For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"கரைவேட்டி.." சுடச் சுட ஒரு குட்டி ஸ்டோரி!

Google Oneindia Tamil News

ஏங்க..எழுந்திருங்க.! வாசல்ல கார் நிக்கிது. தேவகி, கட்டிலில் படுத்திருந்த ரத்தினத்தை உலுக்கினாள்.

கட்டிலில் ஒரு ஓரமாக மகனோடு சுருண்டு படுத்திருந்த ரத்தினம் கண்களை கசக்கியவாறே சோம்பலாக திரும்பினான். வாசல் கதவு திறந்து இருக்க, வெளியே பழுப்பு நிற அம்பாசிடர் கார் நின்று கொண்டு இருந்தது. மெதுவாக எழுந்து கசங்கிய லுங்கியை சரி செய்ய, இவனை பார்த்தவாறே வேகமாய் உள்ளே வந்தான் - அம்பத்தூர் வேலு!

ரத்தினம்..இன்னுமா தூங்கறே? "இப்பவே மணி 9 ஆச்சு." "தலைவர் 4 மணி பிளைட்ல வர்றாரு. அஞ்சு மணிக்கு மீட்டிங்." - வேலு பதறினான்.! "நேரமாகுது. கெளம்பலாம்பா."

A Kutty story on politics written by Oneindia Tamil reader

வேலு அவசரமாக பேச, தலையை கையில் பிடித்தவாறே கட்டிலை விட்டு எழுந்து அசவுகரியமாய் சிரித்தான் ரத்தினம். நேற்றிரவு அடித்த மட்ட சரக்கால் தலை சம்மட்டி வைத்து அடித்தது போல கனத்தது. "சரி வேலு." "நீ போய் கார்ல உட்காரு." தோ..பத்து 10 நிமிஷத்துல வரேன்."

வேலுவிடம் சொல்லிவிட்டு - "டீ எடுத்து வை தேவகி." என்றான். "டீ குடிக்கறயா வேலு?!" ரத்தினம் வேலுவை பார்த்து கேட்க, வேலு வேகமாக வேண்டாம் என்று தலையை ஆட்டினான். ஒரு சில நொடி கழிந்து, வேலு எதையோ மெலிதாக தனக்குள் முனகிவிட்டு, கையில் வைத்திருந்த பிளாஸ்டிக் கவரை அக்குளில் சொருகிக்கொண்டு வேட்டியை சரிசெய்தவாரே வெளியே நடந்தான்.

வேலு போவது வரை நின்றுவிட்டு , ரத்தினம் வீட்டின் பின் பக்கம் நகர்ந்தான்.

ராயபுரம் ரத்தினத்துக்கு வயது 47. கருத்த நிறம், கலக்கிய கண். வெளுத்த பல். நெடிந்த உருவம். ஒலிபெருக்கி தோற்கும் தொண்டை.எப்பவும் வெள்ள வேட்டி சட்ட தான். குங்குமப்பொட்டு நெற்றியில் திருத்தமாக என்றும் நிரந்தரம்.

ரத்தினத்தின் பிரதான தொழில். ஆள் பிடித்தல்..பொதுவாக எல்லா கட்சிகளுக்கும் அல்லக்கை. கட்சிகளின் கவுன்சிலர், வட்டம், மாவட்ட செயல் தொட்டு MLA வரை அனைவருக்கும் தெரிந்த அடிமட்ட நண்பன். கட்சி பாகுபாடு இல்லாமல் எல்லா கட்சிகளிடமும் தொடர்பில் இருப்பவன். கட்சிகளும் அவ்வாறே பலவருடமாக பார்த்து பழகியவர்கள்.

ரத்தினத்தின் உலகம் மிகச் சிறியது. அவனின் ஒரே குறி எப்போதும்..பணம்.! காசு விஷயத்தில் படு உஷார் பார்ட்டி. அப்பறம் டாஸ்மார்க்கும், பிரியாணியும், மசால் வடையும் பிரதானம். அவன் பங்கு அல்லது கமிஷன் வாங்காமல் எந்த ஒரு சிறு வேலையும் எவ்வளவு தெரிந்தவராக இருந்தாலும் ஒத்து கொள்ள மாட்டான்.

ரத்தனத்துக்கு நீண்ட நாள் தணியாத, இன்னும் நிறைவேறாத ஆசை ஒன்று உண்டு. அது எப்படியாவது ஒருநாள் சினிமாவில் நடிக்க வேண்டும்.

வருடம் முழுக்க கட்சி வேலைகள் இருந்தாலும், தேர்தல் வந்துவிட்டால் ரத்தினத்தை கையில் பிடிக்க முடியாது. இரவு பகல் பாராமல் சங்குசக்கரமாய் சுழலுவான். அவ்வளவு சுறுசுறுப்பு.

வீடு ராயபுரத்தில் இருந்தாலும் சென்னையின் உள்ள அனைத்து ஓட்டு வங்கி சந்துகளும், குடிசை பகுதிகளும் கையில் அத்துப்படி. அந்தந்த பகுதி பெரிய தலைகளுடன் எப்போதுமே தொடர்பில் இருப்பவன். இருபது வருட அனுபவத்தில் ஐந்து MLAக்களை சட்டசபைக்கு அனுப்பியதில் பெரும் பங்கு இருப்பதாக எப்போதும் பெருமை கொள்பவன்.

"எத்தினி பேரு வேணும் வேலு?" தெருவோரம் கையில் புகையும் சிகரெட்டோடு ரத்தினம் கேட்டான்.

"அதான் மூணு நாள் முன்னேயே சொன்னேனே ரத்தினம். நூறு பேரு இருந்தா நல்லா இருக்கும்" - வேலு சொன்னான்.

ரத்தினம் எதையோ யோசித்தவனாக இரண்டு நாள் தாடியை விரலால் நீவிவிட்டு, பின் காரை எக்மோர் விட சொன்னான்.

சென்னை நகரின் காலை நேர நெரிசலில் கார் கலந்து கதறிச் செல்ல, கடைசியாய் எக்மோரின் எதோ ஒரு சந்தில் காரை நிறுத்த சொன்னான். கார் ஒரு பெட்டிக்கடை ஓரம் நின்றது.

இரண்டு நாட்களாக பெய்யும் மழையால் தண்ணீர் ஆங்காங்கே சிதிலமாய் தேங்கி நிற்க, தெரு பார்ப்பதற்கு கசங்கிய காகிதம் போல இருந்தது.

சந்தில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டு இருந்தார்கள்.

இவர்கள் கார் நின்ற இடத்தருகில் ரோட்டோரம் படுத்திருந்த தெருநாய் எதையோ பார்த்து குலைத்தது. பின் சற்று நீங்கி வேறு இடத்தில மீண்டும் படுத்து கொண்டது.

"இங்கேயே இரு வேலு..இப்போ வந்துர்றேன்" - ரத்தினம் சொன்னான்.

சொல்லிவிட்டு எதிர் சந்தில் செல்ல, தெருவின் பின்புறம் புறநகர் ரயில் காதடைத்து கடந்தது.

சில நிமிடங்களில் வாயில் புகையோடு வேகமா வந்தவன், "ஆயிரம் விளக்கு விடுப்பா..நாம ரொம்ப லேட்டு."

"சேகர் எல்லாரயும் நேரமா வந்து அள்ளிட்டான்."

வேலுவுக்கு கோபமாக வந்தது.

ரத்தினம்..இதுக்கு தான் 3 நாள் முன்னேயே உன்கிட்டே சொல்லி இருந்தேன். "இப்போ பாரு.. கடைசி நேரத்துல." - வேலு கோபமாக கத்திவிட்டு சிகரெட்டை வேகமா இழுத்தான்.

ரத்தினம் ஒன்றும் பேசவில்லை.

கார் மீண்டும் நகர நெரிசலில் திணறி கரும்புகை கக்கி டீசல் நெடியோடு பறந்தது.

வேலு நேரம் ஓடுவதை பார்த்து பதற்றத்தில் இருந்தான். இடைஇடையே வேலுவுக்கும், ரத்தினத்துக்கும் மொபைல் தொடர்ச்சியாக ஒலித்துக்கொண்டே இருந்தது.

ஒருவழியாக, பழைய ஆயிரம் விளக்கு குடிசை மாற்று வாரியம் அருகே உள்ள குடிசை பகுதியோரம் வந்து சேர்ந்தார்கள். காலை மணி பதினொன்றை தாண்டி இருந்தது.

சாக்கடை ஓரம் பன்றிமேய்ந்து கொண்டிருக்க, ஊளை இட்ட தெரு நாயை தூரத்தி இரண்டு டவுசர் பொடிகள்
ஓடினார்கள். தள்ளுவண்டியில் பெரியவர் ஒருவர் பிளாஸ்டிக் பொருட்களை தள்ளி சென்றார்.

ரத்தினம் காரை விட்டிறங்கி தேங்கிய மழை நீரில் கால்படாமல் வேட்டியை மடித்து கட்டி எங்கோ போனான்..

கொஞ்சம் தொலைவில் மெயின் ரோட்டு நகர வாகன இரைச்சல், ஹார்ன் ஒலியின் பலத்த சப்தத்தோடு கேட்டு கொண்டே இருந்தது.

ஒரு பதினைந்து நிமிடம் இருக்கும். ரத்தினம் சோகமாக திரும்பி வந்தான்.

"ஒரே பேஜாரு வேலு.." ரெண்டு நாள் மழையா இருந்ததால 3 பெரிய மீட்டிங் கேன்சல்பா."

"மூணு கட்சியும் இன்னைக்கு தான் மறுபடியும் மீட்டிங் வெச்சு இருக்காங்க." "நம்ம ஆளுக முக்கால்வாசி புக் ஆயிடுச்சுபா.! இன்னா செய்ய?.! ரத்தினம் தொண்டையை சரிசெய்து தலையை சொரிந்தான்.

வேலு வாட்ச் பார்த்தான். மணி பனிரெண்டை தாண்டி இருந்தது. தலைவரின் அரக்க முகம் நினைவுக்கு வந்தது.

"ரத்தினம்..உன்ன நம்பி வந்து இருக்கேன்." இப்ப கடைசி நிமிசத்துல என்னை சிக்கல்ல விட்றாத"

எப்படியாவது பார்த்து செய்யுப்பா..! - வேலு குரல் கவ்வியது.

ரத்தினம் இந்த நொடிக்காக தான் காத்திருந்தான். தூண்டிலில் வேலு மீன் சிக்கியது.

சரி வேலு. இப்ப கைல மிச்சம் இருக்கிற பசங்க கொஞ்சம் காஸ்டலி. எல்லாம் காலேஜ் புள்ளிங்கோ." கொஞ்சம் கூட ஆகும். பரவாலயா?

வேலுவுக்கு பேச ஒன்றுமில்லை. அமைதியாய் பார்த்தான்.

"ஒன்னு செய்யி வேலு.. தலைக்கு 650 ஆகும்." "இதுல குவாட்டரும் மதியம் ஹோட்டல் விருதுநகர் பிரியாணியும் சேர்த்து தான் சொல்றேன்." ரத்தினம் வேலுவை பார்த்து பேசினான்.

"50% அட்வான்ஸ் இப்போ கொடுத்தா உறுதி செஞ்சுட்டு வந்துடுவேன். சீக்கிரம் சொன்னா நல்லது. பசங்க வேற ரெண்டு மூணு எடத்துல பேசி மத்த பசங்கள ஏற்பாடு செய்யணும். முக்கியமா 7 மணிக்கு பசங்கள விட்ரனும்..! 8 மணிக்கு அடுத்த மீட்டிங் இருக்கு.

"என்ன ஏற்பாடு செய்யவா? "இல்ல. தலைவரை நாளைக்கு வெக்க சொல்றியா?" - ரத்தினம் முகத்தை சலனமில்லாமல் வைத்துக்கொண்டு கன்னத்தை தடவியபடியே வேகமா சொல்லி முடித்தான்.

சிகரெட்டு புகை வழிய ஜல்லியடித்த ரத்தினம் முன்பு வேலுவுக்கு வேறு வழியில்லை. அவனுக்கு நன்கு தெரியும் இந்த கடைசி நிமிடத்தில் இதற்கு மேல் ஆள் பிடிப்பது கஷ்டம் என்பது.

"ரத்தினம்..உனக்கே தெரியும். இது கொஞ்சம் அதிகம்." ஏதா பேசி கொஞ்சம் கம்மி செய்ய பாருப்பா."

ரத்தினம் அவசரமாக தலையை மறுத்து ஆட்டினான்.

"வேலு.." "இங்க பாரு..உனக்கு இது புரியாது. நீ இந்த கட்சிக்கு வந்தே ஒம்பது மாசம் தான் ஆகுது."

"ஆனா எனக்கு தலீவரோட ஒன்பது வருஷ பழக்கம். அவரு கவுன்சிலரா இருந்த போது இருந்து தெரியும்." இங்கன இது ரொம்ப சகஜம். அவருக்கு நல்லா புரியும் இதுல இருக்கிற கஷ்டம்."

வேணும்னா தலைவராண்ட நீயே போன் போட்டு கேட்டு பாரு." ரத்தினம் சிரித்தவாறே சொன்னான்.

வேலு வேகமாய் மறுத்து விட்டு, பின் ஒரு நிமிடம் யோசித்து .."சரி" என்றான்

ரத்தினத்தின் கண்ணில் பேரம் படிந்த மகிழ்ச்சி தெரிந்தது. ஆனால் காட்டி கொள்ளவில்லை.

"சரி வேலு. அப்போ அட்வான்ஸ் குடுத்துட்டு நீ கெளம்பு. நா பேசி முடிக்கிறேன்."

வேலு மனசு முழுக்க எதிர்பாராத தொகையில் அகப்பட்டு அவன் பங்கு போன எரிச்சலில் இருக்க, தலையை மட்டும் மெதுவாக ஆட்டி - "சரி" என்றான்.

ஒரு சில நொடி கழித்து, அவன் சட்டைப்பையின் உட்புறம் கைவிட்டு துழாவி கையை வெளியே எடுக்க, 2000 ரூபாய் நோட்டுகள் கற்றைகளாக வெளியே வந்தது. எப்படியும் லட்சம் ருபாய் தேறும்.

காரின் பின் கதவை திறந்து உள்ளே போய் அமர்ந்து நோட்டுகளை எண்ணி பிரித்து பின் ரத்தினத்தை உள்ளே வரச்சொல்லி அழைத்தான்.

"இந்தா ரத்தினம். 50% இதுல இருக்கு." சாயந்திரம் மீட்டிங் முடிஞ்சப்புறம் மீதியை செட்டில் செய்றேன்.

ரத்தினம் பணத்தை இருமுறை எண்ணி பார்த்து பின் தன்னுடைய சட்டை பையில் வைத்து கொண்டான். பின் வேலு பக்கம் திரும்பி..

"அப்பறம் வேலு..கட்சி கரைவேட்டி, கூவறதுக்கு கரெக்டான மேட்டரு, பசங்கள மதியம் கூட்டிட்டு போக வண்டிய அனுப்பிரு.!

"முக்கியமா..மீடியா இப்போ பேஜாரு வேலு. கண்ணுல விளக்கெண்ணெய் விட்டு பயலுக பாக்குறாங்க. ஒரு நொடில எல்லாம் மொபைல் போன்ல வருது. அதுனால எல்லாம் திருத்தமா செய்யணும். புரியுதா?

சரி..பசங்கள ஏர்போர்ட் வர சொல்லவா? இல்ல மீட்டிங் எடத்துக்கா?"

ரத்தினம் பேசிக்கொண்டே போக, வேலு மனசு அங்கேயே இல்லை. வெளியே வெறித்து பார்த்து கொண்டு தலையை மட்டும் ஆட்டினான்.

ரத்தினம் காரை விட்டு இறங்க, டீசல் புகையை துப்பி கார் மறைந்தது.

கார் மறையும் வரை காத்திருந்து பின் மெதுவாக சந்துக்குள் நடக்க முயன்ற போது மொபைல் ஒலித்தது.

ரத்தினம்..நா எக்மோர் சேகர் பேசறேன். எத்தினி தபாபா கூப்பிடறது.

சரி..ரெண்டு நாள் முன்ன 100 பேரு வேணும்னு சொல்லி இருந்தே. எல்லாரும் ரெடிபா. இது எந்த கட்சிக்கு? நீ ஒரு தகவலும் சொல்லலயே? அட்வான்ஸ்சும் தரலே. இப்ப பசங்கள கூட்டிட்டு எங்க வர? எப்ப பார்க்கலாம்? - சேகர் மறுமுனையில் வேகமா பேசினான்.

ரத்தினம் சிகரெட் பிடித்த கரத்தை மாற்றி விட்டு மெதுவாக சொன்னான்.

"சேகரு., இப்போ தான் தகவல் கெடச்சுது. தலைவருக்கு "கொரோனா"வாம். டெஸ்ட் கண்பார்ம் ஆகிருச்சு. அதுனாலே ரெண்டு வாரம் எல்லா மீட்டிங்கும் கான்சல்.

ஆனா..பசங்களாண்ட சொல்லி வை. நாளைக்கு வேற கட்சி மீட்டிங் இருக்கு. அதுக்கு பசங்க வேணும். நா உன்னை சாயந்திரம் வந்து பார்க்கிறேன். சரியா?!

மறுமுனையில் சேகர் போனை வைக்க, ரத்தினமும் போனை அணைத்து சட்டை பாக்கெட்டில் வைத்தான். கையில் இருந்த சிகரெட்டை காலில் இட்டு நசுக்கிவிட்டு சந்து ஓரம் இருந்த குடிசை சுவரை பார்த்தான். அதில் ஒட்டியிருந்த போஸ்டரில், எப்போதோ சாணி அடித்து காய்ந்து போன முகத்துடன் தலைவர் பளிச்சென சிரித்தார். அருகே இருந்த கொடி கம்பத்தில் கட்சி கொடி பறந்தது.

எதோ நினைவாக போஸ்டரை பார்த்தவன்..தலைவருக்கு பெரியதாய் வணக்கம் வைத்து சிரித்தான்.

ரத்னம் சிரித்ததின் அர்த்தம் அவனை தவிர வேறு யாருக்கும் புரிந்திருக்க வாய்ப்பில்லை.

- மாணிக்கம் விஜயபானு, ஆஸ்டின். டெக்சாஸ்

English summary
Political story is written by our Oneindia Tamil reader, is shared here. In this election time it will be a relevant story.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X