For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒளியை நாடி இருளில் வீழும் பெண்கள்

By Staff
Google Oneindia Tamil News

Woman Mask

செங்கோட்டை: செங்கோட்டை அருகில் உள்ள சில கிராமங்களில் வீட்டு வறுமையை விரட்ட, கல்யாணத்திற்கு பணம் சேகரிக்க என்று பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் வெளி மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். ஆனால் திரும்பி வரும்போது உடல் நிலை பாதிக்கப்பட்டும், சிலர் கற்பை இழந்தும் திரும்பி நீங்காத துயரத்தில் மூழ்கிக் கிடக்கின்றனர்.

செங்கோட்டை அருகில் உள்ளது புளியரை என்ற கிராமம். இங்குள்ளவர்கள் கூறும்போது, எங்கள் கிராமத்திற்கு பெண் பார்க்க வருபவர்கள் ஏப்ரல் மாதத்தில் வந்தால் மட்டுமே அது சாத்தியம் என்கிறார்கள்.

என்ன காரணம் என்று விசாரித்தால், கிராமத்தை சேர்ந்த அத்தனை இளம் பெண்களும் வறுமையை விரட்ட வெளி மாநிலங்களுக்கு வேலை தேடி இடம் பெயர்ந்துள்ளனராம். ஆண்டுக்கு ஒருமுறை அதுவும் ஏப்ரல் மாதம்தான் ஊருக்கு வருவார்களாம்.

நெல்லை மாவட்ட கிராமங்களில் பெரும்பாலான பெண்கள் பீடிசுற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

புளியரை, தெற்குமேடு, ராஜீவ்நகர் போன்ற பகுதிகளில் இளம் பெண்கள் தங்கள் திருமணத்திற்காக பணம் சேர்ப்பதற்காகவும், குடும்ப தேவைக்காகவும், குஜராத், மகாராஷ்டிரா போன்ற வெளிமாநிலங்களுக்கு மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு செல்கின்றனர்.

அங்கு எட்டு மணி நேரத்திற்கும் மேல் குளிரில் வேலை பார்ப்பதால் இப் பெண்களுக்கு கால்வலி, ரத்தசோகை, மூச்சடைப்பு, கர்ப்பபை கோளாறு ஏற்படுகின்றன.

இதுகுறித்து பகவதிபுரத்தைச் சேர்ந்த லட்சுமி என்பவர் கூறும்போது 14 வயசுல குரஜாத் மீன் கம்பெனிக்கு வேலைக்கு போனேன். மாசம் ரூ.2,100 சம்பளம். சாப்பாட்டுக்கு 500 எடுத்துருவாங்க. எட்டு மணி நேரம் நின்னு வேலை பார்க்கனும். குளிர்லேயே நிற்பதால் சளி அடைப்பு, இழுப்பு மாதிரி வரும். உடம்பெல்லாம் சொறி மாதிரி வரும். எங்க அக்காவும் அங்கதான் வேலை பார்த்தாங்க. அடிக்கடி மயக்கம் வந்ததால் திரும்பிட்டாங்க என்றார்.

புளியரை அடுத்துள்ள தெற்குமேடு கிராமத்தில் வீட்டுக்கு ஓருவராவது குஜராத் கம்பெனியில் வேலைக்கு சென்றுள்ளனர். இங்குள்ள பெண்களுக்கு வயல் வேலை தவிர வேறு உள்ள ஒரே தொழில் ஈந்தல் கூடை பின்னுவது. ஒரு கூடைக்கு 5 ரூபாய் கிடைக்கும்.

ஆனால் இதற்கான பொருட்களை எடுத்து வர காட்டுக்கு செல்ல வேண்டும். எனவே இத்தொழிலில் அதிக அளவில் ஈடுபடுவதில்லை. சமீபகாலமாக இங்குள்ளவர்கள் குடும்பத்துடன் வெளிமாநிலங்களுக்கு இடம் பெயர துவங்கியுள்ளனர்.

மேலும் அங்கு பணிபுரிந்த ஒரு பெண் கூறும்போது, குடும்பதோடு குஜராத் வேலைக்கு போய் 10 வருசமாகுது. குடும்பமா இருந்தாலும் அங்க சேர்ந்து தங்க கூடாது. பெண்கள் பெண்கள் விடுதியிலும், ஆண்கள் ஆண்கள் விடுதியிலும்தான் தங்க வேண்டும். கம்பெனியில் தான் பார்த்து பேசிக்க முடியும். பொண்ணுக்கு உடம்புக்கு சரியில்லாததால் திரும்பி வந்து விட்டேன் என்றார்.

தேவி என்பவர் கூறும்போது 5 வருஷமாக மீன் கம்பெனியில் வேலை பார்த்தேன். ரூ.1,000 ரூபாய்க்கும் குறைவாகதான் கொடுத்தாங்க. காலையிலே 9 மணியிலிருந்து ராத்திரி 9 மணி வரை வேலை. வரதட்சனை கொடுக்க பணம் இல்லாததால் வேலைக்கு போனேன்.

அங்கே வேலை பார்க்கிற பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை ஏற்படுகிறது. குழந்தை பெத்துகிறதுலே பிரச்சனை உண்டாகுது. இதனால எங்க ஊருக்கு கல்யாணம் பேச வர்றவங்க மீன் கம்பெனியில் வேலை பாக்கிற பெண் என்றால் வேண்டாம் என்று சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க என்றார் வேதனையுடன்.

திருமண செலவுக்காக வேலைக்கு செல்லும் இந்த பெண்கள் திரும்பி வரும்போது அவர்களில் பலருக்கும் உடல்நிலை திருமணத்திற்கோ, குழந்தை பேறுக்கோ தகுதியில்லாமல் போய் விடுகிறது.

வறுமையால் குடும்பத்தையும், ஊரையும் பிரிந்து நிகழ்காலத்தை தொலைக்கும் இப்பெண்களின் வருங்காலத்தையும் இருள் சூழ தொடங்கியுள்ளது.

கொடுமையில் பெரிய கொடுமையாக, இவர்களில் சில பெண்கள் தங்கள் கற்பையும் இழந்து ஊர் திரும்பியுள்ளதுதான் வேதனையாகும்.

வாழ்க்கையில் ஒளி ஏற்பட வேண்டும் என்பதற்காக வெளி மாநிலங்கள் செல்லும் இவர்கள் இன்னும் இருளில்தான் மூழ்கிக் கிடக்கிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X