For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தம்பதிகள் எப்படி வாழ வேண்டும்?.. ஜெயலலிதா சொன்ன இட்லிக் கதை!

Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு கணவனும், மனைவியும் எந்நாளும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று 64 ஜோடிகளுக்குத் திருமணம் நடத்தி வைத்த முதல்வர் ஜெயலலிதா, அழகான இட்லிக் கதை ஒன்றைக் கூறி அனைவரையும் கவர்ந்தார். தம்பதிகள் எப்படி மனமொத்து வாழ வேண்டும் என்பதை அவர் சொன்ன கதை படு சுவாரஸ்யமாக இருந்தது.

நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதாவின் பேச்சு:

மகிழ்ச்சிகரமான இந்த மங்கலத் திருநாளில், 64 ஜோடிகளுக்கான திருமணங்களை தலைமை ஏற்று நடத்தி வைக்கின்ற இனிய வாய்ப்பு இன்று எனக்கு கிடைத்திருப்பதை நினைத்து உள்ளபடியே நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இல்லறமல்லது நல்லறமன்று என்னும் இன்மொழி வழி இணைந்துவிட்ட மணமக்களாகிய நீங்கள், உறவினர், நண்பர், பெரியவர்கள் புடைசூழ மணவாழ்க்கை என்னும் ஓடத்தில் இன்று முதல் பயணம் செய்ய தொடங்கி விட்டீர்கள். உங்களுக்கு எனது மனப்பூர்வமான நல்வாழ்த்துகளை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெற்றோர், மனைவி, குழந்தைகள் ஆகிய மூவருக்கும் நல்ல துணையாக இருப்பது இல்லறம் நடத்துபவரின் கடமை என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கு ஏற்ப உங்கள் குடும்ப வாழ்க்கை அமைய வேண்டும்.

இன்பம்துன்பம், சுகம்துக்கம், நல்லதுகெட்டது ஆகியவை நிறைந்தது தான் வாழ்க்கை. வாழ்க்கை என்பதே சவால்கள் நிறைந்த ஒன்று. மணமக்கள் விடா முயற்சியோடு வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும். தோல்விகளைக் கண்டு அஞ்சாமல் தொடர்ந்து போராட வேண்டும்.

வாழ்க்கையில் நாம் எப்படி சோதனைகளை எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து தான் வெற்றி, தோல்விகள் அமைகின்றன. புரிதல் என்கிற ஒரு வார்த்தையில் தான் மண வாழ்க்கையின் வெற்றி என்பது உறுதியாகிறது. அந்தப் புரிதலைத் தருவது அன்பு. உண்மையான அக்கறையில் எழுகின்ற அன்பு. இதற்கு ஒரு சிறு கதையை இங்கே நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.

வேலைக்கு சென்ற கணவனை எதிர்பார்த்து மனைவி வீட்டில் காத்திருக்கிறாள். இருக்கின்ற இருவருக்குமாக தயார் செய்திருந்த மாவை வைத்து கணவனுக்காக இட்லி ஊற்றுகிறாள். மொத்தமாக 12 இட்லிகள் தான் அந்த மாவில் இருந்து அவளால் தயாரிக்க முடிந்தது. சரி, கணவன் சாப்பிட்டது போக மீதம் இருப்பதை நாமும் சாப்பிட்டு இன்றைய பொழுதை கழித்துவிடலாம் என்று எண்ணியவாறே அவள் எதிர்பார்த்துக் காத்திருந்த வேளையில், கணவன் தனது பால்ய சிநேகிதன் ஒருவனை கூடவே அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறான்.

அப்படி அழைத்துக் கொண்டு வந்தவன் எனக்கும் என் நண்பனுக்கும் உணவு எடுத்து வா என்று கூறினான். பின்னர் இருவரும் சாப்பிட அமர்கிறார்கள். அடுப்பறையில் இருப்பது 12 இட்லிகள் தான் என்பதை எப்படி கணவனுக்கு தெரிவிப்பது என்று குழம்பிய நிலையிலேயே இரண்டு தட்டுகளை எடுத்து வந்து கணவனுக்கும், அவனுடைய நண்பனுக்கும் வைத்து அதில் ஆளுக்கு நாலு இட்லியை வைத்தாள். மீதம் இருப்பது நாலு மட்டுமே என மனதுக்குள் படபடப்போடு கணக்கு வேறு போட்டுக் கொள்கிறாள்.

வைத்த வேகத்தில் நான்கு இட்லிகளையும் கணவன் வேக வேகமாக சாப்பிட்டுவிட பதற்றம் கொண்டவளாய் இரண்டு இட்லியை எடுத்து கணவனுக்கு வைப்பதற்காக குனியும் வேளையில், கணவன் சொன்னான் எனக்குப் போதும். நாலு இட்லிக்கு மேலேயா சாப்பிடுவது...? என்று சொல்ல; அருகில் ரசித்து, ருசித்து இன்னும் சில இட்லிகள் சாப்பிடலாம் என எதிர்பார்த்திருந்த விருந்தாளி நண்பனுக்கோ வெடுக்கென்று ஆனது! அந்த நேரத்தில் இவளோ அண்ணா உங்களுக்கு... என கணவனின் நண்பரை நோக்கிக் கேட்க, போதும்... போதும்... நான் எப்போதுமே மூன்று இட்லி தான் சாப்பிடுவேன்.

இன்று உன் கைப் பக்குவம் நான்கு இட்லிகளை சாப்பிட்டுவிட்டேனம்மா... என்று கூறி எழுந்தான் அந்த விருந்தாளி நண்பன். கை கழுவச் செல்லுகையில் மனைவியை கடக்கின்ற போது மீதமுள்ள நான்கை நீ சாப்பிட்டுவிடு என்று கணவன் சொல்ல, தன் இதயத்தில் மட்டுமல்ல தான் சமைத்த பாத்திரத்தில் கூட எத்தனை இட்லிகள் இருக்கின்றன என்பதை பார்க்காமலே, தன் பார்வையைக் கொண்டே கணக்கிட்டுக் கொண்டதோடு; அந்த இக்கட்டில் இருந்தும் அழகாக தன்னை காத்திட்ட தன் கணவனை நினைத்து ஆச்சரியப்பட்டு மகிழ்ந்தாள் அந்தப் பெண்!

இந்தக் கதையில் நாம் பார்த்த தம்பதியினரின் புரிதலைப் போல, இன்று மணம் முடித்திருக்கும் மணமக்களாகிய நீங்களும், ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு எந்நாளும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் என்று கூறினார் ஜெயலலிதா.

English summary
Chief Minister Jayalalitha blessed 64 couples during their marriage held in Chennai. She conducted the couples and told a short story for them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X