''எல்லோரையும் ஏத்திப் போக கப்பல் வருமா..?''
இந்தப் படத்தின் பாடல்களின் இசையும், வார்த்தைகளும் நம்மை ரசிக்கவும், சிந்திக்கவும் மட்டுமே வைக்கும். ஆனால், இலங்கைத் தமிழர்களுக்கு இந்தப் பாடல்கள், வாழ்க்கை.
இந்தப் பாடல்களின் அர்த்தங்களை முழுமையாய் அறிய, அகதிகளாகிவிட்ட நம் உறவுகளின் நிழலில் கொஞ்ச நேரம் நாம் ஒதுங்க வேண்டியது அவசியம்.
அதற்கு ஒரு வாய்ப்பாக இந்தப் படத்தின் பாடல்களுக்கு விமர்சனத்தை தட்ஸ்தமிழுக்கு எழுதியுள்ளார், வசீகரன். இலங்கையில் பிறந்து இப்போது நார்வே தலைநகர் ஓஸ்லோவில் வசிக்கும் வசீகரனின் விமர்சனமே நம்மை கலங்கடிப்பது நிஜம்.
-ஆசிரியர்
இனி,
இராமேஸ்வரம்- பாடல் விமர்சனம்
-வசீகரன்
ஆக்கபூர்வமான, இனிய படைப்பபாக வெளிவந்திருக்கிறது இராமேஸ்வரம். ஜீவா-பாவனா இணைந்து உணர்வுருக நடித்திருக்கும் இத்திரைப்படம் உலகத் தமிழருக்கெல்லாம் ஓர் அழகிய மார்கழிப் பூவாக மலர்ந்திருக்கிறது.
இயக்குனர் செல்வம் அவர்களின் முதல் திரைப்படக் கனவு இது. இதயம் உருக உருக உன்னதமாக இசைத்துளிகளை ஓர் அழகிய மாலையாக கோர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் ஈழத் தமிழரான நிரு.
ஏற்கனவே மூங்கிலா இசைத்தொகுப்பு, கலாபக் காதலன் திரைப்படம், நீலம் குறும்படம் என தனது இசைவண்ணங்களை உயிரோட்டமாக வழங்கிய இசையமைப்பாளர் நிரு மிகவும் திறம்பட இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
படத்தில் 5 பாடல்களும் கதையின் உள்ளோட்டத்தை வெளிப்படுத்தி நாடித் துடிப்பை இசையால் நனைக்கிறது.
அழகிய தமிழ் வார்த்தைகளை மட்டுமே கவிஞர்களிடம் இருந்து வாங்கிக் கொள்ளும்; இயக்குனர் மத்தியில் செல்வம் இன்னுமோர் படி மேலே சென்றிருக்கின்றார் என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது. எத்தனை காலம்தான் கவிதைக்கு 'பொய்யழகு' என்று கவிஞர்களால் பாடமுடியும். இதோ கவிதைக்கு என்றுமே 'மெய்யும் அழகே' என மெய்ப்பித்திருக்கிறார்.
தமிழ் உறவுகளின் உணர்வுகளை, ஏக்கங்களை வலிகளை வைர வரிகளில் நா.முத்துக்குமார், கபிலன், யுகபாரதி அனைவரும் எம்மவரில் ஒருவராகவே நின்று எழுதிக் கொடுத்திருக்கின்றார்கள். அவர்களை இதயபூர்வமாகப் என்றுமே பாராட்டலாம்.
''எல்லோரையும் ஏத்திப் போக கப்பல் வருமா..?
கைகள் தட்டும் பட்டாம்பூச்சி கையில் வருமா..? '' என ஆரம்பிக்கும் பாடலில் நாங்கள் தொலைந்தே போனோம்.
''நல்லூர்க் கோயிலில் நாதஸ்வரம்
ஊதிடும் நாள் வருமா?
கும்பிடு சந்தையில் புகையிலை
வாங்கிட நாள் வருமா?
கல கலனென்னு பாடசாலைக்குள்ள
படிக்கிற நாள் வருமா?''
என்று சிறுமியின் குரல் ஒலிக்க எங்கள் கண்களில் நீர். பேசாமல் ஊருக்கு போயிடலாமா என்று எண்ணத் தோன்றுகிறது.
பதினேழு வருடங்களுக்கு முன் இதே போன்று ராமேஸ்வரம் வந்து மூன்று மாதங்கள் நான் அகதியாய் வாழ்ந்தவன். அங்கே பட்ட கஷ்டங்கள், வேதனைகள் இப்பவும் கூட நெஞ்சில் பதிந்து இருக்கின்றன.
இராமேஸ்வரத்திலிருந்து 36 மைல்களுக்கு அப்பால் யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கிறது என்பதை மனத்திரைகளில் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள இந்த ஒரு பாடல் போதும் எம் தமிழக உறவுகளுக்கு.!
கபிலனின் வரிகள் அவர் இதயம் போலவே எங்கள் மனதையும் பிசைகிறது. இந்தப் பாடலுக்கான இசைக் கோர்வை உயிர் தொட்டு முத்தம் வைக்க, மறுபுறம் மனதில் ஓர் எழுச்சிமிக்க உணர்வு தோன்றி நாளை குறித்த நம்பிக்கையை உருவாகிறது.
நிருவின் திறமையைப் பறை சாற்ற இந்த ஒரு பாடலே போதும். மாணிக்கவிநாயகம், ஷிரேயா, ரேஷ்மி குரல்களில் மனது தொலைகிறது.
"நான் தரை நிலா தாவி நடக்கையில், நான் திருவிழா" பாவனாவின் காதல் ஈழத்தமிழ் அகதியாக வாழ்ந்திருக்கும் ஜீவாவின் மீது செல்ல மின்சாரமாகப் பாய்கிறது. சுவேதாவின் குரலில் இனிமையிலும் இனிமையாக ஒலிக்கிறது. வரிகளுக்குச் சொந்தக்காரர் யுகபாரதி, கொஞ்ச நேரம் அவரோடு பேசிப் பார்க்கவும் தோன்றுகின்றது.
போர் மேகங்கள் உங்கள் மீது சுற்றினாலும் காதல் நடக்கவில்லையா?, குழந்தை பிறக்கவில்லையா?, வாழ்க்கை தொடரவில்லையா? என்னும் நியாயமான கேள்விகளின் பின் மலரும் காதல் பாடலாக,
''அலைகளின் ஓசைகள் தானடடி
அகதியின் தாய்மொழி ஆனதே
எனக்கென யாரோ..?
என்னை நான் தினம் கேட்கிறேன்''
''அலைகளின் ஓசைகள் தானடா
அகதியாய் ஏங்குவானேடா..
உனக்கென நானே ஒற்றைப்
பெண் என வாழ்கிறேன்''
''தன்னைத் தொலைத்தவன் நானே
மண்ணைப் பெறும்வரை காத்திருப்பேன்
உன்னைத் தொலைத்து விட்டாலே
இங்கோர் அகதியாய் நானிருப்பேன்!'' எனக்குப் பிடித்த வரிகள்.
ஒர் அகதியின் வாழ்விலும் காதல் பூப்பது இயல்பே என்று சொல்கிறது இந்தப் பாடல். கரிச்சரனும் கல்யாணியும் இணைந்து குரல் கொடுத்திருக்கின்றார்கள். கபிலன் கானாப் பாடலுக்கு மட்டுமில்லை உணர்ச்சிப் பாடலுக்கும் புதியவரில்லை என்பதைப புரிய வைத்திருக்கிறார்.
பாடல்களின் ஒலிப்பில் எங்களுக்கும் வலிக்கிறது.
''நேற்றிருந்தோம் எங்கள் வீட்டினிலே
நிலவெறியும் எங்கள் காட்டினிலே
யார் தந்த சாபம் இது?
யார் செய்த பாவம் இது?''
''கண்ணீர்த் துளியும் வலியும்
சேர்ந்த கூடாய்க் கிடக்கின்றோம்.
உயிரை அங்கே வைத்தோம்
அதனால் உயிரைச் சுமக்கின்றோம்
எத்தனை உறவுகள் தொலைத்தோம்
எதற்கு நாங்கள் பிழைத்தோம்!''
நா.முத்துக்குமார் நெஞ்சாங் கூட்டில் நிற்கிறார். என்றும் நிற்பார் என்பதற்கு இந்தப் பாடல் போதும். இப்படி வரிகள் வந்தால் எந்த இசையமைப்பாளர் சும்மா விடுவார்?.
தமிழ் ஈழத்தில் அளவெட்டியில் பிறந்து, பிரான்சு நாட்டில் வளர்ந்த இசையமைப்பாளர் நிரு தமிழர்களின் இதயங்களில் மிக விரைவில் இடம் பிடிப்பார்.
வசீகரன்
ஒஸ்லோ, நார்வே
[email protected]













Click it and Unblock the Notifications