தமிழக சிறுபான்மை ஆணையத்துக்கு சட்ட அந்தஸ்து
சென்னை: தமிழக சிறுபான்மை ஆணையத்துக்கு சட்ட அந்தஸ்து அளிக்கும் கோப்பில் சட்டசபையிலேயே முதல்வர் கருணாநிதி கையெழுத்திட்டார்.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ்,
தமிழகத்தில் உள்ள 21 சதவீத சிறுபான்மையினரின் நலனைக் கருத்தில் கொண்டு மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு சிறுபான்மை அந்தஸ்து அளிக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த அந்தத் துறையின் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்,
இந்த கோரிக்கை நேற்றிரவு, முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டதும். அதற்கான உத்தரவை பிறப்பிக்க உடனே நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு இன்றே பிறப்பிக்கப்படும் என்றார்.
அமைச்சர் இவ்வாறு கூறிக்கொண்டிருக்கும்போதே, சட்டசபையிலேயே அதற்கான கோப்பில், முதல்வர் கருணாநிதி கையெழுத்திட்டார்.
இதன்மூலம் சிறுபான்மையின ஆணையம் இனி சிவில் நீதிமன்றம் போல் செயல்பட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சிறுபான்மையினருக்கு கடன் வழங்க ரூ. 25 கோடி:
சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சிறுபான்மையினர் நலன் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
1999ல் தொடங்கப்பட்ட தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் சிறுபான்மையினரின் பொருளாதார மேம்பாட்டுக்காக 6 சதவீத வட்டியில் கடன் வழங்கப்பட்டு வருகிறது.
சுய உதவிக் குழுக்களில் 60 சதவீதத்துக்கு குறையாமல் சிறுபான்மையினர் இருந்தால் அவர்களுக்கு 4 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், உறுப்பினர் ஒருவருக்கு ரூ. 25,000 வரை கடன் வழங்கப்படுகிறது.
ஆட்டோ ஓட்டுனர் தொழில், கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ள சிறுபான்மையினர் சொந்தமாக ஆட்டோ வாங்க ரூ. 1.21 லட்ம் வரை 6 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.
தனிநபர் கடனாக 1,117 பேருக்கு ரூ. 6.13 கோடியும், கல்விக் கடனாக 41 பேருக்கு ரூ. 30.48 லட்சமும், சிறுகடன் திட்டத்தின் கீழ் 8,418 பேருக்கு ரூ. 14.13 கோடியும் கடன் வழங்கப்பட்டுள்ளது.
2009-10ம் ஆண்டில் சிறுபான்மையினர் கடனாக 9,576 பேருக்கு ரூ. 20.57 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2010-11ம் ஆண்டில் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த 12,500 பேர் பயனடையும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் ரூ. 25 கோடி கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
வக்பு வாரியத்துக்கு ரூ.65 லட்சம் மானியம்:
இந்த ஆண்டில் முஸ்லிம் மாணவியருக்கு ஒரு விடுதி திறக்கப்படும்.
சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் மற்றும் தொழில் கணக்கீட்டாளர் (காஸ்ட் அன்ட் ஒர்க்ஸ் அக்கவுண்டன்ட்) மற்றும் நிறுவன செயலர் (கம்பெனி செக்ரட்டரி) ஆகிய தொழில் படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் 100 பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின வகுப்பு மாணவ, மாணவியருக்கு அரசு செலவில் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படும்.
தமிழ்நாடு வக்பு வாரியத்துக்கு இந்த நிதியாண்டில் ரூ.65 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
சமச்சீர் கல்வி சிறுபான்மையினரை பாதிக்காது:
முன்னதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசன் அலி பேசுகையில், சமச்சீர் கல்வியால், மொழி, கலாசார, பண்பாடு ஆகியவை பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் சிறுபான்மையினர் உள்ளனர் என்றார்.
இதற்கு பதிலளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமச்சீர் கல்வி, வேற்று மொழியினரை பாதிக்காது. பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயம் என்ற சட்டத்திலேயே, உருது போன்ற மொழிகளை படிக்கலாம் என்ற சலுகையும் உள்ளது. மொழி அல்லது இன சிறுபான்மையினர் அவரவர் மொழியில் படிக்க தடை எதுவும் இல்லை.
சமச்சீர் கல்விக்கும், அதற்கும் தொடர்பு இல்லை. பல்வேறு பாடத் திட்டங்களை ஒருமுகப்படுத்தவே சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் பாடத் திட்டத்தில்தான் மாற்றம் செய்யப்படும். சிறுபான்மையினர் அச்சப்பட தேவையில்லை என்றார்.
3 மணி நேரம் இருந்த கருணாநிதி:
சட்டசபை நிகழ்ச்சிகள் முடிவடைந்ததும், பேச எழுந்த காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் டி.சுதர்சனம், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் போன்ற அடித்தட்டு மக்களின் பிரச்சனைகள் பற்றி விவாதிக்கப்படுவதை முதல்வர் கருணாநிதி இங்கு தொடர்ந்து 3 மணி நேரம் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
வழக்கமாக இடையிடையே ஓய்வு எடுக்கவும், பணிகளைத் தொடரவும் தனது அலுவலகத்தக்கு முதல்வர் சென்று வருவது வழக்கம். ஆனால், இந்தத் துறை பற்றி விவாதம் நடந்தபோது 3 மணி நேரம் சட்டசபையிலேயே அமர்ந்து அதை கவனித்துக் கொண்டிருந்தார்.












Click it and Unblock the Notifications