வீட்டுக்குப் போயிகஞ்சித் தண்ணிய குடிங்க."

யாரும் அசையவில்லை.

தலைமை ஆசிரியர் மீண்டும் தொடர்ந்தார். "பிள்ளைகளை வீணாக அதட்டுறத விடக் கொஞ்சம் யோசித்துப் பாருங்க. இவங்க மனசில எந்தப் பேதமும் இல்லை.பேதத்தை நாமதான் வளர்க்கிறோம். அவர்களுக்கு வழி காட்டியா இருக்க வேண்டிய நாமே தப்புச் செஞ்சா எப்படி?

காந்தியடிகளைப் பத்தி நாங்கள் அவங்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறோம். ஜாதிக் கொடுமை நீங்க அவர் பாடுபட்டதையும், அசனங்களை ஆலயப்பிரவேசம் செய்து வச்சதயும் படிக்கிற அவங்க நம்ம ஊர்ல மட்டும் ஏன் இப்படிச் சண்டையின்னு யோசிக்கிறாங்க.

இப்படிப்பட்ட சமூகக் கொடுமைகளை நீக்க காந்தியடிகள் உண்ணாவிரதம் இருந்தார் என்பதைப் படிச்ச சில வெவரம் தெரிஞ்ச மாணவர்கள், நாங்களும் அதுமாதிரி உண்ணாவிரதம் இருக்கப் போறோம்னு என் கிட்ட வந்து சொன்னப்ப நான் மெய் சிலிர்த்துப் போனேன்.

நான் அவங்க உணர்ச்சிகளுக்கு ஒரு வடிகால் அமைத்துக் கொடுத்து உண்ணாவிரதம் நடத்த அனுமதி கொடுத்து உண்ணாவிரதத்துக்கு ஏற்பாடு செஞ்சப்ப மற்றமாணவர்களும் அதில் சேர்ந்துட்டாங்க.

எனக்கும் உங்க பிள்ளைகளுக்கும் அந்த வல்லமையும், உணர்வையும் கொடுத்தவர் அதோ பொக்கை வாயைக் காட்டிச் சிரித்துக் கொண்டிருக்கிறாரேஅந்த மகான்தான். நம்ம நாடு கிராமங்கள்ல வாழறதா அவர் சொன்னாரு. கிராமத்து ஜனங்க கூட அதை மறந்திட்டா எப்படி? "

காந்தியடிகளின் படத்தை நிமிர்ந்து பார்த்த அம்பலக்காரன் மனம் ஒரு கணம் சிலிர்த்தது. ஆனால் அந்தச் சிலிர்ப்பை முரடு தட்டிப் போன மற்ற உணர்வுகள்அமுக்கி விட்டன.

"ஓகோ, எல்லாம் உங்க வேலைதானா? பிள்ளைகளைப் பட்டினிப் போட்டுச் சாகடிக்கத் திட்டம் போட்டிருக்கீகளா? பார்க்கலாம். எவ்வளவுநாழிதான் இவனுக உட்கார்ந்திருக்கானுவன்னு. பசி வயித்தைக் கிள்ளினா அவனவன் வீட்டைப் பார்த்து ஓடுறான்."

மாலையிருள் திரையிட்டது.

அம்பலக்காரர் எதிர்பார்த்தபடி யாரும் அசையவில்லை. வாடிய கீரைத் தண்டாய் சில மாணவர்கள் அப்படி அப்படியே படுத்து விட்டனர். அம்பலத்தின் மகன்சோமு, முனியனின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தான்.

அம்பலத்துக்கு மனம் பதறியது. "ஏலேய் சோமு! இப்ப எந்திரிக்கப் போறியா இல்லையா? " என்று அதட்டினார்.

"நம்ம கிராமத்துல ஜாதி வேறுபாடே இருக்கப்படாது .. எல்லோரும் கம்மாயிக்குள்ள எறங்கி மீன் பிடிக்கணும் .. நீங்க அதுக்கு சரின்னு சொன்னாத்தான்நான் எந்திரிப்பேன், சாப்பிடுவேன் ... "

பசிக் கிறக்கத்தில் தன் மகன் தயங்கிப் பேசியதைக் கேட்டதும் அம்பலத்தின் மனம் இளகியது. முரடு தட்டிப்போன நெஞ்சில் அன்பு கசிந்தது. அவர் மகனைஉற்றுப் பார்த்தார். அங்கே மகாத்மா பொக்கை வாயைக் காட்டி சிரித்தார்.

அம்பலத்தின் கண்கள் மற்ற மாணவர்களின் மேல் சுழன்றன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காந்தியாக .. அப்பப்பா இத்தனை காந்தியடிகளா?ஏறக்குறைய எல்லாப் பெற்றோர்களும் அதே மன நிலையில்தான் இருந்தார்கள்.

அன்று இரவு பள்ளிக் கூடத்திலேயே ஊர்க் கூட்டம் கூடியது. இதுவரை நடந்த சம்பவங்களையெல்லாம் மறந்து ஜாதி பேதமில்லாமல் ஒற்றுமையாய் வாழவேண்டுமென்றும், வருகிற ஞாயிற்றுக்கிழமை கண்மாயை அழிய விடுவதென்றும் அப்போது அசனங்களும் மீன் பிடிக்கலாமென்றும் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.

கூட்டம் முடிந்ததும் ஊர்ச் சனங்களைப் பார்த்து அம்பலம் சொன்னார்.

"பழமையில் மூழ்கிப் போயிருந்த நம்ம இருட்டுக் கண்களை நம்ம பிள்ளைக தொறந்துட்டாங்க. இனிமே தீண்டத்தகாதவங்கன்னு யாரையும் ஒதுக்கிவைக்காதீங்க. எல்லோரும் மனுஷ பெறவிங்க தான். நம்ம கிராமம் மத்த கிராமங்களுக்கு முன்னோடியாக இருக்கட்டும். ... "

ஞாயிற்றுக்கிழமை கண்மாய் அழிந்து கொண்டிருக்கிறது. ஆனால் அந்தக் கிராமம் முன்னை விடப் புதுப் பொலிவுடன் திகழ்கிறது.

- இளசை எஸ்.சுந்தரம்; வானொலி நிலைய அலுவலர், நகைச்சுவை அரங்க முதல்வர் எனப் பன்முகங் கொண்ட படைப்பாளி.

நன்றி: கதாயுதங்கள்.

ஆசிரியர்: - பேராசிரியர் இராஜ முத்திருளாண்டி(akam_aruvukam@sancharnet.in)

இவரது முந்தைய படைப்பு:

1. மனு நீதி - ஒரு மறுபார்வை

2. சூரியக் கவிஞன் - ஷெல்லி!

3. மேரி உல்ஸ்டன் கிராப்ட் - பெண்ணுரிமைப் பேரிகை

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X