• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மேரி உல்ஸ்டன் கிராப்ட் - பெண்ணுரிமைப் பேரிகை

By Staff
|

வரலாற்றின் ஆரம்ப காலங்களில் இருந்து பல நாடுகளில் மனித மாண்புகளைக் காத்துக் கொள்வதற்காகவும், மனித உரிமைகளைவென்றடைவதற்காகவும் தனிப்பட்ட முயற்சிகள், குழுக் கிளர்ச்சிகள், கூட்டு இயக்கங்கள், வீரமிகு போராட்டங்கள் முதலியனதொடர்ந்து வெடித்து வந்துள்ளன.

மற்றொரு பக்கத்தில், மிகத் துல்லியமாகக் குறிப்பிட முடியாதொரு காலகட்டத்தில், மானுடத்தின் "பகுத்தறிவு மறைவுப்பிரதேசத்தில்" மனித இனத்தின் "உயர் பாதி"யான பெண் இனம் பின்னுக்குத் தள்ளப்பட்ட அவலம் எப்படியோ ஏற்பட்டு விட்டது.அதன் தொடர்வினால் "அறிவிக்கப்படாத அடிமை"களாகப் பெண்கள் ஆக்கப்பட்டனர்.

Wollston Craft"உரிமைகள் மறுக்கப்பட்ட சூழல்"களில் பெண்கள் வாழுமாறு விதிக்கப்பட்டனர் என்பது முற்றிலும் உண்மை. மனித உரிமைப்போராட்டங்களின் பிறிதொரு களமாக "ஆண் பெண் சமத்துவம்" என்ற இலட்சியம் கருதப்பட்டு, அத்தகைய இலட்சியத்தைஎட்டுவதற்கான பெண்ணுரிமைப் பயணங்கள் கடந்த சில நூற்றாண்டுகளாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பெண்ணடிமை இருள் போக்கப் பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து மேலை நாடுகளில் "மெல்லிய வெளிச்சக் கீற்றுக்கள்"அவ்வப்போது வெளிப்பட்டு வந்திருக்கின்றன. இருப்பினும் பெண்களுக்கான உரிமைகளின் நியாயங்களைப் (A Vindication ofthe Rights of Women/1792)பேரணியாய் அணிவகுக்கச் செய்ததன் மூலம் பெண்ணுரிமைப் பேரியக்கத்தின் முதல் பேரிகைஎன குறிப்பிடத்தக்க சிறப்புக்குரியவர், இலண்டன் மாநகரில் பிறந்து ஆங்கில இலக்கியக் களத்தில் வீறுடன் (சுயம்புவாய்) எழுந்துநின்ற மேரி உல்ஸ்டன் கிராப்ட் எனும் பெண்மணி ஆவார்.

பெண்ணுரிமை எனப் பேசுவதே தகாத செயல் என்று கருதி வந்த பதினெட்டாம் நூற்றாண்டுச் சமுதாயச் சூழலில்தனிக்குரலெடுத்துப் பெண்ணுரிமை முழக்கமிட்ட மேரி உல்ஸ்டன் கிராப்டிடன் கருத்துக்களை அறிந்து கொள்வது இப்பொருள்குறித்த தெளிவினைத் தரும்.

பெண்ணுரிமை வரலாற்றாசியர்கள் பெரும்பாலும் மேரி உல்ஸ்டன் கிராப்டை மறந்திருப்பது/மறைந்திருப்பது போலத்தான்தோன்றுகிறது. அமெரிக்காவின் லூக்ரீஷியா மோட்(Lucretia Mott, 1793-1880), எலிஸபத் காடி ஸ்டான்டன் (Elzabeth CadyStanton, 1815-1902)ஆகியோர் 1848ம் ஆண்டு சூலை 19ம் நாளில் நியூயார்க் நகரில் தொடங்கிய பெண்கள் உரிமைமாநாட்டில் இருந்துதான் பெண்ணுரிமை இயக்க வரலாறு தொடங்கப்பட்டிருப்பதாக அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

திருமதிகள் மோட்டும், ஸ்டான்டனும் பிறப்பதற்கு முன்னரே, இங்கிலாந்தின் சமுதாயத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியமேரி உல்ஸ்டன் கிராப்டின் பெண்களது உரிமைகளுக்கான நியாயங்களின் (1792) அணிவகுப்பு நடந்திருப்பதையும், அதன்காரணமாகவே "பாவாடை கட்டிய ஓநாய்" (Hyena in petticoat), "தத்துவம் பேசும் பாம்பு" (Philosophizing serpent)என்றெல்லாம் மேரியை நோக்கி இகழ்ச்சிக் கணைகள் இரக்கமின்றி எறியப்பட்டதைப் பெண்ணுரிமை வரலாற்றாசியர்கள் எப்படிமறந்து போனார்கள் என்பது தெரியவில்லை.

இயக்கமாக இல்லாவிட்டாலும் கூடப் "பெண்ணினத்தை அடிமை கொள்ளச் செய்துள்ள தவறான போக்குகள் யாவற்றையும்கடுமையாகச் சாடுவதற்கு "உறுதி பூண்டு தனித்து நின்று - "பெண்களின் தனிப்பட்ட மற்றும் அரசியல் கோரிக்கைகளை"வலியுறுத்தியதற்காக - "பெண்களின் முன்னேற்றத்திற்கும் அவர்கள் ஆண்களுடன் சம நிலை எய்திடவும் உள்ள தடைகளைப்போக்கிட உதவுவதற்காக - பிற்காலத்தில் எழுந்து கிளைத்துள்ள பெண்ணுரிமை இயக்கங்களுக்கெல்லாம் முக்கியமாகப்பயன்படத்தக்க் கருத்துப் பேழையை வழங்கியதற்காக - மேரி உல்ஸ்டன் கிராப்ட்டைப் "பெண்ணுரிமை வரலாற்றின் கலங்கரைவிளக்கம்" எனத் தயங்காமற் கூறலாம்.

ஆண்- பெண் உறவு நிலைகளின் அடிப்படையில் இருந்து உருப்படியான மாற்றங்கள் நிகழ வேண்டும். அதனைத் தொடர்ந்துஅவர்களிடையே இரு பாலினத்தவரும் சரி நிகர் சமானம் என்ற அறிவுப்பூர்வமான உறுதி பிறக்க வேண்டும். அத்தகைய உலகம்தம் வாழ்நாளில் உருவாகிட வேண்டும் எனக் கனவு கண்டவர் அவர். அவரது கனவுகளின் எழுத்து வடிவம்தான் பதின்மூன்றுநெடிய (Chapters) பகுதிகளைக் கொண்ட "பெண்கள் உரிமைகளுக்கான நியாயங்கள்" (A Vindication of the Rights ofWomen) என்ற நூலாகும். அந்த ஒரு நூலே அவரது புகழுக்கும் இகழ்ச்சிக்கும் காரணமாய் அமைந்தது என்ற அன்றையமதிப்பீடுகள் சொல்கின்றன.

அன்றாடம் குடித்துச் சொத்துக்களை விரயமாக்கியதுடன் குடும்பத்தாருக்குத் தினம் "நரகம் இதுதான்" எனக் காட்டும் வகையில்நடந்து கொண்ட தந்தை; முறிந்து போன திருமணத்தாலும் கொடுமைக்கார கணவனாலும் உடைந்து போயிருந்த சகோதரி;உலர்ந்து போன மண வாழ்க்கையால் உயிர் உதிர்வது போலிருந்த உயிர்த் தோழி; காதலித்தவள் தன்னை ஒரு குழந்தைக்குத்தாயாக்கி விட்டு நட்டாற்றில் கைவிட்டுச் சென்ற சொந்த அவலம்; இவற்றின் அழுத்தங்களால் வாழ்க்கைப் பேராற்றில் மூழ்கிப்போய் விடாமல், தானே மேலெழுந்து வந்த பட்டறிவுதான் மேரியின் சொத்து.

பெருங்குடிப் பிறப்போ, சிறப்பான கல்வியோ, நுணுக்கமான பயிற்சியோ எதுவும் பெற்றிராத நிலையில் - தமது பத்தொன்பதாவதுவயதில் இவ்வுலகை எதிர்கொள்ள வீட்டை விட்டு வெளியில் வந்து - மிகச் சாதாரணமான வேலைகளை மேற்கொண்டு, தனக்கும்தன் குடும்பத்தாதருக்கும் உதவியாய் இருக்க வேண்டிய அவல நிலையே அவன் களம்.

குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளும் ஆயாவாக வேலை செய்து வரும்போதே, பல துறைகளில் தமது அறிவினை வளர்த்துக்கொள்வதிலும், பிரெஞ்சு மொழி போன்ற பிற மொழிகளைக் கற்பதிலும் கொண்டிருந்த ஆர்வம் அவருக்குக் கருவி. வாழ்க்கையேபோராட்டமாக இருந்தபோதிலும், பட்டறிவாலும், படிப்பறிவாலும் பெற்ற கருவிகளின் துணை கொண்டு தன்னைத்தானேசெப்பற்ற சிற்பமாகச் செதுக்கிக் கொண்டவர் மேரி.

அவலமான அந்தச் சூழலில் வாழ்ந்த மேரியின் காலத்துச் சமுதாயச் சூழல் எப்படி என்றால், பெண்கள் வீட்டிற்குரியவர்கள் ,அவர்களுக்குச் சமுதாயப் பொறுப்பெல்லாம் சரிப்பட்டு வராது, பெண்களுக்குக் கல்வி தேவையில்லை; அதிகம் படித்தபெண்களைக் கணவர்கள் விரும்புவதில்லை என்பன போன்ற பழமைக் கருத்துக்கள் மலிருந்திருந்த சூழல் அது.

Wollston Craftசட்டம் கூடப் பாகுபாடு என்ற நிழலைப் பெண்களின் மீது படியச் செய்திருந்த காலம், பெண்கள் "செயற்கையானவர்கள்,வலுவற்றவர்கள், சமுதாயத்திற்குப் பெரிய பயன் எதுவும் தர இயலாதவர்கள்" என்றே அக்கால இலக்கியங்கள் கூட அவர்களைச்சித்தரித்து நின்றன. இத்தகைய சூழல்களின் பின்புலத்தில் தான் பெண்ணுரிமைக்கான மேரியின் நியாயங்கள் எழுந்தன.

பெண் இனத்தைப் பின்னுக்குத் தள்ளிய பல காரணங்களில், ஆண் -பெண் உறவு நிலைகள் குறித்துத் தவறான கற்பிதங்கள்தொடர்ந்து நிலவி வருவதே முக்கியக் காரணம் என அவர் எடுத்துரைத்தார்." குழந்தைப் பருவத்திலிருந்தே பெண்களுக்குத்தவறான கற்பிப்புகள் அளிக்கப்பட்டு விடுகின்றன" என அவர் வருந்தினார். "அழகாக இருந்து விட்டால் குறைந்தது இருபதுஆண்டுகளாவது பெண்களுக்குக் கவலையில்லை" எனப் பெற்றோர்கள் கருதியது கண்டு அவர் மனம் நொந்தார்.

இருபாலினரும் இணைந்து வாழும் இவ்வுலகில் இருவருமே இணக்கமான போக்குக் கொள்ள வேண்டியதன்இன்றியமையாமையை வலியுறுத்தும் நோக்கில், "நான் சகமனிதனாக ஆண் மகனை நேசிக்கிறேன்" என்றார். ஆனால் "அவனதுஅதிகாரம் எதுவும் என்னிடம் செல்லாது" என்றும் உறுதியாய் முழங்கினார். மேரி வாழ்ந்த காலச் சூழலில் இத்தகைய கருத்துக்கள்அபஸ்வரம் போல் ஒலித்திருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

பெண்களிடம் ஆண்கள் கொடுங்கோலர்களைப் போல நடந்து வருகிறார்களே என அவர் ஆதங்கப்பட்டார். "கொடுங்கோலர்கள்மக்களிடம் பகுத்தறிவு வளரக் கூடாது என்னும் கபட நோக்கில் அதனை நசுக்க முற்படுவது போலத்தான், ஆண்களும்பெண்களைப் பொருத்தவரையில் நடந்து கொள்கிறார்கள். இது ஏன்? " என்ற ஆவேச வினா இன்றைக்கு இருநூறு ஆண்டுகளுக்குமுன்பே மேரியிடமிருந்து கிளம்பியது.

"பணிவு மிக்க அடிமைகளையே கொடுங்கோலர்கள் மிகவும் விரும்புவார்கள். அதுபோலத் தமது மனைவியர் வாய் பேசாதவிளையாட்டுப் பொம்மைகளாக இருப்பதையே கணவன்மார்கள் விரும்புகிறார்கள்" என்று சாடினார். இதைவிடக் கொடுமைஎன்னவென்றால், "தமது குடிமக்கள் மீது இறையுரிமை இருப்பதாக மன்னர்கள் கருதியிருப்பது போலக் கணவன்மார்களும் தம்மனைவிகள் மேல் அத்தகைய (அடக்கியாளும்) உரிமைகள் தமக்கு இருப்பதாகப் பாவித்து நடந்து கொள்கிறார்களே" என்றுவேதனைப்பட்டார்.

பெண்களைப் பிணைத்துள்ள தளைகள் யாவும் பொடிப் பொடியாக வேண்டும், எல்லாவகையிலும் ஆண்களுடன் பெண்கள் சரிசமமே என்ற நிலை பெண்களுக்கு உறுதியாக வேண்டும். அப்படிப்பட்ட உறுதி நிலவும் சமுதாயத்தில் "பாசமுள்ள மகள்களாக-நேசம் நிறைந்த சகோதரிகளாக- ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளத்தக்க, வழுவாத மனைவியராக- நற்குணமிக்க தாய்களாக -இவ்வுலகின் மேன்மை மிக்க குடிமக்களாகப் பெண்கள் மலர்ந்திருப்பார்கள்" என்று அவர் நம்பிக்கையூட்டினார்.

பெண்களுக்குக் காலம் காலமாக கல்வி மறுக்கப்பட்டதுதான் பெண்களின் பின்னடைவிற்கான முன்னணிக் காரணம் என மேரிஉறுதிபட நம்பினார். ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கும் கல்வி அளிக்கப்படுவது மிக மிக அவசியம் என வாதிட்டார்."வீட்டிற்கு மட்டும் உரியவளான பெண்களுக்கு கல்வி எதற்கு? " என்று அக்காலத்தில் கேட்கப்பட்டது.

"கல்வி ஒன்றுதான் பெண்களை ஆண்களுக்குச் சமமாக உயர்த்த வல்ல ஒரே கருவி; சரியான கருவி" ஆகவே பெண் கல்விக்குஎதிரான கருத்துக்களில் எந்தவித நியாயமும் இல்லை என்றார் மேரி. மகளிர் கல்விக்கான சிந்தனைகள் (Thoughts on theEducation of Daughters) என்ற மேரியின் முதல் நூல், பெண் கல்வியினைப் பெரிதும் வலியுறுத்தி நிற்பதாகும். பின்னாட்களில்பெரிதும் பேசப்பட்ட அவன் பெண்கள் உரிமைகளுக்கான நியாயங்கள் என்ற நூலுக்கு அடிப்படை அமைத்துத் தந்தது, மகளிர்கல்விக்கான சிந்தனைகள் எனும் அவரது முதல் நூலேயாகும். தமது முதல் நூலினை வெளியிட்ட பின்னர்தான் முழு நேர எழுத்துப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள மேரிக்கு வாய்ப்பு அமைந்தது.

கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் பெண்களுக்குக் குறிப்பிட்ட ஒரு சில துறைகளை ஒதுக்கி வைத்திருப்பதை அவர் எதிர்த்தார்.எல்லாத் துறைகளிலும் பெண்கள் கல்வி பெறுவதற்கும், பணியாற்றுவதற்கும் வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும் என்றுவாதிட்டார். குறிப்பாகப் பெண்களுக்கு உயிர் காக்கும் மருத்துவக் கல்வி, செவிலியர் பயிற்சி முதலியன அளிக்கப்பட வேண்டும்என்று வலியுறுத்தினார்.

1792ல் பெண்களுக்கு மருத்துவக் கல்வி அளிக்கப்பட வேண்டும் என அவர் வற்புறுத்தி, ஐம்பதாண்டுகளுக்குப் பின்னரே -1849ம் ஆண்டில் - எலிஸபெத் பிளாக்பெல் என்ற பெண் முதன் முதலாக மருத்துவப் பட்டம் பெற அமெரிக்காவில் வாய்ப்புகிடைத்தது. அதுவரை மருத்துவக் கல்வி பெண்களுக்கு எட்டாக் கனியாகத்தான் இருந்தது.

பொருளாதாரரீதியில் பெண்ணானவள் ஒரு ஆணைச் சார்ந்திருக்க வேண்டியிருப்பதால்தான் திருமணங்கள் பெண்களுக்குப்பெரிதும் அவசியமாகி விடுகின்றன. எவரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லாமல், தன் சொந்தக் காலில் நின்று கொள்ளஏதுவான கல்வியைப் பெறுவதோடு நின்று விடாமல், தொழில், வர்த்தக முயற்சிகளிலும் பெண்கள் ஈடுபட வேண்டும் என அவர்வலியுறுத்தினார். சமுதாயம் அத்தகைய வாய்ப்புகளைப் பெண்களுக்கு அளிக்க முன் வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

கிராமப்புறங்களில் பள்ளி செல்லும் வயதுக் குழந்தைகள் படிக்க வாய்ப்புகளின்றி அறியாமையில் வளர்ந்து வந்ததைக் கண்டுஅவர் மிகவும் வருந்தினார். ஒவ்வொரு போதகக் கிராமத்திலும் (parish village) ஆண் - பெண் இருபாலாரும் சேர்ந்து படிக்கஉதவும் வகையில் மத நிறுவனங்கள் (Church) உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என வாதிட்டார்.

ஆரம்ப நிலைகளிற்கூட "ஆணும், பெண்ணும் சேர்ந்து படிக்கக் கூடாது" என்று பழமைவாதம் பேசிய சமுதாயத்திற்கு, "இருவரும்சேர்ந்து படிப்பதால் தவறுகள் நிகழ்வதைக் காட்டிலும், ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்ளும் பக்குவம் அதிகமாகஏற்படும்" என்று விளக்கமளித்து, இருபாலர் கல்விக்கு (Co-education) ஆதரவு காட்டினார்.

சமுதாயத்தில் பெண்களைத் தாழ்வானவர்களாகக் கருதுகிறார்களே, அது ஏன் என்பதற்குத் தெளிவான காரணங்கள் இல்லையேஎன அவர் கவலை கொண்டார். "இயற்கை நியதிப்படி (உடற்கூறளவில்) சற்று வலுக் குறைவானவர்களாக இருப்பதால் பெண்கள்தாழ்வானவர்கள் என்றானதோ? அல்லது ஈடன் தோட்டத்து முதல் பெண் செய்த தவறு காரணமாகப் பெண் குலமே தண்டனைக்குஉள்ளாக்கப்பட்டதோ" என்றெல்லாம் அவர் வேதனையோடு வினவினார்.

அவ்வேதனையிலிருந்து மீண்டு, ஆண்கள் எவ்வாறு பெண்களைத் தாழ்த்தி விடுகிறார்கள் என்று ஆராய்ந்து கருத்து சொன்னார்."சமூக அமைப்புகளில் பெண்கள் எவ்வாறு தாழ்த்தப்படுகிறார்கள் என்றால், ஆரம்பம் முதல் பெண்களது பெருமைகள் (கற்பு,நாணம் போன்றவை) குறித்து ஆண்கள் தவறான கற்பிதங்களை ஏற்படுத்தி வந்திருப்பதன் மூலமாகத்தான்" என்று விளக்கினார்.

"மதிக்கப்படுவது போல் தோற்றமளிக்கும் பெண்கள், அதிகமாக ஒடுக்கப்பட்ட பெண்களாக இருப்பார்கள்" என்று சமுதாயத்தின்இரட்டை வேடத்தைத் தோலுரித்துக் காட்டினார். "மிகவும் பண்பட்டது போலத் தோன்றும் சமுதாயங்களில் கூடப் பெண்களுக்குஉரிய மதிப்பு அளிக்கப்படக் காணோம்" என்றார். மேலும் "சில சமுதாயங்களில் பெண்களுக்கு மதிப்பளிக்கப்பட்டிருப்பதுபோன்ற மாயத் தோற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றைக் கண்டு யாரும் ஏமாந்து விடக் கூடாது" என்று அவர்எச்சரித்தார்.

பல பெண்ணுரிமைவாதிகள் முற்றிலும் ஆண் எதிர்ப்பாளர்களாக (anti-men), ஆண் வெறுப்பாளர்களாக (man-haters) மாறிநின்று கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளதைப் பெண்ணிரிமைக் களங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. ஆனால் அவைபெண்ணுரிமை இயக்கத்தின் சரியான முன் மாதிரிகளாகக் கொள்ளத்தக்க போக்குகள் அல்ல. அத்தகைய நிலைப்பாடுகள்நிதர்சனத்தை மறந்தவை.

ஆணும் பெண்ணும் இணைந்து முயன்றுதான் பெண்ணுரிமைத் தளங்களை விரிவடையச் செய்ய முடியும். பெண்ணுரிமைக்குபேரிகை கொட்டிய முதல்வி மேரியும் இத்தகைய சரியான கருத்தினையே கொண்டிருந்தது பெருமைக்குரியதாகும்.

ஆண்-பெண் ஈர்ப்பு என்பது இயற்கையானது. ஆண் பெண்ணால் ஈர்க்கப்படுவதும், பெண் ஆணால் ஈர்க்கப்படுவதும் தவறாகாதுஎன்று கூறினார். உண்மையான காரணத்தின் அடிப்படையில் ஆணுக்கு மதிப்பளிப்பது ஏற்கக் கூடியதுதான். ஆனால் அவன் ஆண்என்பதற்காக மட்டுமே மதிக்க முடியாது என்று விளக்கமளித்தார்.

பெண்களுக்குப் பெருமை சேர்ப்பது என ஆண்கள் கருதும் (கற்பு, ஒழுக்கம் முதலிய) மதிப்பீடுகளில் இருவருக்கும் பொதுவானஒழுகலாறுகள் அமைக்கப்பட வேண்டும். தேவையற்ற சுமைகளைப் பெண்கள் மீது சுமத்தி விட்டு, அவர்களது முன்னேற்றத்திற்குமுட்டுக்கட்டை போடும் பத்தாம்பசலித்தனம் தொடரக் கூடாது என்றார்.

நல்ல தந்தைகளாக ஆண்கள் மாறும்போது, பெண்களும் இயல்பாகவே நல்ல தாய்களாக விளங்குவார்கள். ஆகவே இருபாலரும்ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் என்றார். பெண்ணாகிய நான் மட்டுமே பேசுவதால் பெண்களுக்கான உரிமைகள் பிறந்து விடாது.பரந்த மனங்கொண்ட பெருந்தன்மையான ஆண்களின் மனதிலும் பெண்களின் உரிமைகளுக்கான நியாயங்கள் பதியனிடப்படவேண்டும். அப்போதுதான் பெண்ணுரிமைகள் எங்கும் மலரும் என்று வாழ்க்கையின் உண்மை நிலையை உணர்ந்து பேசினார்.

பெண்ணுரிமை என்பது பெண்களுக்கு மட்டும் உரிய கேட்பு (Claim) என்று எவரும் கருதி விடக் கூடாது. பெண்ணினம் மனிதஇனத்தின் சரி பாதி; அதற்கும் மேலே. "மனித இனத்தின் சரி பாதிக்கு மறுக்கப்பட்டிருக்கும் நீதியை நிலை நாட்டுவதேபெண்ணுரிமையின் அடிப்படை நியாயம் ஆகும். மனித இனத்தின் சரி பாதியைப் பின்னுக்குத் தள்ளி விட்டு முழுமையானமேன்மையை மனிதன் எப்படி அடைய முடியும்?" என்பதே மேரியின் வினா.

ஆகவே "பெண்ணுரிமை என்பது மனித குலம் முழுவதுக்கான அன்பால் விளைந்த விழைவு; அது மட்டுமல்ல, மனிதகுலத்தின்முழு மேம்பாட்டிற்கான அவசியம் " என்று மேரி தெளிவுபடுத்தினார். "மனித உரிமைகளையும், சமூக நீதிகளையும் அவாவும்எந்தச் சமுதாயத்திற்கும் ஆண்-பெண் சமத்துவம் தான் அடிப்படையாக அமைந்திருக்கும்" என்று ஐ.நா. பொதுச்சபைவலியுறுத்தியிருப்பதை ஒப்பிட்டுப் பார்க்கும்போது மேரி உல்ஸ்டன் கிராப்டின் பெண் உரிமைக்கான நியாயங்கள் எவ்வளவுமுன்னோடியானவை என்பது விளங்கும்.

பெரும்பாலான நாடுகளில் பெண்களுக்கான அரசியல் உரிமைகளை ஒட்டுமொத்தமாக அளிப்பதில் ஒருவிதத் தயக்கம்தான்நிலவி வந்திருக்கிறது. பெண்களது அரசியல் பங்கேற்பு உரிமைகளுக்கு மிகவும் அடிப்படையானது அவர்களுக்கு வாக்குரிமைவழங்கப்படுவதாகும்.

ஐரோப்பாவின் பல நாடுகளில் பத்தொன்பதாம் நூற்றாண்டிற்குப் பின்னர்தான் மெல்ல மெல்ல பெண்களுக்கு வாக்குரிமைகிட்டியுள்ளது. "தேர்ந்தெடுக்கப்படுகின்ற நாடாளுமன்ற அமைப்பின் தாயகம்" என்று பெருமை கொண்டாடும் இங்கிலாந்தில்1919ம் ஆண்டில்தான் முப்பது வயது நிரம்பிய பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.

அமெரிக்க நாட்டுப் பெண்களுக்கு அதற்கடுத்த ஆண்டில் வாக்களிக்கும் உரிமை வந்தது. பெரும்பாலான நாடுகளில் (90நாடுகள்) இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர்தான் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டதாக வரலாறுகூறுகிறது. அமெரிக்க அரசியல் சட்டத்தில் 1868ம் ஆண்டில் ஏற்படுத்திய பதினான்காவது திருத்தம், ஆப்பிக்க- அமெரிக்க ஆண்அடிமைகளுக்கு வாக்களிக்க உரிமை அளித்தது. ஆனால் அதே நேரத்தில் பெண்களுக்கு வெளிப்படையாகவே அவ்வுரிமையைமறுத்தது என்ற செய்தி இங்கு குறிப்பிடத்தக்கது.

(அது மட்டுமல்ல, பெண்ணுரிமை இயக்கத்தின் வழித்தோன்றலான சூசன் பி.அந்தோணி (Susan B Antony) 1872ம் ஆண்டில்நியூயார்க் ரோச்செஸ்டர் பகுதியில் வாக்காளராக தன்னைப் பதிவு செய்து வாக்களித்த குற்றத்திற்காக (?) கைது செய்யப்பட்டுஅபராதம் விதிக்கப்பட்டார்.)

இத்தகைய பின்புலத்தில் 1792ம் ஆண்டிலேயே பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையுடன் அரசு நிர்வாகத்தில் பங்கேற்க அதிகவாய்ப்புகளும் தரப்பட வேண்டும் என்று வலியுறுத்திய மேரியின் துணிவும் பெருமையும் இங்கு எண்ணிப் பார்க்கத்தக்கதாகும்.

பெண்களை "ஆதரவு நாடும் அழகிய அணிகலன்களாக" மட்டும் கருதி வந்த பழமைவாதங்களை வலுவோடு எதிர்த்தவர் மேரி.அடிமைத்தனத்தை வளர்த்துக் கொள்வதற்குதவும் கல்வியே பெண்களுக்கு வழங்கப்பட்டதையும், "ஆடம்பரங்களிலும்சோம்பேறித்தனத்திலும் பெண்கள் திளைத்துக் கிடந்ததையும்" அவர் கடுமையாக சாடினார்.

அவர்களது மீட்சிக்குக் கல்வியே சரியான ஒரே கருவி என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். பெண்கள் தங்கள்சுயமதிப்பினைக் கல்வியைத் தவிர வேறு எதனாலும் உருவாக்கி உயர்த்திக் கொள்ள முடியாது என்று தெளிவுபட உரைத்தார்.அதற்கு அவரே எடுத்துக் காட்டாக வாழ்ந்தார்.

பெண்ணுரிமை இயக்கங்களெல்லாம் கிளைப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பே பெண்ணுரிமைக் களத்தில் மேரி உல்ஸ்டன்கிராப்டின் தனிக் குரல் முழங்கியது. பெண்ணுரிமைகளுக்கான நியாயங்கள் என்ற அவரது நூல் பெண்ணுமை இயக்கங்களின்கருத்துக்களுக்கான முக்கியப் பெட்டகமாக இன்று வரை விளங்கி வருகிறது.

மேரி உல்ஸ்டன் கிராப்டின் ஆண்-பெண் சமத்துவக் கோட்பாடுகள் ஆங்கில இலக்கியத்தின் புரட்சிக் கவிஞன் ஷெல்லியின்கருத்துக்களிலும், கவிதைகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. அரசியல் நீதி (Politcal Justice) என்ற புரட்சிகரமானகொள்கைகள் நிரம்பிய கருத்தாழமிக்க நூலினை எழுதிய வில்லியம் காட்வின், மேரி உல்ஸ்டன் கிராப்ட் ஆகிய இருவருக்கும்பிறந்த பெண் குழந்தைதான் ஷெல்லியின் காதல் மனைவி மேரி ஷெல்லி.

மேரி (ஷெல்லி) பிறந்த அதே ஆண்டில் (1797) உல்ஸ்டன் கிராப்ட் மறைந்து போனார். ஷெல்லி பிறந்த ஆண்டில் (1792)இலக்கியக் களத்திலிருந்து உல்ஸ்டன் கிராப்ட் இவ்வுலகிற்கு அளித்துச் சென்றுள்ள "பெண்கள் உரிமைகளுக்கான நியாயங்கள்",பெண்ணுரிமைக்கான நெடிய பயணத்திற்கு கலங்கரை விளக்காய் நின்று ஒளி வீசி, வழிகாட்டி வருகின்றன.

(இன்று சர்வதேச மகளிர் தினம்)

- பேராசிரியர் இராஜ முத்திருளாண்டி(akam_aruvukam@sancharnet.in)

இவரது முந்தைய படைப்பு:

1. மனு நீதி - ஒரு மறுபார்வை

2. சூரியக் கவிஞன் - ஷெல்லி!

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X