For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலக்கியவாதிகள் அருகில் இருக்கவே ஆசை - கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: ஆட்சி அதிகாரம், பதவியில் இருப்பதை விட, ஜெயகாந்தன், வைரமுத்து, வா.மு.சேதுராமன் போன்ற இலக்கியவாதிகள் அருகில் இருக்கவே ஆசைப்படுகிறேன். உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பிறகு அந்த ஆசையை நிறைவேற்ற விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில், 33-வது சென்னை புத்தக கண்காட்சி சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பச்சையப்பன் கல்லூரி எதிரேயுள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் டிசம்பர் 30-ந்தேதி முதல் முதல் ஜனவரி 10-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி புத்தக கண்காட்சி தொடக்கவிழா, கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருது வழங்கும் விழா நேற்று மாலை கண்காட்சி திடலில் நடந்தது.

தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி தலைமை தாங்கினார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தலைவர் சேது சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். முதல்வர் கருணாநிதி புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார். பொற்கிழி விருதுகளையும் வழங்கினார்.

எழுத்தாளர் ச.வே.சுப்பிரமணியன் (கட்டுரை) கவிஞர் ஈரோடு தமிழன்பன் (கவிதை), ஆறு.அழகப்பன் (நாடகம்), எழுத்தாளர் கு.சின்னப்ப பாரதி (படைப்பு இலக்கியம்), எழுத்தாளர் அபுரி யாசாதேவி (தெலுங்கு இலக்கியம்), எழுத்தாளர் சோ.ந.கந்தசாமி (ஆங்கில இலக்கியம்) ஆகியோருக்கு கலைஞர் பொற்கிழி விருது வழங்கப்பட்டது. இந்த விருது, ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

மேலும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க விருதுகளையும் முதல்வர் வழங்கினார்.

பதிப்பு செம்மல் ச.மெய்யப்பன் விருது ஓ.ஆர்.சுரேஷுக்கும், பதிப்பக செம்மல் ச.கணபதி விருது வே.சுப்பையாவுக்கும், ஆர்.கே.நாராயண் விருது நா.தர்மராஜனுக்கும், குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா விருது குழ.கதிரேசனுக்கும் சிறந்த நூலகர் விருது எம்.முத்துசாமிக்கும் வழங்கப்பட்டது.

கண்காட்சியைத் தொடங்கி வைத்து முதல்வர் கருணாநிதி பேசுகையில்,

நான் ஒரு எழுத்தாளன் தான். கடந்த 70 ஆண்டுக் காலமாக எழுதிக் கொண்டிருப்பவன். இன்னும் எழுதிக் கொண்டிருப்பவன். நாளைக்கும் எழுதப் போகிறவன். தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கப் போகிறவன். இன்றைக்கு இங்கே புகழப்பட்ட முதல்-அமைச்சர் என்ற இந்தப் பதவிக்கு நான் உரியவன் என்ற முறையிலே அல்ல - இந்தப் பதவியிலே பொறுப்பேற்றிருப்பவன் என்ற நிலையிலே அல்ல,

நான் இந்த நிலையிலே இன்றைக்குப் பாராட்டப்படுகின்ற, சிறப்பிக்கப்படுகின்ற நிலையில் இல்லாவிட்டாலும், இதைவிடப் பெருமையாக எதை கருதுவேன் என்றால், எனக்கு அண்மையிலே கொல்கத்தாவிலிருந்து வருகை தந்து, இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள பல்வேறு தமிழ்ச் சங்கங்களின் சார்பாக அளிக்கப்பட்ட அந்த விருதைப் போல் -இன்றைக்கு என் முன்னால் என்னுடைய வாழ்த்துக்களோடு வழங்கப்பட்டுள்ள விருதுகளைப்போல ஒரு விருது எனக்கு வழங்கப்படுமேயானால் -முதல்-அமைச்சர் பதவியைவிட அது மூவாயிரம் மடங்கு, முப்பதாயிரம் மடங்கு பெரியது என்று நான் கருதக் கூடியவன்.

ஏனென்றால், என் எழுத்து பாராட்டப்பட்டால், என் எழுத்து சிறப்பிக்கப்பட்டால், என் எழுத்தை பிறர் ஒருவர் புகழ்ந்து பேசினால் அதிலே ஏற்படுகின்ற மகிழ்ச்சியைவிட என் ஆட்சியைப் புகழ்ந்து பேசும் போது அந்த மகிழ்ச்சி ஏற்படவில்லை.

எவ்வளவு கஷ்டத்திற்கிடையே - எவ்வளவு சிக்கல்களுக்கிடையே - எவ்வளவு பிரச்சினைகளுக்கிடையே இந்த ஆட்சியின் மூலமாக நமக்குக் கிடைத்த புகழ் என்பதையெண்ணி ஒருக்கணம் நான் அதற்காக செலவிடுவேன். ஆனால் என் புத்தகத்தை நீங்கள் பாராட்டி, என்னுடைய எழுத்தை நீங்கள் பாராட்டி, அதற்காக எனக்கு சிறப்பு செய்கிறீர்கள், எனக்கு வாழ்த்து கூறுகிறீர்கள் என்றால் அதிலே ஏற்படுகின்ற மகிழ்ச்சி, ஆட்சிப் பொறுப்பிலே இருக்கின்ற நிலையிலே எனக்கு ஏற்படுவதில்லை.

அதனால்தான் அண்மையிலே கூட அலுத்துப் போய் விட்டது எனக்கு என்பதை எண்ணியெண்ணி நான் ஒரு நிகழ்ச்சியிலே சொன்னேன் - உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு முடிந்த பிறகு நான் வேறு ஒரு திக்கில் என்னுடைய பயணத்தைத் தொடருவேன், மக்களோடு இருந்து கொண்டே அந்தப் பயணத்தைத் தொடருவேன், அதிகாரத்திலே, அரசாங்கத்திலே இருந்து கொண்டல்ல அதை நான் செய்யப்போவது என்று குறிப்பிட்டிருக்கிறேன்.

எனக்குள்ள ஆசை, ஜெயகாந்தனுக்குப் பக்கத்திலே உட்கார்ந்திருக்க வேண்டும் என்பது - எனக்குள்ள ஆசை வைரமுத்துக்குப் பக்கத்திலே உட்கார்ந்திருக்க வேண்டும் என்பது - எனக்குள்ள ஆசை அறவாணனுக்குப் பக்கத்திலே உட்கார்ந்திருக்க வேண்டும் என்பது - எனக்குள்ள ஆசை, நம்முடைய பெரிய மீசைக்காரர், வா.மு.சேதுராமனுக்குப் பக்கத்திலே உட்கார்ந்திருக்க வேண்டும் என்பது -அந்த ஆசை தான் எனக்கு உள்ளதே தவிர, அரசு கட்டிலிலே வீற்றிருக்க வேண்டும் என்ற ஆசை அல்ல. அதன் காரணமாகத் தான் நீங்கள் என்னை அழைத்தீர்கள் என்றால், தயவு செய்து திருத்திக் கொள்ளுங்கள்.

நான் எனக்கிருக்கின்ற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, அந்த வாய்ப்பின் வாயிலாகக் கிடைத்த தொகையை மற்றவர்களுக்கு வழங்க - புத்தகத் தொண்டினை ஆற்ற -எழுத்தார்வத்தை வளர்க்க -அதைப் பயன்படுத்துகின்ற நிலையிலே நான் இன்றைக்கு இந்த விழாவிலே கூட கலந்து கொண்டு இந்த விருதுகளை யெல்லாம் வழங்குகின்ற அந்த வாய்ப்பைப் பெற்றிருக்கிறேனே அல்லாமல் வேறல்ல.

ஒன்றை நான் இவ்வளவு பேருக்கு மத்தியிலே குறிப்பிடக் கடமைப்பட்டிருக்கிறேன். புத்தகங்களை எழுதிய எழுத்தாளர்களுக்கு இங்கே பரிசுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. நான் கடந்த ஆண்டு என்று கருது கிறேன். இங்கே விருதுகள் வழங்கப்பட்டபோது ஒரு எழுத்தாளருக்கு வழங்கப்பட்ட விருது பற்றி ஒரு சில சொல்ல வேண்டியிருக்கின்றது.

வழங்கியது தவறு என்று சொல்ல மாட்டேன். ஆனால் அதைப் பெற்றவர்கள் எப்படி தவறு செய்திருக்கிறார்கள் என்பதை நான் எடுத்துக் கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். நம்முடைய தவத்திரு குன்றக்குடி அடிகளார் என்னைக் காணும்போதெல்லாம் வழக்கமாக ஒரு நூலைத் தருவதுண்டு. சில நாட்களுக்கு முன்பு அப்படி தந்த நூல் சென்னையின் வரலாற்றை விளக்கும் நூல். அது ஒரு பெரிய தடிப் புத்தகம். 600 பக்கங்களைக் கொண்டது.

சென்ற ஆண்டு அந்தப் புத்தகத்தை எழுதிய எழுத்தாளருக்கு இங்கே விருது வழங்கப்பட்டிருக்கின்றது. நான் மரியாதையோடு, அன்போடு, உணர்வோடு, தமிழ் ஆர்வத்தோடு இந்தப் புத்தகக் கண்காட்சி தொடர்ந்து இத்தகைய அருஞ்செயல்களைச் செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளோடு நான் அளித்த அந்த ஒரு கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட கருணாநிதி அறக்கட்டளையின் மூலம் வழங்கப்பட்ட விருதுகளில் ஒன்றை அந்த எழுத்தாளர் பெற்றிருக்கிறார்.

அப்படி விருது பெற்றவர் எழுதிய புத்தகம் ஆயிற்றே என்று அந்த "சென்னை'' என்ற பெயர் கொண்ட புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தேன். எப்போதுமே என்னிடம் ஒரு புதிய புத்தகம் கிடைத்தால் இரவோடு இரவாக - ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் படித்து முடித்துவிடுவது என் வழக்கம். அப்படி இரவு முழுவதும் படித்து நான் அந்த புத்தகத்தை நிறைவு செய்தேன்.

அந்தப் புத்தகத்தில் "சென்னை - காலவரிசை'' என்று ஒன்றைத் தொகுத்துள்ளார். அதில் எந்தெந்த ஆண்டு போர்த்துகீசியர் ஆண்டார்கள், ஆங்கிலேயர்கள் எப்போது ஆட்சியைப் பிடித்தார்கள் என்ற வரலாறெல்லாம், சரித்திரக் குறிப்புகள் எல்லாம் உள்ளன.

அதில் 1948-ம் ஆண்டுக்குப் பிறகு 1967-ம் ஆண்டு தி.மு. க. ஆட்சியில் அமர்ந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் யார் தலைமையிலே ஆட்சி அமைந்தது என்று குறிப்பிடவில்லை. யார் முதல்-அமைச்சராக இருந்தார் என்று குறிப்பிடவில்லை. தேர்வுக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அந்தக் குழு தேர்வு செய்த எழுத்தாளர் ஒருவர் எழுதிய புத்தகம் அது.

அதிலே தான் 1969-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு -நான் முதல்-அமைச்சராக ஆனது பற்றியோ - எனக்கு முன்பு முதல்-அமைச்சராக இருந்த அண்ணாவின் செயல்முறைத் திட்டங்களைப் பற்றியோ எதுவுமே இல்லை. 1971-ல் பொதுத்தேர்தல் நடைபெற்று மீண்டும் தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது பற்றி சென்னை என்ற அந்த நூலில் ஒரு வரி கூட இல்லை. 600 பக்கங்கள் கொண்ட புத்தகம் அது. இடம் இல்லை என்று சொல்ல முடியாது.

1977-ம் ஆண்டு பற்றிக் குறிப்பிட்டு என்னுடைய நண்பர் எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக ஆனார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நான் மகிழ்கிறேன். அதன் பிறகு 1991-ம் ஆண்டு என்று குறிப்பிட்டு ஒரு மாதம் மட்டும் முதல்வராக இருந்த ஜானகி அம்மையாரை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிறகு 1996-ம் ஆண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஆண்டு நான்காவது முறையாக முதல்-அமைச்சராக நான் ஆனேனே, அது குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்று தேடித் தேடிப் பார்த்தேன்.

எந்தக் குறிப்பும் கிடையாது. அதிலே வந்தால் தான் எனக்குப் பெருமை என்பதற்காக அல்ல. அதிலே கூட வரவில்லையே என்ற வருத்தம் தான். மாறாக அந்த ஆண்டில் கோயம்பேடு காய்கறி அங்காடி திறக்கப்பட்டதை சென்னையின் புகழ்மிக்க செய்திகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதைத் திறந்தவன் யார் என்றாவது குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்றால் அதுவும் கிடையாது.

அதே ஆண்டில் தான் - ஏற்கனவே அண்ணாவால் சென்னை ராஜ்யத்திற்கு தமிழ்நாடு என்று பெயரிடப்பட்டிருந்த போதிலும், சென்னைக்கு மெட்ராஸ் என்ற பெயர் மாற்றப்படாமல் இருப்பதை எண்ணிப் பார்த்து - "சென்னை'' என்று நான் ஆணை பிறப்பித்தேன். அந்தச் செய்தியை வெளியிட்டுள்ள அந்த நூல் அதைச் செய்தது யார் என்று குறிப்பிட்டிருக்கிறதா என்றால் இல்லை.

அதன் பிறகு 1998-ம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது தமிழ்நாட்டிலே தான், சென்னையிலே தான். ஆனால் சென்னை வரலாறு எழுதப்பட்ட அந்தப் புத்தகத்தில் அந்தப் பல்கலைக் கழகத்தை யார் தொடங்கியது என்ற செய்தி குறிப்பிடப்படவில்லை.

இது இங்கே குறிப்பிடப்பட்ட புத்தக ஆசிரியருக்கு நான் விடுக்கின்ற அன்பான கேள்வி. அப்படி என்ன இந்தக் கருணாநிதி தவறு செய்து விட்டான்? அப்படி என்ன தாழ்ந்து போய்விட்டான் - தமிழனாகப் பிறந்தான் என்ற ஒன்றைத் தவிர வேறென்ன தாழ்வு அவனுக்கு? அவன் தமிழ்ச் சமுதாயத்திலே குறிப்பிடப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திலே பிறந்தான் என்பதைத் தவிர அவனுக்கு வேறென்ன தாழ்வு?

எனவே ஒரு புத்தகத்தை வெளியிடும்போது - அந்தப் புத்தகத்தை ஆராய்ந்து பார்த்து - மூன்று பேர், நான்கு பேர் குழுவாக அமர்ந்து - இன்றைக்கு செய்ததைப் போல விருதுகளை வழங்குகின்ற நேரத்தில் -அந்த விருதுக்கு உரிய புத்தகத்தை அவர் எழுதியிருக்கிறாரா என்பதை விருது வழங்குகின்ற நான் மாத்திரமல்ல, அதை ஆய்வு செய்து, தேர்வு செய்த குழுவினர் மாத்திரமல்ல - எல்லாவற்றையும் விட முக்கியமாக அதை எழுதிய ஆசிரியரே எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த விருதைப் பெற தகுதியானவர் தானா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?

இந்த விழாவிலே கலந்து கொள்கின்ற வாய்ப்பு கிடைத்தமைக்காக நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்து இந்த வாய்ப்பிலே சிலவற்றைச் சொன்னேன் என்றால், அது தமிழகத்தின் நன்மைக்காக சொல்லப்பட்டது என்று நீங்கள் கருதிக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டு -தவறு இழைத்திருப்பேன் எனில் பொறுத்தருள வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X