For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதுவையில் மொரிசியசு தமிழறிஞர் கேசவன் சொர்ணம் உரை

Google Oneindia Tamil News

Dr. Mu. Elangovan with Kesavan Sornam
- முனைவர் மு.இளங்கோவன்

புதுவைப் பல்கலைக்கழகத் தமிழியல்துறையில் மொரிசியசு தமிழறிஞர் கேசவன் சொர்ணம் அவர்கள் இன்று(02.07.2010) பிற்பகல் 3 மணிக்கு உரை நிகழ்த்துகின்றார் வருக என்று புல முதன்மையர் பேராசிரியர் சி.ஆரோக்கியநாதன் அவர்கள் அன்பு அழைப்பு விடுத்தார். நானும் உரிய நேரத்துக்குச் சென்றிருந்தேன்.

புதுவையில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் பலவற்றை நடத்தி வரும் கல்விச்செம்மல் ஐயா முத்து அவர்களுடன் முனைவர் கேசவன் சொர்ணம் அவர்களும் அவரின் நண்பரும் மொரிசியசு நாட்டு வங்கியில் பணியாற்றியவருமான தேவ முனிசாமி அவர்களும் வந்தனர்.

பேராசிரியர் சி.ஆரோக்கியநாதன் அவர்கள் எங்களை ஒருவருக்கு ஒருவர் அறிமுகப்படுத்தி வைத்தார்கள். தமிழ்த்துறையின் முனைவர் பட்ட ஆய்வு செய்யும் ஆய்வு மாணவர்களுடன் பேராசிரியர் சொர்ணம் அவர்கள் கலந்துரையாடினார்.மொரிசியசு நாட்டில் தமிழ்க்கல்வி, தமிழ்ப்பண்பாடு பற்றி உரை அமைந்தது.

மொரிசியசு நாட்டிலிருந்து உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டுக்குப் பத்துக்கும் மேற்பட்டோர் வந்ததாகவும் கோவை மாநாடு வரலாற்றுச் சிறப்பு மிக்க மாநாடு எனவும் தம் கருத்தை எடுத்துரைத்தார். இதுவரை ஆய்வு மாணவர்களுடன் தாம் பேச வாய்ப்பு குறைவாக இருந்தது எனக் கூறியதுடன் தாம் தமிழ் கற்ற வரலாற்றை அரங்கிற்கு எடுத்துரைத்தார். மொரிசியசில் பட்டய வகுப்பு, இளங்கலை,ஆசிரியர் பயிற்சி வகுப்புகளில் தமிழ் படிக்கும் வாய்ப்பு உள்ளதை எடுத்துரைத்தார்.முதுகலை,முனைவர் பட்ட ஆய்வுகளுக்குத் தமிழகம் வந்து மொரிசியசு மாணவர்கள் கற்க வேண்டிய நிலை உள்ளதையும் எடுத்துரைத்தார்.

சொர்ணம் அவர்கள் தாம் முனைவர் பட்ட ஆய்வு செய்தபொழுது சிறுகதைகள் பற்றி ஆய்வு செய்ததாகவும் தம் நெறியாளர் முனைவர் துரை.சீனிச்சாமி அவர்கள் எனவும், தம் ஆய்வு தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்ததாகவும் குறிப்பிட்டார்.

மொரிசியசில் தமிழ் இரண்டாம் மொழியாகக் கற்பிக்கப்படுகிறது எனவும், ஆங்கிலம், பிரஞ்சு கட்டாயமொழி எனவும் குறிப்பிட்டார்.தொடக்கக் கல்வி ஆறு ஆண்டு எனவும்,உயர்நிலைக் கல்வி ஆறு ஆண்டு எனவும் அமையும். அதன் பிறகு மொரிசியசில் உயர்கல்விக்குப் பல்கலைக்கழகம் செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மொரிசியசில் தமிழ் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு எனவும் இருநூறு தமிழாசிரியர்கள் உள்ளனர் எனவும் தமிழாசிரியர்களுக்கே தமிழ் பயிற்றுவித்து வகுப்பறைக்கு அனுப்ப வேண்டிய நிலை உள்ளது எனவும் குறிப்பிட்டார். ஒரு வகுப்பறையில் பத்து மாணவர்கள் தமிழ் படிக்க முன்வந்தாலும் ஓர் ஆசிரியர் உண்டு என்றார். தமிழகத்திலிருந்து வருகைதரு பேராசிரியர்களாகப் பேராசிரியர்கள் கங்காதரன், இராசாராம், பாலறாவாயன், கார்த்திகேயன், முத்துவேலு உள்ளிட்ட அறிஞர்கள் மொரிசியசு வந்து தமிழ் பயிற்றுவித்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.

திருக்குறளியல் பட்ட வகுப்பு மாணவர்களுக்கு ஓர் அலகாக உள்ளது. திருவள்ளுவர் நாள் மொரிசியசில் கொண்டாடப்படுகின்றது. அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன. அழகப்பா இராம்மோகன், சத்திய வேல்முருகன் உள்ளிட்டவர்கள் வந்து திருக்குறள் பற்றி பேசியுள்ளனர் என்றார்.

புதுவைப் பல்கலைக்கழகமும் மொரிசியசு பல்கலைக்கழகமும் கல்விப் பரிமாற்றத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என்றார். ஏனெனில் தமிழர்கள் மொரிசியசுக்குச் செல்ல புதுவைத் துறைமுகத்தின் வழியாகத்தான் சென்றார்கள். புதுவையிலும் பிரஞ்சு பேசப்படுகின்றது. மொரிசியசிலும் பேசப்படுகின்றது. எனவே இரண்டு நாட்டு மக்களும் கல்வியில் புரிந்துணர்வுடன் செயல்பட்டு மாணவர்கள்,பேராசிரியர்களைப் பரிமாற்றம் செய்துகொள்ள கல்விச்சூழலில் நல்ல வாய்ப்புகள் ஏற்படும்.

மொரிசியசில் இன்று நாளிதழ்கள், இதழ்கள் தமிழில் வெளிவருவதில்லை. தமிழ்த் திரைப்படங்களை ஒளிவட்டுகளில்தான் சிலர் பார்க்கிறோம்.இங்கிருந்து சில நூல்கள், இதழ்கள் மட்டும் வருகின்றன. திருமலைச்செட்டி முருகன் பாமாலை என்ற நூலை வெளியிட்டுள்ளார். புத்தக வெளியீடு குறிப்பிடும்படியாக இல்லை. சிலர் துண்டுப் பிரசுரங்களை மட்டும் வெளியிட்டுள்ளனர் என்று சுருக்கமாகத் தம் உரையை நிகழ்த்தினார்.

ஆய்வு மாணவர்களை வினாக்கள் கேட்கலாம் என்றதும் பெரும்பாலனவர்கள் தமிழ் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு மொரிசியசில் கிடைக்குமா? என்று வினா எழுப்பினார்.இல்லை என்று விடை தந்தார்.

நான் எழுந்து இதழ்கள் இல்லை என்று கவலைப்பட வேண்டாம்.தாங்கள் அனைவரும் மொரிசியசில் நடக்கும் இலக்கிய நிகழ்வுகள், கருத்தரங்குகள், அறிஞர்களின் இலக்கியப் பொழிவுகள்,பண்பாட்டு விழாக்களை வலைப்பூவில், இணையத்தில் வெளியிட்டால் தமிழகத்துக்கும்,மொரிசியசுக்கும் உள்ள இடைவெளி குறையும் என்றேன்.

உலகத்தமிழர்களுடன் மொரிசியசு தமிழர்களை இணைக்க இணையம் பெரும் பங்கு வகிக்கும். எனவே அனைவரும் இணையத்தைப் பயன்படுத்துங்கள். தமிழ் இணையம் தொடர்பான உதவிக்கு நான் அணியமாக இருப்பதைத் தெரிவித்ததும் கேசவன் சொர்ணம் மகிழ்ந்து தேவையான பொழுது பயன்படுத்திக் கொள்வதாகக் குறிப்பிட்டார்.

என்னுடைய அயலகத் தமிழறிஞர்கள்,இணையம் கற்போம் என்ற இரு நூல்களைக் கேசவன் சொர்ணம் அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினோம். முன்பே முனைவர் முத்து ஐயா அவர்கள் மொரிசியசு சென்றபொழுது அவர்கள் வழியாக என் நூல்களைக் கொடுத்தனுப்பியிருந்தேன். அவ்வாறு சென்ற இணையம் கற்போம் என்ற நூலைக் கற்ற பேராசிரியர் சொர்ணம் அவர்கள் தம் மாணவர்களுக்கு அந்த நூலின் செய்திகளை அறிமுகப்படுத்தியதை நன்றியுடன் நினைவுகூர்ந்தார். அனைவரும் பிரியா விடைபெற்று அவரவர் கடமைகளுக்குத் திரும்பினோம்.

நன்றி: http://muelangovan.blogspot.com/

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X