• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சபாஷ் ஞாநி

By Staff
|

திரு. ஞாநி அவர்களின் கட்டுரையைப் (/art-culture/essays/jnani.html) படித்தேன். அவரும்,சின்னக்குத்தூசியும் இணைந்து சங்கராச்சாரியாரை முன்னர் எடுத்த பேட்டியில்(/art-culture/essays/sivakumar1.html) இருக்கும் சரக்கு, இக்கட்டுரையில் சுத்தமாகஇல்லையென்கின்ற ஆதங்கம் பிடுங்கித் தின்கின்றது.

வலைபூக்களில் இக்கட்டுரையை விமர்சனம் செய்த சிலர் தட்டையாக இருக்கின்றது என்றார்கள். உண்மைதான். ஞாநியின் எழுத்துவன்மையைப் பற்றி அறிந்த பலருக்கும் இந்த வாசிப்பு ஏமாற்றமாக இருந்திருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

அனைத்து ஊடகங்களிலும் வரும் மறுப்பை (Disclaimer) நானும் முன்னரே சொல்லி விடுகின்றேன்(!!). தீபாவளி கொண்டாடாதகுடும்பத்தில் உதித்தவன் நான். முத்திரை குத்த விரும்புவோரின் விருப்பத்திற்காக இதை முன்னரே சொல்லியாக வேண்டும். இக்கட்டுரைபச்சையாகவோ, மஞ்சளாகவோ, காவியாகவோ, கறுப்பாகவோ பார்வையில் பட்டால், அது உங்கள் கண்களின் குற்றமே தவிர எனதுநிறமதுவல்ல.

ஞாநியின் கட்டுரை ஆரம்பமே வித்தியாசமாக இருக்கின்றது. "கிரிமினல் சங்கராச்சாரி. நாம் சொல்லவில்லை! அரசே சொல்லுகிறது!"அப்படியென்றால் இதுவரை அரசு சொன்னதை எல்லாம் வேதவாக்காக ஞாநி எடுத்துக் கொண்டார் போலிருக்கின்றது. ஆமாம்...ஒருகிரிமினலை அரசு இயந்திரம் எவ்வாறு கையாளவேண்டும்?

கைது செய்யப்போன அதிகாரிகள் காலணிகளை கழட்டிவிட்டு, மிகவும் பவ்யமாக கைகட்டி கைது செய்து சொகுசாக அழைத்துவந்திருக்கின்றார்கள். மேலும் சிறையில் காவியுடுத்தி, பூஜை புனஸ்காரத்திற்கு ஏற்பாடு செய்து, தண்டத்தோடு உலவ வகை செய்து,பிராமண அதிகாரியை மேற்பார்வை பார்க்கச் செய்து, பிராமண கைதியை விட்டு சமைக்கச் செய்து என்று ஏகத்திற்கும் சலுகைப் பட்டியல்நீளுகின்றது. ஒரு கொலைக் குற்றத்தில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கும் ஒரு கிரிமினலை அரசு நடத்தும் விதம்பாராட்டுதற்குரியதுதான். இல்லையா ஞாநி அவர்களே?

இக்குற்றத்தையே நீங்களோ அல்லது நானோ செய்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? கணித்துறையில் திட்ட மேலாளராக இருக்கும் எனக்குமடிக்கணி (laptop) கொடுத்து, இணைய இணைப்புத் தந்து சிறைச்சாலையில் உலவ விடுமா இந்த அரசு? ஜெயலலிதா அரசின் இந்தஇரட்டை வேடத்தைப் பற்றி ஞாநி ஏன் வெளிப்படையாகச் சாடாது பூடகமாய் மெளனம் காக்க வேண்டும்?

அதே சமயம் தனது கேள்வி-பதில் பகுதியில் (/art-culture/essays/jnani1.html), சங்கரமடம்காப்பாற்றப் படவேண்டும், சங்கர மடத்தில் வருமான வரித்துறை சோதனையிட வேண்டி தனது அமைச்சரை கருணாநிதி பணிக்கவில்லை,அப்பு முன்னாள் திமுக அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் ஆள்; அதனால் கருணாநிதிக்கும் இவ்வழக்கில் உள்நோக்கம் இருக்கலாம் என்றுகருணாநிதியின் இரட்டை வேடத்தைக் கவனமாகக் கலைக்கின்றார் ஞாநி.

அவை யாவுமே கருணாநிதியைப் பற்றி மிகச் சரியான கருத்துகள்தாம். ஆனால் சங்கராச்சாரிக்காக சனிக்கிழமை நீதிமன்றம்கூடியதிலிருந்து, தனிப்பட்ட செஸ்னா விமானம், டயோட்டா குவாலிஸில் பயணம், போலீஸ் அவர் மீது சுட்டுவிரல் கூடப் படாமல்நடத்தும் விதம், தனது அரசியல் வாழ்விலேயே எடுத்த வேதனையான முடிவு என்று ஜெயலலிதா டில்லியில் கொடுத்த அறிக்கை என்றுஅரசின் இரட்டை நிலைப்பாட்டினை ஞாநி ஏற்றுக் கொள்கிறாரா?

அரசாங்கத்திற்கு தெரியாமல் இத்தகைய சலுகைகள் கிரிமினல் சங்கராச்சாரிக்கு கிட்டியிருக்குமா? கோவை குண்டு வெடிப்பு வழக்கில்சிக்கிய அப்துல் நாசர் மஹ்தனிக்கு கால் வலியென்று கேரள மருத்துவமனையில் சிகிச்சை கேட்டு உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல்செய்தார். தமிழக அரசு செய்த பதில் மனுவில் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ள அனுமதியும் தரப்பட்டது.அம்மனுவை தாக்கல் செய்த தமிழ்நாட்டின் உள்துறை செயலாளராயிருந்த முனீர் ஹோதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

காரணமென்ன? தமிழக முதல்வருக்கே இத்தகவல் தெரியாததுதானாம். முனீர் ஹோதா ஆகஸ்ட் மாத இறுதியில் சஸ்பெண்ட் ஆனார்.ஆனால் அவர் அரசின் சார்பில் பதில் மனு பிப்ரவரி மாதத்திலேயே தாக்கல் செய்து விட்டார். ஐந்து மாதங்களாக முதல்வர் என்ன செய்தார்?தீவிரவாதி மஹ்தனிக்கு ஒரு நியாயம். கிரிமினல் சங்கராச்சாரிக்கு அதே அரசாங்கம் வேறு நியாயம் படிக்கின்றது. இது ஜெயலலிதாஅரசாங்கத்தின் இரட்டை வேடமில்லையா?

இக்கைது வரலாற்றில் இடம் பெறத்தக்க நிகழ்வு என்று ஞானி சொல்வதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆஹா எத்தகைய அபாரகண்டுபிடிப்பு? இதை ஞாநி சொல்லித்தான் ஞாலம் அறிய வேண்டுமா? கருணாநிதி முதலமைச்சராய் இருந்தால் இக்கைதைநிறைவேற்றியிருப்பாரா என்று விஷமத்தனமான கேள்வி வேறு. அவரும் சராசரி அரசியல்வாதிதான். தனக்குச் சாதகமென்றால்கண்டிப்பாய் செய்திருப்பார்

. ஆட்சிக்கலைப்பு என்ற பதம் கருணாநிதிக்குப் புதிதில்லை. மேலும் சங்கராச்சாரிக்கு ஓட்டு வங்கியில்லையென்பதையும் தாங்கள்அறிவீர்கள். திமுக ஒரு பிராந்தியக்கட்சி தான். தேசீயக்கட்சியா என்ன மற்ற மாநிலங்கள் பற்றி கருணாநிதி கவலைப்பட? ஏன்ஜெயலலிதாவே பிஜேபி ஆட்சி மத்தியில் இருந்தால் சங்கராச்சாரி மீது கை வைத்திருப்பாரா என்பதும் யோசிக்க வேண்டியவிஷயம்தானே?

ஜெயேந்திரர் கைது பற்றி ஜெயலலிதாவை புகழ்ந்து எழுதிய ஞாநியின் கரம், நீதிபதியிலிருந்து, ஜனாதிபதி வரை காஞ்சியில் நமஸ்கரித்தசம்பவங்கள் கூறி வழக்கின் எதிர்காலப் போக்கு பற்றி சந்தேகங்கள் கிளறுகின்றது. ஜெயலலிதா திருந்தியது (?) போல் ஏன் நீதிபதிகளும்,குடியசுத் தலைவரும் திருந்தக் கூடாது? திருந்த வாய்ப்புத்தான் கொடுத்துப் பார்ப்போமே!

நீதி தனது வழியில் பயணித்து உண்மையை நிலை நாட்டட்டும். இதற்கு ஐ.நா.வின் உலக நீதிமன்றம் அவசியமில்லை. ஜெ துதி பாட முடிவுசெய்த பின்னர் அதை கருத்தில் வடிக்க ஞாநி அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை. கருணாநிதி பேசுவது போலி பகுத்தறிவு, வீராணம்தண்ணீர், வீரப்ப சம்ஹாரம் என்று கடவுள் பக்தையின் சாதனைகளை பட்டியலிட பகுத்தறிவு பகலவன் ஞாநி தேவையில்லை. அமைச்சர்ஓ பன்னீர் செல்வமே போதும்.

வீராணம் திட்டம் கிடப்பில் போடப்பட வேண்டியது, அதில் ஊழல் செய்து தமிழகத்தில் லஞ்ச லாவண்யத்தே அறிமுகப்படுத்தியவர்கருணாநிதியென்று காலம் காலமாய் எம்ஜியாரும், ஜெயலலிதாவும் அரசியல் பேசியதை ஞாநி சுலபமாக மறந்து விட்டாரா? இன்று அதேவீராணத்தில் இருந்து (சிறிய) குழாய் போட்டு சென்னைக்குத் தண்ணீர் கொண்டு வந்த போது இத்திட்டத்திற்கு முன்னோடியான கருணாநிதி(ஊழல் புரிந்திருப்பினும்) ம(ப்)றக்கப்படுகின்றார்.

உயிரோடு பிடித்து, பல அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழிப்பதை விட்டு விட்டு, பொறியில் சிக்கிய எலியான வீரப்பனைஎன்கெளண்டர் வதம் கண்டு பலருக்கும் புனர்வாழ்வளித்த ஜெ சரணம் பாடுங்கள் ஞாநி! ஆமாம் ஜெவின் முரட்டுப் பிடிவாதம் எல்லாபகுத்தறிவாளர்களாலும் (குறிப்பாக பெரியார் திராவிட கழக அன்பர்கள்), எல்லா அசல் பக்தர்களாலும் பாராட்டப்பட வேண்டியதே!

வர வர இடதுசாரிகள் மற்றும் பகுத்தறிவாதிகளின் நிலைப்பாடும், திராவிடத் திராபைகள் போலவே திரிந்து போய், என் சிற்றறிவிற்குஎட்டமாட்டேன் என்கின்றது. பாவம்...கருணாநிதி மதித்ததால் மகாப் பெரியவாளையும் ஞாநி விட்டு வைக்கவில்லை. பகுத்தறிவைமுன்னிறுத்தி மகாப்பெரியவாளின் தீண்டாமை மற்றும் வருணாசிரமத்தை கண்டிக்க வேண்டிய ஞாநி, கருணாநிதியை நிந்தித்து, ஜெ துதிபாடுவது சகிக்கவில்லை. (தனது கேள்வி-பதில் பகுதியில் பெரியவாளை தனது பாணியில் சாடியிருக்கின்றார். சபாஷ்![/art-culture/essays/jnani1.html).

சட்டத்திற்கு முன்னர் யாரும் பெரியவா/சின்னவா இல்லை. தவறு செய்தவர்கள் யாராக இருப்பினும் தண்டனை அடைந்தே தீரவேண்டுமென்று முழங்கவேண்டிய ஞாநி, தனது கட்டுரையில் கருணாநிதியை சாடுவதில்தான் அதீத சிரத்தை காட்டியிருக்கின்றார்.

சங்கரராமன் பற்றி ஊடகங்களின் வழியே தான் அறிந்தவற்றை அழகாக தொகுத்திருக்கின்றார் ஞாநி. பிறகு நாம் அறியாத ஒரு அரியஉண்மையையும் அகழ்வாராய்ந்து சொல்கின்றார். "ஓட்டையும், பணத்தையும் தவிர எந்த லெளகீக சக்தியும் நம்முடையஅரசியல்வாதிகளை கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ் வகையறாக்களை இயக்குவதாக நான் கருதவில்லை." சபாஷ்! ஞாநிசரியான கண்டுபிடிப்பு!

நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யப்பட வேண்டியது. உங்களது புதிய நடுநிலைமை சங்கடம் புரிகின்றது. ஜெயலலிதாவை சாடும் சாக்கில்கொஞ்சம் அள்ளிப் போடவும் ஞாநி தயங்கவில்லை. "தன்னை விட உயர்ந்தவர் என்று ஜெயலலிதா அவர் நம்புகின்ற கடவுளைத் தவிரவேறு எவரையும் கருதுவதாக எனக்குத் தெரியவில்லை", என்று பிரஸ்தாபம் செய்கின்றார்.

கோவில் கோவிலாக சுற்றி, புலிப் பலி கொடுத்து, யானைத் தானம் கொடுத்து மறுபடி சென்ற தேர்தலில் சட்டசபையை வளைக்காவிடில்,கடவுளரும் ஜெ பிடியிலிருந்து தப்பித்திருக்க முடியாதென்பது நிதர்சனம். பணிக்கரின் கணக்குப்படி ஜெ சென்றது பலருக்கும் தெரிந்தசிதம்பர ரகசியம். பாவம் நீதி கேட்கும் கண்ணகி சிலை கூடத் தப்பவில்லை.

கருணாநிதியியாகட்டும், ஏனைய அரசியல்வாதிகளாகட்டும், அவர்களது குறி மக்களின் ஓட்டு மட்டும்தான்; வேறில்லை. இதைச் சொல்லஒரு மூடன் போதும். ஞாநி போல் ஒரு மூத்த பத்திரிக்கையாளர் தேவையில்லை. அதே போல் பத்திரிக்கைக்கு வாசகர்கள் தேவை.தொலைக்காட்சிக்கு பார்வையாளர்கள் தேவை. கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினராகட்டும், ஏனைய அரசியல்வாதிகளாகட்டும்அனைவருமே சந்தர்ப்பவாதிகள்தாம்.

திராவிடக் கட்சியின் தலைமைப் பொறுப்பு ஜெயலலிதாவுக்கு சென்றதும், அவரது மந்திரிகள் அலகு குத்தி தேர் இழுத்தனர். ஜெக்கு பச்சைஎன்றால் கருணாநிதிக்கு மஞ்சள் நிறத்தின் மீது (மூட)நம்பிக்கை. எல்லாம் காலத்தின் கோலம். இந்தி எதிர்ப்பு, பகுத்தறிவு, தனித் தமிழ்நாடுபோன்ற வீர தீரக் குறிக்கோள்களை திராவிடக் கட்சிகள் தொலைத்து வெகு காலமாகி விட்டன.

தேவைப்படும்போது தொட்டுக்கொள்ள ஊறுகாய் மாதிரி இக்கொள்கைகளை திராவிடக் கட்சிகள் பயன்படுத்துவது அனைவரும்அறிந்ததுதான். அதனால் கருணாநிதி சன் டிவியில் தீபாவளி கொண்டாடச் சொல்கிறாரென்று ஞாநி விசனப்பட வேண்டாம்.

ஜெயேந்திரர் கொலைக் குற்றம் புரிந்தாரா? அனுராதா ரமணனிடம் முறைகேடாக நடந்து கொண்டாரா? ராதா கிருஷ்ணனை கொல்லகூலிப்படை ஏவினாரா? ஸ்ரீரங்கம் உஷாவுடன் அவருக்கிருந்த தொடர்பென்ன? மடத்தின் நிதி நிர்வாகத்தில் மோசடி நடந்ததா? இதுபோன்ற பல கேள்விகட்கு நீதிமன்றம் முறைப்பஐ பதில் காணட்டும். சாமியாரைக் கைது செய்ததால் ஏதோ ஜெயலலலிதா நல்லஅரசியல்வாதியாகவும் (தைரியலட்சுமி?), கலைஞர் முதல்வராக இருந்திருந்தால் தைரியமாக இதைச் செய்திருக்க முடியாதென்று முடிவுகட்டி அவரை கோழை அரசியல்வாதி என்று ஞாநி வருணிக்க விழைவதுதான் காலத்தின் கட்டாயமோ?

போகிற போக்கில் ஆர்எஸ்எஸ்-யையும் விட்டு வைக்கவில்லை ஞாநி. அதிகாரம் கிட்டுமானால் பைபிள், குரானையும் பற்றி கூட அவர்கள்பேச ஆரம்பித்து விடுவார்களாம். அவ்வாறே நடக்கட்டும். பெரியார் திராவிடக் கழக அன்பர்களும் பைபிள், குரானையும் பற்றி பேசட்டும்.எவ்வளவு நாட்கள்தான் (சோதா) இந்து மதத்தையே கிண்டலடித்து பகுத்தறிவு வளர்ப்பது? மேற்கூறியது நடந்தால் ஞாநியின் வாயில்சர்க்கரை போடுவோம்.

பொது வாழ்க்கையில் உள்ள எந்தப் பிரமுகரும் இனி எந்த மதத்தின் நடவடிக்கைகளுடன் பங்கேற்பதை நிறுத்திக் கொள்வோம் என்றுஅறிவிக்க வேண்டும் என்ற ஞாநியின் கருத்து கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டியது. சங்கரமட சரணாகதியாகட்டும், நோன்புக்கஞ்சியாகட்டும், பிள்ளையார் சதுர்த்தி கொழுக்கட்டையாகட்டும் மதத்தை நினைவுபடுத்தும் எத்தகைய நிகழ்வுகளிலும் பொது வாழ்வில்ஈடுபட்டவர்கள் பங்கேற்கக் கூடாதென்று சத்தியப் பிரமாணம் வாயிலாக உறுதிமொழி எடுக்க வேண்டும்.

கட்டுரையின் இறுதியில் முக்கியமான விஷயத்திற்கு வருகின்றார் ஞாநி. ஞாநி+சின்னக்குத்தூசியின் செவ்விக்கு தவறான உள்நோக்குகாட்டியமைக்காக சோ மன்னிப்பு கேட்க வேண்டுமென்று வலியுறுத்துகின்றார். இந்த விவரத்தை கட்டு--உரையின் முகப்பிலேயேகூறியிருந்தால், படிக்க நினைத்து நேர விரயம் செய்யாமல் பல வாசகர்கள் தப்பித்திருக்கலாம்.

- வந்தியத்தேவன்(t_sambandam@yahoo.com)

இவரது முந்தைய படைப்பு:

1. அக்கரைப் பச்சை

2. அக்னி நட்சத்திரம்

3. விதியும் சதியும்

4. நாலுபேர்

5. மயான வைராக்கியம்

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: feedback@thatstamil.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more