• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

கோபியில் ஒரு குற்றாலம்!

By Staff
|

கோபி: கோபிசெட்டிப்பாளையம் அருகில் உள்ள கொடிவேரி, சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது. மேற்குத் தமிழகத்தின் சொர்க்கபுரியாக அது மாறி வருகிறது.

கரூர், ஈரோடு, நாமக்கல், கோவை மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் குடும்பத்தினரோடு விரும்பி செல்லும் இடம் கொடிவேரி அணை.

கோபியிலிருந்து 13 கி.மீ. தொலைவிலும், சத்தியமங்கலத்தில் இருந்து 12 கி.மீ.தொலைவிலும் நடுவில் அமைந்துள்ளது கொடிவேரி அணை.

இயற்கை அன்னை படைப்பில் இன்பதமிழ் விளையாடும் இடம். திரும்பிய இடமெல்லாம் பசுமை போர்வை போர்த்தியது போன்று எங்கும் பசுமை, பசுமை. அங்கும் அங்கும் உலாவும் சுகமான தென்றல் காற்று நம்மை கைபிடித்து அழைத்து செல்லும். அடடா இத்தனை நாள் இந்த அதிசயத்தை எப்படி பார்க்காமல் இருந்து விட்டோம் என்று மனதில் ஏக்க பெருமூச்சு வந்து வந்து அலைமோதும்.

முதலில் கொடிவேலி - இப்போது கொடிவேரி:

கொடிவேலி என்ற சித்த மூல உயர் மருத்துவ குணம் கொண்ட மூலிகை கொடி இங்கு அதிக அளவில் காணப்படுவதால் கொடிவேலி என்று பெயர் பெற்றது. பின்பு பேச்சு வழக்கில் அது கொடிவேரி என மாறி போனதாம்.

கொங்கு நாட்டில் தோன்றி கொங்கு நாட்டிலே ஆடிபாடி காவிரி நதியுடன் கலக்கும் ஆறுகளில் ஒன்று தான் பவானி ஆறு.

தமிழகத்தில் அதிக அளவில் சந்தன மரங்களை உடைய சத்திய மங்கலம் வழியாக தவழ்ந்து வருவதால் சந்தன வாசம் கலந்து மணக்கிறது.

இப்படி பவானி ஆறு செல்லும் வழியில் 4 அணைகளை கடந்து செல்கிறது. அதில் ஒன்று தான் கொடிவேரி அணை.

இந்த அணையை கிபி 1519 ம் ஆண்டு கிருஷ்ணதேவராயர் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் இவருக்கு அடங்க மறுத்து ஆட்சி செய்த உம்மத்தூர் நஞ்சராச உடையார் என்பவரால் பெரும் பெரும் பாறைகளை கொண்டு அழகாக கட்டப்பட்டுள்ளது.

அணையின் உள்ளே நுழையும் போது மனது இயற்கையுடன் லயித்துப் போய் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் போடும்.

மயக்கும் மசாஜ்:

உடலுக்கு புத்துணர்ச்சி பெற மஜாஜ் செய்யும் நபர்கள் அங்கேயே உள்ளனர். நல்ல எண்ணையை உச்சி முதல் உள்ளங்கால் வரை சுடு பறக்க நீவி தடவி விடுவார்கள். அப்படியே போய் அணையில் இருந்து உருக்கிய வெள்ளி போல் விழும் தண்ணீரில் தலையை வைத்தால் குளிர்ச்சி இன்ப தாலாட்டும்.

அப்படியே வந்தால் அணையில் இருந்து பிடித்து வரப்பட்ட பல வகை மீன்கள் வறுத்து வைத்திருப்பார்கள். வாசம் பிடித்தபடியே நான்கு மீன்களை உள்ளே தள்ளினால் படு ஜோர்தான்.

அங்கு விற்பனையாகும் மீன் குழம்புக்கு அடிமையானவர்கள் பலர். படு ருசியாக இருக்கும் அந்தக் குழம்பை ஒரு கூட்டமே அலைமோதும்.

அணையில் குழந்தைகள் துள்ளி விளையாட சிறுவர் பூங்கா, பெண்கள் விளையாட அழகிய ஊஞ்சல்களும் உள்ளது.

கொடி வேரி அணையை சுற்றி அடர்ந்த காடுகள் இருப்பதாலும், அடிக்கடி பல கல்லூரி பெண்கள் குளிக்க வருவதாலும் அவர்களுக்கு பாதுகாப்பு கருதி தமிழக அரசு அங்கு ஒரு தற்காலிக காவல் நிலையம் அமைத்தால் அங்கு நடக்கும் சிறு சிறு குற்றங்களும் குறைந்து போய் விடும்.

பலர் அணை அருகிலேயே சுகாதாரம் இன்றி வெட்ட வெளியிலேயே மீன் சமையல் செய்து வருகின்றனர். அதற்கு பதில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் சிறு சிறு கடைகளை வைத்தால் மகளிர் சுய உதவி குழுக்களுக்கும் லாபம் கிடைக்கும்.

அணையில் பல இடங்களில் பாறைகளில் வழுக்கி விழுவது தினசரி நடக்கும் விபத்தாகி விட்டது. இதில் பலர் காயம் அடைந்து விடுகின்றனர். எனவே இங்கு அரசு மருத்துவமனையோ அல்லது முதலுதவி மையமோ அமைத்தால் மேலும் சிறப்பு பெறும்.

பெண்களுக்கு 'வேலி' வேண்டும்:

பெண்கள் இந்த அணையை கண்டவுடன் உற்சாகத்தில் துள்ளி குதித்து குளிக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு என்று உடை மாற்ற தனி அறை இல்லை என்பது பெரும் குறையாக உள்ளது.

கொடி வேரி அணை பொழுது போக்கு தலமாக இன்றி விவசாயிகள் பயன் பெரும் வகையில் அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை என வாய்க்கால்கள் மூலம் முறையே 17, 650 ஏக்கர் நிலம், 6, 850 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.

கொடிவேரியில் தைதிருநாள், ஆடி பண்டிகை மற்றும், பண்டிகை காலங்களில் மக்கள் வெளியூர்களில் இருந்து குடும்பம் குடும்பமாக வந்து நீராடி கடவுளை வழிபட்டு செல்கின்றனர்.

மேலும் இங்கு தமிழ் உள்பட பல மொழி படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது.

கோடைக்கு குட்பை சொல்ல வேண்டும் என்றால் கொடிவேரிக்கு செல்லுங்கள் என்றும் இது கோபி குற்றலாமுங்க என்றும் வாண்டுகள் முழக்கமிடுகின்றனர்.

இயற்கை தரும் இன்பத்திற்கு நிகர் எதுவுமில்லை என்பது கொடிவேரி அணைக்கு சென்று வந்தால் உணரலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X