For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொள்கைக் கூட்டணி - காலத்தின் கட்டாயத் தேவை!

By -பேராசிரியர் மருதமுத்து
Google Oneindia Tamil News

Thumps up
"அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" என்பது கவிவாக்கு.

அரசுக் கடமை தவறிய நெடுஞ்செழியனை அன்று கண்ணகி தட்டிக்கேட்டார். கோட்பாடற்ற அரசியல் நடத்தும் இன்றைய நெடுஞ்செழியன்களை பழ. நெடுமாறன் கூண்டிலேற்றியுள்ளார். (தினமணி பேட்டி, 19 மற்றும் 26-08-07).

முன்பெல்லாம் இந்திய, தமிழகப் பொது வாழ்வுத் துறையில் ஒரு திட்டவட்டமான திசைவழி சுட்டிக்காட்டப்பட்டது; இலக்குகள் அறிவிக்கப்பட்டன; செயல்திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.

நாட்டு விடுதலை என்ற இலக்கை அறிவித்துப் பல தலைவர்கள் போராடினர். சமூக நீதியை முதன்மையாகக் கொண்டு வேறு பலர் பாடுபட்டனர். தமிழகத்தின் ஒட்டுமொத்த நலன்களையும் இந்திய நலன்களையும் சமன்செய்த காமராசர் போன்றோர் பணியாற்றினர்.

சோசலிசம என்ற கோட்பாட்டை நேரு உயர்த்திப் பிடித்தார். கம்யூனிசமே தீர்வு என்றனர் பல தியாகத் தலைவர்கள். கட்டற்ற தனியார் சுதந்திரம்தான் முக்கியம் என்றார் ராஜாஜி.
இந்த இலக்குகள் எல்லாம் பெயரளவுக்கு ஏட்டில் மட்டும் வைத்துப் போற்றப்பட்டவையல்ல. இவையெல்லாம் ஓயாத பிரச்சாரமாக மக்கள் மத்தியில் கொண்டுசெல்லப்பட்டன.

மக்கள் இடைவிடாமல் அணி திரட்டப்பட்டனர். இந்த இலக்குகள் குறித்த அறநிலை பரவலாக்கப்பட்டது. உணர்வும் நம்பிக்கையும் ஊட்டப்பட்டன. இந்த இலக்குகளோடு இணைந்தே தலைவர்கள் மதிப்பிடப்பட்டார்கள். இயக்கங்கள் எல்லையற்ற சந்தர்ப்பவாதச் சகதியில் உழலாதவாறு இந்த இலக்குகளும், வேலைத் திட்டங்களும் நெறிப்படுத்தின.

ஆனால் இன்றோ நிலைமை முற்றிலும் மாறிப்போயுள்ளது. நெடுமாறன் அவர்கள் கூறுவதுபோல் அரசியலில் சூனியம் ஏற்பட்டுவிட்டது. சுயநலம் மட்டுமே தலைவிரித்தாடுகிறது.
இலக்குகள் ஏதுமில்லாமல், முக்கியப் பிரச்சினைகள் குறித்த தெளிவும், அக்கறையும் இல்லாமல், நிலைபாடுகளில் ஊன்றி நிற்காமல் அதிகாரம், ஆதாயம் இரண்டை மட்டுமே அடையத் துடிக்கும் அரசியல்போக்கு தமிழகத்தை அலங்கோலமாக்கியுள்ளது.
வருங்காலமும் இருண்டு காணப்படுகிறது.

இந்தியா அண்மைக் காலமாகப் பொருளாதார ரீதியாகப் பெரும் வளர்ச்சி கண்டிருப்பதால் இந்த அரசியல் சூனியத்தின் அபாயத்தை உணராத மந்த நிலை நிலவிவருகிறது. ஆனால் கொடிய பரவலான வறுமை மட்டும்தான் ஒருநாட்டை அழிக்கும் என்பதில்லை.

முறைமைகள் பேணப்படாத வளர்ச்சியும் கூடப் பெரும் அழிவில்தான் முடியும். ஒருநாட்டின் அரசியல் துறையில் கோட்பாடற்ற, பொறுப்பற்ற நிலையும், பொருளாதாரத்துறையில் வளமான நிலையும் நீண்டகாலத்துக்கு ஒருசேர நீடிக்கமாட்டா.

இந்திய நாடடின் உண்மையான வளர்ச்சிக்கு அதன் ஜனநாயகத் தன்மை மேலும் மேம்பாடு அடைவதைப் பொறுத்தே அமையும். ஜனநாயகம் மேலோங்க ஒரேவழி சந்தர்ப்பவாத அரசியலுக்கு முடிவுகட்டுவதுதான். எந்தக்கட்சி எங்கே நிற்கிறது, எந்தக் காரணத்துக்காக இன்னார் இன்னாரோடு கூட்டணி அமைக்கிறார்கள் என்பதெல்லாம் மிகத்தெளிவாக மக்கள் மத்தியில் அறியப்படவேண்டும்.

அறிவும், அனுபவமும், நிதானமும் ஒருங்கேயமைந்த தலைவரான நெடுமாறன் அவர்கள் இந்த உண்மைகளையெல்லாம் ஆழமாக உணர்த்தி நமக்கெல்லாம் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரது அறிவுரையை ஏற்று, தமிழக அரசியல் வாழ்வைச் சீர்ப்படுத்தும் முயற்சி உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும்.

இதன் தாக்கம் இந்திய அரசியலிலும் விரைவில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது திண்ணம். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் தொடங்கிய சமூகநீதி இயக்கத்தின் தாக்கம் இன்று இந்தியா முழுவதிலும் பரவியுள்ளதை இங்கு நினைவிற்கொள்ள வேண்டும்.

சந்தர்ப்பவாதம் ஒழிக்கப்பட்டு தமிழக அரசியல் துலங்க வேண்டுமெனில் நெடுமாறன் அவர்கள் வலியுறுத்துவதுபோல் மூன்றாவது அணி ஒன்றை உருவாக்கியே தீர வேண்டும். இது கூட்டணிகளின் காலம். இனிவரும் காலமெல்லாம் அப்படியே அமையவுள்ளது. ஆனால் கூட்டணி என்பது இன்று ஒரே ஒரு தேர்தலுக்கான கோட்பாடற்ற உத்தி என்பதாக உள்ளது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

அரசியலில் கட்சி என்ற சொல் ஓர் அமைப்பின் தனித்தன்மையை, அதன் வேறுபட்டதன்மையைக் காட்டுவதாகும். கூட்டணி என்பது வேறுபட்ட பல கட்சிகள் தமக்குள் காணும் ஒற்றுமையைக் குறிப்பதாக அமைகிறது. அந்த ஒற்றுமை வெறும் அதிகார, ஆதாய நோக்கத்தால் விளைவதாக இருக்கக்கூடாது. மாறாக ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் தேவைகளை கருத்தில் கொண்டும், முக்கியப் பிரச்சினைகளுககுத் தீர்வுகாணும் பொருட்டும் உருவாக வேண்டும்.

இந்தக் கூட்டணி ஒற்றுமை ஒரு குறைந்தபட்ச வேலைத்திட்டத்தில் வெளிப்படவேண்டும். இந்தக் கூட்டணியை வழிநடத்த ஓர் உயர்மட்டக் குழு இருத்தல் வேண்டும். அது உண்மையான புரிதலோடு நடைமுறையில் தொடர்ச்சியாக இயங்கவும் வேண்டும். அத்துடன் இக்கூட்டணி என்பது ஒரு கூட்டாட்சியாகக் கனியவும் வேண்டும்.

எனவே தமிழகத்தின் ஒட்டுமொத்த நலன்களுக்காக உழைப்போரும், ஜனநாயக மேம்பாடு கோருவோரும், சமூகநீதி காப்போரும், ஏழை உழைக்கும் மக்களின் நலிவு நீங்கப் பாடுபடுவோரும் ஒரு மையப்புள்ளியில் இணைந்து இந்த உண்மைக் கூட்டணியை அமைத்தாக வேண்டும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X