ராஜபக்சேவுக்கு பி.ஆர். வேலை பார்த்த இந்தியா-கருத்தரங்கில் தாக்கு
சென்னை: இலங்கை இனப்போரின் இறுதிக் கட்டத்தில் ராஜபக்சேவின் பி.ஆர்.ஓ போலத்தான் இந்தியா நடந்து கொண்டது என்று பிரபல பத்திரிக்கையாளர் சத்யா சிவராமன் கூறினார்.
இலங்கையில் அடுத்தது என்ன என்ற தலைப்பில் சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில் அவர் பேசுகையில், ஜனநாயக ரீதியிலான தீர்வு காண முயற்சிக்காமல், இலங்கை அரசை, சர்வதேச சமுதாயத்திடமிருந்து பாதுகாக்கக்கத்தான் இந்தியா அதிக அக்கறை காட்டி வந்தது.
இலங்கை அரசு செய்து வந்த போர்க் குற்றங்கள், இனப்படுகொலைகளை சர்வதேச சமுதாயத்திடமிருந்து மறைக்கும் நடவடிக்கைகளில்தான் இந்தியா ஈடுபட்டிருந்தது.
இஸ்ரேல், பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளைப் போல இந்தியாவும் இலங்கை ராணுவத்திற்கு நேரடியாக உதவிகள் செய்து வந்தது. ஆனால் மற்றவர்கள் செய்த உதவிகள் நேரடியாக இருந்தன. ஆனால் இந்தியா படு ரகசியமாக செய்து வந்தது. இது நிச்சயம் வெளியில் தெரியவே தெரியாது, கடைசி வரை தெரியவும் தெரியாது.
இலங்கையில் தான் நடந்து கொண்ட விதத்தை மறைப்பதற்காக சீனாவு உள்ளே நுழைந்து விடுமே என்பதால் உதவிகள் செய்தோம் என்ற சொத்தை வாதத்தை வைக்கிறது இந்தியா.
தனி தமிழ் ஈழம் உருவாவதை உண்மையில் இந்தியா விரும்பவில்லை. தனி ஈழம் உருவானால், இந்தியாவில் தனி நாடு கோரிக்கைகள் பெருமளவில் தலை தூக்கி விடும் என்ற அச்சமே அதற்குக் காரணம்.
மத்தியிலும், தமிழகத்திலும் உள்ள ஆட்சிகள், இலங்கை இனப் பிரச்சினையை கால்பந்து விளையாட்டாக மாற்றி விட்டன. இதில் பந்தாக மாறி உதைபட்டு நிற்பவர்கள் அப்பாவி ஈழத் தமிழர்கள்தான் என்றார்.












Click it and Unblock the Notifications